Wednesday, October 7, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை - சோ. பத்மநாதன்

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் ரிம்ஸா முஹம்மத். இதழியல் மற்றும் கணக்கீட்டுத் துறைகளில் பட்டம் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர். வலைத்தளம் மற்றும் இணைய இதழ்களினூடாகப் பரந்ததொரு வாசகர் கூட்டத்தோடு தொடர்பாடல் செய்து வருபவர் ரிம்ஸா.  இந்த இளம் வயதிலேயே பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கும் இப்பெண் எழுத்தாளர் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறார்.  பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் அவ்வப்போது எழுதிய விமர்சனங்களின் தொகுப்பே ‘அறுவடைகள்’ என்ற பெயரில் தற்போது நூலுருப் பெற்றுள்ளது.




கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் நானாவித வெளியீடுகள் பற்றிய ரிம்ஸாவின் பார்வைகளை  ‘அறுவடைகள்’ பதிவு செய்கிறது.

ஆழியாளுடைய ‘கருநாவு’ தொகுதியில் வரும் கவிதை இது:

‘வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்’

இலங்கை அரசியலில் சில தசாப்தங்களாக இதுவே நியதியாகிவிட்டாலும், லஸந்த விக்கிரமதுங்க என்ற துணிச்சல் மிக்க ‘நீதிக்காகப் போராடிய’ ஒரு பத்திரிகையாளனுடைய அநியாயச் சாவு பற்றிய எதிர்வினை இது என்றறியும்போது நெஞ்சு அதிரவே செய்கிறது.

இந்தத் தலைமுறைக் கவிஞர்களுடைய படைப்புக்களில் ஆங்காங்கே மின்னும் புதிய கற்பனைகள் ஆச்சரியமூட்டுபவை.
               
‘பகலவன் வெம்மையில்
படியிறங்கக் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புக்களால்’

என பாயிஸா அலி பயன்படுத்தும் உவமை தற்புதுமையானது.  கவிஞர்கள் - எல்லாக் கலைஞர்களுமே தம் சூழலைக் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பர். அப்படி அவதானிப்பவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தரமுடியும்.

எஸ். முத்துமீரான் நிந்தவூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர். சிறுகதைகள், உருவகக் கதைகள், கவிதைகள் எனப் பரந்துபட்டுக் கிடக்கின்றன அவர் படைப்புக்கள்.  கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், வாய்மொழிக் கதைகள் மற்றும் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டு அரும்பணி புரிந்தவர் முத்துமீரான்.

அவருடைய  ‘அண்ணல் வருவானா?’ என்ற கவிதைத் தொகுப்பு தமிழ் நாட்டின் நேர்நிரைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  எதையெதையோ கவிதையென்று படிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போயிருக்கும் என் மனசுக்கு முத்துமீரான் கவிதைகள் ஒத்தடமாயிருக்கின்றன.

வண்ணக்குருவியாய் என்னைப் படைத்து நீ
வானில் பறக்கவிடு - நான்
கண்ணீரில் வாடிக் கதறியழும் மக்கள்
கவலையைப் போக்கிவர.
வையம் செழித்து வளங்கள் பெருகிட
வாழ்த்தி எனையனுப்பு..
படைப்புக்கள் எல்லாமே பிரமனின் சொத்தென்று
பறையை அடிப்பதற்கு - நான்
பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட
பாதையைக் காட்டிவிடு!

என வீறுநடை போடுகிறது முத்துமீரான் கவிதை.

கல்வியுலகிலும் எழுத்துலகிலும் தம்பெயர் நிறுவியவர் கலைவாதி கலீல். அவருடைய  ‘ஓ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்’(மன்னார் படிப்பு வட்ட வெளியீடு) என்ற நூலை அறிமுகம் செய்கிறார் ரிம்ஸா. பலஸ்தீன விரோதப் போக்கைக் கடைப்பிடிப்போரைக் கண்டித்து நஜீ அல் அலி வரைந்த கூடார்த்த சித்திரங்களுக்கு கலீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இது புதுமையானதொரு முயற்சி.

பதுளை சேனாதிராஜாவின்  ‘குதிரைகளும் பறக்கும்’ மற்றும் நீர்வை பொன்னையன் எழுதிய ‘நினைவுகள் அழிவதில்லை’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிப் பயனுள்ள குறிப்புக்கள் தந்துள்ளார் ரிம்ஸா.

ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம்பதித்தவர், சாகித்திய விருதுகள் பெற்ற சாதனையாளர்  திக்வல்லை கமால். ‘வீடு’ என்ற அவருடைய அற்புதமான நாவல் ரிம்ஸா தேர்ந்துள்ள அறிமுகங்களில் மிக முக்கியமானது எனலாம். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை ‘வீடு’ என்ற பிரச்சினை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பதை வாசகர் மனசைத் தொடுமாறு சித்திரிக்கிறார் கமால்.

இலங்கையின் தென்கோடியிலுள்ள இரண்டு முஸ்லிம் பிரதேசங்களைக் களமாகக்கொண்டு கதை நகர்கிறது.  இஸ்லாமியருடைய வாழ்வியல் - பண்பாட்டு அம்சங்கள் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

‘அறுவடைகள்’ சிறுவர் இலக்கியம், திறனாய்வு முதலிய துறைகளையும் உள்ளடக்குகிறது.  தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, கே.எஸ். சிவகுமாரன் முதலியோருடைய படைப்புக்கள் குறித்த மதிப்பீடுகள் பயனுள்ளவை.

மொத்தத்தில், இந்நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் பரந்துபட்ட வாசிப்புக்கும் ஓயாத உழைப்புக்கும் சான்றாக மிளிர்கிறது. அவரை வாழ்த்துகிறேன்!!!

‘ஏரகம்’,
பொற்பதி வீதி,
கொக்குவில்.

Friday, September 18, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான ரசனைக்குறிப்பு - த. ராஜ்சுகா (எலிசபெத்), தலவாக்கலை

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் "அறுவடைகள்"
விமர்சன நூலுக்கான இரசனைக் குறிப்பு

த.  ராஜ்சுகா (எலிசபெத்), தலவாக்கலை

அண்மையில் வெளியீட்டைக் கண்ட "அறுவடைகள்" எனும் விமர்சன நூலினை வாசகர்களுக்காக வழங்கியவர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரிம்ஸா முஹம்மத் அவர்கள். திறனாய்வில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு அதிலும் பெண் விமர்சகர்கள் குறைவென்றே சொல்லலாம். ஏனைய கவிதை, சிறுகதை படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது விமர்சகர்கள் எண்ணிக்கையில் குறைவே.



அப்படிப்பட்ட எழுத்தாளர்களிடையே மிளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் வெலிகமையைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மத் அவர்கள். கணக்கியல் துறையில் தொழில் புரியுமவர் இலக்கியத்தில் சாதித்துக்கொண்டிருப்பது மிகப்பெருமைக்குரிய விடயமே. தன் இலக்கியப் பணியின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்காக ஏலவே 10 நூல்களை தந்து தற்போது அறுவடைகள் எனும் 11 ஆவது நூலுடன் நம்மை சந்திக்கின்றார். கணக்கியல் சார்ந்த மூன்று நூல்களும், கவிதை, சிறுகதை,  சிறுவர் கதை, சிறுவர் பாடல், விமர்சனம் சார்ந்த‌ ஏழு நூல்களுமே ஏனைய நூல்களாகும்.

நூலாசிரியரான ரிம்ஸா அவர்கள், பல்துறை சார்ந்த திறமை கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், விமர்சனமென ஆழமான எழுத்தாற்றல் மிக்கவர். பரந்துப‌ட்ட வாசிப்புத்திறமை கொண்டவர். நேரமே இல்லையென ஓடிக்கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பத்திரிகையொன்றை முழுமையாக வாசிப்பதற்கே நேரமில்லாதபோது கிட்டத்தட்ட 43 நூல்களை படித்துவிட்டு அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு ஆ(ரா)ய்ந்து தன் மன உணர்வுகளை விமர்சனமாக தந்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியாது. பத்திரிகைகள் வானொலிகள் வலைத்தளங்களென தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுவரும் இவர் 'பூங்காவனம்' எனும் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். ரிம்ஸா அவர்கள் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றவர்.

