கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - பதுளை பாஹிரா
ஜனரஞ்சக இலக்கியவாதி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை கூர்மையான இலக்கியத் தேடலின் தொகுப்பாக மிளிர்கின்றது.
கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுகள், சிறுவர் இலக்கியம், கிராமிய இலக்கியம், ஆன்மீகும் சார்ந்தவை, குறுங்காவியத் தொகுதி, ஈழத்துச் சிற்றிதழ்கள், வான் அலை பாடல்கள் என ஈழத்து படைப்பாளிகளின் நூல் ஆக்கங்களைத் திறனாய்வு செய்து, இலக்கிய வாண்மையை வளப்படுத்திக் கொள்கின்றார். மொத்தம் 42 விமர்சனக் குறிப்புக்களும் எழுத்தாளர்களின் ஆளுமையை அறிமுகப்படுத்தும் அடையாளமாக அமைகிறது.

இலக்கியத்தின் இமயம் எனப் போற்றப்படும், கே.எஸ். சிவகுமாரனின் ஷஇலக்கியத் திறனாய்வுகள்| நூலை விமர்சிக்கும் போது, ஆழமான மொழி வளத்தையும், இரசனையுடன் கூடிய உணர்வுகளின் வெளிப்பாடையும் அறியலாம். அவரைப் பற்றிய இலக்கியத் தகவல்களையும், அனுபவங்களையும் பெறக் கூடிய சாத்தியம் உறுதியாகிறது. தொடர்ந்து வரும் திறனாய்வாளருக்கு அவசியமான உத்திகளையும் பெற முடிகிறது.
நூலாசிரியர் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட நூல்கள் அதிகமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகள், அகம் சார்ந்த உணர்வுகள், சுனாமியின் அகோரம், துஷ்பிரயோகங்கள் என்ற கருப் பொருளைக் கொண்டது. மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் கிராமியக் கவிகள் மூலம் பாரம்பரிய பண்பாடு வெளிப்படுகின்றது. மனித சிந்தனைக்குள் ஆன்மீகத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. சீரிய நல்வாழ்வுக்கு நன்நெறிகள் நம்மை அலங்கரிக்க வேண்டும். நல்வழி காட்டும் பாதைகளும் திறந்துவிடப்படுகின்றன. வேடதாரிகள் உறவை நீக்கி, உண்மையாய் வாழும்படி உணர்த்தப்படுகின்றது. மனித மனங்களைச் சீர்படுத்தும் நடவடிக்கையாக விமர்சனக் குறிப்புக்கள் எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
கிரகித்தலில் வல்லமை, தகவல் சேகரிப்பு வல்லமை என்பவற்றால் நூலாசிரியர் வெற்றிகரமான முயற்சியில் மகுடம் சூடியிருக்கிறார். இனிவரும் காலங்களில், இலக்கிய உலகம் பெருமிதப்படும் வகையிலே பல படைப்புக்கள் படைத்திட வாழ்த்துக்கள்!!!