மனிதநேயம் பொதிந்துள்ள 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி
நூல் திறன்நோக்கு:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா - 07
பன்னூலாசிரியரான ரிம்ஸா முஹம்மத்; 'பிஞ்சு மனம்' என்ற பெயரில் சிறுகதைத் தொகுதியொன்றை வெளியீடு செய்துள்ளார். இது இவரின் 15 ஆவது நூலாக அமைகிறது. 15 நூல்களை வெளியீடு செய்வதென்பது இலேசான காரியமல்ல. அது மாபெரும் சாதனையாவே பார்க்கப்பட வேண்டும். பல்வேறு கால சூழலில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் பரந்துபட்ட உலகில் தான் அவதானித்த விடயங்களையும் வைத்தே கதைகளைப் புனைந்து பிஞ்சு மனம் சிறுகதை நூலில் உள்ள 18 சிறுகதைகளின் ஊடாக வாசகர்களுக்கு விருந்து படைக்கிறார். அந்தவகையில் இந்த நூலிலுள்ள அனைத்துக் கதைகளும் வாசகரை தம் பக்கம் ஈர்த்தெடுக்கும் தன்மையைக் கொண்டு அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். இதுவிடயத்தில் ரிம்ஸா உயர்ந்து நிற்கின்றார்.
இலக்கிய உலகில் தனக்கானதொரு தனியிடத்தை தடம்பதித்துள்ள இவர், சாதனை எழுத்தாளராக மட்டுமன்றி தன்னைச் சார்ந்தவர்களை கவர்ந்தவராகவும் திகழ்கின்றார். புன்னகை பூத்த முகத்தோடு வலம் வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் ரிம்ஸா முஹம்மத், பகைமை உணர்வின்றி அனைவரோடும் நட்புறவு பூண்டவர்.
எறும்பு போல் சோர்வின்றி இலக்கியத்தில் பயணிக்கும் ரிம்ஸா முஹம்மதுக்கு அவரது பணியினை கௌரவித்துப் பாராட்டி 'கலைநிலா' என்ற பட்டமும் விருதும் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினரால் அதன் தலைவர் என்ற வகையில் 2018 இல் இவருடைய 'விடியல்' என்ற ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வின் போது கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் என்னால் வழங்கி வைக்கப்பட்டது மறக்க முடியாத நிகழ்வாகும்.
பன்முக ஆளுமை கொண்ட ரிம்ஸா முஹம்மத் மென்மேலும் இலக்கிய உலகில் முன்னேற்றம் கண்டு தடைகளைத் தகர்த்து இலக்கியத்துக்கான இலக்கினில் பிரகாசிக்க வேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு. எனக்கும் இவருக்குமாக இலக்கியத் தொடர்பு கடந்த 2011 இலிருந்து தொடர்ந்து வருகின்றது. எங்களது நட்பில் இதுவரை ஒரு கீறல் கூட விழுந்ததில்லை என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வகையான ஆலோசனைகள், உதவி ஒத்தாசைகள் வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ரிம்ஸா முஹம்மத் அடுத்தவரின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறையுடன் செயற்படுபவர். தன்னை ஒரு இலக்கியவாதி என அறிமுகப்படுத்திக் கொள்வதில் இவருக்குள் ஒரு பிரகாசமிருப்பதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன். ரிம்ஸா முஹம்மத் என்னைக் கவர்ந்தவர், எனக்குள் உயர்ந்து நிற்பவர் இலக்கியத் தோடும் மனசோடும் மரியாதையோடு கலந்திருப்பவர்.
தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் எழுத்தாளர்களின் வரவு ஒரு புதிய விடியலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமது உணர்வுகளையும் எண்ணங்களையும் மனதுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் பெண் எழுத்தாளர்களுக்கு இந்த எழுத்துத் துறையானது ஒரு வடிகாலாக அமைந்துள்ளது. பெண் எழுத்தாளர்களின் பல குரல்கள் இன்று இலக்கியப் படைப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுவாக நோக்கும் போது சமூகத்தின் பிற்போக்குத் தனமான கட்டமைப்புகளைத் தகர்த்து பெண்ணிய சிந்தனைகளையும் வாழ்வியல் யதார்த்தங்களையும் தனது படைப்புளின் ஊடாக ரிம்ஸா முஹம்மத் மிகவும் அழகாகப் பதிவு செய்து வருகின்றார். கற்பனைகளைக் கடந்து சமூக மாற்றத்திற்கான ஒரு களமாக தமது எழுத்துக்களை ரிம்ஸா முஹம்மத் கையாள்கின்றார். அந்தவகையில் இவருடைய இலக்கியப் படைப்புகள் புதிய நம்பிக்கையையும் புத்துணர்வையும் ஏற்படுத்துகின்றது. தமது எழுத்துக்களால் இலக்கிய உலகிற்கு செழுமை சேர்த்திருக்கும் இவர் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
'பிஞ்சு மனம்' என்ற இந்த சிறுகதை நூலில் இடம் பெற்றுள்ள 18 சிறுகதைகளும் சிறப்புற அமைந்திருக்கின்றன. 'பிஞ்சு மனம்' (பக்கம் 17) என்ற முதலாவது கதை முக்கியமான ஒரு விடயத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது. குழந்தைகளின் மனங்களில் நஞ்சு விதைகளைப் பரவுவதால் அவர்களுக்குள் ஏற்படும் பிளவும் பிரச்சினைகளும் இக்கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது. சிறுவர்களின் பிஞ்சு மனதைப் புரிந்து கொள்ளாமை பல பிரச்சினைகளுக்கு வித்திடலாம் என்று சொல்லப்படுகின்ற செய்தி சிந்திக்கத்தக்கதாக அமைகிறது. சிறிய வயதுச் சகோதரர்களின் மத்தியில் நிலவிய தாழ்வு மனப்பான்மை அவர்களைவிட்டு நீங்கிப் போவது கதாசிரியரின் எழுத்தாண்மையை எடுத்துக் காட்டும் ஒரு சிறப்பம்சமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'பலன்' (பக்கம் 55) என்ற கதையில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தெளிவாகத் தெரியப்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது. பொறாமையும் காழ்புணர்ச்சியும் கொண்டவர்கள் மத்தியில் பொறுமை, சகிப்புத் தன்மை என்பவற்றோடு வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல. அடுத்தவர் மனதை புண்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் தமது கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் அடுத்தவரை நோகடிப்புச் செய்வதிலும் தமது முழுத் திறமையையும் வெளிக்காட்டுகின்றனர். இவ்வாறானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பட்டுமாயும் போதுதான் தமது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேட முயற்சிக்கின்றனர். இது காலம் கடந்த ஞானமாக அமைந்துவிடுகிறது. பலன் என்பதில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. நல்ல பலனை அடைவதாயின் மனதில் மனிதநேய செயற்பாடுகள் தோற்றம் பெறுவது அவசியமாகும். இந்தத் தொகுதியில் பலன் என்ற கதை சிறப்பான ஒரு இடத்தினை வகிக்கிறது.
நூலில் இடம்பெற்றிருக்கின்ற 'விதி' (பக்கம் 94) எனும் மற்றுமொரு சிறுகதை மிகவும் அழகாக கதை சொல்லியால் நகர்த்தப்படுகிறது. தான் விரும்பிய நளீமாவை அடைய முடியாவிட்டாலும் தனக்கென ஒரு சியாமா கிடைத்திருப்பது பற்றி சலீம்; திருப்திப்படுகிறான். சந்தோசமும் சிரிப்பும் அவனுக்குள் மலர்ந்திருந்தது. குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த சலீமின் வாழ்வில் சியாமாவின் வரவு ஒரு புது வசந்தத்தை ஏற்படுத்தும் என்று அவன் முழுமையாக நம்பினான். வீட்டாரின் நிலைப்பாட்டிலேயே தன் வாழ்வு அடங்கியிருக்கட்டும் என்ற கொள்கையில் சலீமின் வாழ்வு அமைந்திருந்தது. அதனை மன விருப்பத்தோடு அவனும் ஏற்றுக்கொண்டான். குடும்பத்துக்காக தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக எரித்துக் கொண்ட சலீம், தனக்குக் கிடைக்க இருக்கும் புதிய வாழ்வுக்காக தன்னைத் தயார் படுத்துகிறான் என கதை தொடர்ந்து செல்கிறது. படிக்கவும் சிந்திக்கவும் ஏற்றதான நல்ல சிறுகதையாக இது அமைந்துள்ளது.