'அறுவடைகள்' இது எழுத்தாளர் ரிம்ஸா அவர்களை ஒரு சிறந்த வாசகியாக அடையாளப்படுத்தும் நூலாகும். ஆம் வாசிக்காத ஒருவனால் நல்ல எழுத்தாளனாக முடியாது.

நூலுக்கு ஆழப்பொருந்தும் பெயருடனும் அதற்கு  அழகான அட்டைப் படத்துடனும் பிரசவமான இந்நூலுக்கு அணிந்துரையினை சோ. பத்மநாதன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியூர் இரா. உதயணன் அவர்களும் பின்னட்டைக் குறிப்பினை இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

ஒரு எழுத்தாளனை உருவாக்குவதிலும் அவனின் திறமையை உருக்குலைப்பதிலும் இந்த விமர்சனம் எனும் விடயம் அதிக பங்கு வகிக்கின்றது. தான் படைத்த படைப்பு சமூகத்திடம் எவ்வாறு போய்ச் சேர்ந்துள்ளது என்பதனை படம்பிடித்து காட்டுவதும் இவ்விமர்சனமே. அதனை அழகாக செய்து முடிப்பதற்கும் ஒரு கலை வேண்டும் அதாவது தெளிவான வாசிப்பு, விடயத்தினை புரிந்துகொள்ளும் பக்குவம், சரிபிழைகளை பகுத்தறியும் தெளிவு, சரியாயின் திறந்த மனதுடன் வாழ்த்திடும் பரந்த மனது, பிழைகளாயின் நாசுக்காக பகிர்ந்தளிக்கும் சமயோசிதம் என்பவையே ஒரு நல்ல விமர்சனத்துக்குரிய பண்புகளாகும். இவ்வத்தனை பண்புகளையும்  இந்நூலினை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறான பக்குவம் கொண்ட ரிம்ஸா அவர்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை மகிழ்வித்து அவர்களின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டவும், அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும் அதிகமாகவே பிரயாசப்பட்டிருக்கின்றார். (அவரது இரு விமர்சன நூல்களையும் சேர்த்து).

நான் கூறியதுபோல வாசிக்கும் பழக்கம் அருகிக்கொண்டுவரும் இக்கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் இணையத்தில் உருகிக்கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இவ்வாறான விமர்சனங்களினூடாக சிறந்த நூல்களினை தெரிவுசெய்து வாசிப்பதற்கும் ஒரே புத்தகத்தில் பல நூல்களை காண்பதற்கும் துணைசெய்வதோடு சேமித்து பாதுகாப்பதற்கு உகந்த பொக்கிஷமாகவும் காணப்படுகின்றது. உண்மையில் "அறுவடைகள்" சேமித்து பாதுகாக்கப்படவேண்டிய பெட்டகமே.

கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், நாவல், சிறுவர் இலக்கியம், ஏனையவை என பிரித்து விமர்சிக்கப்பட்டுள்ள இந்நூலில் முக்கியமான ஒன்றுதான் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள். வெறுமனே எழுத்துக்களை பற்றி மட்டுமல்லாது எழுத்தாளர்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பது இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பிரயோச‌னமாக இருக்கும். அதற்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன்.

'அமைதிப்பூக்கள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் அவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். பலருக்கு தெரியாத விடயமும் கூடத்தான். "சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப்புத்திரர். அவரின் இலக்கியப் பார்வையும் சொற்களை லாவகமாக கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல ஏனென்றால் இலக்கிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்படவேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப்பற்றும் தந்தைவழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக் கவிதைத் தொகுதியில் தரிசிக்க முடிகின்றது" என தொடரும் அவ்விமர்சனத்தினைப்போல இன்னும் பல படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் இந்நூலினில்.

வாசித்தலில் பெற்றுக்கொண்ட சிறந்த அறுவடைகளை தொகுப்பக்கியுள்ள ரிம்ஸா அவர்களின் பிரதிபலிப்பு இவ்வாறும் அமைகின்றது தான் பெற்றுக்கொண்ட இன்ப உணர்வினை வாசகர்களாகிய எம்மிடமும் புகுத்திவிட எத்தனிக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையிடம் அருகிக்கொண்டுவரும் வாசிப்புத்திறமை மோலோங்கச் செய்திட, 1970 களுக்கு பின்னர் எழுத்துல‌கிற்கு வந்த கவிஞர் ஷெல்லிதாசன் 2010 ஆம் ஆண்டில்தான் அவரது முதலாவது நூல் பிரசவமாகியுள்ளது. அவர்களின் நூலுக்கு எழுதிய விமர்சனத்தின் மூலமே அழைப்பு இந்நூலாசிரியரிடமிருந்து. 'இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் வரிசையிலுள்ள கவிஞர் ஷெல்லிதாசனின் கவிதைகள் மனித‌நேயம் சார்ந்த சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ளது. இக்கவிஞரின் நூலினை வாசிப்பதின் மூலம் இளைய எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப் பாதையில் வெற்றி பெறாலாம்' என ஓர் ஆலோசனையையும் சொல்லி வைக்கின்றார் எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள்.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுதிவரும் நூலாசிரியர், தனதுரையில் இவ்வாறு கூறுகின்றார், 'நாம் வாசிக்கின்றவற்றில் இரசனைக்குரிய அம்சங்கள் பல காணப்படுகின்றன. அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி குறித்த எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தினையும் நூல் பற்றிய அறிமுகத்தினையும் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்' என்று தன்னுடைய விமர்சனப் பார்வைக்கு பதிலினை படைக்கின்றார். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளியீடான இந்நூலினை எழுத்தாளர் அவர்கள், 'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு' சமர்ப்பணம் செய்திருப்பதும் நெஞ்சைத்தொடும் நெகிழ்வே.

இவ்வாறு பல்வேறுபட்ட பரந்த வாசிப்பனுபவத்தினையுடைய இவர், திறனாய்வின் முன்னோடியும் விமர்சனத்துக்கு புகழ்பெற்றவருமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்களுடைய இரு ஆய்வு நூல்களுக்கு விமர்சனம் வரைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அயராது இலக்கிய பணிகளுக்காக தன்னுடைய தொழில் தவிர்ந்த நேரங்களை செலவிடும் ரிம்ஸா முஹம்மத் அவர்களின் 'அறுவடைகள்' விமர்சனத் தொகுப்பானது, நூல்கள் பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊசாத்துணையாக பயன்படுத்திக் கொள்ளவும் படைப்பாளிகள், மாணவர்களுக்கு பயனுடையாதான ஓர் சிறந்த நூலாகும். இந்நூலினைப் பெற்று பாதுகாப்பது தமிழ் பற்றாளர்களின் கடமையே என்பேன்.

இப்பாரிய பொறுப்பு மிக்க இலக்கியப்பணிகளை, எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஆற்றிவரும் பல்துறைசார் திறமை கொண்ட எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள் இன்னும் இலக்கிய உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம். மூத்த எழுத்தாளர்களுடைய ஆலோசனைகளுடனும் அவருடைய தனித்தன்மைவாய்ந்த ஆற்றல்களுடனும் பல படைப்புக்களுடன் இலக்கிய சாம்ராஜ்யத்தில் வீறுநடைபோட வாசகர்களாகிய எமது நல்வாழ்த்துக்கள்.

நூல்: அறுவடைகள்
நூலின் வகை: விமர்சனம்
நூலாசிரியர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு: 0775009222
விலை: 600/=

Sunday, February 22, 2015

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - பதுளை பாஹிரா

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - பதுளை பாஹிரா

ஜனரஞ்சக இலக்கியவாதி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை கூர்மையான இலக்கியத் தேடலின் தொகுப்பாக மிளிர்கின்றது. 

கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுகள், சிறுவர் இலக்கியம், கிராமிய இலக்கியம், ஆன்மீகும் சார்ந்தவை, குறுங்காவியத் தொகுதி, ஈழத்துச் சிற்றிதழ்கள், வான் அலை பாடல்கள் என ஈழத்து படைப்பாளிகளின் நூல் ஆக்கங்களைத் திறனாய்வு செய்து, இலக்கிய வாண்மையை வளப்படுத்திக் கொள்கின்றார். மொத்தம் 42 விமர்சனக் குறிப்புக்களும் எழுத்தாளர்களின் ஆளுமையை அறிமுகப்படுத்தும் அடையாளமாக அமைகிறது.

புதிய பாணியைக் கையாண்டு இலக்கியம் படைப்பதும், செம்மையான மொழி நடையால் வாசகர்களை கவர்வதுவும் வெற்றிகரமான செயல். நூலாசிரியரின் முயற்சி அதைச் சார்ந்தே பயணிக்கிறது என்பது போற்றப்பட வேண்டிய விடயமே. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகும் போது, படைப்பாளிகள் சமூக சிந்தனை வட்டத்தில் நின்று, இரசனை கலந்த யதார்த்தத்தை உணர்த்துகிறார்கள். இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், வறுமைப்புயல் என்ற அம்சங்களில் படைப்புக்கள் நகரும் போது, வலிகளின் வேதனை, இரத்தம் சிந்தும் ரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. திறனாய்வுகள் பலவற்றிலும் நிகழ்வுகளை விமர்சிக்கும் பாணி மனங்களை நெகிழ வைக்கின்றது.

இலக்கியத்தின் இமயம் எனப் போற்றப்படும், கே.எஸ். சிவகுமாரனின் ஷஇலக்கியத் திறனாய்வுகள்| நூலை விமர்சிக்கும் போது, ஆழமான மொழி வளத்தையும், இரசனையுடன் கூடிய உணர்வுகளின் வெளிப்பாடையும் அறியலாம். அவரைப் பற்றிய இலக்கியத் தகவல்களையும், அனுபவங்களையும் பெறக் கூடிய சாத்தியம் உறுதியாகிறது. தொடர்ந்து வரும் திறனாய்வாளருக்கு அவசியமான உத்திகளையும் பெற முடிகிறது.

நூலாசிரியர் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட நூல்கள் அதிகமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகள், அகம் சார்ந்த உணர்வுகள், சுனாமியின் அகோரம், துஷ்பிரயோகங்கள் என்ற கருப் பொருளைக் கொண்டது. மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் கிராமியக் கவிகள் மூலம் பாரம்பரிய பண்பாடு வெளிப்படுகின்றது. மனித சிந்தனைக்குள் ஆன்மீகத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. சீரிய நல்வாழ்வுக்கு நன்நெறிகள் நம்மை அலங்கரிக்க வேண்டும். நல்வழி காட்டும் பாதைகளும் திறந்துவிடப்படுகின்றன. வேடதாரிகள் உறவை நீக்கி, உண்மையாய் வாழும்படி உணர்த்தப்படுகின்றது. மனித மனங்களைச் சீர்படுத்தும் நடவடிக்கையாக விமர்சனக் குறிப்புக்கள் எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

கிரகித்தலில் வல்லமை, தகவல் சேகரிப்பு வல்லமை என்பவற்றால் நூலாசிரியர் வெற்றிகரமான முயற்சியில் மகுடம் சூடியிருக்கிறார். இனிவரும் காலங்களில், இலக்கிய உலகம் பெருமிதப்படும் வகையிலே பல படைப்புக்கள் படைத்திட வாழ்த்துக்கள்!!!

Monday, January 13, 2014

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு இயங்கிவரும் பன்முகப் படைப்பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற நூல், ஆய்வாரள்களுக்கு இளம்  கவிஞர்கள், படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஓர் ஆவண நூலாக வெளிவந்துள்ளது.



ரிம்ஸா முஹம்மதைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவுக்கு அவர் வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் பெற்ற ஒருவராகக் காணப்படுகின்றார். பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என்பவற்றில் நன்கு தடம் பதித்தும், முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் தனது திறமைகளைக் காட்டி வரும் ஓர் இளம் படைப்பாளியாகவும் காணப்படுகிறார்.

சுமார் 42 படைப்பாளிகளின் நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற இந்நூலில் இடம்பிடித்துள்ளன. இவர்களில் அநேகம் பேர் இளம் படைப்பாளிகளாக இருப்பதோடு, மூத்த படைப்பாளிகள் சிலரதும் நூல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. அநேகமானவை கவிதை நூல்களாகவும், சில சிறுகதை, காவிய நூல்களாகவும் உள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, படைப்பாளிகள் பற்றிய விபரங்கள் என்பன தெளிவான முறையில் தரப்பட்டு சிறந்த விமர்சனங்களாக இடம்பிடித்துள்ளன. எதிர்காலத்தில்; எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு அரிய நூலாகவும் இது காணப்படுகிறது.

இந்நூலைப்பற்றி இலக்கியத் திறனாய்வாரளரும், பிரபல விமர்சகருமாகிய திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்கையில் ''திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது. ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலில் இரசனை உணர்வு இருக்க வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும். அத்தகைய பண்புகளின்றி வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னா பின்னப்படுத்தி ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தைப் புலப்படுத்தாமல் இந்நூலாசிரியை நல்ல மனதுடனும், திறந்த மனப்பான்மையுடனும், சொற்சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.'' என்று இந்நூலாசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களினால் வெளியிடப்பட்டுள்ள கவிதை, சிறுகதை, காவியம், கட்டுரை, சஞ்சிகை என படைப்பு நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு நூலாகவும், எதிர்காலத்தில் ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவும் இதனைக் கருதலாம்.

ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க மாத்திரமல்லாமல், வைத்துப் பாதுகாப்பதற்கும் ஏற்ற வகையில் இருநூற்றி ஏழு பக்கங்களை உள்ளடக்கியதாக, அழகிய முகப்புப் படத்துடன், தரமான கடதாசியில் மிகவும்  கணதியான புத்தகமாக இந்நூல் அச்சிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கான அட்டைப் படத்தை வடிவமைத்தவர் படைப்பாளி எச்.எப். ரிஸ்னா ஆவார். அதே போல் கவிஞர் நஜ்முல் ஹுசைனின் பின்னட்டைக் குறிப்புக்கள் இந்நூலாசிரியரைப் பற்றி அறியாதவர்களுக்கு அறிமுகத்தைக் கொடுக்கிறது. கொடகே பதிப்பகம் இந்நூலை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நூல் - கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு - 0775009222
வெளியீடு - எஸ். கொடகே நிறுவனம்
விலை - 500/=

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை நூலுக்கான கருத்துரை - த.எலிசபெத், தலவாக்கலை

கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை நூலுக்கான கருத்துரை

வாசிப்பின் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறு வேறு அதிர்வுகளை தந்துவிடுகின்றது. சிலருக்கு நுனிப்புல் மேய்வதும், சிலருக்கு ஆழமாக வாசித்து உள்வாங்கிக்கொள்வதும், சிலருக்கு தமது வாசிப்பு அநுபவத்தை வரிகளாக்குவதும், விபரிப்பதுமென்று இன்னும் பலவாறு வேறுபடலாம். வாசிப்பின்பால் கொண்ட ஈர்ப்பினாலும் எழுத்துக்களின் மீதான ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்களோடு நல்ல வாசகியாக அறிமுகமான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் அக்குறிப்புக்களைத் தொகுத்து நூலுருவாக்கி நம் மத்தியில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார்.



2004 ஆம் ஆண்டு 'நிர்மூலம்'' என்ற கவிதையோடு அறிமுகமான கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்கள் இலங்கையின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலைத்தளங்களிலும் தனது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், விமர்சனம் எனும் இலக்கிய தளங்களில் கால்பதித்துள்ள இவர் கணக்கீட்டுத் துறையில் பல பட்டங்களைப்பெற்ற பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்து இலக்கியப் பரப்பில் தனியொரு முத்திரையோடு வலம்வரும், வளர்ந்துவரும் இளம்படைப்பாளியான இவரின் நூலுக்கு அணிந்துரையினை திறனாய்வாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பாகும். நூலாசிரியரின் முழுவிபரங்களோடும் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களும், எளிமையான அழகுடனும் நயத்துடனும் நூல் அட்டையினை அலங்கரித்திருக்கின்றார் கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள்.

