Friday, May 25, 2012

05. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - ஆஷிகா (றாஹிலா ஹலாம்) - கொழும்பு

05. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - ஆஷிகா (றாஹிலா ஹலாம்) - கொழும்பு

இளங் கவிக்குயில் ரிம்ஸா முஹம்மதின் கன்னி வெளியீடான 'தென்றலின் வேகம்" (கவிதைத் தொகுப்பு) - விமர்சனம் / கருத்து.

இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டு இன்பமாக ரணப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது.

முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை 'கண்ணீரில் பிறந்த காவியம்!" அதில்,

முன்னேற்றப் பாதையிலே நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கு மர ஏற்றச் சவாரியாக சாணேற முழஞ்சறுக்கி சலிப்பாகின!

என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது...

கண்ணீரில் பிறந்ததோ காவியம்- என் கடமையில் நிலைத்ததோ சீவியம்!!!

அதே போன்று 'எனக்குள் உறங்கும் நான்" என்ற கவிதையும் எடுக்கும் முயற்ச்சிக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் பல இருந்தும் முயல்கின்ற ஒருவனின் உள்ளத்தைக் கவிஞர் தான் நின்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வாறு ஒரு மனிதனின் மனப் போராட்டங்களையும், வாழ்க்கைப் பாதையில் சந்திக்கும் முட்டுக்கட்டைகளையும் வெகு நிதர்சனமாய் கூறும் கவிதைகளாக 'மௌனித்துப் போன மனம்!", 'காத்திருக்கும் காற்று!", 'மௌனத் துயரம்!" போன்றவை கவிஞரின் மனதில் இருந்து மிகச் சிறந்த வார்த்தைகளால் பிரசவமாகியுள்ளன.

'நெஞ்சில் உறுதி வேண்டும்" என்ற வரிக்கு பல அர்த்தங்களால் கோர்த்து ஒரு கவிதை செய்தது போல் 'வெற்றியின் இலக்கு!" வாசிப்பவரின் மனதில் ஒரு திட உணர்வை எழுப்புகிறது. அதே உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளாக 'வானம் உனக்கு வசமாகும்!", 'வாழ்வு மிளிரட்டும்!" என்பனவும் அமைந்துள்ளன.

அகதி வாழ்வினைத் தொட்டுப் போகும் ஒரு கவிதை 'விடியலைத் தேடும் வினாக்குறிகள்!"

சொந்த மண்ணின் பேறான சுக வளத்தை இழந்து வெந்த உள்ளத்தோடும் வேக்காட்டுப் பெருமூச்சோடும் வாழும் இவர்கள் உண்மையில் விடியலைத் தேடும் வினாக்குறிகள்!!!

சொந்த மண்ணில் சுகமாய் வாழ்ந்து அகதியாய் போனவனின் சரித்திரத்தை இந்த வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

'ஆத்மாவின் உறுதி!" துன்பம் என்பது யாதும் அறியாது இன்பத்திலே திளைத்த ஒருவன், பின் கஷ்டங்களை அநுபவிப்பதும், இனிமையினை சுவைத்த ஐம்புலன்கள் பிறர்படும் துன்பத்தை நோக்கையிலே ஏற்படும் பரிதாப உணர்வின் போது உலக வாழ்வின் உண்மையை அறிகையிலே இறைவனை உணர்ந்திடும் தருணத்தில் அவனது ஆத்மா உறுதியடைவதை இந்தக் கவிதை மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.

காதல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் தென்றலின் வேகத்திலும் கவிஞர் காதலைத் தொட்டுச் சென்றிருக்கிறார். காதல் கவிதைகளாக, காதல் பொழியும் ஒரு பெண்ணின் காவியமாக, கன்னியவளின் காதல் தரிசனத்துக்காய் காத்திருக்கும் காளையாக காதல் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 'தென்றலே தூது செல்" என்ற கவிதையில் செதுக்கிய தமிழ் சொற்கொண்ட வரிகள் மிக அருமை.