'வாழ்க்கை வளைவு' (பக்கம் 100) என்ற கதை என் மனதைத் தொட்டு நிற்கிறது. இன்றைய சமூகத்தில் முதியோர் எவ்வாறு நோக்கப்படுகின்றனர் அல்லது நடாத்தப்படுகின்றனர் என்ற விடயம் இக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அயலவர் மத்தியில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தவர்கள் வயதான காலத்தில் செல்லாக் காசாக மாற்றப்பட்டுக் கொண்டு வருவதை கதையின் கருத்தோட்டம் எடுத்துக் கூறுகிறது. உளவியல் ரீதியாக அவர்களின் பாதிப்பு அங்கே கோடிடப்படுகிறது. அதனால் எனது பார்வையின் இந்தக் கதை உயர்ந்ததொரு இடத்தினைப் பெறுகிறது.
'நன்றிக் கடன்' (பக்கம் 138) என்ற கதை நட்பு வட்டத்தினைச் சுற்றி படர்கிறது. கார்த்தி, சுனில் என்ற இருவரும் கதை முழுக்க வந்து செல்கின்றனர். நல்ல நட்புக்கு உதாரணமாக திகழ்ந்த இவர்களுக்கு மத்தியில் பணக் கொடுக்கல் வாங்கல் ஒன்றில் சிறிது சிறிதாக மனக் கசப்பு வளர்ந்து அது பெரிதாகிவிடுகின்றது. சுனில், கார்த்தியை ஏமாற்ற நினைப்பது கதையோட்டத்தில் தெட்டத் தெளிவாக விளங்குகிறது. ஏமாற்றப்படுவதனால் நட்புக்கு இழுக்கு ஏற்படுவதை கதை ஆழமாக விளக்கி நிற்கிறது. தனக்கு உதவி செய்த கார்த்தியை செய்நன்றி மறந்து சுனில் முற்று முழுதாகவே புறக்கணிப்பது நெஞ்சிக்குள் என்னமோ செய்கிறது. இருந்தாலும் கார்த்தி, சுனில் மீது கோபப்படாமல் சில காலம் அமைதியாக இருக்கிறான். தனக்கு அவசர தேவை ஏற்படும் போதே கொடுத்த கடனைத் திருப்பிப் பெற முயற்சிக்கின்றான். ஆனாலும் அதில் பல சிரமங்களையும் சங்கடங்களையும் எதிர்நோக்குகின்றான் கார்த்தி என்பதை நன்றிக்கடன் கதை தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
இவ்வாறு இந்த நூலிலுள்ள 18 சிறுகதைகளும் தனித்தன்மையுடன் திகழ்கிறது. கதைகள் மனித வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுவதினால் வரவேற்பும் சிறப்பும் பெறுகின்றன. சிறப்புக்குரிய கதைகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் ரிம்ஸா முஹம்மத் மென்மேலும் இத்துறையில் பிரகாசிக்க வேண்டும். மாற்றங்களையும் மாற்று நிலைப்பாடுகளையும் வரவேற்கும் மனப்பாங்குடன் செயற்படுகின்ற ரிம்ஸா முஹம்மத் புதிய இலக்கியப் படைப்புகளை மென்மேலும் வெளிக்கொணர்ந்து புகழ்பெற வாழ்த்துகிறேன்!!!
நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்
நூல் திறன்நோக்கு:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா - 07
கலாஜோதி பீ.ரீ. அஸீஸ்
ஓய்வுநிலை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்,
இல. 46/3, பெரியாற்றுமுனை,
கிண்ணியா - 07
குறிப்பு:- மேற்படி நூல் விமர்சனம் 2026.07.01 தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
நன்றிகள்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
தினகரன் - 2026.07.01
Image: View:-
Text View;-
https://epaper.thinakaran.lk/article/Thinakaran?OrgId=172bbd3799&eid=1&imageview=0&device=desktop
மனிதநேயம் பொதிந்துள்ள 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி


No comments:
Post a Comment