கவிதை, சிறுகதை நூல்களை மட்டுமன்றி சஞ்சிகை, நினைவுமலர், பாடல்தொகுப்பு, குறுங்காவியத் தொகுதி என ஏனைய நூல்களினையும் விமர்சன ரீதியாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. ஆழமான வாசிப்பினையும், விரிவான ரசனையுணர்வும் பரந்த தேடலும்கொண்ட நூலாசிரியர் இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களின் நூல்களை படித்து விமர்சித்திருப்பது நூலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதோடு, வாசகர்களாகிய எமக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தினையும், அவர்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பினையும், ஆர்வத்தைனையும் பெற்றுத்தந்துள்ளது. ஆவணப்படுத்தப்படவேண்டிய இந்நூலானது ஆய்வுகளுக்கும் ஆர்வமுள்ள வாசகர்களின் நூல் தெரிவுகளுக்கும் சிறந்த வழிகோலாகவும் காணப்படுகின்றது. ஆனாலும் ஒவ்வொரு நூல் விமர்சனத்தின்போதும் அந்நூல் வெளிவந்த காலப்பகுதியினை குறிப்பிட்டிருப்பின் பிற்காலத்தில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும் என்பது முக்கியமானதாகும். அத்துடன் இந்நூல் நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் எட்டாவது நூல் என்பதும்ஒ இங்கு குறிப்பிடத்தக்கது.

விமர்சனம் ஃ திறனாய்வு போன்ற எண்ணக்கருக்களுக்கு வித்திட்டிருக்கும் இரசனைக் குறிப்புக்களோடு மேலும் பல புதிய புதுமையான எழுத்துக்களோடு எம்மை சந்திக்கும் ஆற்றலுள்ள நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களை வாழ்த்துவதோடு, இலங்கையின் எழுத்தாளர்கள் பற்றிய தேவையுடையோர் ஐயமற இந்நூலினை பெற்று பயன்பெறலாம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.

நூல் - கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு - 0775009222
வெளியீடு - எஸ். கொடகே நிறுவனம்
விலை - 500/=

Wednesday, January 8, 2014

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை --- அணிந்துரை

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை



அணிந்துரை

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ''கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை'' என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

இதற்குக் காரணங்கள் பல:

01. நூலாசிரியையின் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாகப் புதிய எழுத்தாளர்கள் தொடர்பான தமது தெரிவுகளையும், திறனாய்வு சார்ந்த தமது இரசனையையும் வெளிப்படுத்தியிருப்பது.

02. இந்நூலில் தாம் எடுத்துக்கொண்ட நூல்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்திருப்பதனால், எதிர்கால ஆய்வாளர்களுக்குக் கூட்டு மொத்தமான பார்வையைச் செலுத்த வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

03. தவிரவும், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பாக ஏனையவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வாளர்கள் சிரமமின்றி தமது கணிப்பைச் செய்ய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

04. அண்மைக் காலப் புதிய ஈழத்துக் கவிஞர்கள் தொடர்பான ஆக்கங்களையும், ஓரிரு முதிய எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய கணிப்பையும் இந்நூல் உள்ளடக்குகிறது.

05. இதுவரை காலமும் பிரதான நீரோடையில் அதிகம் சந்திக்கப்படாத பிராந்திய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் நாம் அறிந்துகொள்ள வகை செய்யப்படுகிறது.

இவ்வாறான பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நூலின் ஆசிரியர் மிக நுட்பமான இலக்கிய ரசனையுடையவர் என்பதும், இதுவரை உரிய கவனிப்பைப் பெற்றிராத போதிலும், அவர்தம் ஆற்றலை நாம் இன்னமும் புறக்கணிக்க முடியாததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

அடுத்ததாக, திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது என்பதனை இந்நூல் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலிலே இரசனை உணர்வு வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும்.

அத்தகைய பண்புகளின்றி, வெறுமனே ''விமர்சனம்'' என்ற பெயரில், தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னாபின்னப்படுத்தி, ''ஆசிரியன் இறந்துவிட்டான்'' என்ற செல்லாக் காசை வலியுறத்த தமது விகாரமான கருத்துக்களைத் திணிப்பதற்குப் புறம்பாக இந்நூலாசிரியை, நல்ல மனதுடனும், ''திறந்த மனப்பான்மை''யுடனும், சொற் சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்கக்கது.

என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு வரப்பிரசாதம். ஏனெனில் பல புதிய எழுத்தாளர்கள், புலவர்களை இந்நூல் மூலமாகவே நான் அறிகின்றேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஒரு பரம ரசிகரும், பிறரை வாழ்த்துபவருமான ஓர் இளம் எழுத்தாளர். அவர் வருகை நமக்கெல்லாம் களிப்பூட்டுகிறது!!!


