தெற்கிலிருந்து திரும்பிப் பார்க்க வைக்கும்
பெண் ஆளுமை வெலிகம ரிம்ஸா முஹம்மத்,
இவர் எழுதிய ''வண்ணாத்திப் பூச்சி'' சிறுவர் பாடல் நூல் பற்றிய விவரணப் பார்வை
சுமார் 17 வருடகாலமாக தன்னை எழுத்துத் துறையில் ஈடுபடுத்தி, இலக்கியத்தின்பால் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து தலை நிமிர்ந்து அனைவராலும் அறியப்படக் கூடியவராகத் தன்னை ஸ்தீரப்படுத்திக் கொண்டுள்ள ரிம்ஸா முஹம்மத் - கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், ஆய்வாளர், சிறுவர் படைப்பாளி எனப் பன்முக ஆளுமை கொண்ட ஒருவராகத் திகழ்கின்றார்.
பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்து நெறிப்படுத்தும் இவர், அதன் மூலமாகப் பரந்துபட்ட இலக்கியச் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி வருவதில் சாதனைப் பெண் என்ற பெருமைக்குள்ளும் உள்ளடக்கம் பெறுகின்றார். வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுப்பதிலும், வளர்ந்தவர்களை மேலும் சிறப்புற்றோங்க பல்வேறு சிறப்பு வழிகளையும் இவர் காட்டி நிற்பதோடு, அடுத்தவர் உயர்ச்சியிலும் மகிழ்விலும் சந்தோஷம் காணுகின்ற மனப்பக்குவம் கொண்டவராகவும் காணப்படுகின்றார்.
தான் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள 13 நூல்களில் இவர் எழுதிய 'வண்ணாத்திப் பூச்சி' என்ற சிறுவர் பாடல்களடங்கிய நூல், இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பதாய் அமைந்துள்ளதோடு, சிறந்த நன்நெறிமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்கள் இளமையிலேயே நல்ல பண்பியல்புகளையுடையவராக இருந்தால்தான் எதிர்கால சவால்கள் பலவற்றுக்கும் முகங்கொடுத்து சமூகத்துக்கும் நாட்டுக்கும் நற்தொண்டாற்றுகின்ற பிரஜைகளாக உருவாக்கம் பெறுவார்கள் என்ற கருத்தினை மையமாகக் கொண்டதாக இவரது பாடல்கள் பலவும் அமைந்து, ஓசை நயத்தோடு படிக்கக்கூடியதாக சிறப்புற்று விளங்குகிறது.
அன்பு, இரக்கம், காருண்யம், தாட்சண்யம் என்பவற்றை இயற்கையிலேயே அமையப்பெற்ற ரிம்ஸா முஹம்மத், சிறுவர்களின் வாசிப்புத் திறன் விருத்தியை மேலோங்கச் செய்வதிலும் தனது பாடல்களில் கூடிய கவனம் செலுத்தியுள்ளார். இது இவரது படைப்புத்திறனை அதிகரித்துக் காட்டுகிறது.
அன்பு, ஜீவகாரூண்யம், சூழல் பாதுகாப்பு, தொழில் மகிமை, நாட்டுப்பற்று போன்ற உயர்ந்த கருத்துகளும், சிந்தனைகளும் வண்ணாத்துப் பூச்சியில் பரந்து நிறைந்து காணப்படுகின்றன. சிறுவர்களுக்கு ஏற்றவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல் அழகிய அட்டைப் படத்துடன் 28 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
நூலுக்கான முன்னுரையை கலாபூஷணம் எம்.எம். மன்சூர் வழங்கியுள்ளதோடு, பின்னட்டைக் குறிப்பினையும் அவரது எழுத்துகளே அழகுபடுத்துகின்றன. இந்நூல் 'பாடசாலை நூலகங்களுக்கு உகந்த' நூல் என்ற கல்வி அமைச்சின் தரச் சிறப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'வண்ணாத்திப் பூச்சி' என்ற முதலாவது பாடலோடு தொடங்கி உறுப்புக்கள் என்ற பாடலுடன் இந்நூல் நிறைவு பெறுகிறது. மொத்தமாக சத்தான முத்தான 15 பாடல்கள் நூலுக்கான அணிகலன்களாக அமைந்துள்ளது. இவை சிறுவர் பாடல்கள் தொடர்பான நூலாசிரியையின் வீரியத்தை, விவேகத்தை, வித்துவத்தை பரைசாற்றி நிற்கிறது.
தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை
அழகான செட்டை
விரிக்குது பார் விரிக்குது பார்
என்பதாகும். பிரபல்யமிக்க மேற்படி பாடலுக்கு இணையாக இந்நூலில் அமைந்துள்ள வண்ணாத்திப் பூச்சி என்ற பாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நூலாசிரியையின் கவித்திறன், எழுத்தாற்றல் என்பவற்றை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பக்கம் - 9, பாடல் - 1
வண்ணாத்திப் பூச்சி பறந்து வா
வண்ணங்கள் எனக்கு எடுத்து வா
வண்ணாத்திப் பூச்சி விரைந்து வா
வாசைன மலரில் அமர்ந்து வா
பக்கம் - 11, பாடல் - 2
மரம் மனித வாழ்வியலோடு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அதன் பேணுதலில் மாந்தர்களின் பங்களிப்பு எந்தவகையில் அமைய வேண்டும் என்பதையும் 'மரம்' எனும் பாடல் மிக அழகாக விளக்குகிறது. மரத்தின் தேவையும் அதன் உபயோகமும் இங்கு சிறப்பாக வலியுறுத்திக் கூறப்படுகிறது.
மண்ணுக்குள் வேரூன்றி
மனிதனுக்கு நிழல் தந்து
உற்சாகம் தருகின்ற
உயர்வான மரமே
பறவைகள் தன் குஞ்சுகளுடன்
பயமின்றி வாழ்ந்திருக்க
உன் கிளைகளில் கூடமைக்க
உதவி நீ புரிகின்றாய்
பக்கம் - 17, பாடல் - 6
சிறுவர் பாடல் நூல்களில் தாயைப் பற்றிப் பாடாத நூல்களே இல்லை எனலாம். அந்தவகையில் நூலாசிரியையும் தாயைப் பற்றி மிக அருமையாக, ஆழமாகஇ தத்தரூபமாக குறிப்பிட்டுள்ளார். 'துன்பங்கள் வந்தபோது தோல் கொடுத்தாயே' என இவர் இதில் குறிப்பிடுவது தாயின் மகிமை, உயர்வு, அரவணைப்பு, பெருமை என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடுவதாய் அமைந்துள்ளது.
ஐயிரண்டு மாதங்களாய்
என்னை சுமந்தாயே
இரத்தத்தைப் பாலாக்கி
உணவு ஊட்டினாயே
கண்ணிமையாய் எனையே
காத்து வந்தாயே
கடமைகள் பல செய்து
கனிவாக பார்த்திருந்தாயே
பக்கம் - 25, பாடல் - 12
நாம் ஒவ்வொருவரும் தாய்நாட்டை நேசித்து அதன்மீது நமக்குள்ள அதீத பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டும். இதன் மூலம் தேசப்பற்று அதிகரிப்பதோடுஇ இனங்களுக்கிடையிலான பரஸ்பர அன்பும், நல்லெண்ணமும், நட்புறவும் உருவாகும் என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.
இலங்கை எங்கள் தாய் நாடு
இந்து சமுத்திர சூழ் நாடு
வளங்கள் நிறைந்த எம் நாடு
இதுவே எங்கள் புகழ் நாடு
வானுயர்ந்த மலையினிலே
தேனருவிகள் பாயுதடா
வயல்கள் செறிந்த பூமியடா
நாங்கள் செய்த நன்மையடா
மொத்தத்தில் ஒரு நல்ல சிறுவர் பாடல் நூலை வாசித்த திருப்தியை வாசகர்களுக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தனது கருத்தியலில் நூலாசிரியை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்..
நூலின் பெயர் - வண்ணாத்திப் பூச்சி
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கி யவட்டம்
விலை - 200 ரூபாய்
தொலைபேசி இல - 0775009222
நூல் விவரணம்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
கிண்ணியா - 07.
No comments:
Post a Comment