Wednesday, November 11, 2020

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய ஒரு பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய ஒரு பார்வை 

- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் 

ஆவணப்படுத்துதல், மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்கு எழுத்து வடிவம் இன்றியமையாததாகின்றது. இந்தவகையில் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமையை ஆவணப்படுத்தும் ஒரு தேவையை ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' நூல் நிறைவேற்றி வைத்துள்ளமை மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 

இலங்கையில் இன நல்லுறவு பற்றி மிக அழகாக, ஆழமாக இந்த 'விடியல்' நூல் ஆராய்கிறது. நூலாசிரியரின் கல்வி சம்பந்தமான ஒரு தேவைக்காக இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் பொதுவாக சமூகத்தின் தேவையினைப் பூர்த்தி செய்வதிலும் குறிப்பிட்ட அளவு பங்கினை வகிக்கின்றது. 

தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கும் இலக்கியத் தாரகை வெலிகம ரிம்ஸா முஹம்மத், பன்முக ஆளுமைகள் நிறைந்த தன்னடக்கமிக்க காத்திரமானதொரு படைப்பாளி. இலங்கையிலும் சர்வதேசத்திலும் பேசப்படும் இவர் பெருமை, பொறாமை போன்ற குணங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதோடு வெளிப்படைத் தன்மையுடன் இலக்கியப் பணியாற்றி வருவது வாசகர் மத்தியில் நன்மதிப்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. 

விடியல் நூல் இந்த நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மதின் 13 ஆவது நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்கனவே கணக்கீடு, கவிதை, விமர்சனம், சிறுவர் கதை, மற்றும் சிறுவர் பாடல் ஆகிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டு வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விருதுகள், பட்டங்களுக்கு சொந்தக்காரியான வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஏனையவர்களும் அவ்வாறு பெற்றுக் கொள்வதற்குரிய வழிகாட்டல்களையும் நெறியாள்கையினையும் செய்துள்ளார். இதன் மூலம் பயனடைந்தோர் பலர். இவ்வாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள ரிம்ஸா முஹம்மத், கொழும்புப் பல்கலைக்கழக இதழியல் கற்கைநெறியின் ஒரு பகுதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 'விடியல்' எனும் ஆய்வு நூலினை எழுதி சமர்ப்பித்தது மட்டுமல்லாமல் அதனை நூலுருவாக்கம் செய்து வெளியீடும் செய்துள்ளார். 

தேர்ந்தெடுத்த ஒரு கவிஞனின், படைப்பாளுமையையும் சமூக நோக்கையும் நோக்குவதோடு இன ஐக்கியம் நோக்கிய அவரது உன்னத பயணத்தையும் ஆய்வு செய்கின்ற ஒரு நூலாக இந்த 'விடியல்' நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விடியல் நூல் மூலம் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களது கவிதைகளை ஆய்வு செய்ய முற்படுகிறார் நூலாசிரியர். மூதூர் முகைதீன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். அவரது கவிதைகளில் உண்மையும் நேர்மைத் தன்மையும் நிறைந்து காணப்படுவதோடு புரிந்துணர்வு இன ஐக்கியம் என்பனவும் முக்கியத்துவம் பெறுகிறது. மூதூர் முகைதீனின் மூன்று நூல்களை அடிப்படையாக வைத்து அவரது படைப்புலகையும் ஆற்றலையும் விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளார நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத். 

80 பக்கங்களில் கைக்கடக்கமான நூலாக வெளிவந்திருக்கும் 'விடியல்' நூல் அழகிய அட்டைப் படத்துடன் மனதைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்நூலின் அட்டை மற்றும் கணனி வடிவமைப்பினை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மேற்கொண்டுள்ளார்.

நூலாசிரியர் பற்றிய பின்னட்டைக் குறிப்பினை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும்;, அணிந்துரையை வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனும், வாழ்த்துரையை கிண்ணியா எஸ். பாயி;ஸா அலியும் முன்வைத்துள்ளார்கள்.

 இந்நூல் ஐந்து அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கவிதைகள் பற்றிய அறிமுகம் முதலாவது அத்தியாயத்திலும், கவிதையின் வரைவிலக்கணம், வகைப்பாடுகள், கவிதை உலகின் மாற்றம், வளர்ச்சி பற்றி இரண்டாவது அத்தியாயத்திலும், மூதூர் முகைதீனும் அவரது படைப்புலகமும் பற்றி மூன்றாவது அத்தியாயத்திலும் குறிப்பிட்டு நான்காவது அத்தியாயத்தில் மூதூர் முகைதீனின் மூன்று கவிதை நூல்களும் இன ஒற்றுமைக்கு எவ்வகையில் பங்களிப்புச் செய்கின்றன என்பதை அவரது கவிதைகளை எடுத்து ஆராய்ந்து மிகவும் தெளிவாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத். 

ஐந்து அத்தியாயங்களுக்குள் பிரதான கருப்பொருள்கள் அத்தனையும் உள்ளடக்கம் பெற்றுள்ளது. கவிதை பற்றிய ஓர் அறிமுகம், கவிதையின் வரைவிலக்கணம், மூதூர் முகைதீனின் அவர்கள் பற்றியும் அவரது பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று நூல்கள் பற்றியும் அத்துடன் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் கவிதைகளுக்கான வரவேற்பு போன்ற பிரதான தலைப்புகளுடன் விடயதானங்கள் மிகவும் நேர்த்தியாக முன்வைக்கப்பட்டுள்ளன. 

இனி சில ஆய்வுக் கவிகளின் முக்கியத்துவத்தை இங்கு நோக்குவோம். 

யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் சந்தோஷமாக வாழ்ந்து மடிந்த நம் மூதாதையர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்பதினை பின்வரும் கவிதை (பக்கம் 38) விளக்கி நிற்கின்றது. 


பிறந்த மண்ணிலே நாங்கள் 

அகதிகளாக்கப்படும் போது 

சொந்த மண்ணிலே 

நிரந்தரமாய் உறங்கிவிட்ட 

எம் முன்னோர்களை எண்ணி 

பெருமைப்படுகின்றோம் 

புண்ணியம் புரிந்தவர்கள்  


பின்வரும் வரிகள் (பக்கம் 40) யுத்தத்திற்கு முன்பு இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினதும் அன்பினதும் வெளிப்பாட்டை அப்பட்டமாக எடுத்துச் சொல்கிறது. 


பிட்டும் தேங்காய்ப் பூவும் 


நோன்புக் கஞ்சியை 

விரும்பிச் சுவைத்திட 

மாலைப் பொழுதில் 

வீட்டுக்கு வந்து 

உரிமையுடன் 

உம்மாவிடம் கேட்டு வாங்கி 

உறிஞ்சிக் குடிக்கும் 

விஜயன்... விமலன்... 

நட்பு மலர்கள் 

தினமும் மணக்கும் 


பிள்ளையார் கோவிலில் 

சிவராத்திரிக்கு 

சின்னராசாவின் பக்கத்தில் 

அன்வர் இருந்து 

மோதகம் உண்பான் 

ஐயர் வந்து 

சிரித்தபடியே..

அவித்த கடலையையும் 

அள்ளிக் கொடுப்பார். 


மரம் நட்டு மழை பெறுவோம் எனும் கவிதை (பக்கம் 43) கீழே தரப்படுகிறது.


மரங்கள் நடுவோம் 


தீயினால் வெந்து 

சாம்பலான 

எம் தேசத்து மண்ணில் 

உரத்திற்கும், வளத்திற்கும் 

என்ன குறை? 

அதனால் 

மரங்கள் நடுவோம் 

உரத்தினை 

உணவாய்ப் பெற்று 

மழையினைப் பெறுவோம்! 


மக்கள் பகைமைகளை மறந்து மீண்டும் ஒன்றுகூடி வாழ வேண்டும் என்பதை பின்வரும் கவிதை (பக்கம் 58) சுட்டிக் காட்டுகிறது. 


இனத்தின் பெயரால் நாம் பிரிந்து 

இணங்கி வாழும் வழி மறந்து 

மனதில் பகைமை தான் வளர்த்து 

மனித நேய மாண்பிழந்து 

பிணக்கில் வாழும் பிழை தீர


சமாதான மலரின் வாசனை நுகர்வதற்கு மனது துடிப்பதையும் திடீரென முளைக்கும் உறவுகள் நிலைத்திருப்பதற்காக இதயம் பாடுபடுவதையும் அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கவிதை (பக்கம் 66) அமைந்துள்ளது. 


அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் 


திரும்பிப் பார்க்க முடியாத 

தூரத்தில் இருக்கும் 

சமாதான மலர்களின் மணத்தை 

மறுபடியும் நுகரும் ஆவலில் 

அலையும் மனதுடன் 

இரவு முழுவதும் 

கனவுப் பூக்கள் மணக்கும் 


மழைக் காலத்து காளானாய் 

முளைக்கும் உறவுகள் 

மனத் தோட்டத்தில் வேரூன்றி 

கிளைவிட்டுப் படர 

அந்த அரவணைப்பு நிழலில் 

ஆறுதல் கிடைக்கும் 

சமாதானம் 


இவ்வாறு சிந்திக்கத் தூண்டும் நயமிக்க பல்வேறு கவிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் 'விடியல்' எனும் ஆய்வு நூல் மூலமாக வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது இலக்கிய வாழ்வில் புதியதொரு விடியலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அன்னாருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


நூல்:- விடியல்

நூல் வகை:- ஆய்வு

நூலாசிரியர்:- ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி:- 0775009222

விலை:- 400 ரூபாய்

வெளியீடு:- பூங்காவனம் இலக்கிய வட்டம்



நூல் விமர்சனம்:-  கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்


No comments:

Post a Comment