கே.எஸ். சிவகுமாரன்


உள்ளடக்கம்

01 இன்னும் உன் குரல் கேட்கிறது - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
02 அக்குரோணி - மன்னார் அமுதன்
03 கண்ணீர் வரைந்த கோடுகள் - கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார்
04 ஒரு யுகத்தின் சோகம் - மன்னூரான் ஷிஹார்
05 விழி தீண்டும் விரல்கள் - பேசாலை அமல்ராஜ்
06 சுனாமியின் சுவடுகள் - நானாட்டான் எஸ். ஜெகன்
07 கிறுக்கல்கள் சித்திரமாகின்றன – கவிஞர் பி. அமல்ராஜ்
08 இடி விழுந்த வம்மி – கவிஞர் அபார்
09 இதயத்தின் ஓசைகள் - ஸக்கியா சித்தீக் பரீத்
10 நிழல் தேடும் கால்கள் - நிந்தவூர் ஷிப்லி
11 அறுவடைக் காலமும் கனவும் - கவிஞர் ஏ.எப்.எம். அஷ்ரப்
12 மகுட வைரங்கள் - கவிஞர் நித்தியஜோதி
13 நினைவுப் பொழுதின் நினைவலைகள் - வவுனியா சுகந்தினி
14 குருதி தோய்ந்த காலம் - கவிஞர் யூ.எல். ஆதம்பாவா
15 வைகறை வாசம் - கவிஞர் காத்தான்குடி பௌஸ்
16 உணர்வூட்டும் முத்துக்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
17 உயிரோவியம் - கவிஞர் மதன்
18 கரை தேடும் அலை - பெரிய நீலாவணை ம. புவிலக்ஷி
19 புதிய இலைகளால் ஆதல் - கவிதாயினி மலரா
20 இந்த நிலம் எனது - கெக்கிறாவ ஸுலைஹா
21 உனக்கான பாடல் - கவிஞர் எஸ். ரபீக்
22 நாட்டார்/கிராமிய பாடல்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
23 கண்திறவாய் - டாக்டர் தாஸிம் அஹமது
24 குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக்
25 இருக்கும்வரை காற்று - கவிஞர் ஏ.எம். தாஜ்
26 வியர்த்தொழுகும் மழைப்பொழுது - கிண்ணியா சபருள்ளா
27 தற்கொலைக் குறிப்பு - நிந்தவூர் ஷிப்லி
28 மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - வெ. துஷ்யந்தன்
29 வேர் அறுதலின் வலி - (தொகுப்பாளர்) ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர
30 மாண்புறும் மாநபி - கவிஞர் பி.ரி. அஸீஸ்
31 நல்வழி – கவிஞர் க. சபாரெத்தினம்
32 கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் - கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ்
33 நீலாவணன் காவியங்கள் - (தொகுப்பாளர்) எஸ். எழில்வேந்தன்
34 இப்படிக்கு அன்புள்ள அம்மா – (மொழிபெயர்ப்பாளர்) வி. ஜீவகுமாரன்
35 தோட்டுப்பாய் மூத்தம்மா - கவிஞர் பாலமுனை பாறூக்
36 வான் அலைகளில் தேன் துளிகள் - இசைக்கோ என்.எம். நூர்தீன்
37 உயிர்கசிவு - சுதாராஜ்
38 வைகறை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
39 கண்ணீரினூடே தெரியும் வீதி - தேவமுகுந்தன்
40 நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - (தொகுப்பாளர்) எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
41 படிகள் ஜனவரி மார்ச் 2012 – சஞ்சிகை ஆசிரியர் எல். வஸீம் அக்ரம்
42 சுவையான இலக்கியத் திறனாய்வுகள் - திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்



குறிப்பு:- 42 நூல்கள் பற்றி பத்திரிகையில் எழுதி வெளிவந்த விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்த நூல் அண்மையில் கொடகே பதிப்பத்தினால் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கும், நூலுக்கான பிற்குறிப்பை எழுதித்தந்த ஜனாப் நஜ்முல் ஹுஸைன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Thursday, May 30, 2013

2013 மார்ச் மாதத்திற்கான தினமகுடி சஞ்சிகையில் வெளியான எனது நேர்காணல்

2013 மார்ச் மாதத்திற்கான தினமகுடி சஞ்சிகையில் வெளியான எனது நேர்காணல்