Sunday, July 3, 2011

22.09.2009 மித்திரன் வாரமலரில் என்னுடைய பேட்டி




நேர்கண்டவர் - க. கோகிலவாணி

1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்?

என் ஆரம்ப காலம் தொட்டே 'வெலிகம ரிம்ஸா முஹம்மத்' என்ற பெயரில் எழுதி வரும் நான் தற்போது தலை நகரத்தில் தங்கியிருந்து என் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள நான் சுமார் 04 வருட காலங்களாக தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் இதுவரை 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை...

1. வங்கி கணக்கிணக்கக் கூற்று
2. கணக்கீட்டுச் சுருக்கம்.
3. கணக்கீட்டின் தெளிவு

அத்துடன் 'தென்றலின் வேகம்' என்ற கவிதை நூலொன்றை மிக விரைவில் இலக்கிய உலகுக்கு தர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. எழுத்துலக பிரவேசம் குறித்து...?

1997 - 98 காலப்பகுதியில் Sooriyan F.M, Shakthi F.M ஆகிய வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.

மேலும் 2004ம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து என் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இன்று வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினமுரசு, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி, மித்திரன், விடிவெள்ளி மற்றும் சஞ்சிகைகளான செங்கதிர், ஞானம், நிஷ்டை, ஜீவநதி, படிகள் என்பவற்றுடன் இஸ்லாமிய சஞ்சிகைகளான அல்ஹஸனாத், அஸ்ஸகீனஹ், அல்லஜ்னா என்பவற்றிலும் கவிதைகள் களம் கண்டுள்ளன. அதே போல் www.rimzapoems.tk, www.rimzapublication.tk , www.rimzavimarsanam.tk என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்.

3. உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏன்? மதம் என்ற பதத்தில் நின்று கொண்டா உங்கள் படைப்புக்களைப் படைக்க விரும்புகின்றீர்கள்?

அப்படியென்றில்லை. என்ன தான் கவிதைகளை எழுதினாலும் நான் இஸ்லாமியப் பெண் என்ற வட்டத்துக்குள் நின்று தான் எழுத முடியும் அல்லவா? ஆனாலும் கூட என் கவிதைகள் முற்று முழுதாக இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் பொதுவான மனித நியதிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தவிர மதம் குறித்து தனியான சொல்லாடல்களை முடிந்த வரை தவிர்த்தே வருகிறேன். (உதாரணமாக இஸ்லாமிய வசனங்களைக் கூறாமல் அதற்குரிய தமிழ் வசனங்களை கையாள்வது கூட). ஆன்மீகம் சார்ந்த பல கவிதைகள் எழுதினாலும் காதல், பெண்ணியம், சமூக அவலம் சார்ந்தனவற்றையும் எழுதியிருக்கிறேனே. அவை பல பத்திரிகைகளிலும் கூட பிரசுரமாகியிருக்கின்றன.

4. நீங்கள் எழுதுவதற்கு ஊக்கம் தந்தவர்கள் குறித்து?

இந்த கேள்விக்கு விடையளிப்பது சற்று சிரமம் தான். ஏன் எனில், என் வளர்ச்சிக்கு பலரும் பற்பல விதங்களிலும் எனக்கு உதவியிருக்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் ஏ. இக்பால், நீர்வை பொன்னையன், சிவசுப்ரமணியம், புரவரலர் ஹாஷிம் உமர், கலைச்செல்வன், ரஷPத் எம். ரியாழ், திக்வல்லை ஸப்வான், ஸ்ரீதர் பிச்சையப்பா, தீபச்செல்வன், ரேணுகா பிரபாகரன், அனலக்தர், மூதூர் முகைதீன், கலைவாதி கலீல், ஜரீனா முஸ்தபா, கா.பொன்மலர், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, பீ.எம். புண்ணியாமீன், மொரட்டுவ வஸீர், கிளியனூர் இஸ்மத் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் பெயர் குறிப்பிடப்படாதோர் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள் மித்திரனின் இடத்தை கருத்தில் கொண்டு மன்னிக்கவும். இவர்களில் பலர் புத்தகங்களுடன் நல்ல ஆலோசனைகளும் தந்தவர்கள். மற்றவர்கள் என் படைப்புகள் செவ்வனே வெளிவரக் காரணமாக இருந்தோர்கள்.


5. உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து?

விமர்சனங்கள் படைப்பாளியை முழுமைப்படுத்துபவை. அதனடிப்படையில் சொல்வதென்றால் என் கவிதைகளில் சமூகம் சார்ந்தவற்றையே பெரிதும் எதிர்பார்ப்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலமும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் அறியக்கிடைக்கிறது. ஆரம்ப கேள்விக்கான விடையில் குறிப்பிட்டது போல் மதத்தை மட்டும் அடிப்படையாக்கி என் கவிதைகளை படைக்கவில்லை. உதாரணமாக நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பானதும், மித்திரன் கலாவானம் பகுதியில் பிரசுரமானதுமான 'நாளும் நடப்போம் நல்வழியில்' என்ற கவிதை பல வாசக நெஞ்சங்களை கவர்ந்துள்ளதாக கூறினார்கள்....

அத்துடன் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையாகவே இன்னும் பல விமர்சனங்ளை தனிப்பட்ட ரீதியாக என்னிடம் கூறினால் அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

6. வாசித்ததில் பிடித்தவையும், ஏன் பிடித்தது என்பது குறித்தும்....?

பிரபல எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே மக்களோடு ஒன்றித்து தன் கருத்தைக் கூறும் வல்லமையை கையாண்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையை அச்சு அசலாக ஒப்புவிப்பதில் அவர் கையாளும் பாணி தனி ரகமானது. அவருடைய சிறுகதைகளில் வாசகர்கள் கட்டுண்டுப்போவதில் ஆச்சரியமில்லை. அதற்காக மற்ற கவிதைகளோ, சிறுகதைகளோ தரமுள்ளவையா, அற்றவையா என்று கூறுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

7. எழுத்து சார்ந்த எதிர் கால திட்டங்கள் என்ன?

BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பை உருவாக்குவதிலும் அதன் பல்வேறு செயற்திட்டங்களின் கீழ் கவிதைச் சிற்றிதழ், இஸ்லாமிய சஞ்சிகைகளை வெளியிட தீர்மானித்திருப்பதுடன். ஆதற்கான ஆலோசனைகளையும் நடாத்தி வருகிறோம். ஏதிர்காலங்களில் எமது அமைப்பினூடாக இன்னும் பல புத்தகங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம். எமது அமைப்பில் நானும் சகோதரி தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, மொரட்டுவ வஸீர என்போர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.

இன்று இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் வேறு தொழில்களை எடுத்துக் கொண்டாலும் ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. திருமணத்துக்கு முன்னரும், பின்னரும் இலக்கிய உலகிலிருந்து பெண்கள் தாமாகவே விலகிக் கொள்கிறார்கள். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே தான் பெண்கள் சார்ந்து எமது விளிப்புணர்வு எழுந்துள்ளது.

விசேடமாக, இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் நான்கு சுவர்களுக்குள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நங்கையரை இலக்கிய உலகில் பிரகாசிக்கச் செய்வதில் ஏணியாக இருக்கவும் எமது அமைப்பின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம்.

இத்திட்டம் மூலம் எமது எழுத்துலக முயற்சி மேலும் சிறப்புற இறைவனை வேண்டுவதோடு ஆர்வலர்களிடமிருந்து ஆக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை மித்திரனூடு சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமன்றி தனவந்தர்களின் உதவியையும் எம் அமைப்பு எதிர்பார்க்கிறது.

தொடர்புகளுக்கு - Rimza Mohamed
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile- 0094 77 5009 222
E-mail- poetrimza@yahoo.com

Saturday, May 21, 2011

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய
திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து


இப்போது ஏராளமாக கவிதைகள், கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வதே என் சிற்றறிவுக்கு சிரமமாக இருக்கின்றது. மறைபொருளாக, விளங்கிக்கொள்வது சிரமமானதாக எழுதுவதுதான் மேதாவிகளின் அதி மேதாவித்தனம் என்ற மனப்பான்மையோ என்னவோ! ஆனால் தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியைப் படித்தவுடனேயே பளிச்சென்று புரிந்து விடுகின்றது. தேனாய் இனித்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றது. கவிஞர் இத்தொகுதியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். எங்களை மனங்களிக்கச் செய்திருக்கிறார். கவிஞனின் நெஞ்சம் எப்படியிருக்க வேண்டுமோ, கவிஞரின் உள்ளமும் அப்படியே இருக்கிறது. காலங்காலமாக அடக்கி, அமுக்கி வைத்திருக்கும் பெண்களிலிருந்து இப்படியொரு கவிதாயினி தோன்றியிருப்பது ஆச்சரியமே.

இலக்கிய பூங்காவனத்தில் இன்னும் பல மனம் வீசும் அழகுப் பூக்களை தமிழ் உலகு எதிர்பார்க்கிறது. அற்புதம். அருமை. வாழ்த்துக்கள்!!!

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

கவிஞன் ஒரு படைப்பாளி. படைப்பாளியின் இதயத்திலிருந்து பிறப்பது கவிதை. கவிதை அவனது முகம். வெலிகம ரிம்ஸாவின் இந்த நூல் எமது கவிதை உலகுக்கு ஒரு புதுமுகம். ஆனால் அவரது கவிதைகள் பல எமக்கு பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானது.

கவிஞனின் அகத்தில் எழும் உணர்வுகள் கவிதை வடிவம் பெறுகின்றன. ஆழ்மனத்தின் ஓலங்கள், இன்பகரமான எண்ணங்கள் இவற்றுக்கு கவிதை ஒரு வடிகாலாகின்றது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான மொழிக்கு அங்கே ஒரு முக்கியமான இடமுண்டு.

இந்த நூலின் தலையாய சிறப்பாக நான் குறிப்பிட விரும்புவது இதன் மொழிநடை. எளிமையான கவிதை மொழி. இரண்டு மூன்று தடவைகள் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியதில்லை. வாசகர்களை மருட்டுகிற சிக்கலான மொழிநடை இங்கு இல்லை. பழகு தமிழில் இலகு கவிதை. தனது தேவைக்கேற்ப உருவத்தை அமைத்துக்கொண்டுள்ளார். ஒருவரை விழித்து பல கவிதைகளில் அவருடன் உரையாடுகிறார். புதிய தேவைகள் எப்போதும் புதிய வடிவங்களைப் பிரசவிப்பதில் ஆச்சரியமில்லை. கவிதை சொல்லும் முறைமை சிறப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கின்றன
தெரியாமல் நீ
வீசிச்செல்லும் பார்வைகள்

ரிம்ஸாவின் பாணியிலும் ஒரு தனித்தன்மையுண்டு. கவிதைகளில் எதுகை மோனைகள் வந்து விழுந்திருக்கின்றன. அவ்வாறே சந்த ஒழுங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

பாலைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் - என்னை
பிணைத்துக்கெண்டவளே
அன்பால்
அணைத்துக்கொண்டவளே

படிமம், குறியீடு என்கிற புதுக்கவிதை உத்திகளைவிட இவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதனால் கவிதைகளின் ஒலி நயம் சிறந்திருக்கின்றது. ஆனால் அதுவே சொற்களின் கனதியைக் குறைப்பதற்கும், கட்டுக்கோப்பைக் குலைப்பதற்கும் சில இடங்களில் காரணமாகி விடுகின்றன. துக்கம் கனத்துத் துயில்கிறதா... என்ற வரியை இங்கே சுட்டிக்காட்டலாம். அதே சமயம் சில கவிதை வரிகள் அருமையாக அமைந்துவிட்டிருக்கின்றன.

காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டுவைத்தேன்...
உனை என் மனசில் நிரப்பி
இறுக தைத்தேன்!

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்த ஒரு புதுப்பாணி. மரபுக்குள் இருந்து கவிதை எழுதும் புதுக் கவிதையாளர் வழியில் ரிம்ஸாவும் முகிழ்ந்து நிற்கும் ஒரு புதிய கவிஞர்.

ரிம்ஸா பல கருப்பொருள்களைக் கையாண்டுள்ளார். தாய்ப்பாசம், நம்பிக்கை, காதல் ஏக்கம் இப்படிப் பல... ஆனாலும் காதல் பெருமளவு இடத்தைப் பிடித்துவிட்டது. காதல் உணர்வின் பல்வேறு நிலைகள், காதலில் வீழ்தல், தவித்தல், பிரிந்து தவித்தல், புறக்கணிப்புக்கு ஆளாதல், ஏமாற்றம் என்று அவை பல. உதாரணமாக மௌனத் துயரம் என்ற கவிதையைக் குறிப்பிடலாம். கவிஞரிடம் கற்பனை இருக்கிறது. உணர்ச்சி வேகம் இருக்கிறது. கவிபுனையும் ஆற்றலும் இருக்கின்றது. அதனால்தான் காதலின் நுண்ணிய வேறுபாடுகளோடு வெவ்வேறு படிநிலைகளை அவரால் காட்ட முடிகி;றது. எனினும் சமூக நோக்குடனான கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளன. இது கவனிக்கப்பட வேண்டியதொன்று. தனிமனித உணர்வு நிலைக்கு ஈடாக சமூகம் பற்றிய அக்கறையும் புலப்படவில்லை. அக உணர்வுகளுடன் சமூகம் மோதும்போது சில கவிதைகள் பீறிட்டுக் கிளம்பியுள்ளன. அதே போல தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை அவலங்கள் சமூகத்தின் சிந்தனை பற்றி இன்னும் சில கவிதைகள் தந்திருக்கலாம். அது கவிஞரை இன்னுமொரு மேலான தளத்திலே ஏற்றி வைக்கும். விடியலைத் தேடும் வினாக்குறிகள் போன்ற கவிதைகள் தேவை.

ஒரு பெண் தனித்து இயங்கும் போது அச் சமூகத்தால் விடுப்பு பார்க்கப்படுகிறாள். அந்தப் பார்வை வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மௌனித்துப்போன மனம் என்ற கவிதை இதை உரக்கவே பேசுகிறது. முடிவில் மௌனித்துவிடும் பெண்ணைக் கோடிட்டுக் காட்டுகிறார். பெண்ணின் இருப்பு மறுதலிக்கப்டுகையில் அவள் நிழலாக இயங்குகின்றாள். துவண்டுவிட்ட அவள் மனதை, உள்ளக் குமுறலை ஒரு கவிதையில் வடிக்கிறார். கொள்ளைப்போன தனது கனவுகளை உரக்கக் கூறி அவள் தனது இருப்பை நிலைநாட்டுகிறாள். உதாரணமாக ரணமாகிப்போன காதல் கணங்கள் என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.

இப்படிப் புலம்புகின்ற பெண் புயலாக எழுகிறாள். புயலாடும் பெண்மை - இங்கே தான் இந்த நூலின் தலைப்புடன் ஏதோ ஒரு பொருத்தப்பாட்டை நான் காண்கிறேன். தென்றலின் வேகம் கூடினால், அது புயலாகவும் உருவெடுக்கக்கூடும். மொத்தத்தில் தனது மன ஆழத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை, உறவுச் சிக்கல்களாலும், உணர்வுச் சிக்கல்களாலும் அலைக்கழிக்கப்படும் பெண்ணை எமக்குக் காட்டுகிறார் கவிஞர். புறக்கணிக்கப்படும் பெண்ணின் அழுகையாக, வலியாக, வேதனையாக, ஏமாற்றமாக, கனவாக... இப்படி பல பதிவுகள் இந்நூலில் உள்ளன. கவிஞருக்கு இந்த எழுத்து ஒரு வடிகாலாகும். அதே சமயம் பெண் எழுத்திற்கு இது ஒரு வெற்றியாகவும் அமைந்து விடுகின்றது.

வாழ்வில் நம்பிக்கை வேண்டும் என்று அடித்துக்கூறுகிற சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. வெற்றியின் இலக்கு, வானும் உனக்கு வசமாகும் முதலிய கவிதைகள் மனிதனின் ஆற்றலை உணர்த்தி நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன.

ரிம்ஸாவின் கவிதைகள் இலகுவான நடையில் நீரோட்டம்போல தவழ்ந்து, தென்றலைப்போல எம்மைத்தடவி சுகம் சேர்க்கின்றன. ஆத்மார்த்தமான அனுபவங்கள் முகங்காட்டுகின்றன. சொற்கள் கவிஞரின் கைவண்ணத்தில் கைகட்டி நிற்கின்றன. ஆனால் தலைப்புக்களில் சிலவற்றை கவிதையின் கருத்துக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கலாம்.

பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணே பேசுவதில் உள்ள சிறப்பை பல கவிதைகளில் காண்கிறோம். இன்னும் அவரது பார்வையை விசாலமாக்கியிருக்கலாம். குடும்ப அமைப்பிலே பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் கவிதைகளில் பரிணமித்திருக்கலாம். இனிவரும் கவிதைகளில் சமூகத்தின் பல பரிமாணங்களையும் உற்று நோக்கல் சிறப்பு தரும். ஒரே அச்சாணியில் பல கவிதைகள் சுழல்வதையும் தவிர்க்கலாம்.

கவிதை என்பது மனிதர்களின் மனங்களும், முகங்களும் சம்மந்தப்பட்டது. கவிஞரின் முகம் அங்கே தெரிகிறது. சமூகத்தின் முகமும் அங்கே தெரிகிறது. அதனால்தானோ என்னவோ ஓவியர் ஸ்ரீதர், முகங்களிலே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதுபோல இன்னும் சிறப்புகளுடன் கூடிய பல கவிதைகளை கவிஞரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்!!!

Monday, May 2, 2011

04. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி - ஒரு கண்ணோட்டம்

தந்திச் செய்திகள் போல் தற்காலத்தில் எழுந்துள்ள கவிதை இலக்கியமானது சொற்சுருக்கமாக வாழ்க்கையின் பெரும் பகுதிகளை விமர்சித்துச் செல்கிறது. செய்யுளாக, பாக்கலாக, கவிதைகளாக உருமாறி, மரபு தாண்டிய புதுவடிவக் கவிதைகளையே நாம் இன்று படிக்கிறோம்.

தினம் தினம் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்த வண்ணமிருப்பது அதன் வளர்ச்சிப் போக்கைக் காட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இளந்தலைமுறைக் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ''தென்றலின் வேகம்'' என்ற பெயரில் கவிதைத் தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இத்தொகுதியை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் 64 கவிதைகள் பல தலைப்புக்களில் இடம்பெற்றிருப்பதோடு நூலின் பின் இணைப்பு போல கவித்துளி என்ற தலைப்பிட்டு வரிக்கவிதைகள் 29 உம் காணப்படுகின்றன.

கவிஞர் ஏ. இக்பால் தனது முன்னுரையில் இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ''அனுபவமும் அனுமானமும் நிறைந்தததாக இக்கவிதைகள் தென்படுகின்றன. மனிதத்துவ இயல்புகளை படம்பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அறிவூட்டி நிற்கின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினர் தமது பதிப்புரையில் ''ரிம்ஸா தான் பிறந்த மண்ணிலேயே நின்றுகொண்டு தனது அவதானிப்புக்களையும், அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக கவிதாலங்காரத்துடன் கவிதைகளாகப் புனைந்துள்ளார். இம்முயற்சிக்கு தற்துணிவு வேண்டும். இது இவரிடம் உள்ளது. இவரது கவிதைகளில் பெரும்பாலானவை தன்னுணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. ரிம்ஸா தனது பார்வையை மக்கள் பக்கம் விசாலித்தால் மக்கள் படைப்பாளியாகக் கொள்ளப்படுவார்'' என்ற கருத்தையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இளந்தலைமுறைக் கவிக்குயிலான ரிம்ஸா முஹம்மத் தனது நூலில் என்னுரை என்று உரைக்காவிட்டாலுங் கூட எண்ணங்கள் வண்ணமாகும் நேரத்தில்... என்று குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நோக்குகையில் அவரது கவியாற்றலையும், இலக்கியத் தாகத்தையும் உணரக் கூடியதாகவும் சறுக்குமர ஏற்றத்திலே விடாமுயற்சி கொண்டு உச்சியைத் தொடுவதற்கு எத்தனித்து நிற்கும் ஒரு சிறந்த கவிஞராக விளங்குகிறார் என்பதையும் அறிய முடிகிறது.

தாய்மை, அன்பு, காதல், மானிட தர்மம், மானிடநேயம், துணிவு, துன்பம், ஏமாற்றம் என்றெல்லாம் அவரது கவிதைகளின் பாடுபொருள்களாக கவிதா விலாசமிடுகின்றன.

தாயை இழந்த துயரத்தில் ஆராதனை என்ற கவிதையில்,

'துடுப்பிழந்த படகாய்
துயரக்கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கீடாக
தரணியிலே ஏதுண்டு?'

என்று தாயன்பின் பெருமைகளைப் பற்றிச்சொன்னவர்,

'உன் பிரிவுத்துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு...
ஒத்தடம் தர உனையன்றி
யார் வருவார் துணைக்கு?'

என துணையின்றி, ஆறுதலுக்கு யாருமற்ற கைவிடப்பட்ட ஒரு வெறுமை நிலையில் புலம்புகின்ற விதம் கரையாத கல்மனதையும் கரைத்துவிடும் தன்மை பெற்றுள்ளதை உணர முடிகின்றது.

வெற்றியின் இலக்கு என்ற கவிதை உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறது.

'உழைப்பே வெற்றியைத்
தேடித்தரும்..
வாழ்வில் முன்னேற்றம் உன்னை
நாடி வரும்'

என்று உழைப்பால் உயரலாம் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

'விடியலைத் தேடும் வினாக்குறிகள்' என்ற கவிதை மூலமாக கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலால் மக்கள் பட்ட அவலங்களையும், கஷ்டங்களையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடங்கிக் கிடப்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'கோர இடிமுழக்கோடு அன்று
குண்டுமாரி பொழிந்த தீவில்
குருதிப்புனல் பெருக்கெடுத்ததால்
குடிபெயர்ந்து
குஞ்சி பூராண்களோடும்
கிழடுபட்டைகளோடும்
கணக்கற்றோர்
கண்ணீரும் கம்பலையுமாக
காப்பகங்களில் நெளிகிறார்கள்'

நிலவுரங்கும் நள்ளிரவு, நித்திரையில் சித்திரவதை, நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள், ஜீவநதி, ஏற்றுக்கொள் இன்றேல் ஏற்றிக்கொல் போன்ற பல கவிதைகளில் சந்தமும், ஓசை நயமும் அழகாக காணப்படுகின்றன. அந்தக் கவிதைகள் இனிமையான வசனங்களால் புனையப்பட்டிருப்பதானது கன்னியரினதும் காளையரினதும் இதயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.

குபேர வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்கள், குடிசைவாழ் மக்களை சற்றும் எட்டிப் பார்ப்பதில்லை என்பதனை,

'குபேரபுரியில் கொலுவிருக்கும்
கோபுரவாசிகளே..
கொஞ்சம் குனிந்து கீழாக
குக்கிராமவாசிகளையும் பாருங்கள்'

என்று கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார் கவிஞர்.

பாவங்களின் பாதணி, வெற்றிக்கு வழி, வானும் உனக்கு வசமாகும், அழகான அடையாளம், வாழ்வு மிளிரட்டும் போன்ற கவிதைகள் நல்ல கருத்துக்களை சொல்லிப்போகின்றன.

பொதுவாக சிறந்ததொரு கவிதைத் தொகுப்பை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். எம்மை விட்டுப் பிரிந்த பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பா கருத்தாழமிக்க கவர்ச்சியான ஓவியங்களை, ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றவகையில் வரைந்து கவிதைகளுக்கு மெருகூட்டியிருக்கிறார்.

வளர்ந்துவரும் இளந்தலைமுறைக்  கவிதாயினிக்கு நிச்சயம் எதிர்காலம் பட்டுக்கம்பளம் விரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அவரது இலக்கிய ஆர்வத்தையும், அவரது கவிதைகளின் தன்மைகளையும் பார்க்கும்போது புகழ்பெற்ற கவிஞர்கள் வரிசையில் புகழ்பூத்த பெண்கவிஞராக இவர் திகழ்வார் என்பது சர்வநிச்சயம்.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=



இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14282:2011-04-25-10-31-42&catid=4:reviews&Itemid=267

எனது தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றி 2011.04.24ம் திகதி தினகரன் பெண் பகுதியில் எம்.எம். மன்ஸூர் அவர்கள் எழுதி வெளிவந்த விமர்சனத்தைப் பார்க்க

http://thinakaran.lk/vaaramanjari/2011/04/24/?fn=g1104242

Monday, March 28, 2011

13.03.2011 தினகரன் வாரமஞ்சரி 'செந்தூரம்' இதழில் இடம்பெற்ற எனது நேர்காணல்.

எனது எழுத்துக்கள் அனுபவங்களின் வெளிப்பாடே! சாமஸ்ரீ கலாபதி ரிம்ஸா முஹம்மத் தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழின் அட்டைப்படத்தில் எனது புகைப்படத்தை பிரசுரித்து என்னை கௌரவித்திருந்தது. http://thinakaran.lk/vaaramanjari/2011/03/13/default.asp?fn=s11031315 தென்னிலங்கைளின் வெலிகம ஊரை பிறப்பிடமாகவும், தொழில் நிமித்தம் கொழும்பிலும் வாழ்ந்து வருகின்ற ரிம்ஸா முஹம்மத் (MAAT, MIAB) இலக்கியப் பங்களிப்பிலும், கணக்கீட்டுத்துறையிலும் தன்னை முழுமையாக உட்படுத்தி தனது ஆளுமைகளை பதிவுசெய்து வரும் இவர், தனியார் கம்பனியில் உதவிக்கணக்காளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தனது ஈடுபாட்டுப் புலமைத்துவத்தின் வெளிப்பாடுகளாக (01) வங்கிக் கணக்கிணக்கக்கூற்று, (02) கணக்கீட்டுச்சுருக்கம், (03) கணக்கீட்டின் தெளிவு, (04) தென்றலின் வேகம் ஆகிய நான்கு நூல்களை வெளிக்கொணர்ந்திருப்பது இவரது அடையாளத்தை நிலைநிறுத்துகின்றது. மற்றும் கூடிய விரைவில் 'எறிந்த சிறகுகள்' என்ற கவிதைத்தொகுதியையும் தரவிருக்கிறார். Best Queen Foundation என்ற பெண்கள் அமைப்பின் தலைவியாகச் செயற்படும் ரிம்ஸா முஹம்மத் 2004ல் தினமுரசு வாரப்பத்திரிகையில் நிர்மூலம் என்ற தலைப்பிலான கவிதை ஊடாக இலக்கிய களத்திற்குள் அறிமுகமான இவர் தனது இயற்பெயரிலும், 'கவிக்குயில்', 'நிலாக்குயில்' என்கின்ற புனைப்பெயர்களிலும் இலக்கியப் புனைவுகளைப் படைத்து வருவதோடு 'பூங்காவனம்' என்ற காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இலக்கியத் தாகமுடையோராகவும் விளங்குகின்றார். 

1. கணக்கீட்டுத்துறையில் கூடுதலான ஈடுபாடு காட்டி வந்த உங்களை இலக்கியத்துறையில் திரும்ப வைத்த காரணம் என்ன? 

கணக்கீடு மூலமாக என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் கருத்துக்களைக் கூறிவிட முடியாது என்று உணர்ந்தேன். அதற்கான நல்லதொரு களம் இலக்கியம் எனக்கண்டேன்;. அதிலும் கவிதை வடிவில் என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என் மனதுக்கு இதம் தருகின்றது. இத்துறையில் ஆத்ம திருப்தி கிடைப்பதால் தான் நான் இலக்கிய முயற்சியில் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். 


2. கவிதைகளில் மொழி, ரசனை என்பதற்கு இடமில்லை என்ற குரல் பரவலாக ஒலிக்கின்றது. இது குறித்த உங்கள் பதிவு என்ன?

எல்லோருடைய கவிதைகளுக்கும் இது ஏற்புடைய கூற்றென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனினும் இன்று புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் சில கவிதைகள் வெறும் சொற்கோர்வையை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்படுகின்றன. அவற்றில் மொழிநயம், சந்தம், படிமம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. குறிப்பாக பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று எழுதப்படும் கவிதைகளைப்; பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றை கவிதை என்ற வட்டத்துக்குள் வைத்து நோக்க முடியாதுள்ளது. 

 
3. பின்நவீனத்தும் என்ற போர்வையில் எழுதப்படும் பாலியல் கவிதைகள் பற்றிய உங்கள் எண்ணம் யாது? 

 ஒரு சிலர் பாலியல் கவிதைகளை எழுதுகிறார்கள் என்பது உண்மை தான். அப்படியான கவிதைகளை எழுதுவதன் மூலம் தங்கள் பெயரை நிலைக்கச்செய்யலாம் என்று பின்நவீனத்துவவாதிகள் கருதுகிறார்கள் போலும். ஆனால் இதை விடுத்து சமூக நல மாற்றங்களை நோக்கியதாக எத்தனையோ விடயங்களை கவிதைகளுக்கூடாக பேசலாம். அதுவே பயன்மிக்கது என நான் நம்புகிறேன். 


4. உங்களது கவிதைகளுக்கான கருப்பொருள்களை எதிலிருந்து தேடுகின்றீர்கள்? 

நான் வாழ்ந்த, வாழ்கின்ற சூழலும், என் வாழ்வில் கிடைத்த அனுபவங்களும், நான் சந்தித்த சில நபர்களின் இரட்டை வேடங்களும் எழுத வேண்டும் என்ற வெறியை எனக்குள் உருவாக்கின. அது போல எனது தாயாரின் இழப்பை எண்ணியெண்ணி என் கண்ணீர் வற்றிய பிறகு பேனாவின் மை கொண்டு தான் அழுதேன். அவ்வாறான நிலைகள் தான் என் கவிதைகளுக்கான கருவை பெற்றுக்கொள்ளச் செய்தது. 


