தெற்கின் இலக்கியப் பொற்சித்திரம், பன்முகப் பெண் ஆளுமை வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கனல் கவி, கவிமணி அப்துல் றஸாக் சேகுதாவூத்
கோட்டக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை),
ஏறாவூர்.
தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதி வழங்கிய வியப்பிற்குரிய பெண்மணி, மாங்காய் வடிவ தேசத்தின் இலக்கிய மகோன்னதம் "வெலிகம ரிம்ஸா முஹம்மத்" அம்மணி அவர்களின் ஆற்றல்கள் ஆலமரமாய் விரித்து பரந்து இருக்க அறிமுகம் எதற்கு இந்த இலக்கியப் பெருந்தகையாளருக்கு என்பதே என் முடிவு.
பேராற்றல் நிறைந்த பெண்மையை - இலக்கியவாதி, எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், சிறந்த நூல்கள் விமர்சகி, ஆய்வாளர், சிறுவர் படைப்பாளி, நேர்காணல்களிலோ நேர்த்தியானவர், பன்னூலாசிரியர், உன்னத ஊடகவியலாளினி, சஞ்சிகையாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் இப்படிப் பல முகங்களைக் கொண்டவரை எப்படி விழிப்பேன்? இத்தனை செயற்பாடுகளில் கோலோச்சும் இவரை, அத்துணை ஆற்றல் நிறை செயற்பாட்டுத் திறனாளியை எப்படி விழிப்பேன்?
நான் சொல்வதெல்லாம் உண்மை, பொய்யுமில்லை, புனைவுமில்லை. தலைக்கனமில்லாத பல்லாளுமை, அனைத்துப் படைப்புகளிலும் இவரது சொல்லாளுமை கண்டு சொக்கிப் போனேன். சறுக்கல்களும் கிறுக்கல்களும் இல்லாத சுயம் கொண்ட சரிதங்கள், இயலுமையின் இயங்கு சக்தியினூடான இலக்கியத் தட(ய)ங்களும் சொற் செதுக்கல்களும், பல்லாளுமை வெளிப்பாடுகளும் இருபத்தியாறு வருடங்கள் கடந்தும் முடிவிலியாய்த் தொடர்கின்றது.
"வெலிகம ரிம்ஸா" என்ற பெண் குயில், சொந்தக் குரலிலும் பாடுகின்றது, வெலிகம கவிக்குயில், நிலாக்குயில், கவித் தென்றல், ஆர்.எம். ஆகிய புனைப் பெயர்களிலும் கூவுகின்றது. இவரது இலக்கியச் சிந்தனைகள், இவரது பாடுபொருள் கொண்ட கவிதைகள் இலங்கையில் என்றென்றும் பேசுபொருள்தான் என்பதில் ஐயமில்லை.
வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான இவரது பாடசாலை ஆரம்பக் காலம் முதலே சூரிய, சக்தி அலைகளிலே (1998 இல்) ஆக்கங்கள் தவழ்ந்திருக்கின்றன. தினமுரசு வாரந்தரி கவி வரிகள் "நிர்மூலம்", (2004 இல்) மூலம் கொடுத்தது முதல் முகவரி. இன்று 300 கவிப் பாக்கள் தாண்டிப் பாடி நிற்கின்றது, மலையருவியாய்ப் பாய்ந்து கொட்டுகின்றது கவிதைப் பெருநதி.
ரிம்ஸா முஹம்மத் தனது படைப்புக்களுக்காக இணையத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார். அதிலும் குறிப்பாக தனது பல்வேறு வகையான படைப்புகளுக்காக வென்றே ஒவ்வொரு துறைக்குமாக வெவ்வேறு ஆறு புளக்ஸ்பொட் (வலைப் பூக்கள்) வைத்து மிகுந்த அர்ப்பணிப்போடு இயங்(க்)கிக் கொண்டிருக்கின்றார்.
பன்முக ஆளுமைவாதி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் அடைவுகளில் என்னால் ஆழ்ந்த பார்வைக்குள், பாடசாலைப் பாடநூல் எழுத்தாக்கக் குழுவில் இடம்பெற்றிருப்பதும், இஸ்லாமியப் பாட நூல் மொழிப் பதிப்பு மற்றும் ஒப்பு நோக்குதலிலும் பங்களிப்பு வழங்கியிருப்பதும் அகப்பட்டுக் கொண்டது என்பேன். இது ஒரு தேசியத்திற்கான பங்குபற்றல் அல்லவா. இவருடைய சில படைப்புகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்கள மொழி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது அடுத்த விசேட தன்மையாக என்னைக் கவர்ந்த விடயம், கல்வி ரீதியாகத் தன்னை மேம்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டுக் கணக்கீட்டுத் துறைக்குள்
AAT, IAB கற்கைகளைப் பூரணப்படுத்திய அதேநேரம், அதே துறைக்குள் "வங்கிக் கணக்கிணக்கக் கூற்று" (2004), "கணக்கீட்டுச் சுருக்கம்" (2008), "கணக்கீட்டின் தெளிவு" (2009) ஆகிய மூன்று நூல்களை வெளியீடு செய்தது மட்டுமல்லாது "அடிப்படைக் கணக்கீடு" என்ற நூல் அச்சேறு நிலையில் உள்ளது என்று அறியக் கிடைக்கின்ற போது விழிகள் அகல ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நானறிந்த வரையில் வேறு கணக்காளர்களோ, கணக்கியலாளர்களோ, கணக்காய்வாளர்களோ இவ்வாறு நான்கு நூல்களின் வெளியிட்டு எழுத்தர்களாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை.

கற்கைகளைப் பூர்த்தி செய்வதில் பூரணாதியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை டிப்ளோமா (2013) கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதான ஊடகப் பங்காற்றுபவராக இருந்து வருவதையும் அவதானிக்கலாம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபான முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வந்த - மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளுக்கு பிரதிகளைத் தயாரித்தல், குரல் கொடுத்தல் (2004 - 2005 காலப்பகுதி), பிரபலமான தமிழ் ஊடகங்களில் கவிதை வாசிப்பு, கவியரங்கப் பங்கேற்பு என்று நீள்கையில், பதினேழுக்கு மேற்பட்ட இலங்கையின் பிரபலமான தேசிய முன்னோடி நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள் என்பவற்றிலும், இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய மற்றும் இணையவழி சஞ்சிகைகளிலும், இருபத்து ஆறைத் தாண்டியதான இணையத் தளங்களிலும், ஏழிற்கு மேற்பட்ட சர்வதேச வானொலிகளிலும் இவரது ஆக்கங்கள் மற்றும் இவருடனான நேர்காணல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன என்று வரலாற்று ரீதியான தடயப் பதிப்பை, தனது பெறுமான வீரியத்தை இமாலயச் சாதனையாக உயர்த்தி நிற்பதில் வேறு எவர் ஒருவரையும் என்னால் ஒப்பீட்டிற்கு நிறுத்த முடியவில்லை.
கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதை, சிறுவர் பாடல், ஆவணம், கணக்கீடு என 14 நூல்களையும் வெளியீடு செய்து, மேலும் ஆறு நூல்களை வெளியீடு செய்யும் நிலையில் உள்ள படைப்பாளியை "சோர்விலாச் சொற்களின் சேயிழை" என அழைப்பதில் பொருத்தம் காண்கின்றேன். இவரது படைப்புகள் யாவுமே தனித்தனியாக வெவ்வேறு உட் பொருட்களைக் காட்டி நிற்கின்றன. பரிமாணங்கள் பலதாக, முக்காலப் பொருத்தக் கருத்தியலாக அவதானிக்க முடிகின்றது. பல்வேறு வகையான சிரமங்களுக்கு மத்தியிலும் இவர் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு, 2010 ஆம் ஆண்டிலிருந்து காலாண்டிதழாக பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையை, இவரது தோழி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுடன் சேர்ந்து தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். இதுவரை 38 இதழ்கள் வரை வெளிவந்த பூங்காவனம் இதழ்கள் இலக்கியச் சோலைக்குள் நறுமணம் பரப்பி நிற்கின்றது. இவர்கள் 12 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்த பூங்காவனம் சஞ்சிகை பற்றிய ஆய்வை தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவியான சரிப்தீன் சரீபா பீவி (அநுராதபுரம்) தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார். பின்னர் இந்த ஆய்வை "இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் 'பூங்காவனம்' (கலை இலக்கிய சமூக சஞ்சிகை) - ஒரு மதிப்பீடு" என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டார்.
