Monday, January 13, 2014

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு இயங்கிவரும் பன்முகப் படைப்பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற நூல், ஆய்வாரள்களுக்கு இளம்  கவிஞர்கள், படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஓர் ஆவண நூலாக வெளிவந்துள்ளது.



ரிம்ஸா முஹம்மதைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவுக்கு அவர் வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் பெற்ற ஒருவராகக் காணப்படுகின்றார். பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என்பவற்றில் நன்கு தடம் பதித்தும், முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் தனது திறமைகளைக் காட்டி வரும் ஓர் இளம் படைப்பாளியாகவும் காணப்படுகிறார்.

சுமார் 42 படைப்பாளிகளின் நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற இந்நூலில் இடம்பிடித்துள்ளன. இவர்களில் அநேகம் பேர் இளம் படைப்பாளிகளாக இருப்பதோடு, மூத்த படைப்பாளிகள் சிலரதும் நூல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. அநேகமானவை கவிதை நூல்களாகவும், சில சிறுகதை, காவிய நூல்களாகவும் உள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, படைப்பாளிகள் பற்றிய விபரங்கள் என்பன தெளிவான முறையில் தரப்பட்டு சிறந்த விமர்சனங்களாக இடம்பிடித்துள்ளன. எதிர்காலத்தில்; எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு அரிய நூலாகவும் இது காணப்படுகிறது.

இந்நூலைப்பற்றி இலக்கியத் திறனாய்வாரளரும், பிரபல விமர்சகருமாகிய திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்கையில் ''திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது. ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலில் இரசனை உணர்வு இருக்க வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும். அத்தகைய பண்புகளின்றி வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னா பின்னப்படுத்தி ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தைப் புலப்படுத்தாமல் இந்நூலாசிரியை நல்ல மனதுடனும், திறந்த மனப்பான்மையுடனும், சொற்சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.'' என்று இந்நூலாசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களினால் வெளியிடப்பட்டுள்ள கவிதை, சிறுகதை, காவியம், கட்டுரை, சஞ்சிகை என படைப்பு நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு நூலாகவும், எதிர்காலத்தில் ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவும் இதனைக் கருதலாம்.

ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க மாத்திரமல்லாமல், வைத்துப் பாதுகாப்பதற்கும் ஏற்ற வகையில் இருநூற்றி ஏழு பக்கங்களை உள்ளடக்கியதாக, அழகிய முகப்புப் படத்துடன், தரமான கடதாசியில் மிகவும்  கணதியான புத்தகமாக இந்நூல் அச்சிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கான அட்டைப் படத்தை வடிவமைத்தவர் படைப்பாளி எச்.எப். ரிஸ்னா ஆவார். அதே போல் கவிஞர் நஜ்முல் ஹுசைனின் பின்னட்டைக் குறிப்புக்கள் இந்நூலாசிரியரைப் பற்றி அறியாதவர்களுக்கு அறிமுகத்தைக் கொடுக்கிறது. கொடகே பதிப்பகம் இந்நூலை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நூல் - கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு - 0775009222
வெளியீடு - எஸ். கொடகே நிறுவனம்
விலை - 500/=

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை நூலுக்கான கருத்துரை - த.எலிசபெத், தலவாக்கலை

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை நூலுக்கான கருத்துரை

வாசிப்பின் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறு வேறு அதிர்வுகளை தந்துவிடுகின்றது. சிலருக்கு நுனிப்புல் மேய்வதும், சிலருக்கு ஆழமாக வாசித்து உள்வாங்கிக்கொள்வதும், சிலருக்கு தமது வாசிப்பு அநுபவத்தை வரிகளாக்குவதும், விபரிப்பதுமென்று இன்னும் பலவாறு வேறுபடலாம். வாசிப்பின்பால் கொண்ட ஈர்ப்பினாலும் எழுத்துக்களின் மீதான ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்களோடு நல்ல வாசகியாக அறிமுகமான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் அக்குறிப்புக்களைத் தொகுத்து நூலுருவாக்கி நம் மத்தியில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார்.



2004 ஆம் ஆண்டு 'நிர்மூலம்'' என்ற கவிதையோடு அறிமுகமான கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்கள் இலங்கையின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலைத்தளங்களிலும் தனது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், விமர்சனம் எனும் இலக்கிய தளங்களில் கால்பதித்துள்ள இவர் கணக்கீட்டுத் துறையில் பல பட்டங்களைப்பெற்ற பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்து இலக்கியப் பரப்பில் தனியொரு முத்திரையோடு வலம்வரும், வளர்ந்துவரும் இளம்படைப்பாளியான இவரின் நூலுக்கு அணிந்துரையினை திறனாய்வாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பாகும். நூலாசிரியரின் முழுவிபரங்களோடும் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களும், எளிமையான அழகுடனும் நயத்துடனும் நூல் அட்டையினை அலங்கரித்திருக்கின்றார் கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள்.

