Sunday, July 12, 2026

04. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய கருத்து

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய கருத்து


நூல் பற்றிய கருத்து:- 

சஸ்னா நாஸிம், காலி



விரிந்த வானமெனக் கிடக்கும் படைப்பிலக்கியப் புலத்தில் கூறத்தக்க பெண் படைப்பாளிகளுள் ஒருவராயமைந்த வெலிகம ரிம்ஸா முகம்மத்தின் 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் பதினெட்டு சிறுகதைகளைத்  தாங்கியமைந்துள்ளது. இச்சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளில் நடமாடும் கதாமாந்தர்கள் அனைவருமே அன்றாடம் எம் வாழ்வில் நாம் கடந்து செல்பவர்களே. அவர்களை கச்சிதமாக கதைக்களங்களுக்குள் பிடித்து நிறுத்தியிருக்கின்றார் கதாசிரியை ரிம்ஸா முகம்மத்.

நூலின் மகுடமாயமைந்த பிஞ்சு மனம், தொகுப்பின் முதலாவது சிறுகதையாகவும் அமைந்துள்ளது. பிஞ்சு மனங்களில் விதைக்கப்படும்  மோசமான எண்ணங்கள் காலப்போக்கில் வளர்ந்து விசுவரூபமெடுக்கும் போது அவை விரும்பத்தகாத விளைவுகளையே விளைவிக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பிஞ்சு வளர்ந்து தாயான போது தன் பிஞ்சுகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களைப் பற்றிப் பேசுகின்றது.

சப்பாத்து சிறுகதை தான் தொகுப்பில் எனது மனம் கவர்ந்த கதை. 

'அடுத்த நாள் தன்னைப் போலவே மெலிந்த கொப்பிகளுடன் பரீனா வகுப்பில் இருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த பிள்ளை இருநூற்றைம்பது பக்கத்துக்கும் மேற்பட்ட தாள்களைக் கொண்ட உயர்ரக கொப்பிகளை வைத்திருந்தாள்' 

இளமையில் வறுமை பெருங்கொடிது என்பதை துல்லியமாக இவ்வரிகள் பறைசாற்றி நிற்கின்றன. சப்பாத்தின்றி அல்லலுற்று அதன்பின் ஆவலோடு புதுச் சப்பாத்தை அணிந்து பாடசாலைக்குச் செல்லும் சிறுமி பரீனாவுக்கு ஏற்படும் அதிர்ச்சியை கதையின் சொற்கள் லாவகமாக சொல்லி நிற்கின்றன. இக்கதையை வாசித்து முடிக்கும் போது, தட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள் வாய்க்காவிட்டால், மாணவ உள்ளங்கள் படும் மன அவலம் பற்றிய கவலையை மெல்லிய இழையாய் மனதுக்குள் ஓட விடுகின்றார் கதாசிரியை. அருமையான கதை.

இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் இன்னல்கள் பற்றியும் சில கதைகள் பேசுகின்றன. நன்றிக்கடன் சிறுகதை உதவி செய்து உபத்திரவத்தை நன்றியாகப் பெற்றுக்கொள்ளும்  உலக யதார்த்ததை அச்சொட்டாகக் காட்டி நிற்கின்றது. 

எல்லாச் சிறுகதைகளுமே நல்ல நடை பெற்று தொகுப்புக்கு மெருகு சேர்த்துள்ளன. கதையின் மாந்தர்களூடாக சொல்ல வரும் செய்திகள்,  கதையில் ஆங்காங்கே விரவி வரும் மனதைத் தளும்ப வைக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் என எல்லாமே இச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்புக்களாய் அமைகின்றன. 


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை - 1,000 ரூபாய்



நூல் பற்றிய கருத்து:- 

சஸ்னா நாஸிம், காலி


No comments:

Post a Comment