அதேபோல தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியான சுமையா சரீப்தீன் (தர்காநகர்) தமது பட்டப்படிப்பை பூரணப்படுத்துவதற்காக தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில் தென்னிலங்கைப் படைப்பாளியான ரிம்ஸா முஹம்மதின் கவிதைப் படைப்புகள் பற்றியும் சிறப்பாக நோக்கப்பட்டுள்ளது. சுமையா சரீப்தீன், தான் மேற்கொண்ட ஆய்வை "தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகள்" என்ற தலைப்பில் 2021 இல் நூலாக வெளியீடு செய்துள்ளார். எனவே பல்கலைக்கழக மட்டத்திலும் இவருடைய இலக்கிய பங்களிப்புகள் கவனிப்பு பெற்றது என்பதில் மகிழ்ச்சியடையலாம்.

இதழ்கள், சிறப்பிதழ்கள், பத்திரிகைகள், எழுத்தாளர் அமைப்புகள் வெளியிட்ட நூல்கள், ஆய்வு நூல்கள், காற்றுவெளி இணைய இதழ், முத்துக்கமலம் இணையம், விக்கிப்பீடியா வலைத்தளம் என்பன இவரைப் பற்றி பல வகைமைக் குறிப்புகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு கௌரவிப்புக் கொடுத்த பெருமை, கவிப் பெருந்தகையின் பேறாகும். அவைக்கும் பெருமையாகும். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள இருபத்தைந்திற்கும் மேற்பட்ட அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் இவரை நேர்காணல்கள் செய்துள்ளன. இதன்மூலம் இவரது ஆளுமை, ஆற்றல், நடத்தைசார் கோலங்களின் விருத்தியின் உயர்ச்சியை உணரலாம்.
ரிம்ஸா முஹம்மதின் படைப்புகளின் கருத்துப் பொதிவின் கனதிக்காகவும், வெளிப்படுத்தல் திறனுக்காகவும் பன்னிரண்டிற்கு மேற்பட்ட பிற அமைப்புகளின் தொகுப்பு நூல்கள் இவரது ஆக்கங்களை உள்வாங்கி வெளியீடு செய்திருப்பதன் அடிப்படையில் அந்த நூல்கள் பெருமை தேடிக் கொண்டுள்ளன என்றே கூற முடியும். இவரது ஒட்டுமொத்த இயங்காற்றல் திறன்களுக்காகவும், சான்றுப் பத்திரங்கள், பாராட்டுப் பத்திரங்கள், பண முடிப்புகள், பொன்னாடைகள் ஆகியவற்றுடன் சாமஸ்ரீ கலாபதி, காவிய பிரதீப (கவிச்சுடர்), கலாபிமானி, கலைமதி, கவித்தாரகை ஆகிய பட்டங்களையும், விருதுகளையும் மற்றும் மகளிர் விருது, வெற்றியாளர் விருது போன்றவற்றையும் இவர் பெற்றுள்ளார். மூத்த இலக்கிய ஆளுமையாளரான பன்னூலாசிரியர், கவிஞர் மூதூர் முகைதீன் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் தனது 08 ஆவது நூல் வெளியீடான "கனாக் கண்டேன்" எனும் இசைப் பாடல்கள் நூலை இவருக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். இது இவருக்குக் கிடைத்த விருதுகளையும் மிஞ்சிய கௌரவமாகும்.
நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் வாழ்த்துரைகள், நயவுரைகள், நூல் விமர்சனவுரைகள், நூல் ஆய்வுரைகள், சிறப்புரைகள், கருத்துரைகள், நினைவேந்தலுரைகள் என்பனவும் இவரது இலக்கிய இயங்கலுக்கும், துலங்கலுக்கும், புலமைக்கும் கிடைத்த சான்றுகளாகும்.
இந்த முற்போக்குப் பெண்ணியவாதியின் அமைப்பு ரீதியான அங்கத்துவம் பற்றி பேசுகின்றபோது பூங்காவனம் இலக்கிய வட்டத் தலைவராக செயற்படும் அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் என்பவற்றிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி தனது படைப்புகளுக்காக பல பரிசில்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், பணப் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர், டாக்டர் ஹிமானா செய்யத் நினைவாக நன்னூல் பதிப்பகம் இணைந்து சர்வதேச ரீதியாக நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலக்கியச் சூரியன் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் தனது இருபத்தியாறு (1998 - 2024) வருடங்களைத் தொட்டுக் காட்டுகின்ற இலக்கிய அடையாளத்தின் ஆதராமாக இதுவரை பின்வரும் 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.
01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004
02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008
03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009
04. தென்றலின் வேகம் (கவிதை) 2010
05. ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012
06. என்ன கொடுப்போம்? (சிறுவர் கதை) 2012
07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013
08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013
09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013
10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014
11. அறுவடைகள் (விமர்சனம்) 2015
12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015
13. விடியல் (ஆய்வு) 2017
14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021
இந்த 14 நூல்களுக்குள் "தென்றலின் வேகம்", "எரிந்த சிறகுகள்" என்ற தலைப்பில் அமைந்த இரண்டு கவிதைத் தொகுதிகளும் உள்ளடங்கும். இவ்விரண்டு கவிதைத் தொகுதிகளோடும் நான் உறவாடிய போது, காதல் உணர்வுகள் களி நடனம் புரிந்திருப்பதை உணர்ந்து கொண்டாலும், உலக வாழ்வியலாடு தொடர்புபட்ட பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதையும் உணராமல் போவேனா.
2010 ஆம் ஆண்டில் வெளிவந்த "தென்றலின் வேகம்" ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கன்னிக் கவிதைத் தொகுப்பாகும். தென்றலின் வேகம் என்ற அழகான இலக்கணப் பிழைக்குள் இதமான கவிதைகளைப் படைத்துத் தொகுத்துள்ளார் "கவித்தையல்" அவர்கள். தென்றலுக்கு வேகமில்லாவிட்டாலும் கவிதைகள் புயல் வேகம் கொண்டதுதானே.
"தென்றலின் வேகம்" கவிதை நூலில் பக்கம் 36 இல் இடம்பிடித்துள்ள புத்தகக் கருவூலம் அழகான சொல்லாட்சி நிறைந்த கவிதையாகும். நூலகம் ஒன்றைக் கருவூலத்திற்கு ஒப்பிட்டு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்தான் உலகை ஆழ்கின்றது என்ற உண்மையை வரிகளால் விரிவடையச் செய்துள்ளார் கவிஞர். வித்தகக் கோட்டம், புத்தகத் தோட்டம் என்ற இவரது சொற் புலர்வு என்னை மிகவும் ஆட்கொண்டது. வித்தகம் என்பது கல்வி, கலைகள், ஞானம் அனைத்தையும் உள்ளடக்கியது. தோட்டம் என்பது பல பூவினம், பயிர்கள், செடிகள், கொடிகளின் வாழ்விடம். இவ்வாறானதுதான் "புத்தகக் கருவூலம்" என்கிறார் கவிஞர். இந்தச் சித்தரிப்பு அழகு தருகிறது.
விஞ்ஞானப் புதுமையும்
விண்ணுலகப் பெருமையும்
விளக்கும்
வித்தகக் கோட்டம் அது
மெய்ஞ்ஞான்றும் விளக்கேற்றி
எல்லார்க்கும் ஒளியூட்டும்
புத்தகத் தோட்டமும் அது
பக்கம் 54 இல் "நியாயமா சொல்?" என்ற தலைப்பில் அழகான காதல் ரசம் சொட்டும் கவிதை ஒன்று இடம்பிடித்துள்ளது.
நியாயமா சொல்
நியாயமாகச் சொல்
நிலவும் வானும் பள்ளி கொள்ளும்
ஒரு அமாவசை நேரத்தில்
உன் நினைவுகள் துள்ளி வந்து
கொள்ளை இன்பம் தந்து
என் நித்திரையைக் கெடுப்பது
என்ன நியாயம்?
"நிலவும் வானும் பள்ளி கொள்ளும் ஒரு அமாவாசை நேரத்தில்" மிதமிஞ்சிய கற்பனை இரசனை இந்த வரிகளுக்குள் ஒழிந்திருக்கிறது. ஆம் பள்ளி கொள்கையில் இருளாய் இடம் இருப்பதுதானே நியதி. அதுதான் அமாவாசை நேரமாக இருக்கின்றதோ, பள்ளி நேர எண்ணங்களோடு என்பதும் இதற்குள் உறங்குகின்றது. நினைவுகள் எப்போதும் நித்திரையைக் கெடுப்பதுதான் அதன் கடமை, நித்திரை கெட்டாலும் சுகம் சுகமே, வரிகளில் நிழலாடுகிறது அதன் இன்பம். தீராத தாகம் தந்து நித்திரையைக் கெடுக்கின்றாய், விரக தாபம் தீர்க்காமல் தவிக்கவிட்டுச் செல்கின்றாய், எண்ணத்தில் தேன் வார்த்து எட்டியெட்டிச் செல்கின்றாயே என்ன நியாயம்? நியாயமா சொல் என்ற கவிஞரின் கேள்வி நியாயமானதுதானே. இக்கவிதையிலே உடல் உள உணர்ச்சி, பிழம்பாக எரிமலைக் குழம்பாக வடிகின்றது. காதல் வதை இதுதானோ? காதலன் வந்தால் வதைத்தேனாய் வளியுமோ? காதல் ரசம் அருமை அருமை.
பக்கம் 59 இல் இடம்பிடித்துள்ள "புயலாடும் பெண்மை" என்ற கவிதையில் பெண்மையின் குணாம்சங்களைக் குண நலனாகச் சொன்ன கவித்தகை அவர்கள் அடக்கியொடுக்க நினைத்தால் அடலேறாவாள். பெண்ணுக்கு அநீதி என்ற போது திண்ணிய நெஞ்சினளாய் நின்று எதிர்ப்பாள் என்று பெண்மையின் மென்மைக்குள் வன்மையும் உண்டென்று பெண்மைக்கு ஆக்ரோசம் ஊட்டுகின்றார்.
பெண்ணே நீ பாவலர் பேற்றும்
மென்மையாவைள்தான்
ஆனால் அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும்
ஆடவர் மத்தியில்
அடல் சான்ற
வன்மையானவள்
பக்கம் 80 இல் இடம்பெற்றுள்ள "வானும் உனக்கு வசமாகும்" என்ற கவிதையில் இளைஞர்களுக்கான விழித்தெழும் விடியலுக்கான அழைப்பை விடுக்கின்றார் கவிஞை. பாவலர் எழுச்சிமிகும் வரிகளுடே முடக்காதே இயங்கு, துணிவே துணை, புறப்படு காரியமாற்று, தடையுடை, கடினம் கணக்கிற் கொள்ளாதே, நம்பிக்கையை நம்பு போன்ற நம்பிக்கை வரிகளால் தும்பிக்கை ஊக்கியாக வழங்கியிருக்கின்றார்.
2015 இல் வெளிவந்த "எரிந்த சிறகுகள்" என்ற கவிதைத் தொகுதி இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியாக அமைகின்றது. இந்தக் கவிதைத் தொகுதியில் பக்கம் 35 இடம்பிடித்துள்ள 'என்ன வாழ்க்கை' என்ற கவிதையை உரசியபோது தலைப்பிலேயே ஒரு உளச் சலிப்பு கவிஞரால் உணர்வூட்டம் செய்யப்பட்டுள்ளது.
செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலே
பட்டினித்துயர்தான் படிகிறதே
சூழ்ந்தது துன்பம் எமைச்சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே
துன்பம் சுற்றியிருக்க எப்படி வாழ்க்கையில் சுகம் உண்டாகும் என்ற யதார்த்தமான கேள்வியை எழுப்புகின்ற போது, "முதியோர் இல்லத்தில் விழ்ந்ததால்" என்று கவிதை பதில் தருகின்றது. செழிப்பாக வாழ்ந்தவர் நிலை, இன்று முதியோர் இல்லத்தில் அவல நிலையாகிவிட்டது என்கிறார் கவிஞர். முதியோர் இல்லத்தில் தங்கள் உறவுகளைத் தள்ளிவிடும் உறவுகளின் உணர்தலுக்கு சிறந்த கவிதை இது. சகதிநிலை - அகதிநிலை, வாழ்கின்றோம் - வீழ்கின்றோம், அழிகிறதே - கழிகிறதே இவற்றில் சந்தம் சிந்து பாடுகின்றது.
அடுத்து பக்கம் 38 இலுள்ள "ஒப்பனைகள்" என்ற கவிதை மனிதர்களில் பெரும்பாலானோர் அரிதாரம் பூசிய நடிகர்கள், முகமூடியை முகமாய் அணிந்தவர்கள் - இவர்களின் சொல், செயல், நடத்தை அனைத்துமே ஒப்பனைதான் எனச் சாடியுள்ள அதேநேரம், வரிகளை முரண்களாகவும் வடிவமைத்துள்ளார் கவிதாயினி.
அவர்களின் முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றிவிடட்டும்
அடுத்து பக்கம் 42 இலுள்ள "சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா" என்ற கவிதையின் வரிகள் மூலம் யுத்தகால நிலையை நேரடியாகக் கண் முன்னே கொண்டுவரும் கவிஞர், யுத்தமற்ற தற்போதைய சூழலையும் எடுத்தியம்புகின்றார்.
அண்ணாந்து பார்த்தேன்
அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்
உயிர் பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதானப் புறா
யுத்தக் கொடுமை கண்டு அகல விரிந்த வானம் அழுதது எனக் கூறும் கவிஞரின் வரிகளில் நயம் சுவைக்கின்றது. உயிர் பிழைத்த என்ற சொல்லில் இருபொருள் புதைந்து கிடக்கின்றது. உயிர் பிழையாகிப் போனால் அது மரணம் என்பது ஒரு பொருள். உயிர்கள் இன்று ஆபத்தில்லாமல் மரணம் இல்லாமல் பிழைத்திருக்கின்றது என்பது மறுபொருளாகும்.
எமது தேசத்தின் தனிப்பெரும் இலக்கிய முதுசமாக, கனதியான அத்தியாயமாக ரிம்ஸா முஹம்மத் அவர்களை நான் பார்க்கின்றேன். இவரது படைப்புகளையும், செயற்பாடுகளையும் விழுமியங்களும், மனப்பாங்கு விருத்தியும் கொண்ட எதிர்கால சமூக மாற்றத்தின் தூண்களாக அடையாளப்படுத்த முடியும் என்பது எனது நோக்கு. இவரை ஒட்டு மொத்தமாக வரையறைப்படுத்தும் போது, கூர் அவதானம், கூர் புத்தி, படைப்பியல் நுட்பத்திறன், ஆற்றல், அறிவு, அனுமானம், அனுபவம், மனப்பாங்கு, உள் வாங்கல் திறன், மனமுதிர்ச்சி என்பனவே இவரது தனியாள் விருத்தியை சிறப்பாக அமைக்க வழிச(ய)மைத்துக் கொடுத்துள்ளது கண்கூடு என்பதை ஏகமனதாக ஏற்கின்றேன். இவரைத்தேடி அடைபவர்கள் பல்துறை தேர்ச்சி அடைவர், அடையாளம் பெறுவர் என்பதும் திண்ணமாய் எனது எண்ணம்.
கவிதை எனப்படும் போது மரபுகள் தவிர்ந்த அனைத்தும் கற்றுக்கொள்வதோ, தெளிவுறுவதோ அல்ல அது உள்ளத்தினூடான உந்துதலின் ஊற்று எனச் சொல்வேன். ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், நூல் விமர்சனங்கள், ஆய்வுகள் என்பன தொகுப்பாக்கம் பெற்றிருப்பதை இலேசுபட்ட காரியமாகப் பார்க்க முடியாதது. ரிம்ஸா முஹம்மத் அவர்கள் எமது புதிய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும், இலக்கியத் தடங்களைத் தடாகங்களாகக் கையளித்துள்ளார்.
உளவியல், சமூகப் பொருளாதாரம் போக்குகள், காதல், உளப்போராட்ட உணர்வுகள், அரசியல், பண்பாட்டுக் கோலங்கள், ஆன்மீகம் என்று பிரித்துப் பார்ப்பதைவிட இவரது ஆக்கங்களை உலக வாழ்வியல் சார் நடைமுறைக்குள் உள்ளடக்கப்பட்டவையாகவே என்னால் பார்க்க முடிகிறது. இவரது இலக்கிய ஆக்கவியல்களும், கவிதைகளும் பிரபஞ்சப் பரப்பாக, பதிவுகள் யாவும் ஆழமானவை, பெறுமதியானவை, பெருமைக்குரியவை.
இவரது படைப்புகள் சுவாசிப்பதற்கான மூச்சுக் காற்றின் பெறுமானம் கொண்டவை. உணரவும் அனுபவிக்கவும், பார்க்கவும் மற்றையவர்களோடு பகிரவும் பாத்தியதை உடையதான இவரது ஆன்மாவின் வெளிப்படுத்தல்கள், தமிழ் பேசும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய தொகுப்புகளாகும். இவரது துறைசார் பங்களிப்புகள் யாவும் வானுயர வளர்ந்து நிற்கின்றது. வானளாவ வளர விரும்புவோருக்கு இவை வரப்பிரசாதமாகும்.
சமூக அவலங்களையும் ஆற்றாமைகளையும் தனக்குள்ளேயே அடக்கி வைத்திராது சீறும் சிங்கப் பெண்ணாக மிடுக்கான சொல்லடுக்குகளுடன் தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மட்டுமல்ல இலேசாக வளைந்து கொடுக்கவோ, வளைத்தெடுக்கவோ பல்லாயிரம் பாகைகள் வெப்பநிலையில் உருக்கினாலும் உருக மாட்டேன் என்ற எண்ணம் கொண்ட இரும்புப் பெண்ணாகவே இவரது படைப்புகளின் பல அம்சங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன. பிறப்பிலேயே போராட்டக் குணத்தினையே மெய் முழுக்க சுமந்தவராக இருப்பதை இவரோடு பேசும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது கண்டு இந்தக் கவிதாயினியை நினைத்து நான் விக்கித்து நின்றேன்.
இலங்கைப் பெண்கள் சமூகம், இப்பெண் பல்லாளுமையை அழகிய முன்மாதிரியாகக் கொள்ள முடியும். இலங்கையின் உயர் ஆளுமை கொண்ட ஒற்றைப் பெண்ணாகப் பேசப்படும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் என்பதில் ஐயமில்லை. சர்வ எழுத்து இயங்கியல் பெண்மையே உங்களது கடமை மேலும், மேலும் பெயரையும் பெருமையையும் தேடித் தரும் செயல்களில் அர்ப்பணிப்பதுதான், இளைப்பாறுவதல்ல. எங்கள் பிள்ளைகள், பேரன், பேத்திகளுக்கே உங்கள் நவீன உயர்ந்த இலக்கியத்தைப் பரிசளிப்பீர்களாக, இந்த வனிதையை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லாத போதும் உள்ளதைக் கொண்டு வாழ்த்துரைத்துள்ளேன். வாழ்க, வளர்க, வழிகாட்டுக!!!
இவருடனான தொடர்புகளுக்கு:-
Face Book - Rimza Mohamed
Telephone - 0775009222
Email - rimza.mohamed100@gmail.com
ஆக்கம்:-
கனல் கவி, கவிமணி அப்துல் றஸாக் சேகுதாவூத்
கோட்டக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை),
ஏறாவூர்.
இந்தச் சஞ்சிகையில் 66 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள எனது கவிதையொன்றை வாசகர்களின் இரசனைக்காக இங்கே பதிவேற்றுகின்றேன்.
நன்றிகள்:-
வெண்ணிலா சஞ்சிகை இதழாசிரியர்