

1. கணக்கீட்டுத்துறையில் கூடுதலான ஈடுபாடு காட்டி வந்த உங்களை இலக்கியத்துறையில் திரும்ப வைத்த காரணம் என்ன?
கணக்கீடு மூலமாக என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் கருத்துக்களைக் கூறிவிட முடியாது என்று உணர்ந்தேன். அதற்கான நல்லதொரு களம் இலக்கியம் எனக்கண்டேன்;. அதிலும் கவிதை வடிவில் என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என் மனதுக்கு இதம் தருகின்றது. இத்துறையில் ஆத்ம திருப்தி கிடைப்பதால் தான் நான் இலக்கிய முயற்சியில் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கினேன்.
2. கவிதைகளில் மொழி, ரசனை என்பதற்கு இடமில்லை என்ற குரல் பரவலாக ஒலிக்கின்றது. இது குறித்த உங்கள் பதிவு என்ன?
எல்லோருடைய கவிதைகளுக்கும் இது ஏற்புடைய கூற்றென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனினும் இன்று புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் சில கவிதைகள் வெறும் சொற்கோர்வையை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்படுகின்றன. அவற்றில் மொழிநயம், சந்தம், படிமம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. குறிப்பாக பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று எழுதப்படும் கவிதைகளைப்; பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றை கவிதை என்ற வட்டத்துக்குள் வைத்து நோக்க முடியாதுள்ளது.
3. பின்நவீனத்தும் என்ற போர்வையில் எழுதப்படும் பாலியல் கவிதைகள் பற்றிய உங்கள் எண்ணம் யாது?
ஒரு சிலர் பாலியல் கவிதைகளை எழுதுகிறார்கள் என்பது உண்மை தான். அப்படியான கவிதைகளை எழுதுவதன் மூலம் தங்கள் பெயரை நிலைக்கச்செய்யலாம் என்று பின்நவீனத்துவவாதிகள் கருதுகிறார்கள் போலும். ஆனால் இதை விடுத்து சமூக நல மாற்றங்களை நோக்கியதாக எத்தனையோ விடயங்களை கவிதைகளுக்கூடாக பேசலாம். அதுவே பயன்மிக்கது என நான் நம்புகிறேன்.
4. உங்களது கவிதைகளுக்கான கருப்பொருள்களை எதிலிருந்து தேடுகின்றீர்கள்?
நான் வாழ்ந்த, வாழ்கின்ற சூழலும், என் வாழ்வில் கிடைத்த அனுபவங்களும், நான் சந்தித்த சில நபர்களின் இரட்டை வேடங்களும் எழுத வேண்டும் என்ற வெறியை எனக்குள் உருவாக்கின. அது போல எனது தாயாரின் இழப்பை எண்ணியெண்ணி என் கண்ணீர் வற்றிய பிறகு பேனாவின் மை கொண்டு தான் அழுதேன். அவ்வாறான நிலைகள் தான் என் கவிதைகளுக்கான கருவை பெற்றுக்கொள்ளச் செய்தது.
5. உங்களது கவிதை நூலான தென்றலின் வேகம் தொகுதிக்கு கிடைத்த வரவேற்பு எவ்வாறு இருந்தது?
இலக்கிய உலகத்தில் என்னை முழுமையாக ஓர் அடையாளத்துக்கு கொண்டு வந்தது இந்தக் கவிதைத்தொகுதி தான். இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை என் கவிதை நூலை வெளியிட்டு எனக்கான விலாசத்தை இருப்பு கொள்ளச் செய்தது. அந்த வகையில் இப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இப்பேரவையில் நானும மூன்று வருடங்களாக அங்கத்தவராக இருக்கின்றேன்.
எனது கவிதைத்தொகுதி இளைஞர் யுவதிகளை வெகுவாக ஈர்த்திருப்பதாக தொலைபேசி, ஈமெயில், நேரில் என்று பல கோணங்களிலும் என்னைத் தொடர்பு கொண்டுநிறைய பாராட்டினார்கள். அது மட்டுமன்றி பெரும்பாலான கவிதைகளில் சந்த ஒழுங்கு பேணப்பட்டு சொற்கள் இலகுவாக அமைந்திருப்பதால் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மிடுக்கி விட்டதாகவும் தெரிவித்தனர். எது எப்படி இருப்பினும் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மைன விமர்சனங்ளை முன்வைப்பதனூடாக என் இலக்கிய வளர்ச்சி வலிமை பெறும் என்று நான் நம்புகிறேன்.
6. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் உண்டா?
ஆம். சுமார் இரண்டு வருடங்களாக (2004 – 2005 காலப்பகுதியில்) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்து வழங்குதல், குரல் கொடுத்தல் போன்ற பங்களிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். நேத்ரா அவைரிசையில் கவிதை பாடியிருக்கிறேன். உதயதரிசனம் நிகழ்ச்சியில் (நேர்காணல்) கலந்துகொண்டுள்ளேன். அண்மையில் சக்தி அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன்.
7. பெண் எழுத்து, பெண் மொழி, பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை?
பெண் எழுத்து என்ற அடிப்படையில் நோக்கும் போது பொதுவாக பெண்கள் தமது பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் குறித்தும், அதில் ஏற்படும் சம்பவங்களையுமே புடம் போட்டுக்காட்ட விளைகின்றார்கள். ஆனாலும் எழுத்து என்ற அடிப்படையில் பொதுவாக நோக்கும் போது பெண் எழுத்து, ஆண் எழுத்து - பெண் மொழி, ஆண் மொழி என்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்னைப் பொறுத்தளவில் பெண்கள் தங்களுக்கென்று ஒரு வரம்பை நிலைநிறுத்தி வைத்துக்கொண்டு அதற்குள் தான் அவர்கள் வாழ வேண்டும். அதை மீறும் போது பெண்கள் கண்டிப்பாக ஆபத்தை நோக்கித்தான் தள்ளப்படுவார்கள். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதில் அபிப்பிராய பேதங்களும் காணப்படலாம்.
8. உங்கள் கணக்கீட்டு நூல்களுக்கு கிடைத்த வரவேற்புகள் எப்படி?
எனது கணக்கீட்டு நூல்கள் பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாமல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டிருப்பதால் அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. கணக்கீட்டு உத்திகள், அடிப்படை விடயங்கள், விளக்கங்கள் என்பன தெளிவாக சொல்லப்பட்டிருப்பதால் இதற்குத் தனியானதொரு வரவேற்பு இருக்கிறது.
எனது கணக்கீட்டு நூல்களில் அடிப்படை விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். அது பாட விடயங்களை தெளிவாக விளங்கிக்கொண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள துணை புரிகிறது. சில புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் கூட இன்னுமொரு கணக்கீட்டு நூலை எழுதித்தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
9. உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் தனது வெள்ளி விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக 2008 இல் நடாத்திய கவிதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தையும் விருதையும் வழங்கி கௌரவித்தது.
சந்திப்பு:
எம். எம். எம். நூறுல் ஹக்
சாய்ந்தமருது-05
நன்றிகள்:-
திரு. M.M.M. நூருல் ஹக்
திரு. A.R. பரீத் (தினகரன் செந்தூரம்)