5. உங்களது கவிதை நூலான தென்றலின் வேகம் தொகுதிக்கு கிடைத்த வரவேற்பு எவ்வாறு இருந்தது? 

இலக்கிய உலகத்தில் என்னை முழுமையாக ஓர் அடையாளத்துக்கு கொண்டு வந்தது இந்தக் கவிதைத்தொகுதி தான். இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை என் கவிதை நூலை வெளியிட்டு எனக்கான விலாசத்தை இருப்பு கொள்ளச் செய்தது. அந்த வகையில் இப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இப்பேரவையில் நானும மூன்று வருடங்களாக அங்கத்தவராக இருக்கின்றேன். எனது கவிதைத்தொகுதி இளைஞர் யுவதிகளை வெகுவாக ஈர்த்திருப்பதாக தொலைபேசி, ஈமெயில், நேரில் என்று பல கோணங்களிலும் என்னைத் தொடர்பு கொண்டுநிறைய பாராட்டினார்கள். அது மட்டுமன்றி பெரும்பாலான கவிதைகளில் சந்த ஒழுங்கு பேணப்பட்டு சொற்கள் இலகுவாக அமைந்திருப்பதால் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மிடுக்கி விட்டதாகவும் தெரிவித்தனர். எது எப்படி இருப்பினும் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மைன விமர்சனங்ளை முன்வைப்பதனூடாக என் இலக்கிய வளர்ச்சி வலிமை பெறும் என்று நான் நம்புகிறேன். 


6. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் உண்டா? 

ஆம். சுமார் இரண்டு வருடங்களாக (2004 – 2005 காலப்பகுதியில்) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்து வழங்குதல், குரல் கொடுத்தல் போன்ற பங்களிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். நேத்ரா அவைரிசையில் கவிதை பாடியிருக்கிறேன். உதயதரிசனம் நிகழ்ச்சியில் (நேர்காணல்) கலந்துகொண்டுள்ளேன். அண்மையில் சக்தி அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன். 


7. பெண் எழுத்து, பெண் மொழி, பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை?

பெண் எழுத்து என்ற அடிப்படையில் நோக்கும் போது பொதுவாக பெண்கள் தமது பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் குறித்தும், அதில் ஏற்படும் சம்பவங்களையுமே புடம் போட்டுக்காட்ட விளைகின்றார்கள். ஆனாலும் எழுத்து என்ற அடிப்படையில் பொதுவாக நோக்கும் போது பெண் எழுத்து, ஆண் எழுத்து - பெண் மொழி, ஆண் மொழி என்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்னைப் பொறுத்தளவில் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரம்பை நிலைநிறுத்தி வைத்துக்கொண்டு அதற்குள் தான் அவர்கள் வாழ வேண்டும். அதை மீறும் போது பெண்கள் கண்டிப்பாக ஆபத்தை நோக்கித்தான் தள்ளப்படுவார்கள். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதில் அபிப்பிராய பேதங்களும் காணப்படலாம். 


8. உங்கள் கணக்கீட்டு நூல்களுக்கு கிடைத்த வரவேற்புகள் எப்படி? 

எனது கணக்கீட்டு நூல்கள் பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாமல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டிருப்பதால் அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. கணக்கீட்டு உத்திகள், அடிப்படை விடயங்கள், விளக்கங்கள் என்பன தெளிவாக சொல்லப்பட்டிருப்பதால் இதற்குத் தனியானதொரு வரவேற்பு இருக்கிறது. எனது கணக்கீட்டு நூல்களில் அடிப்படை விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். அது பாட விடயங்களை தெளிவாக விளங்கிக்கொண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள துணை புரிகிறது. சில புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் கூட இன்னுமொரு கணக்கீட்டு நூலை எழுதித்தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 


9. உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி? 

மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் தனது வெள்ளி விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக 2008 இல் நடாத்திய கவிதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தையும் விருதையும் வழங்கி கௌரவித்தது. 

சந்திப்பு: எம். எம். எம். நூறுல் ஹக் சாய்ந்தமருது-05 


நன்றிகள்:- திரு. M.M.M. நூருல் ஹக் திரு. A.R. பரீத் (தினகரன் செந்தூரம்)