Sunday, July 3, 2011
22.09.2009 மித்திரன் வாரமலரில் என்னுடைய பேட்டி
நேர்கண்டவர் - க. கோகிலவாணி
1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்?
என் ஆரம்ப காலம் தொட்டே 'வெலிகம ரிம்ஸா முஹம்மத்' என்ற பெயரில் எழுதி வரும் நான் தற்போது தலை நகரத்தில் தங்கியிருந்து என் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள நான் சுமார் 04 வருட காலங்களாக தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் இதுவரை 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை...
1. வங்கி கணக்கிணக்கக் கூற்று
2. கணக்கீட்டுச் சுருக்கம்.
3. கணக்கீட்டின் தெளிவு
அத்துடன் 'தென்றலின் வேகம்' என்ற கவிதை நூலொன்றை மிக விரைவில் இலக்கிய உலகுக்கு தர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. எழுத்துலக பிரவேசம் குறித்து...?
1997 - 98 காலப்பகுதியில் Sooriyan F.M, Shakthi F.M ஆகிய வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.
மேலும் 2004ம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து என் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இன்று வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினமுரசு, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி, மித்திரன், விடிவெள்ளி மற்றும் சஞ்சிகைகளான செங்கதிர், ஞானம், நிஷ்டை, ஜீவநதி, படிகள் என்பவற்றுடன் இஸ்லாமிய சஞ்சிகைகளான அல்ஹஸனாத், அஸ்ஸகீனஹ், அல்லஜ்னா என்பவற்றிலும் கவிதைகள் களம் கண்டுள்ளன. அதே போல் www.rimzapoems.tk, www.rimzapublication.tk , www.rimzavimarsanam.tk என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்.
3. உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏன்? மதம் என்ற பதத்தில் நின்று கொண்டா உங்கள் படைப்புக்களைப் படைக்க விரும்புகின்றீர்கள்?
அப்படியென்றில்லை. என்ன தான் கவிதைகளை எழுதினாலும் நான் இஸ்லாமியப் பெண் என்ற வட்டத்துக்குள் நின்று தான் எழுத முடியும் அல்லவா? ஆனாலும் கூட என் கவிதைகள் முற்று முழுதாக இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் பொதுவான மனித நியதிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தவிர மதம் குறித்து தனியான சொல்லாடல்களை முடிந்த வரை தவிர்த்தே வருகிறேன். (உதாரணமாக இஸ்லாமிய வசனங்களைக் கூறாமல் அதற்குரிய தமிழ் வசனங்களை கையாள்வது கூட). ஆன்மீகம் சார்ந்த பல கவிதைகள் எழுதினாலும் காதல், பெண்ணியம், சமூக அவலம் சார்ந்தனவற்றையும் எழுதியிருக்கிறேனே. அவை பல பத்திரிகைகளிலும் கூட பிரசுரமாகியிருக்கின்றன.
4. நீங்கள் எழுதுவதற்கு ஊக்கம் தந்தவர்கள் குறித்து?
இந்த கேள்விக்கு விடையளிப்பது சற்று சிரமம் தான். ஏன் எனில், என் வளர்ச்சிக்கு பலரும் பற்பல விதங்களிலும் எனக்கு உதவியிருக்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் ஏ. இக்பால், நீர்வை பொன்னையன், சிவசுப்ரமணியம், புரவரலர் ஹாஷிம் உமர், கலைச்செல்வன், ரஷPத் எம். ரியாழ், திக்வல்லை ஸப்வான், ஸ்ரீதர் பிச்சையப்பா, தீபச்செல்வன், ரேணுகா பிரபாகரன், அனலக்தர், மூதூர் முகைதீன், கலைவாதி கலீல், ஜரீனா முஸ்தபா, கா.பொன்மலர், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, பீ.எம். புண்ணியாமீன், மொரட்டுவ வஸீர், கிளியனூர் இஸ்மத் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் பெயர் குறிப்பிடப்படாதோர் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள் மித்திரனின் இடத்தை கருத்தில் கொண்டு மன்னிக்கவும். இவர்களில் பலர் புத்தகங்களுடன் நல்ல ஆலோசனைகளும் தந்தவர்கள். மற்றவர்கள் என் படைப்புகள் செவ்வனே வெளிவரக் காரணமாக இருந்தோர்கள்.
5. உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து?
விமர்சனங்கள் படைப்பாளியை முழுமைப்படுத்துபவை. அதனடிப்படையில் சொல்வதென்றால் என் கவிதைகளில் சமூகம் சார்ந்தவற்றையே பெரிதும் எதிர்பார்ப்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலமும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் அறியக்கிடைக்கிறது. ஆரம்ப கேள்விக்கான விடையில் குறிப்பிட்டது போல் மதத்தை மட்டும் அடிப்படையாக்கி என் கவிதைகளை படைக்கவில்லை. உதாரணமாக நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பானதும், மித்திரன் கலாவானம் பகுதியில் பிரசுரமானதுமான 'நாளும் நடப்போம் நல்வழியில்' என்ற கவிதை பல வாசக நெஞ்சங்களை கவர்ந்துள்ளதாக கூறினார்கள்....
அத்துடன் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையாகவே இன்னும் பல விமர்சனங்ளை தனிப்பட்ட ரீதியாக என்னிடம் கூறினால் அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.
6. வாசித்ததில் பிடித்தவையும், ஏன் பிடித்தது என்பது குறித்தும்....?
பிரபல எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே மக்களோடு ஒன்றித்து தன் கருத்தைக் கூறும் வல்லமையை கையாண்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையை அச்சு அசலாக ஒப்புவிப்பதில் அவர் கையாளும் பாணி தனி ரகமானது. அவருடைய சிறுகதைகளில் வாசகர்கள் கட்டுண்டுப்போவதில் ஆச்சரியமில்லை. அதற்காக மற்ற கவிதைகளோ, சிறுகதைகளோ தரமுள்ளவையா, அற்றவையா என்று கூறுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.
7. எழுத்து சார்ந்த எதிர் கால திட்டங்கள் என்ன?
BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பை உருவாக்குவதிலும் அதன் பல்வேறு செயற்திட்டங்களின் கீழ் கவிதைச் சிற்றிதழ், இஸ்லாமிய சஞ்சிகைகளை வெளியிட தீர்மானித்திருப்பதுடன். ஆதற்கான ஆலோசனைகளையும் நடாத்தி வருகிறோம். ஏதிர்காலங்களில் எமது அமைப்பினூடாக இன்னும் பல புத்தகங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம். எமது அமைப்பில் நானும் சகோதரி தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, மொரட்டுவ வஸீர என்போர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.
இன்று இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் வேறு தொழில்களை எடுத்துக் கொண்டாலும் ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. திருமணத்துக்கு முன்னரும், பின்னரும் இலக்கிய உலகிலிருந்து பெண்கள் தாமாகவே விலகிக் கொள்கிறார்கள். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே தான் பெண்கள் சார்ந்து எமது விளிப்புணர்வு எழுந்துள்ளது.
விசேடமாக, இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் நான்கு சுவர்களுக்குள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நங்கையரை இலக்கிய உலகில் பிரகாசிக்கச் செய்வதில் ஏணியாக இருக்கவும் எமது அமைப்பின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம்.
இத்திட்டம் மூலம் எமது எழுத்துலக முயற்சி மேலும் சிறப்புற இறைவனை வேண்டுவதோடு ஆர்வலர்களிடமிருந்து ஆக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை மித்திரனூடு சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமன்றி தனவந்தர்களின் உதவியையும் எம் அமைப்பு எதிர்பார்க்கிறது.
தொடர்புகளுக்கு - Rimza Mohamed
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile- 0094 77 5009 222
E-mail- poetrimza@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment