தெற்கிலிருந்து புலர்ந்த புதுமை இலக்கியப் புலரி
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர், சஞ்சிகையாசிரியர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.
'பிஞ்சு மனம்' நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்
நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்
உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?
நான் ஈழத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ஊரின் பெயரை எனது பெயரோடு சேர்த்துக்கொண்டு வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரிலேயே இலக்கிய உலகில் அறிமுகமாகினேன். எனது குடும்பத்தில் நான் மட்டுமே இலக்கியத் துறையுடனும் ஊடகத் துறையுடனும் தொடர்புடையவள். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியும், தேசிய கல்வி நிறுவக முன்னாள் செயற்திட்ட அதிகாரியும், அபிவிருத்திப் புவியியல் நூலின் ஆசிரியருமான திக்குவல்லை ஹம்ஸா என்று இலக்கியத் துறையில் நன்கு பெயர் பதித்த, உறவு முறையில் எனக்கு மாமாவான மறைந்த எஸ்.ஐ.எம். ஹம்ஸாவின் மூலமே எனக்குள் கலை இலக்கிய ஆர்வம், எழுத்துத் துறை, படைப்பாக்கத் துறை போன்றவை ஊடுகடத்தப்பட்டதாக நினைக்;கின்றேன்.
இலக்கியமானது எப்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
போராட்டகரமான மனித வாழ்வில் ஒரு சாதாரண மனிதனுக்கு மன அமைதி தருவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். அத்துடன் அறிவை வளர்த்துக்கொள்ளவும் வாசிப்பு, இலக்கியம் போன்றவை உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அதாவது அவர்களின் துன்ப துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் வாழ்வின் எழுச்சிக்கு நல்லதொரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். மொத்தத்தில் வாசிக்கின்றவர்கள் மனதில் ஒரு உந்துசக்தியை ஏற்படுத்துவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட வாசிப்புகள் எந்தவகையில் உங்களின் எழுத்துகளுக்கு உதவியாக இருக்கிறது?
வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தீவிர வாசிப்பு ஒரு மனிதனை நிச்சயமாக எழுத வைக்கும் என்றும் நான் சொல்வேன். உள்நாட்டு மூத்த எழுத்தாளர்களது நூல்கள் பலவற்றையும் நான் விரும்பி வாசிப்பேன். அவற்றுள் ஒரு சில நூல்கள், நான் புத்தக விமர்சனங்களை பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதி வருவதால் நூலாசிரியர்களிடமிருந்து எனக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. ஏனையவை புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் அந்தந்த வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று, காசு கொடுத்து, வாங்கி வந்து வாசிக்கும் பழக்கமாகவே இருக்கிறது.
இந்திய எழுத்தாளர்களது நூல்களை காசு கொடுத்து வாங்கி அல்லது வாசிகசாலையால் பெற்றே வாசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஒரு சில நூல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை வாசிப்பதில் சில அசௌகரியங்கள் இருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இவ்வகையிலான வாசிப்பே எனது எழுத்து முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது என்று உறுதியாகக் கூறலாம்.
இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வரும் நான் இதுவரை 15 நூல்களைப் பிரசுரித்துள்ளேன். நான் எழுதி பிரசுரித்துள்ள நூல்களை பின்வருமாறு பட்டியலிட்டுக் குறிப்பிடலாம்.
01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004
02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008
03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009
04. தென்றலின் வேகம் (கவிதை) 2010
05. ஆடம்பரக்கூடு (சிறுவர் கதை) 2012
06. என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012
07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013
08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013
09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013
10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014
11. அறுவடைகள் (விமர்சனம்) 2015
12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015
13. விடியல் (ஆய்வு) 2017
14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021
15. பிஞ்சு மனம் (சிறுகதை) 2024
இதில் கிடைசியாக பிரசுரமான 'பிஞ்சு மனம்' என்ற நூலே 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
நீங்கள் வெளியீடு செய்துள்ள படைப்புகளின் முழுமையான பட்டியலைப் பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது இந்த வயதுக்குள் நீங்கள் அதிகமாக எழுதிக் குவித்துள்ளீர்கள் என்று நினைக்கத் தோன்றுகின்றதே?
இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமாக ஈடுபாடு காட்டி வருகின்றேன். வாசிப்புப் பழக்கம் என்னில் ஆரம்பித்தது நான் தரம் 08 இல் படிக்கும் காலத்திலாகும். அதிகமான வாசிப்பே என்னை எழுத வைத்தது. அப்படி ஆயிரக் கணக்கில் எழுதியவற்றை அவ்வப்போது கால இடைவெளிவிட்டு நூலாக வெளியிட்டு வருகின்றேன். கொரோனாக் காலங்களில் நூல் வெளியீடுகளைச் செய்ய முடியவில்லை. சுமார் 06 வருடங்களுக்குப் பின்னர் இப்போதைய காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்.
சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?
முதலில் கதைக்காக நல்ல கரு அமைய வேண்டும். அதன்பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான எழுத்து நடை, பிரதேசப் பேச்சு வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சிறுகதையாசிரியரின் மொழியாட்சி போன்றன எல்லாம் நல்லதொரு சிறுகதைக்கு அவசியமாகவே இருக்கின்றன.
ஒரு நல்ல சிறுகதையின் பண்புகளாக எவற்றை முன் வைப்பீர்கள்? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகள் இடம் பெறலாமா?
சிறுகதைகளின் முக்கியமான பண்புகளாக பின்வருவனவற்றை முன்வைக்கலாம். தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு சிறுகதைகள் பிரதிபலிக்க வேண்டும். சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் போன்றவைதான் தலை தூக்கியிருக்க வேண்டும். விரிவான வர்ணனைகளுக்கு சிறுகதைகள் இடம் கொடுக்கக்கூடாது. குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
பாத்திரங்களின் உரையாடல்களில் சிறப்பான முறையில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும். சிறுகதை அளவிற் சிறியதாய் இருப்பதோடு முழுமை பெற்றிருக்க வேண்டும். சிறுகதைகள் நம்பக் கூடிய உண்மைத் தன்மை பொதிந்ததாகக் காணப்பட வேண்டும். மொத்தத்தில் நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் (நாவலாக) விரிவாகக் கூடிய கதைக் கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதை என்பது மனதோடு கலந்த இசை போன்றது. கேட்ட மாத்திரத்திலேயே மனம் அதில் இலயிக்க வேண்டும். பாடலின் இறுதிவரை அதே குதூகலம் இருக்க வேண்டும். இசையும் இதயத் துடிப்பும் இரண்டரக் கலக்க வேண்டும். அதுபோலவே சிறுகதையும் வாசித்த மாத்திரத்திலேயே ஒரே அமர்வில், முழுவதும் வாசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தர வேண்டும்.
வர்ணனைகளைப் பொறுத்தவரை சிறுகதைகளில் அமையும் பாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இடம்பெறச் செய்யலாம். ஆனால் வர்ணனைகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுகதைகளின் காத்திரத் தன்மையைப் பாதிக்கச் செய்வதாகவே அமையும்.
உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை எழுத்தாளர் என்று யாரைக் கூறுவீர்கள்?
பொதுவாக எனக்குக் கிடைக்கும் எல்லாக் கதாசிரியர்களது சிறுகதை நூல்களையும் நான் வாசிப்பேன். ஒருவரது பெயரை மட்டும் இங்கு குறிப்பிட முடியவில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம், வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளை எழுதுகின்ற சி. கல்யாண சுந்தரம், கு.ப.ரா என பரவலாக அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தியாகராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், சுஜாதா, ரமணி சந்திரன் ஆகியோரது சிறுகதைத் தொகுதிகளை வாசித்துள்ளேன்.
உள்நாட்டு எழுத்தாளர்களான மறைந்த எழுத்தாளர்களான நீர்வைப் பொன்னையன், கவிஞர் ஏ. இக்பால், எஸ். முத்துமீரான், எ.எஸ்.எம். நவாஸ் மற்றும் திக்குவல்லைக் கமால், சி. சிவசேகரம், சுதாராஜ், இரா. சடகோபன், மு. சிவலிங்கம், அஷ்ரப் சிஹாப்தீன், பதுளை சேனாதிராஜா, மலரன்பன், திக்குவல்லை ஸப்வான், உ. நிசார், தீரன் ஆர்.எம் நௌசாத், சூசை எட்வேட், உமா வரதராஜன், டாக்டர் நௌஷாத் முஸ்தபா, காத்தநகர் முகைதீன் சாலி, செங்கதிரோன், நஜ்முல் ஹுசைன், மருதூர் ஜமால்தீன், திக்குவல்லை ஸும்ரி, எஸ்.ஆர். பாலசந்திரன், பவானி சிவகுமாரன், சுலைமா சமி இக்பால், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, எம்.ஏ. ரஹீமா, கெக்கிறாவ ஸஹானா, வசந்தி தயாபரன், மரீனா இல்யாஸ் ஷாபி, கீதா கணேஷ், இன்னும் பலரது சிறுகதை நூல்களையும் நான் விரும்பி வாசித்துள்ளேன்.
அத்துடன் தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் கா.சி. தமிழ்க்குமரன் என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் எனக்கு அவருடைய நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் கூடவே கவிப்பேரரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தையும் அண்மையில் இந்தியாவிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். இந்த 06 புத்தகங்களடங்கிய பொதியைக் கண்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவ்வப்போதைய ஓய்வு நேரங்களில் இவ்வகையான நூல்களின் வாசிப்பே எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்றது என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்யத்தான் வேண்டும்.
உங்களது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?
நான் கதைகளை எழுதி முடிந்தவுடனே எனது நண்பியும் படைப்பாளியுமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு அனுப்பி வைப்பேன். ரிஸ்னா சுடச்சுடவே கதைக்கான விமர்சனங்களைச் சொல்வார். அத்தோடு எனது புத்தக வெளியீடுகள் பலவற்றில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும், எனது பல படைப்புகளைப்பற்றி கருத்துக்களைச் சொல்லும் போது சிலாகித்துப் பேசினார்கள். இப்படி எனது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் என்னை உற்சாகமூட்டும் டொனிக்காக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அத்துடன் எனது ஆக்கங்கள், நூல் விமர்சனங்கள் போன்றவை பலரையும் கவர்ந்திருக்கிறது. அப்படி அவர்களைக் கவர்ந்ததால்தான் மூத்த எழுத்தாளர்களும் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் அவர்களது நூல்களை எனக்கு விமர்சனம் எழுதுவதற்காக அனுப்பி வைக்கின்றார்கள். அவர்களது நூல்களுக்கு நான் எழுதிய நூல் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் திருப்தியடைகிறார்கள். எனது இரசனைக் குறிப்பு தொடர்பாக அவர்களது மகிழ்ச்சியை எனக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் ஓர் அங்கத்தவராக இருந்திருக்கின்றீர்கள். இந்த அமைப்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வுதான் என்ன?
திரு நீர்வை பொன்னையன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட ஒரு இலக்கிய அமைப்பே முற்போக்கு கலை இலக்கிய மன்றமாகும். இந்த இலக்கிய அமைப்பில் 2007 ஆம் வருடம் மறைந்த கவிஞர் ஏ. இக்பால் அவர்களே என்னை அங்கத்தவராகச் சேர்த்துவிட்டார். இந்த மன்றத்தில் மறைந்த ஆளுமையாளர்களான ஜனாப் ஏ. முகம்மது சமீம், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்ரமணியம், திரு. பாலசிங்கம், கவிஞர் ஏ. இக்பால், திரு. கே. ராசரத்னம், திரு. கே. சோம சுந்தரம் போன்றவர்களுடன் வாழும் ஆளுமையாளர்களான திரு கே. சிவபுத்திரன், திரு வீ. கருணைநாதன், திருமதி சுமதி குகதாசன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோருடன் நானும் அங்கத்துவம் வகித்திருந்தோம்.
இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்த மறைந்த முற்போக்கு எழுத்தாளர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கான நினைவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களை கௌரவிப்பதில் இம்மன்றம் முன்நின்று செயற்பட்டது. அதேபோன்று இலக்கிய நூல் வெளியீடுகள், அறிமுக விழாக்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்ததோடு கருத்தாழமிக்க திரைப்படங்களையும் இம்மன்றம் அவ்வப்போது திரையிட்டது. இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் என்றும் முன்னணியாக செயல்பட்ட இம்மன்றத்தின் மூலமே 2010 ஆம் ஆண்டில் 'தென்றலின் வேகம்' என்ற எனது முதலாவது கவிதை நூலும் வெளிவந்தது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.
நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்