Tuesday, November 1, 2022

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பதுளை ஹுமைரா அல் அமீன் 

இன்றைய நாட்களில் இலக்கிய உலகினால் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே வெலிகம ரிம்ஸா முஹம்மத் காணப்படுகிறார். பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் வாசகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர். மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட  இவர், ஓர் எழுத்தாளராகவும் கவிஞராகவும் மிளிர்கிறார். வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் இவரது பரவலான ஆக்கங்களை ஊடகங்களில் களப்படுத்தி வந்தாலும் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில், ஆர்.எம். ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார்.  1998 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் எழுதிவரும் இவருடனான நேர்காணல்கள் தேசிய ஊடகங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன அத்துடன் ஒலி,ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14 நூல்களை வெளியிட்டு இவர் இலக்கியத் துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அத்துடன் ஊடகத் துறையில் இவருக்குள்ள ஆர்வம் காரணமாக 2013 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும் பூரணப்படுத்தியுள்ளார்.

இளவயதிலேயே தன் தாயாரை இழந்து குடும்பம் எனும் சுமையை தன் முதுகில் ஏந்திக்கொண்டு கத்தி மேலே நத்தையாக நடந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவங்கள், மனத்துயரங்கள் எப்படியிருக்கும் என்பதை வார்த்தைகளால் வரையறை செய்துவிட முடியாது. அந்த அனுபவங்களை மொழியாக்கி, உயிர் கொடுத்து கவிதைகளின் மூலம் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி சற்று ஆறுதலடைகிறார் சகோதரி ரிம்ஸா முஹம்மத்.  

தென்றலின் வேகம் என்ற கவிதை நூலை 2010 இல் வெளியிட்டு இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இவர், எரிந்த சிறகுகள் என்ற கவிதைத் தொகுதியையும் வெளியீடு செய்துள்ளார். 152 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பல்வேறு தலைப்புக்களில் அமைந்துள்ள 54 கவிதைகளும் 07 மெல்லிசைப் பாடல்களும் இடம்பிடித்துள்ளன.

"எரிந்த சிறகுகள்" கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைச் சிறகுகளை நான் மெதுமெதுவாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்த எரிந்துபோன இறகுகளின் பல இடங்களில் காயங்கள், கொஞ்சம் கண்ணீர், வலிகள், வேதனைகள் என்று அத்தனைக்கும் தனக்குத் தானே மருந்திட்டுக் கொண்டு பறந்துவிட்ட ஒரு குருவியின் குதூகலம் அந்தக் கவிதைகளில் தெரிகிறது. இவருடைய அர்த்தமுள்ள அந்த வரிகளுக்குள் ஆயிரம் பாடங்களைக் கண்டுகொள்ள முடிகிறது.   

அன்பு, காதல், நட்பு, போராட்டம், ஏமாற்றம், முரண்பாடுகள் இன்னும் எத்தனையோ என்று வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் இவர் கவிதைகளின் சிறகுகள் சுமந்து செல்கின்றன. சில வரிகள் அப்படியே உள்ளத்தில் புதைந்து கொண்டன. மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டன. வலிகளின் வரிகளுக்குள் தலை தடவும் ஆறுதலும் அவருக்கு அவராகவே ஒத்தடம் கொடுத்துக் கொள்கின்றது.

வாழ்க்கைப் பூங்காற்று (பக்கம் 28) என்ற தலைப்பில் அமைந்த கவிதையிலுள்ள பின்வரும் வரிகள் எத்தனை அருமையாக அமைந்துள்ளன. தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை பாறைகளாகப் பார்க்கிறது கவிஞரின் மென்மையான மனது. துன்பங்களோடு போராடினாலும் உள் மனதில் எங்கோ ஒரு மகிழ்ச்சி, தைரியம், நம்பிக்கை இருப்பதை உணர்த்துவதாய் அழகாகச் சொல்கிறது அந்தக் கவிதையின் வரிகள். கூடவே வாசிக்கும் போது ஓர் எதிர்ப்பார்ப்பும் தன்னம்பிக்கையும் எம்மைத் தழுவிக்கொள்கிறது.


பாறைகளுடன் நான்

சண்டையிட்டிருக்கிறேன் - என்

இதயக் குமுறல்கள்

இந்த உலகில்

எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்

பூங்காற்று மட்டும் வந்து

என் காதுகளில்

ரகசியம் சொன்னது

வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!


இன்னும் மகனைப் பிரிந்த ஓர் தாயின் ஆதங்கமாய் தவிப்பு (பக்கம் 32) என்ற கவிதை அமைந்துள்ளது. பிள்ளைகளுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து, தன் முழு நேரத்தையும் அவர்களுக்காகவே செலவு செய்து வாழும் ஒரு தாயின் முதுமைப் பருவத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட தன் மகனின் வருகைக்காய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு தாயின் ஆதங்கம், அவளின் கண்ணீர் இந்தக் கவிதை வரிகளில் தெரிகிறது. அந்தத் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தும் முகமாக தனக்குள் அந்த வலியை உணர்ந்து கொண்டு சிறப்பாய் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ:-


எனைப் பார்க்க

இன்று வருவாய்..

இல்லையில்லை

நாளை வருவாய்

என்றெண்ணியே

என் வாழ்நாள் கழிகிறது!


நாட்கள் சக்கரம் பூட்டி

ஓடும் என்று பார்த்தால்

அவையோ

ஆமை வேகத்தில் நகர்ந்து

என் உயிரை வதைக்கிறது!


ஒப்பனைகள் (பக்கம் 38) என்ற கவிதை வேஷமிடும் போலி மனிதர்களுக்கு சாட்டையடியாய் வந்து விழுகிறது. கொஞ்சம் அரசியலும் பேசுகிறது. 


வாக்குறுதியின்

மகிமை தெரியாதவர்களெல்லாம்

மேடைகளில்

வாக்குறுதிகளை

அள்ளி வீசுகிறார்கள்!


மனிதநேயம்

துளியுமற்றவர்களெல்லாம்

அதைப்பற்றி

கதைகதையாய்ப்

பேசுகிறார்கள்!


ஏழைகளைப் பார்த்து

நக்கலாக சிரிக்குமவர்கள்

தம் முன்னைய

வாழ்க்கையைப்பற்றி

சிந்திக்கவேயில்லை!


அகம்பாவத்தை

அகம் முழுவதும் சுமந்துகொண்டு

ஆன்மீகம் பேசுவது

வேடிக்கையாக இருக்கிறது!


மனிதத் தன்மையற்று

நடக்குமவர்கள்

மகான் என்று

தன்னை சொல்லிக்கொள்வதும்

வாடிக்கையாக இருக்கிறது!


அவர்களின்

முகத்திற்கும் அகத்திற்கும்

சம்பந்தமேயில்லாத பின்

ஒப்பனைகள் மட்டும் எதற்கு

அகற்றிவிடட்டும்!!!


எத்தனை உண்மை முகமே ஒப்பனை என்றாகிவிட்ட போது அதன் மீது இன்னும் ஒப்பனைகள் எதற்கு என்று தனது கவிதை மூலம் கொஞ்சம் காரசாரமாகவே கேட்கின்றார் ரிம்ஸா முஹம்மத். உண்மைகள் மரித்துப் போன உலகில் போலிகள் எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகின்றன. ஆனாலும் ஒரு நாள் வேஷம் கலைந்து விடத்தானே போகிறது. கேட்க வேண்டிய நியாயமான கேள்விதான். கவிஞர் கொஞ்சம் சூடாகவே கேட்டுவிட்டார்.            

தீராத மன நதி ஓட்டம் (பக்கம் 40) என்ற கவிதையில் தன் வலிகளை கண்ணீருக்குள் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்லி எம் மனதையும் உருக வைக்கிறார். அந்தக் கவிதை வரிகளை வாசிக்கும் போது எம் கண்களும் கசிகிறது.          


வெந்துபோன என்

உள்ளத்தில்

வந்துபோனவை

துன்பம் மட்டுமே..

நாதியற்ற என் நிலை

தேதி தெரியாத

முடிவை நோக்கியே!


தீர்ந்துவிட முடியாத

துன்ப ஓடைகளை

வலுக்கட்டாயமாக

கட்டுப்படுத்தினேன்..

என் கண்ணீருக்குள்!


மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போக, துன்பங்கள் மட்டுமே தொடர்ந்து வர.. என்றுதான் முடியும் இந்தச் சோக வாழ்க்கை என்று ஏங்கும் ஒரு ஏழை நெஞ்சத்தின் அங்கலாய்ப்பை அந்தக் கவிதை வரிகள் அடுக்காய்ச் சொல்லி அழ வைக்கின்றன.  

முகஸ்துதிப் புன்னகையின் பின்னால் மறைந்திருப்பவர்களைப் பார்த்து சில வரிகளும் அங்கே புன்னகைப் பூச்சு (பக்கம் 48) என்ற கவிதையில் முன்வைக்கப்படுகின்றன. வார்த்தைகளில் மட்டுமே வேதம் சொல்லித் திரியும் வேஷதாரிகளை தனது பின்வரும் இந்தக் கவிதை வரிகள் மூலம் தட்டிக் கேட்கிறார் கவிஞர். 


வெறும் பேச்சில் மாத்திரம்

நீ உச்சரிக்கிறாய் வேதம்..

நிஜத்தில் புனிதனாயிருக்காத

நீ சுட்டெரிக்கும் பூதம்!


சந்திரனைக் காட்டிக்காட்டி

பொய் கூறியது போதும்..

நீ அரிச்சந்திரனாயிரு

மெய்யாய் இனிமேலும்! 


அன்பும் கனிவும் மட்டுமல்ல சகோதரி ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளில் தைரியமும் வெளிப்படுகிறது. போராடி ஜெயிப்பதுவே வாழ்க்கை எனும் தத்துவத்தை வரிகளாய் வடித்து அந்த வரிகளுக்குள் வாழ்ந்தும் காட்டுகிறார். பாராட்டை மட்டுமே எதிர்ப்பார்த்து ஓர் எழுத்தாளன் பயணிக்க முடியாது. சில இடங்களில் பாறைகளின் மீதும் முட்டி மோதி, அந்தப் பாறைகளையும் உடைத்துத்தான் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இவரின் பல கவிதை வரிகள். கானகத்தின் நடுவில் தனியாக தனக்கென்றொரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டு செல்லும் தைரியம் அவர் கவிதைகள் பலவற்றில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு கவிதைகளுக்குள்ளும் ஆயிரம் உணர்வுகள் பொதிந்துள்ளன. ஒவ்வொரு உணர்வுக்காகவும் ஒவ்வொரு கவிதையென்று அத்தனை கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் அருமையான நகர்வாக இந்தக் கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. 

கவிதைத் துறையில் மட்டுமல்லாமல் மெல்லிசைப் பாடல்கள், சிறுகதை, சிறுவர் படைப்புகள் போன்ற துறைகளில் தனது கவனத்தைச் செலுத்திவரும் இவர் நூல் விமர்சனத் துறையிலும் தனக்கென்றொரு தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார். இதுவரை 160 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு தனது நேரகாலங்களைச் செலவழித்து நூல் விமர்சனங்களை எழுதியுள்ளார். மேலும் ஏனைய இலக்கியவாதிகளுடனான 100 க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும் செய்து அதன் மூலமாகவும் நன்கு பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்து இலக்கிய வானில் ஒரு மின்னும் தாரகையாக மிளிரும் சகோதரி ரிம்ஸாவின் எழுத்துப் பணியோடு சமூகப் பணிகளும் இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்!!!


நூல் - எரிந்த சிறகுகள்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - கொடகே பதிப்பகம்

விலை - 400 ரூபாய்



பதுளை ஹுமைரா அல் அமீன்