கவிதை, சிறுகதை நூல்களை மட்டுமன்றி சஞ்சிகை, நினைவுமலர், பாடல்தொகுப்பு, குறுங்காவியத் தொகுதி என ஏனைய நூல்களினையும் விமர்சன ரீதியாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. ஆழமான வாசிப்பினையும், விரிவான ரசனையுணர்வும் பரந்த தேடலும்கொண்ட நூலாசிரியர் இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களின் நூல்களை படித்து விமர்சித்திருப்பது நூலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதோடு, வாசகர்களாகிய எமக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தினையும், அவர்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பினையும், ஆர்வத்தைனையும் பெற்றுத்தந்துள்ளது. ஆவணப்படுத்தப்படவேண்டிய இந்நூலானது ஆய்வுகளுக்கும் ஆர்வமுள்ள வாசகர்களின் நூல் தெரிவுகளுக்கும் சிறந்த வழிகோலாகவும் காணப்படுகின்றது. ஆனாலும் ஒவ்வொரு நூல் விமர்சனத்தின்போதும் அந்நூல் வெளிவந்த காலப்பகுதியினை குறிப்பிட்டிருப்பின் பிற்காலத்தில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும் என்பது முக்கியமானதாகும். அத்துடன் இந்நூல் நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் எட்டாவது நூல் என்பதும்ஒ இங்கு குறிப்பிடத்தக்கது.

விமர்சனம் ஃ திறனாய்வு போன்ற எண்ணக்கருக்களுக்கு வித்திட்டிருக்கும் இரசனைக் குறிப்புக்களோடு மேலும் பல புதிய புதுமையான எழுத்துக்களோடு எம்மை சந்திக்கும் ஆற்றலுள்ள நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களை வாழ்த்துவதோடு, இலங்கையின் எழுத்தாளர்கள் பற்றிய தேவையுடையோர் ஐயமற இந்நூலினை பெற்று பயன்பெறலாம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.

நூல் - கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு - 0775009222
வெளியீடு - எஸ். கொடகே நிறுவனம்
விலை - 500/=

Wednesday, January 8, 2014

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை --- அணிந்துரை

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை



அணிந்துரை

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ''கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை'' என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

இதற்குக் காரணங்கள் பல:

01. நூலாசிரியையின் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாகப் புதிய எழுத்தாளர்கள் தொடர்பான தமது தெரிவுகளையும், திறனாய்வு சார்ந்த தமது இரசனையையும் வெளிப்படுத்தியிருப்பது.

02. இந்நூலில் தாம் எடுத்துக்கொண்ட நூல்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்திருப்பதனால், எதிர்கால ஆய்வாளர்களுக்குக் கூட்டு மொத்தமான பார்வையைச் செலுத்த வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

03. தவிரவும், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பாக ஏனையவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வாளர்கள் சிரமமின்றி தமது கணிப்பைச் செய்ய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

04. அண்மைக் காலப் புதிய ஈழத்துக் கவிஞர்கள் தொடர்பான ஆக்கங்களையும், ஓரிரு முதிய எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய கணிப்பையும் இந்நூல் உள்ளடக்குகிறது.

05. இதுவரை காலமும் பிரதான நீரோடையில் அதிகம் சந்திக்கப்படாத பிராந்திய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் நாம் அறிந்துகொள்ள வகை செய்யப்படுகிறது.

இவ்வாறான பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நூலின் ஆசிரியர் மிக நுட்பமான இலக்கிய ரசனையுடையவர் என்பதும், இதுவரை உரிய கவனிப்பைப் பெற்றிராத போதிலும், அவர்தம் ஆற்றலை நாம் இன்னமும் புறக்கணிக்க முடியாததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

அடுத்ததாக, திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது என்பதனை இந்நூல் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலிலே இரசனை உணர்வு வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும்.

அத்தகைய பண்புகளின்றி, வெறுமனே ''விமர்சனம்'' என்ற பெயரில், தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னாபின்னப்படுத்தி, ''ஆசிரியன் இறந்துவிட்டான்'' என்ற செல்லாக் காசை வலியுறத்த தமது விகாரமான கருத்துக்களைத் திணிப்பதற்குப் புறம்பாக இந்நூலாசிரியை, நல்ல மனதுடனும், ''திறந்த மனப்பான்மை''யுடனும், சொற் சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்கக்கது.

என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு வரப்பிரசாதம். ஏனெனில் பல புதிய எழுத்தாளர்கள், புலவர்களை இந்நூல் மூலமாகவே நான் அறிகின்றேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஒரு பரம ரசிகரும், பிறரை வாழ்த்துபவருமான ஓர் இளம் எழுத்தாளர். அவர் வருகை நமக்கெல்லாம் களிப்பூட்டுகிறது!!!


கே.எஸ். சிவகுமாரன்


உள்ளடக்கம்

01 இன்னும் உன் குரல் கேட்கிறது - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
02 அக்குரோணி - மன்னார் அமுதன்
03 கண்ணீர் வரைந்த கோடுகள் - கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார்
04 ஒரு யுகத்தின் சோகம் - மன்னூரான் ஷிஹார்
05 விழி தீண்டும் விரல்கள் - பேசாலை அமல்ராஜ்
06 சுனாமியின் சுவடுகள் - நானாட்டான் எஸ். ஜெகன்
07 கிறுக்கல்கள் சித்திரமாகின்றன – கவிஞர் பி. அமல்ராஜ்
08 இடி விழுந்த வம்மி – கவிஞர் அபார்
09 இதயத்தின் ஓசைகள் - ஸக்கியா சித்தீக் பரீத்
10 நிழல் தேடும் கால்கள் - நிந்தவூர் ஷிப்லி
11 அறுவடைக் காலமும் கனவும் - கவிஞர் ஏ.எப்.எம். அஷ்ரப்
12 மகுட வைரங்கள் - கவிஞர் நித்தியஜோதி
13 நினைவுப் பொழுதின் நினைவலைகள் - வவுனியா சுகந்தினி
14 குருதி தோய்ந்த காலம் - கவிஞர் யூ.எல். ஆதம்பாவா
15 வைகறை வாசம் - கவிஞர் காத்தான்குடி பௌஸ்
16 உணர்வூட்டும் முத்துக்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
17 உயிரோவியம் - கவிஞர் மதன்
18 கரை தேடும் அலை - பெரிய நீலாவணை ம. புவிலக்ஷி
19 புதிய இலைகளால் ஆதல் - கவிதாயினி மலரா
20 இந்த நிலம் எனது - கெக்கிறாவ ஸுலைஹா
21 உனக்கான பாடல் - கவிஞர் எஸ். ரபீக்
22 நாட்டார்/கிராமிய பாடல்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
23 கண்திறவாய் - டாக்டர் தாஸிம் அஹமது
24 குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக்
25 இருக்கும்வரை காற்று - கவிஞர் ஏ.எம். தாஜ்
26 வியர்த்தொழுகும் மழைப்பொழுது - கிண்ணியா சபருள்ளா
27 தற்கொலைக் குறிப்பு - நிந்தவூர் ஷிப்லி
28 மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - வெ. துஷ்யந்தன்
29 வேர் அறுதலின் வலி - (தொகுப்பாளர்) ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர
30 மாண்புறும் மாநபி - கவிஞர் பி.ரி. அஸீஸ்
31 நல்வழி – கவிஞர் க. சபாரெத்தினம்
32 கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் - கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ்
33 நீலாவணன் காவியங்கள் - (தொகுப்பாளர்) எஸ். எழில்வேந்தன்
34 இப்படிக்கு அன்புள்ள அம்மா – (மொழிபெயர்ப்பாளர்) வி. ஜீவகுமாரன்
35 தோட்டுப்பாய் மூத்தம்மா - கவிஞர் பாலமுனை பாறூக்
36 வான் அலைகளில் தேன் துளிகள் - இசைக்கோ என்.எம். நூர்தீன்
37 உயிர்கசிவு - சுதாராஜ்
38 வைகறை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
39 கண்ணீரினூடே தெரியும் வீதி - தேவமுகுந்தன்
40 நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - (தொகுப்பாளர்) எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
41 படிகள் ஜனவரி மார்ச் 2012 – சஞ்சிகை ஆசிரியர் எல். வஸீம் அக்ரம்
42 சுவையான இலக்கியத் திறனாய்வுகள் - திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்



குறிப்பு:- 42 நூல்கள் பற்றி பத்திரிகையில் எழுதி வெளிவந்த விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்த நூல் அண்மையில் கொடகே பதிப்பத்தினால் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கும், நூலுக்கான பிற்குறிப்பை எழுதித்தந்த ஜனாப் நஜ்முல் ஹுஸைன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத்