Wednesday, December 19, 2012

2012 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்

2012 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்

இஸ்லாமயப் பெண் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் என்னால் எழுத முடியும்!

நேர்கண்டவர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

தென்னிலங்கைளின் வெலிகம ஊரைப் பிறப்பிடமாகவும், தொழில் நிமித்தம் கொழும்பிலும் வாழ்ந்து வருகின்ற கலைஞர் வெலிகம ரிம்ஸா இலக்கிய உலகால் நன்கு அறியப்பட்டவர். கணக்கீட்டுத் துறையில் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தற்போது தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.


தென்றலின் வேகம் என்னும் கவிதைத் தொகுதியுடன் கணக்கீடு தொடர்பான நூல்கள் மூன்றினையும் வெளியிட்டுள்ளார்.

Best Queen Foundation என்ற பெண்கள் அமைப்பின் தலைவியாகச் செயற்படும் ரிம்ஸா முஹம்மத் 2004 இல் ஊடாக இலக்கிய களத்திற்குள் அறிமுகமானவர். தனது இயற்பெயரிலும்; 'வெலிகம கவிக்குயில்’’, 'வெலிகம நிலாக்குயில்”,; 'ஆர்.எம்.’’ ஆகிய புனைப்பெயர்களிலும் இலக்கியப் புனைவுகளைப் படைத்து வருவதோடு 'பூங்காவனம்’’ என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

எரிந்த சிறகுகள் என்ற இன்னொரு கவிதைத் தொகுதியையும், கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை என்ற விமர்சனங்களின் தொகுதியையும் எதிர்காலத்தில் வெளியிட இருக்கும் இவரின் நேர்காணலை இங்கு தருகின்றோம்.

உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து...?

1997 - 98 காலப்பகுதியில் வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்" நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.

மேலும் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் பத்திரிகையில் 'நிர்மூலம்’’ என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து இன்று வெளிவரும் பத்திரிகைகள்சஞ்சிகைகளிலும்> இந்திய சஞ்சிகை> இணையத்தளங்களிலும் எனது ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனது சொந்த வலைப்பூக்களிலும் எழுதி வருகிறேன்.

கணக்கீட்டுத் துறையில் கூடுதலான ஈடுபாடு காட்டி வந்த உங்களை இலக்கியத்துறையில் திரும்ப வைத்த காரணம் என்ன?

கணக்கீடு மூலமாக என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் கருத்துக்களைக் கூறிவிட முடியாது என்று உணர்ந்தேன். அதற்கான நல்லதொரு களம் இலக்கியம் எனக்கண்டேன்;. அதிலும் கவிதை வடிவில் என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என் மனதுக்கு இதம் தருகின்றது. இத்துறையில் ஆத்ம திருப்தி கிடைப்பதால் தான் நான் இலக்கிய முயற்சியில் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கினேன்.

உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

என்ன தான் கவிதைகளை எழுதினாலும் நான் இஸ்லாமியப் பெண் என்ற வட்டத்துக்குள் நின்றுதான் எழுத முடியும். என் கவிதைகள் முற்று முழுதாக இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன்> பொதுவான மனித நியதிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தவிர மதம் குறித்து தனியான சொல்லாடல்களை முடிந்த வரை தவிர்த்தே வருகிறேன். (உதாரணமாக இஸ்லாமிய வசனங்களைக் கூறாமல் அதற்குரிய தமிழ் வசனங்களை கையாள்வது கூட. ஏனென்றால் எல்லோராலும் இஸ்லாமிய சொல்லாடல்களைப் புரிந்துகொள்ள முடியாதே) ஆன்மீகம் சார்ந்த பல கவிதைகள் எழுதினாலும் காதல்> பெண்ணியம்> சமூக அவலம்> சீதனக்கொடுமை> போர்ச் சூழல்> மானிட நேயம் சார்ந்தனவற்றையும் எழுதியிருக்கிறேனே. அவை பல பத்திரிகைகளிலும் கூட பிரசுரமாகியிருக்கின்றன.

உங்களை ஊக்கப்படுத்தியவர்கள் குறித்து?

என் சகல வளர்ச்சிக்கும் உம்மாவும் உறுதுணையாய் இருந்ததுண்டு. (தாய் காலஞ்சென்றுவிட்டார்). அத்துடன் சாச்சாவான .எச்.எம். ரிபாய் மற்றும் மாமாவான எம்.ரீ.எம். ஸாக்கிர் ஆகியோர் என் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளார்கள். மறைந்த எழுத்தாளர் திக்வல்லை ஹம்ஸா மாமாவைப் பற்றியும் நன்றியுடன் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். இவற்றுக்கு அடுத்தபடியாகவே ஏனையவர்களைக் குறிப்பிடலாம்.

உங்களது தென்றலின் வேகம் கவிதை நூல் பற்றி..?

இலக்கிய உலகத்தில் என்னை முழுமையாக ஓர் அடையாளத்துக்கு கொண்டு வந்தது தென்றலின் வேகம் கவிதைத்தொகுதி தான். இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் எனது கவிதை நூலை வெளியிட்டு எனக்கான விலாசத்தை இருப்பு கொள்ளச் செய்தது. அந்த வகையில் இப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இப்பேரவையில் நானும் நான்கு வருடங்களாக அங்கத்தவராக இருக்கின்றேன்.

எனது கவிதைத்தொகுதி இளைஞர் யுவதிகளை வெகுவாக ஈர்த்திருப்பதாக தொலைபேசி, ஈமெயில், நேரில் என்று பல கோணங்களிலும் என்னைத் தொடர்பு கொண்டு நிறைய நபர்கள் பாராட்டினார்கள்.

எப்படி இருப்பினும் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையான விமர்சனங்ளை முன்வைப்பதனூடாக என் இலக்கிய வளர்ச்சி வலிமை பெறும் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்? வாசித்ததில் பிடித்தவையும், ஏன் பிடித்தது என்பது குறித்தும்....?

பாரதியும், பாரதிதாசனும் எனக்குப் பிடித்த கவிஞர்கள். அதுபோல் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பித்தன், ஆலாபனை ஆகிய கவிதை நூல்களும், அத்துடன் கவிஞர் மு. மேத்தா அவர்களின் முகத்துக்கு முகம், காத்திருந்த காற்று, நந்தவன நாட்கள் ஆகிய கவிதைத் தொகுதிகளும் எனக்கு மிகமிகப் பிடித்தவையே

ஈழத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் சுதாராஜின் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே மக்களோடு ஒன்றித்து தன் கருத்தைக் கூறும் வல்லமையை கையாண்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையை அச்சு அசலாக ஒப்புவிப்பதில் அவர் கையாளும் பாணி தனி ரகமானது. அவருடைய சிறுகதைகளில் வாசகர்கள் கட்டுண்டுப்போவதில் எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. அதற்காக மற்ற கவிதைகளோ, சிறுகதைகளோ தரமுள்ளவையா,; அற்றவையா என்று கூறுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

வானொலி> தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் உண்டா?

ஆம். சுமார் இரண்டு வருடங்களாக (2004 2005 காலப்பகுதியில்) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்" நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்து வழங்குதல், குரல் கொடுத்தல் போன்ற பங்களிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். நேத்ரா அவைரிசையில் கவிதை பாடியிருக்கிறேன். அத்துடன் உதயதரிசனம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். அண்மையில் சக்தி அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன். டேன் தொலைக்காட்சியில் இன்றைய பிரமுகர் நேர்காணல் நிகழ்ச்சியிலும்; கலந்து கொண்டுள்ளேன்.

நவீன கவிதைகளில் மொழி ரசனை இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. இது பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

எல்லோருடைய கவிதைகளுக்கும் இது ஏற்புடைய கூற்றென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனினும் இன்று புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் பல கவிதைகள் வெறும் சொற்கோர்வையை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்படுகின்றன. அவற்றில் மொழிநயம், சந்தம், படிமம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்ட்டிருப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று எழுதப்படும் பல விடயங்களையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றை கவிதை என்ற வட்டத்துக்குள் உள்ளடக்கலாமா என்பது சந்தேகத்துக்குரியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

பெண் எழுத்து, பெண் மொழி, பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

பெண் எழுத்து என்ற அடிப்படையில் நோக்கும் போது பொதுவாக பெண்கள் தமது பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் குறித்தும், அதில் ஏற்படும் சம்பவங்களையுமே புடம் போட்டுக்காட்ட விளைகிறார்கள். ஆனாலும் எழுத்து என்ற அடிப்படையில் பொதுவாக நோக்கும் போது பெண் எழுத்து, ஆண் எழுத்து - பெண் மொழி, ஆண் மொழி என்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்று தான் கூற வேண்டும்.

என்னைப் பொறுத்தளவில் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரம்பை நிலைநிறுத்தி வைத்துக்கொண்டு அதற்குள் தான் அவர்கள் வாழ வேண்டும். அதை மீறும் போது பெண்கள் கண்டிப்பாக ஆபத்தை நோக்கித்தான் தள்ளப்படுவார்கள். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதில் அபிப்பிராய பேதங்களும் காணப்படலாம்.

பெண்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் என்ன?

பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். குடும்பப் பெண்கள்> தொழிலுக்குச் செல்லும் பெண்கள் என்று பிரித்து நோக்கினாலும் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள், சிக்கல்கள் கணக்கில் அடங்காது.

எனினும் பல பெண்கள் குடும்பம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விட்டால் எழுத்துத் துறையிலிருந்து தாமாகவே விலகிக் கொள்ளும் நிலையும் இல்லாமலில்லை. பல போராட்டங்களுக்கு மத்தியிலும் எழுத்துத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்; பெண்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இலக்கிய விமர்சனங்கள் குறித்த உங்கள் பார்வை?

குறிப்பிட்ட படைப்புக்காக முன்வைக்கப்படும் விமர்சனம் நேர்மையானதாக இருக்க வேண்டும். அப்படியான விமர்சனங்களால் ஒரு படைப்பாளி வழிப்படுத்தப்படுகிறான். அவ்வாறான விமர்சனங்களை நிச்சயமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காழ்ப்புணர்வு காரணமாக நேர்மையற்ற விமர்சனங்களை முன்வைக்கும் பட்சத்தில் அதை நாம் கண்டுகொள்ளவே கூடாது. செவிடன் காதில் ஊதிய சங்காகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நேர்மையான விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை முழுமைப்படுத்துபவை என்ற கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றி?

2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தையும் விருதையும் வழங்கி கௌரவித்தது. மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் தனது வெள்ளி விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக 2008 இல் நடாத்திய கவிதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம் கிடைத்தது. அத்துடன் 2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக சாதனைக்குரிய மகளிர் விருது பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.

உங்கள் இலக்கிய அமைப்பான Best Queen Foundation பற்றி கூறுங்கள்?

அதன் பல்வேறு செயற்திட்டங்களின் கீழ் பூங்காவனம் என்ற கலை இலக்கிய சமூக சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றோம். பெண்களின் குரலாக ஒலித்துவரும் இச்சஞ்சிகையில் தரமான எழுத்துக்களை உள்ளடக்கியவர்களின் படைப்புக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டு வருகின்றன. இதுவரை பூங்காவனம் சஞ்சிகையின் இதழ்கள் 10 வரை வெளிவந்துள்ளன. இந்த வெளியீட்டு முயற்சிகளை தனித்து நின்று செயல்படுத்துவது தான் மிகச்சிரமமாக இருக்கிறது. ஆகையால் நல்மனம் கொண்ட தனவந்தர்களின் உதவிகளையும், நன்கொடைகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம். எதிர்காலங்களில் எமது அமைப்பினூடாக இன்னும் பல புத்தகங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம்.

இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் நான்கு சுவர்களுக்குள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நங்கையரை இலக்கிய உலகில் பிரகாசிக்கச் செய்வதில் ஏணியாக இருக்கவும் எமது அமைப்பின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்!!!

தொடர்பு - 077 5009 222

வலைத்தளங்கள் - 
www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com
www.rimzavimarsanam.blogspot.com
www.rimzachildrenstory.blogspot.com
www.bestqueen12.blogspot.com