வானில் தவழும் வண்ண முகிலே...
 வட்டக் கருவிழியால் என்னை
 வளைத்துக் கொண்ட - அந்த
 வஞ்சிக் கொடியாளிடம் - என்
 வாட்ட நிலையை
 வாயாரச் சொல்லிவிட மாட்டாயோ?

என காதலை செந்தமிழ் சிந்துப் பாடுகிறது.

நூலாய் உருமாறிய கவிதைத் தொகுப்பின் உள்ளத்தில் 'புத்தகக் கருவூலம்!" என்ற கவிதையில் கவிதை உணர்வுக் கொண்டு புத்தகத்தின் பெருமையை பூவுலகம் அறிய கவிஞர் பறைசாற்றுகின்றார் இவ்வாறு...

நிகழ்கால நடப்புக்கும் எதிர்காலத் தொடுப்புக்கும் வாஞ்சையுடன் வனப்பளிக்கும் வளமான நாற்றும் அது!

காதல், இழப்பு, ஆசை, கனவு, இன்பம், துன்பம் என்ற மனித வாழ்வின் புரட்டும் பக்கங்களில் சுனாமி என்பது சுட்ட வடுவாய், செதுக்கிய கல்வெட்டாய் மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அசம்பாவித சம்பவம். 'சுனாமி தடங்கள்' மறந்த இறைவனை நினைவூட்டும் ஒரு அதிர்ச்சி நிகழ்வாக கவிஞர் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

மது அழிவிற்கு அத்திவாரம் என்பதாக 'பாவங்களின் பாதணி!" என்ற கவிதையிலும், தாய் பறவையின் பிரிவில் தவிக்கும் குஞ்சின் அலறலாக 'ஆராதனை!" மற்றும் 'ஓர் ஆத்மா அழுகிறது!" போன்ற கவிதைகளிலும் கவிஞர் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.

நட்பை வெளிப்படுத்தும் கவிதையாய் கவிஞர் 'நட்பு வாழ்வின் நறும் பூ!" என்ற கவிதையிலும், நட்'பூ'வை வழங்கிய நண்பனே அதை எறிந்தான் என்பதை மிகச் சுருக்கமாக விளக்கும் கவிதையாக 'உடைந்த இதயம்!" என்ற கவிதையும் தொட்டுச் செல்கிறது.

நூலின் இறுதிப் பகுதியை அலங்கரிக்கும் குட்டிக் கவிதைகள் வாசிப்பவரின் மனதில் 'நச்'சென்று படும் விதத்தில் கவிஞரால் எழுதப்பட்டிருக்கிறது.

தெரிவு செய்யப்பட்ட வார்த்தகளினால் கவிஞர் எழுதிய கவிதைத் தொகுப்பு ''தென்றலின் வேகம்" புயலாய் ஒரு முறை ஒவ்வொருவர் மனதையும் சூறையாடிச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

காதலின் தோல்வியையும், காதல் வேண்டுதலையும் காதலியாகவும், தாயை இழந்து உறவுகள் சூழ இருந்தும் அநாதையாகிய மகளாக, வெற்றி பாதையில் பரவிக் கிடக்கும் முட்களாய் குத்தும் துன்பங்களை சந்திக்கும் வாழ்க்கைப் போராளியாக என இப்படி பலப் பல அவதாரத்தினில் இந்தத் தென்றலின் வேகம் கவிதைத் தொகுப்பை மாலையாகக் கோர்த்து வாசகர்களுக்கு வழங்கிய இளங்கவிக் குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் மேலும் பல நூற்களை இலக்கிய உலகுக்கும், உள்ளங்களுக்கும் படைக்க வேண்டி வாழ்த்துவோம். வாழ்க... வளர்க...

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=



நன்றிகள்:- ஆஷிகா (றாஹிலா ஹலாம்) கொழும்பு.

1 comment: