Saturday, October 29, 2022

தென்றலின் வேகம் மற்றும் எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் மற்றும்

எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் 

பற்றிய கண்ணோட்டம்


ஈழத்து இலக்கியத் துறையில் வடக்கு மற்றும் கிழக்கிலங்கைப் படைப்பாளிகளது பங்களிப்பைத் தொடர்ந்தே தென்னிலங்கை படைப்பாளிகளது பிரவேசம் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. தென்னிலங்கைக் கவிதைத் துறை வளர்ச்சிக்கு பல கவிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். தென்னிலங்கையின் ஆரம்பகட்ட இலக்கிய முயற்சிகளாக மதம் சார்ந்த செய்யுள் இலக்கியங்களே காணப்பட்டன. மார்க்க அறிஞர்களே இதன்போது இலக்கியவாதிகளாகவும், இலக்கியத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் பத்திரிகைகளின் தோற்றம் மற்றும் சமூக, அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன தென்னிலங்கை இளைஞர்கள் பலரது இலக்கியத் துறைப் பிரவேசத்திற்கு வித்திட்ட காரணிகள் எனலாம். 


1960களின் பின்னர் ஏராளமான தென்னிலங்கைக் கவிஞர்கள் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் தமிழக சஞ்சிகைகளில் தமது கவிதைகளை எழுதி வந்துள்ளனர். ஆயினும் இவர்களில் பெரும்பாலானோரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்படவில்லை. திக்குவல்லை கமாலின் 'எலிக்கூடு' (1973) கவிதைத் தொகுதியே தென்னிலங்கையின் முதலாவது புதுக்கவிதைத் தொகுதியாகும். 1973 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தென்னிலங்கையிலிருந்து 20 க்கும் கிட்டிய கவிதைத் தொகுதிகளே வெளிவந்துள்ளன. தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகளில் சமயம், உள்நாட்டுப் போர், சமாதான வேட்கை, வறுமை, பெண்ணியம், சீதனம், காதல் முதலானவை பிரதான பாடுபொருள்களாகக் காணப்படுகின்றன. 

வெலிகம ரிம்ஸா முஹம்மதும் தென்றலின் வேகம், எரிந்த சிறகுகள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். அத்துடன் இவர் இதுவரை எழுதியுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளில் பலவற்றை தேசிய பத்திரிகைளிலும் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிம்ஸா முஹம்மத், மாத்தறை மாவட்ட வெலிகம தேர்தல் தொகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பல்துறை இலக்கியங்களிலும் ஆர்வமுள்ள ஒரு கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, பாடலாசிரியர் என பன்முகப்பட்ட ஆளுமையுடையவர். 

ரிம்ஸாவின் முதலாவது இலக்கியப் படைப்பாக அவரது 'தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதி 2010 இல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' என்ற கவிதைத் தொகுதியை 2015 இல் வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். மேலும் 'ஆடம்பரக் கூடு' (2012), 'என்ன கொடுப்போம்' (2012), 'பாடல் கேட்ட குமார்' (2013) 'இதுதான் சரியான வழி' (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களும், 'வண்ணத்துப் பூச்சி' (2014) எனும் சிறுவர் பாடல் நூலும், 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' (2013), 'அறுவடைகள்' (2015) ஆகிய விமர்சன நூல்களும், 'விடியல்' எனும் ஆய்வு நூலும், 'எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம்' (2021) எனும் ஆவண நூலும் கணக்கீட்டுத் துறையில் 'வங்கிக் கணக்கிணக்கக் கூற்று', 'கணக்கீட்டுச் சுருக்கம்', 'கணக்கீட்டின் தெளிவு' ஆகிய 03 நூல்களுமாக இவரால் இதுவரை மொத்தம் 14 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவர் பூங்காவனம் இலக்கிய அமைப்பின் தலைவராகவும் "பூங்காவனம்" காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் தனது இலக்கியச் சேவையைத் தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் சஞ்சிகையின் துணையாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவோடு இணைந்து இதுவரை 38 பூங்காவனம் காலாண்டு இதழ்களைத் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெளியீடு செய்து வந்துள்ளார். 

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் முதலாவது இலக்கியப் பிரசவமான 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டு இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. கால வெள்ளம் அடித்துக் கொண்டு போக முடியாதபடி ஒரு சில கவிதைகளையாவது தமிழுக்குத் தர வேண்டும் என்ற இவரது கனவின் வெளிப்பாடாகவும் காலம் இவருக்கு அளித்த ரணங்களும் உலகை வெல்ல வேண்டும் என்று இவர் பொறுத்துக் கொண்;ட வடுக்கள் முதலிய வாழ்வின் அனுபவச் சுமைகளையும் எழுத்துக்களில் வடிப்பதற்காகவே 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி படைக்கப்பட்டதாக இக்கவிதைத் தொகுதியின் என்னுரையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் குறிப்பிடுகிறார். இக்கவிதைத் தொகுதியில் ஆராதனை, நிலவுறங்கும் நல்லிறவு, ஒலிக்கும் மதுர கானம், கண்ணீரில் பிறந்த காவியம், வெற்றியின் இலக்கு, விடியலைத் தேடும் வினாக்குறிகள் முதலான 64 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 

'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து வெலிகம ரிம்ஸாவினது 'எரிந்த சிறகுகள்' என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி 2015 ஆம் வெளியிடப்பட்டது. 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி பெரும்பாலும் அகவுணர்வு சார் விடயங்கள் மற்றும் சமூக யதார்த்த விடயங்களைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இத்தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்களை இக்கவிதைகள் தொட்டு நிற்கின்றன.

 வெற்றிகள் உன்னை ஆளட்டும், வாழ்க்கைப் பூங்காற்று, தொலைத்த கவிதை, தவிப்பு, எல்லாம் மாறிப் போச்சு, என்ன வாழ்க்கை, காலங்களின் பிடிக்குள், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், சத்தமில்லாத யுத்தம் முதலான 54 கவிதைகளும் வெயில் நிறத்து தோல் கொண்டு, வல்லோனின் ஆணை, கண்கள் உன்னைத் தேடுதடி, ஆயிரம் சொந்தங்கள், ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய், பூக்கள் யாவையும், இந்த உலகம் நிலையில்லை முதலிய 7 மெல்லிசைப் பாடல்களும் 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இனி 'தென்றலின் வேகம்' கவிதை நூலில் இருந்து இரசனைக்காக சில கவிதைகளை எடுத்து நோக்குவோம். 

குர்ஆன், நபிவழி என்பவற்றினைப் பின்பற்றி இம்மை வாழ்வைப் பண்படுத்திக் கொள்வதன் மூலம் அழிவே இல்லா நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் வெற்றி பெற்ற அடியானாக மிளிரலாம் என்பதை 'தென்றலின் வேகம்' நூலில் உள்ள வெலிகம ரிம்ஸாவினது 'உயிர் செய்' (பக்கம் 48) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


அல்லாஹ்வின் அடியானே! 

அவனி வாழ்விலே 

அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து 

ஆத்மாவை புதுப்பித்துக்கொள்! 

ஆஹிரத்தின் அமைவிடத்தை 

அதிர்ஷ்டவசமாய் 

பதிப்பித்துக்கொள்! 


சங்கை நபியாரின் 

ஷரீஅத்களை துறந்து 

சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு 

சுவனம் என்பது இமயம்! 

போகும் பாதை சீராய் அமைந்தால் 

மறுமை இன்பமாய் அமையும்!


ரிம்ஸா முஹம்மதின் 'பொய் முகங்கள்' (பக்கம் 77) எனும் கவிதை, உள்நாட்டில் அண்மைக் காலங்களில் இனவாதம் தலைதூக்கவும் சிறுபான்மையினருக்கு எதிராக நாசகாரச் செயல்களை மேற்கொள்ளவும் துணையாய் நின்ற சில இனவாத மதப் போதகர்களின் செயல்களை விமர்சிப்பதாக அமைகிறது. இத்தகைய இனவாத சிந்தனை படைத்தவர்களின் போலி முகங்கள் குறித்து உணர்த்திட தொன்ம உத்தியினைக் கையாண்டுள்ளார். 


நீங்கள் 

நல்லவர்கள் தாம்! 

மிக மிக நல்லவர்கள் தாம்! 


அழுக்குண்ணி சிந்தையையும் 

அடுத்து கெடுக்கும் 

அடாவடித் தனத்தையும் 

அங்கிக்குள் மறைத்து..


அந்த அரிச்சந்திரனுக்கே 

அவ்வப்போது வாய்மை 

அரிச்சுவடியை 

கற்றுத் தந்தீர்களே 

அப்போதும் நல்லவர்கள் தாம்!


தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' கவிதை நூலில் இருந்து சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம். 

ரிம்ஸா முஹம்மத், தனது 'காலங்களின் பிடிக்குள்' (பக்கம் 36) எனும் கவிதையில், சீதனத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை புதியதொரு கோணத்தில் அணுகுகிறார். திருமணச் சந்தையில் இன்றும் ஆண்களுக்கான 'கேள்வி' உயர்ந்திருப்பதாலேயே ஆண்கள் விரைவில் சீதனத்திற்கு விலைபோகிறார்கள். 


பணத்துக்கு ஆசைப்பட்ட நீ 

கொழுத்த சீதனம் தின்று 

பங்களா வீட்டின் எஜமான் 

என்ற பெயரில் 

வேலைக்காரனானாய்!


காதலிக்கும் போது பொருளாதார வேற்றுமைகளை கருத்திற் கொள்ளாது உருக உருகக் காதல் செய்த காதலன் திருமணம் என்று வரும் போது மாத்திரம் சீதனத்திற்கு ஆசைப்பட்டு காதலை உதறிச் செல்கின்றான். சீதனத்தின் காரணமாக இத்தகையதோர் துரோகம் இழைக்கப்பட்டதை எண்ணி துயருறும் காதலியின் உள்ளக் குமுறலாக இக்கவிதை அமைகிறது. ஆணாதிக்க மரபின் ஓர் அம்சமான சீதனம் எனும் சாபக்கேட்டினால் பெண்களின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஏற்படக்கூடிய சீர்குலைவுகளையும் பெண்கள் பற்றிய பாரம்பரியமான கருத்துக்களையும் அழுத்தமாகப் தமது கவிதைகளில் பேசியுள்ளனர்.

வெலிகம ரிம்ஸாவின் 'நிகரற்ற நாயனே' (பக்கம் 46) எனும் கவிதையின் ஆரம்ப வரிகள், வல்ல இரட்சகனாகிய அல்லாஹ்வின் வல்லமையைப் போற்றியும் அவனது அருட்கொடைகளை நினைவு கூர்வதாகவும் அமைந்துள்ளது. 


யா அல்லாஹ் 

அலைகளின் நாதத்திலும் 

உன் வல்லமையை 

இனிதே காணுகிறேன்! 


குயிலின் ராகத்திலும் - உன்

குத்ரத்தின் வலிமைதான் 

துல்லியமாய் ஒலிக்கிறது.. 

உன் அருள் மழையால் 

இவ்வுலகம் செழிக்கிறது!

 

இத்தகைய அருட்கொடைகளின் நாயகனான அல்லாஹ்விடம் தனது வாழ்வு வளமாக கருணை புரியுமாறு மன்றாடி நிற்பதாக கவிதையின் இறுதி வரிகள் உள்ளன. 


நான் பயணிக்க வேண்டியுள்ளேன் 

இன்னும் தொலை தூரமும் 

தீயவற்றிலிருந்து 

என்னைக் காத்;திடு 

எல்லா நேரமும்!

 

மேலும் ரிம்ஸா முஹம்மது தனது 'இருகரம் ஏந்திடுங்கள்' (பக்கம் 61) எனும் கவிதையில், நவீன உலகினில் நல்வழி தவறாது, தொழுகை முதலிய இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் நல்லிணக்கம், அயலாருடன் நட்புறவு பேணல் முதலிய இஸ்லாம் காட்டித் தந்த ஒழுக்க விழுமியங்களின் மூலமும் இம்மை, மறுமை வாழ்வை செம்மையாக்க முயல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

ரிம்ஸா முஹம்மதின் 'வசந்த வாசல்' (பக்கம் 101) எனும் கவிதையில் தொன்ம உத்தி கையாளப்பட்டுள்ளது. இக்கவிதையில் இராமன் மற்றும் இராவணன் ஆகியோரின் குணங்களைக் கூறுவதனூடாக மனித உள்ளத்தின் தன்மை குறித்து இலகுவாக வாசகர்களுக்கு உணர்த்த முனைந்துள்ளார் கவிஞர் ரிம்ஸா முஹம்மத். 


எல்லோரும் 

இராமர்கள் தானே.. 

தத்தமது இராவணக் குணங்கள் 

அம்பலமாகும் வரை!


தியாகத்திற்கு இலக்கணமாய் அமையும் ஹஜ்ஜுப் பெருநாளின் வரலாற்றையும் அதன் மகிமையையும் வெலிகம ரிம்ஸா அவர்களது 'தியாகத் திருநாள்' (பக்கம் 103) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


இப்ராஹீம் நபியவர்தான் 

இஸ்லாமிய இலட்சியத்தால் 

இனிதான புதல்வரையும்

இழந்திடத் துணிந்தாரே! 


ஹாஜரா அம்மையாரும் 

அராபியப் பாலையிலே 

வல்லவன் கட்டளையை 

வாஞ்சையுடன் செய்தாரே!

 

ரிம்ஸா முஹம்மதின் 'ஓலைக் குடிசையும் பாதி நிலவும்' (பக்கம் 105) எனும் கவிதை வாழ்க்கையில் சொல்லொனாத் துயரங்கள் சூழ்ந்து வந்தாலும் படைத்த இறைவன் மீதான நம்பிக்கையை இழக்காது, இஸ்லாத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும் என வலியுறுக்துவதோடு நாளை வரும் மறுமைக்கான விளைநிலமே உலகம் எனும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து சீறிய வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறது. 

 

உடைந்து தொங்குது 

என் குடிசைக் கூரை - வார்த்தோமே 

வீடு பணம் சுனாமிக்குத் தாரை! 

பொல்லாத கஷ்டங்கள் 

பல வந்தபோதும் 

அல்லாஹ்வைத் தவிர 

நம்பினோம் யாரை?


மனிதனை மதி இழக்கச் செய்யக் கூடிய இஸ்லாத்திற்கு முரணான மூடக் கொள்கைகளிலிருந்தும் களவு, பொய் முதலான பாவ காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுமாறு மனித சமுதாயத்திற்கு கவிஞர் அறைகூவல் விடுப்பதாக வெலிகம ரிம்ஸாவின் 'பாராமுகம் ஏனோ?' (பக்கம் 109) எனும் கவிதையின் பின்வரும் வரிகள் அமைகிறது. 


மதியை இழக்கச் செய்து 

விதியை மாற்றுகின்ற 

வித்தைகளை - மனிதா 

நீ விட்டுவிடு! 


துணையாய் 

அல்லாஹ்வை ஏற்று 

இணையில்லா அவன் அருளை 

குறைகளின்றி பெற்றுவிடு!


இவ்வாறாக, இஸ்லாத்தின் சிறப்புக்களையும் இஸ்லாம் கூறும் வாழ்க்கையையும், விழுமியக் கருத்துக்களையும் கொண்ட மிகச் சிறந்த சமயசார் கவிதைகள் இந்த 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. 

தனது சிந்தனைக் கனதியையும் அவர் தம் புரட்சிகரமான சிந்தனைகளையும் வெளிப்படுப்படுத்த உருவ ரீதியில் புதுக் கவிதையை அதிகம் கையாண்டு இவர் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகக் கவி புனைந்துள்ளார். தனது நேரகாலங்களை இலக்கியத்துக்காக அர்ப்பணித்து சிறப்பான திட்டமிடல் முறையில் காத்திரமாக இலக்கியப் பணியாற்றிவரும் படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!


தர்காநகர் சுமையா ஷரிப்தீன் 

(தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை உதவி விரிவுரையாளர்)


திறனாய்வு : தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் - கே.எஸ். சிவகுமாரன்

தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் 

- கே.எஸ். சிவகுமாரன்

ஈழத்தில் பிறந்த எழுத்தாளர்களும், இலங்கையில் பிறந்து பிற நாடுகளில் குடிபுகுந்த பல கவிஞர்களும், நம்நாட்டு ஊடகங்களிலும், மின்னியக்க முகநூல்களிலும் நிறையவே  எழுதி வருகிறார்கள். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையுடையவர்கள் முஸ்லிம் பெண்களாவர். இது வரவேற்கத் தக்க ஒரு போக்கு. அவர்களுள் ஒருவர், வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், "பூங்காவனம்" என்ற சஞ்சிகையை நடத்தி வருபவருமான ரிம்ஸா முஹம்மத் என்பவராவார். இவர் கவிதை, கட்டுரை, கதைகளோடு, நேர்காணல்களையும், திறனாய்வுகளையும் எழுதி வருகிறார். 

இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ஒன்று 'விடியல்' (2017) என்பதாகும். வைத்திய கலாநிதி எம்.கே. முகுகானந்தன் இந்த நூல் என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது? ஏன் அப்படிக் கூறுகின்றது? என்பதை அழகாக விபரித்துள்ளார். வாசகர்கள் இவரது முன்னுரையை அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டும். 

