வெலிகம ரிம்ஸா முஹம்மதின்
'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி மீதான சிறப்புப் பார்வை
நூல் விமர்சனம்:- நிஸாயா தவ்பீக்
ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பதித்துள்ளவர் கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். கொடகே பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி, 54 கவிதைகளையும் 7 மெல்லிசைப் பாடல்களையும் உள்ளடக்கியது. ரிம்ஸாவின் இயல்பான வரிகளின் மூலம் மண்ணின் யதார்த்தம், பெண்ணிய உணர்வுகள், போரின் ரணங்கள் மற்றும் ஆன்மீகம் எனப் பலதளங்களில் சமுதாயத்தின் வலிகளையும் தனிமனித அகக் கொந்தளிப்புகளையும் இத்தொகுதி காத்திரமாகப் பிரதிபலிக்கிறது.
முள்ளில் பூத்த ரோஜா போல சமூகச் சீர்கேடுகள், வறுமை மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கவிஞர் ஆன்மீக நெறியோடும் கலை நயத்தோடும் தனது கவிதைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார். இந்நூல், எளிய மொழியில் ஆழமான அர்த்தங்களைக் கடத்தும் தன்மையுடையது. கவிஞர் எந்தவிதமான பகட்டுமின்றி, தன் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உண்மையான உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துள்ளார். அந்தவகையில் செயற்கையான சொல்லாடல்கள், போலியான அலங்காரங்களின்றி, இயல்பான வரிகளால் செறிவான கருத்துகளை வெளிப்படுத்துவதே ரிம்ஸா முஹம்மதின் கவித்துவப் பண்பாக அமைகிறது.
பெண்ணாகக் குடும்பச் சுமையைத் தாங்கி, வாழ்வியல் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட படைப்பாளியின் உள்ளார்ந்த உணர்வுகள் இத்தொகுதியில் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. குறிப்பாக 'தவிப்பு', 'எரிந்த சிறகுகள்', 'வாழ்வி(ய)ல் வசந்தம்' போன்ற கவிதைகள் பெண்ணின் மனக் காயங்களை மட்டுமின்றி, அவற்றிலிருந்து மீண்டெழும் தன்னம்பிக்கையையும் பறைசாற்றுகின்றன.
தமிழ்க் கவிதை நடையில் ஆன்மீக மெய்ஞ்ஞானத்தையும் மிகவும் நேர்த்தியாகத் தனது படைப்புகளில் அவர் பிணைத்துள்ளார். 'இறையோன் தந்த மாதம்', 'நிகரற்ற நாயனே', 'இருகரம் ஏந்திடுங்கள்' போன்ற கவிதைகளின் மூலம் தஹஜ்ஜத் எனும் நள்ளிரவு வழிபாட்டின் தத்துவத்தையும், படைத்தவன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், நபிவழியின் சிறப்பையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
'எரிந்த சிறகுகள்' என்பது அடங்கிப் போகும் ஆழியாக இல்லாமல், கொந்தளித்து அலை வீசும் கடலாக, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் சாம்பலிலிருந்து வீறுகொண்டு எழும் ஃபீனிக்ஸ் பறவையின் சிறகுகளாக மீண்டெழுகின்றது. யதார்த்த வரிகளால் உள்ளங்களைத் தொட்டு இனிய கீதம் இசைக்கும் இந்த நூல், தமிழிலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சிறந்த தொகுப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.
'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை எடுத்து, அவற்றின் அழகியலையும் ஆழமான கருத்துகளையும் சுவைபட விரிவாக அலசுவோம்.
'என்ன வாழ்க்கை' (பக்கம் 35) என்ற கவிதை வறுமையின் யதார்த்தப் பதிவாக அமைந்துள்ளது. சமூகத்தில் பொருளாதார நெருக்கடியினாலும் வறுமையினாலும் சாமானியர்கள் அனுபவிக்கும் அவல நிலையை இந்தக் கவிதை யதார்த்தமாகப் படம்பிடிக்கிறது. வறுமை என்பது வெறும் நிதியியல் நெருக்கடி மட்டுமல்ல, அது மனிதனின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பறிக்கும் ஒரு பெரும் பிணி என்பதை இக்கவிதை சுட்டிக்காட்டுகிறது. 'செழிப்புடன் வாழ்ந்தோர்'கூட இன்று பட்டினித் துயரால் வாடும் நிலை என்ற விவரிப்பின் மூலம், காலத்தின் மாற்றத்தையும் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகளையும் கவிஞர் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே
சூழ்ந்தது துன்பம் எமைச் சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே?
'ஒப்பனைகள்' (பக்கம் 38) என்ற கவிதை போலி மனிதர்களின் முகமூடிகளைக் கிழித்தெரிகிறது. அதாவது சமூகத்தில் நிலவும் போலியான மனித நேயத்தையும் இரட்டை வேடமிடும் மனிதர்களின் போக்கையும் இக்கவிதை தோலுரித்துக் காட்டுகிறது. இன்றைய உலகம் போலித்தனங்களால் நிறைந்தது. அகத்தில் அன்போ, கருணையோ இன்றி உதட்டளவில் மட்டும் நியாய தர்மங்களைப் பேசும் போலி மனிதர்களைச் சாடும் கவிஞரின் ஆதங்கம், சமுதாயத்தின் மீதான அவரது அக்கறையையும் நேர்மையான கோபத்தையும் புலப்படுத்துகிறது. 'ஒப்பனை' என்ற ஒற்றைச் சொல்லின் மூலமே மனிதர்களின் போலித் தனத்தைக் கவிஞர் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மனித நேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதை கதையாய்ப்
பேசுகிறார்கள்...
'காலத்தின் ஓலம்' (பக்கம் 76) என்ற கவிதை இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொடூரமான போர்க்காலச் சூழலையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலக் குரலையும் வெளிப்படுத்துகிறது. போர் ஏற்படுத்திய அழிவுகளையும், சொந்த மண்ணிலேயே அகதிகளாகித் தம் முகவரியை இழந்த எளியோரின் வேதனையையும் இக்கவிதை ஆழமாகப் பதியமிடுகிறது. இருள் சூழ்ந்த வாழ்விலிருந்து விடிவு எனும் சூரிய வெளிச்சம் எப்போது கிடைக்கும் என்ற கவிஞரின் ஏக்கம், அமைதியை விரும்பும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்புவதாகவே உள்ளது.
இருளின் போர்வைக்குள் சிக்குப்பட்டுப் போன
சூரியனுக்கே விடிந்தால் விலாசம் வருது..
போரின் வடுக்களுக்குள் அகப்பட்டுப் போன
மக்களுக்கு எப்போது விலாசம் வரும்..?
'முகவரி தேடும் மலையகம்' (பக்கம் 120) என்ற கவிதை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கொடூரமான உழைப்புச் சுரண்டலையும், குறிப்பாய் அங்குள்ள பெண்களின் அவல நிலையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தேயிலைத் தோட்டங்களில் இரத்தம் சிந்தி உழைக்கும் மலையகப் பெண்களின் உழைப்புக்குக் கூலியாகக் கிடைக்கும் சொற்ப தொகைக்கு மேலாக கொடும் சொற்களும் அடக்குமுறையுமே மிஞ்சுகின்றன என்பதைக் கவிஞரின் வரிகள் நெஞ்சை உருக்கும் வகையில் விவரிக்கின்றன. பொருளாதாரச் சுரண்டல் மட்டுமின்றி, அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும் எதிர்த்து நிற்குமாறு இக்கவிதை வழிகாட்டுகிறது.
பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும் பேச்சால் துளைத்தெடுப்பான்..
'எரிந்த சிறகுகள்' என்ற நூலில் உள்ள பெரும்பாலான கவிதைகளைப் பொதுவாக நோக்கும் போது அவை வாழ்க்கைப் போராட்டத்தில் ஏமாற்றங்கள், துரோகங்கள் மற்றும் சோதனைகளால் சிறகுகள் கருகினாலும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக வீறுகொண்டு எழும் பெண்ணின் மன உறுதியை வெளிப்படுத்துகிறது. பெண்களின் அகத்தவிப்பையும் அதேவேளையில் அவர்களின் மனந்தளராத தன்னம்பிக்கையையும் பறைசாற்றுகிறது. சிறகுகள் எரிந்து சாம்பலானாலும் பறக்கும் எண்ணமும் இலட்சியமும் அழிவதில்லை என்ற நேர்மறை எண்ணத்தை வாசகர்களின் மனதிற்குள் ஆழமாக விதைத்து, அவர்களை மீண்டெழச் செய்கின்ற ஆற்றல் இக்கவிதைகளுக்கு உண்டு.
வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி, வெறும் அழகியல் சொற்களால் புனையப்பட்ட கவிதைகளின் கோர்வையல்ல. அது சமுதாயத்தின் கழிவுகளை அகற்றி நல்வழிப்படுத்தத் துடிக்கும் ஒரு தூய உள்ளத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு கவிதையும் வாசகனின் மனதை ஏதோ ஒருவகையில் தட்டி எழுப்புகிறது. 'சாம்பலிலிருந்து மீண்டு பறக்கும் ஃபீனிக்ஸ்' பறவை போல, தடைகளைக் கடந்து நம்பிக்கையோடு வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை. 'எரிந்த சிறகுகள்' தமிழ் இலக்கிய உலகில் என்றும் அழியாத் தடம்பதிக்கும் ஒரு கனதியான கவிதைத் தொகுதியாகும்.
சமூகத்தின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் சாட்டையாகவும், எளிய மக்களின் துயர்களைப் படம்பிடிக்கும் கண்ணாடியாகவும், அகத் தவிப்புகளிலிருந்து மீண்டெழும் நம்பிக்கையின் வழிகாட்டியாகவும் 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
நூல் :- எரிந்த சிறகுகள்
நூல் வகை :- கவிதை
நூலாசிரியர் :- ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி :- 0775009222
வெளியீடு :- கொடகே பதிப்பகம்
விலை :- 400 ரூபாய்
நூல் விமர்சனம்:-
நிஸாயா தவ்பீக் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