இந்த நூல், மூதூர் முகைதீன் என்ற கவிஞரின் கவிதைகளை கச்சிதமாக பகுப்பாய்வு செய்கிறது. கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளை ரிம்ஸா ஆராய்கிறார். 

ரிம்ஸாவின் தகைமைகள், முகைதீனின் ஆளுமை போன்ற பொருள்கள் பற்றி, ஆசிரியை கிண்ணியா எஸ். பாயிஸா அலி சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். 

நூலாசிரியர் ரிம்ஸா கூறுகிறார்: "கொழும்பு பல்கலைக் கழகத்தின் இதழியல் டிப்ளோமா பாட தெறிக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை "விடியல்" என்ற தலைப்பில் சில விடயங்களை சேர்த்தும், சில விடயங்களைத் தவிர்த்தும் இந்நூலை வெளியிடு செய்கிறேன்."

நூலாசிரியர் மொத்தமாக ஐந்து அத்தியாயங்களில் தனது பார்வையைச் செலுத்தியுள்ளார். எவற்றை விரிவுபடுத்தி விளக்கமாக அமைகிறது என்பதையறிய, வாசகர்கள், குறிப்பாக பல்கலைக்கழக, மாணவர்கள் 'விடியல்' என்ற நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும். 

உள்ளடக்கச் சிறப்புகளை நான் வேறு எடுத்துக் கூறுவது அவசியமில்லை. முடிவுரையும், உசாத்துணை நூல்கள், பின்னினைப்புகள் ஆகியனவும் பயன் தருவன. 

மறைந்த திறனாய்வாளரும் (விமர்சகரும் கூட) நாவலாசிரியரும், சஞ்சிகை ஆசிரியருமான க.நா.சு. அவர்களின் கூற்றுக்களை, நூலாசிரியர் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

நூலாசிரியர் தமிழிலக்கியத்தில் புலமை பெற்று உள்ளார் என்பதை விளக்க அவரது கூற்று ஒன்று போதுமானது. அதாவது: 

"தொண்ணூறுகளுக்குப் பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: திராவிட இயக்கத் தாக்கம், இனக் குழு அடையாளம், தொன்மம், மண் சார்ந்த படைப்பு என வெளிப்படும் பின் நவீனத்துவக் கவிதைகள், மண்சார்ந்த கவிதைகள் போன்றனவாகும்."

சில குறிப்பிட்ட தமிழகக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, "சிற்றூர், கிராமம் சார்ந்த வாழ்க்கைச் சித்திரங்கள் நகரமயமாதலின் விளைவு, வாய்மொழி வழக்கில் எழுதும் தன்மை, உள்ளூர் அனுபவங்களை உலகளாவிய போக்குகளுடன் இணைத்தல் எனப் புதிய மாற்றங்களை இக்கவிஞர்களால் தமிழ் கவிதை பெற்றது" என்கிறார் ரிம்ஸா. 

கவிதையின் வெளிப்பாடுகள் என்ற தலைப்பில் தமிழகக் கவிஞர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவை எனக்குப் பல தகவல்களைத் தருகின்றன. 

அத்தியாயம் 03 இல், கவிஞர் மூதூர் முகைதீன் பற்றிய முழுவிபரங்களும் தரப்படுகின்றன. அதுவே கட்டுரையாசிரியரின் நோக்கமாகும். அக்கவிஞர் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள இந்த ரிம்ஸாவின் நூல் பெரிதும் உதவுகிறது. 

சிறந்த சிங்கள இலக்கிய மொழி பெயர்ப்பாளராகவும், திறனாய்வாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் விளங்கும் திக்குவல்லை கமால் பின் அட்டையில் குறிப்பிடும் சில வரிகள் அழகாய் அமைந்துள்ளன. அவர் கூறுகிறார்: 

ரிம்ஸா "வேதனைகளையும் சோதனைகளையும் வென்றபடி, சாதனைகளை அடுக்கிச் செல்லும் அபார திறமைசாலி என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்கிறார். தென்னிலங்கை என்று நாம் கொண்டாட எமக்கிருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கிறார்."

படித்துப் பயன்பெற 'விடியல்' நூலை வாசித்துப் பாருங்கள். 

நன்றி - தினகரன் வாரமஞ்சரி