Tuesday, November 28, 2017

எரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை

கவிஞர் ரிம்ஸா முஹம்மத் என்ற பெயர் சிலகாலமாக நாளாந்தம் நாவில் உலாவரும் ஒரு பெயராக மாறியிருப்பதை தமிழிலக்கிய நெஞ்சங்கள் மறுக்க மாட்டார்கள். தன் பன்முக ஆளுமைகளால் தமிழிலக்கிய நெஞ்சங்களையும் சமூக ஆர்வலர்களையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் சகோதரி ரிம்ஸா அவர்கள்.

கவிதை, கட்டுரை, சிறுகதை. குழந்தை இலக்கியம், இதழியல், விமர்சனம் என பல தளங்களிலிருந்து பல பரிமாணங்களில் தன் ஆற்றலையும் சமூகம் சார்ந்த அவரது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் ரிம்ஸா அவர்கள். இலங்கையில் பல கலை இலக்கிய சமூக சஞ்சிகைகள் வெளி வந்து பல இக்கட்டுக்களால் நின்று போயிருக்கும் இந்நிலையிலும் துணிவோடு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாத இதழொன்றை ஆரம்பித்து சோர்வில்லாது தளராது நடத்தி வருகிறார் என்றால் அவரது மனத்திட்பத்துக்கும் வினைத்திட்பத்துக்கும் அதுவே கட்டளைக்கல்லாக அமைந்துள்ளது.

பூங்காவனம் இதழின் பெயரென்றாலும் அவ்வனத்தினுள் புகுந்தால் பூக்களை மட்டுமல்ல பூகம்பங்களை, பூக்கம்பங்களை, தீ கங்குகளை காணமுடியும். இத்தகு இயல்புகள் கொண்ட சகோதரி கவிதைகள் வடிப்பதில் சிறப்பான ஆற்றல் கொண்டிருக்கிறார். கலைகளின் இராணி கவிதை என்பது ஒரு பெருங்கவிஞனின் கூற்று. தக்க சொல்லை தக்க முறையில் தக்க வடிவில் அடுக்கி அமைவது தான் கவிதை என்றான் ஆங்கிலக் கவிஞன் the best words in the best order
 

கவிதைக்கலை ஏன் தோற்றம் பெறுகிறதென்பதை அறிஞர் மு.வரதராசனார் பின்வருமாறு தனது இலக்கியத்திறன் என்ற நூலில் கூறுகிறார்.

1.தன்னுணர்ச்சியை வெளியிடும் விருப்பம்

2.பிறருடைய வாழ்விலும் செயலிலும் நமக்குள்ள அக்கறை

3. உண்மையுலகில் உள்ள ஆர்வமும் அதையொட்டி கற்பனையுலகினைப் படைப்பதில் உள்ள ஆர்வமும்

4.ஒலி கோடு வண்ணம் சொல் முதலியவற்றுக்கு அழகிய வடிவம் தந்து அமைப்பதில் உள்ள ஆசை

இவற்றுள் முதலிரண்டுமே உணர்ச்சி கருத்து என்னும் உறுப்புகளாக இலக்கியத்தில் அமைவன. மூன்றாவது கற்பனை என்னும் உறுப்பாக அமைவது. நான்காவது இலக்கியத்துக்கு வடிவம் என்னும் உறுப்பாக அமைவது.

கவிஞர் ரிம்ஸாவின் கவிதைகள் அறிஞர் மு.வ. சொன்ன இலக்கணத்துக்கு சாலும் சான்றாக அமைந்திருக்கிறதென்று சொன்னால் அது எவ்வகையிலும் தவறானதாக இருக்காது. கவிஞர் றிம்சாவின் இக்கவிதை நூலில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப்பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கவிதை நூலுக்கு எரிந்த சிறகுகள் என்று பெயர் தந்திருக்கிறார் கவிஞர். சிறகுகள் எரிந்தால் பறவைகளுக்கு இருவகை இடருக்கு வாய்ப்புண்டு. பறக்க இயலாமை அல்லது உயிர்க்க இயலாமை மரணம். ஏன் இந்தப் பெயரிட்டார் என எண்ணிப்பார்க்கிறேன். நூலின் முதற்கவிதையைப் படித்ததும் அதற்கு விடை கிடைக்கிறது. முதலாவது கவிதையின் தலைப்பு வெற்றிகள் உன்னை ஆளட்டும் என்பது. எரிந்து போவது தோல்வியென்று கருதாதே அதனை நீ வெற்றியாக்க முடியும் என்பதை கவிஞர் தனது கவிதையின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறார். இன்றைய இளைஞன் எதற்கெடுத்தாலும் அச்சப்படுகிறான் அயர்ச்சியடைந்து விடுகிறான் தளர்ச்சி போக்கி விசையுறு பந்தினைப் போல் எவ்விதம் எழுந்திட முடியும் என்பதை கவிதையின் ஒவ்வொரு வரியும் நமக்குணர்த்துகிறது.

துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா
துயரங்கள் உன் கதவை தட்டுகின்றதா
இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே
எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே

என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்ட றிம்சா இவ்விதம் பதில் தருகிறார்

சமயம் வந்தால்
இமயமும் உன் காலடியில்
இறைவனை நாடினால் நிச்சயம்
நீ புரளலாம் கோடிகளில்

மேலும் கவிஞர் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

தோல்விகள் வெறும் சம்பவம் தான்
துணிந்திடு தோழா வெற்றி சரித்திரம் தான்

இவ்வரிகளைப் படிக்கும் போது வள்ளுவரின் தன்னம்பிக்கைக் குறள் ஞாபகத்துக்கு வருகிறது.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக எனத் துன்பத்தைப் பட்டியலிடுவார் இராமச்சந்திரக் கவிராயர். எத்தனை துன்பம் வந்தாலும் துணிந்து செயற்பட்டால் இன்ப முகவரி உனக்குத் தெரியும் கவிஞர் தொடர்கிறார்.

தைரியம் கொண்டு நீயிருந்தால்
இன்பக் கனவுகள் ஓடிவரும்
கோழையாக வாழ்ந்திட்டால்
காணாத கவலைகள் தேடி வரும்

என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார் நமக்கு.

முதற் கவிதைக்கே இத்தனை சிறப்பென்றால் தொகுதியிலிருக்கும் கவிதைகள் எல்லாமே முத்து பவளம் முக்கனி சர்க்கரை என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது. அன்றைய கவிதைகள் அவ்வக்காலச் செல்நெறிகளோடு அமைந்திருந்தனவா என்பது ஐயத்துக்குரியதே. பாரதி காலம் வரையில் கவிதை இலக்கியம் உயர்தட்டு மக்களின் உப்பரிகையில் உலாவரும் உல்லாசிகள் ஒய்யாரிகள் போன்றிருந்தன என்று சொன்னால் என்னில் பிழை காண யாரும் விழையார். ஆடிப்பாடி வேலை செய்வோரையும் அன்றாடங் காய்ச்சவொண்ணாது அல்லல் படும் ஏழையரையும் மனிதராக எண்ணி அவர் அவலம் சொல்லி அதை அகற்ற வழியும் சொல்ல ஆரம்பித்த போது தான் அருமையான கவிதைகள் உதயமாயின. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று உணர்ச்சி கொண்டு பாரதி விதி சமைத்த பிறகு வந்த கவிஞர் பட்டாளம் சமூக அவலங்களை கவிதையில் சுமக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் இன்று றிம்சா முகம்மட் எழுந்து நிற்கிறார் என்று தான் நான் கூறுவேன்.

இதோ இன்னொரு நம்பிக்கை தரும் கவிதை இன்றைய மனிதன் மனிதமின்றி வாழ்கிறான் புனிதமற்று வாழ்கிறான் நரியும் புலியும் இன்னோரன்ன விலங்குகளின் குணத்தின் மொத்த உருவமாக வாழ்கிறான். இதோ மனிதம் இல்லாத மனிதனை கவிஞர் படம் பிடிக்கிறார்.மனிதர்கள் பலவிதம் என்ற கவிதையில்

பொறாமை தனை நெஞ்சில் ஏற்றி
பொருமி பொருமி அலைகிறான்
எருமை போல நடந்து கொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்

பேனை பிடித்து பேருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
போனில் பேசி பெண்களை
எல்லாம் ஏமாற்றுபவன் இருக்கிறான்

மாடி வீடு காரு காசு
தேடி திரியிறவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரை மிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்

இவ்விதம் பட்டிகளாக வாழும் விலங்குகளின் பட்டியல் நீள்கிறது.இவர்களை வென்று வாழ வேண்டும் வென்றால்தான் வையம் உன்னை மதிக்கும் துதிக்கும் இதோ இதைத் தெரிந்தால் வெற்றி உனது என்கிறார் கவிஞர்.

போராட்டம் தான்
இன்ப நீருற்றின்
அத்திவாரம்

இதைத்தான்  கவிஞர் வைரமுத்து சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன் நீ மனிதன் என்று சொன்னார்.

ஒட்டு மொத்தத்தில் இக்கவிதை நூல் நமக்கெல்லாம் வேகமும் விவேகமும் தரும் விதைகள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் நூல். கவிஞர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் தமிழன்னைக்கு புதிய ஆரமொன்றைப் படைத்தளித்திருக்கிறார். அவர் பணி தொடர வாழ்த்தி விடை பெறுகிறேன்.   

Sunday, January 1, 2017

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பதுளை பாஹிரா (ஓய்வு பெற்ற ஆசிரியை)

இலக்கிய ரசனைக்குள், ஆன்மீக வரையறைக்குள், யதார்த்தத்தின் வீச்சோடு நகர்கிறது ரிம்ஸா முஹம்மதின் எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி. சமூக அவலங்களை நுண்ணிய திறனாய்வோடு பேசும் வல்லமையில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். எம்மத்தியில் எரிக்கப்பட்டாமல் படர்ந்திருக்கும் வாழ்வியல் வன்முறைகள், தாழ்நிலை சம்பிரதாயங்கள், சால்பற்ற சடங்குகள், பாழ்படுத்தும் முகமூடிகள் என்பவற்றை நேரிய நோக்கோடு வரிகளாகக் கோர்த்து இலக்கிய நெஞ்சங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் அண்மையில் தனது 821 ஆவது முதல் பிரதியாக இந்த நூலைப் பெற்றுக்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொசுக்கப்பட்ட மனித உணர்வுகளின் ஓசைகள், ஓலங்கள், பெண்ணியத்திற்கெதிரான அத்துமீறல்கள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள், தேச ஐக்கியத்தை சீர்குலைக்கும் குரோதங்கள் என்ற விடயப் பரப்பில்  கவிதைகள் விரிகின்றன. 54 கவிதைகள், 7 மெல்லிசைப் பாடல்கள் புதுமையின் வாண்மையோடும், புரட்சியின் பெருமையோடும் படைப்பிலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் இலக்கிய கர்த்தா. பன்முக ஆளுமை கொண்ட இவரின் இலக்கியப் பயணம் பாரதி கனவுக்கு வெற்றியே. 12 ஆவது நூலான எரிந்த சிறகுகள் கவிதைத் துறையில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை மேன்மைப்படுத்தியுள்ளது.

செம்மொழி ஆற்றலும், இலக்கிய இலக்கண ஆழமும் கவி யாத்தலுக்கு அடிப்படை. இவற்றின் வழியே நவீனத்துவ சிந்தனையோடு எழுதப்பட்ட எரிந்த சிறகுகள் இலக்கிய உலகிற்கு பெரும் சிறப்பு. மனுக்குலத்தை மதிக்கும், மனிதாபிமானப் போக்குகள், நவீன இலக்கியப் படைப்புகளில் காணலாம். அவ்வரிசையில் ரிம்ஸா முஹம்மத்தின் அர்ப்பணிப்பும் முக்கியமானதே.

தொலைந்த கவிதை, ஒப்பனைகள், சாதல் நன்றே, சொல்ல மறந்த சேதிகள், கறைகள், தொடரும் தொல்லை, வஞ்சகம், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், மனிதமில்லா மனிதன், காலத்தின் ஓலம், இறையோன் தந்த மாதம் போன்ற கவிதைகளில் சமூகத்திற்குகந்த அறிவுரைகளும் ஆன்மீக செய்திகளும் போர்க் கலாசாரமும் கூறப்பட்டுள்ளன. ஆயுள் கைதி, எதிரொலி, விளையும் நினைவுகள் போன்ற காதலைப் பேசும் கவிதைகள் இதயத்திற்கு இதமளிக்கின்றன.

புதிய தலைமுறையினர் எதிர்பார்க்கும் நவீனத்துவ போக்கு, சொல்லாட்சி, சிந்தனைச் செறிவு என்பனவற்றால் எரிந்த சிறகுகள் இலக்கிய உலகில் வரவேற்று பெறும் என்பது உறுதி. பல இலக்கிய வடிவங்களில் ஆற்றலை வெளிப்படுத்திய படைப்பாளி, இன்னும் பல தடங்களில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூல்:- எரிந்த சிறகுகள்
நூலின் வகை:- கவிதைகள்
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=

Thursday, November 26, 2015

வெலிகம ரிம்ஸா முகம்மத் அவர்களின் "அறுவடைகள்" விமர்சன நூலுக்கான இரசனைக் குறிப்பு - த. ராஜ்சுகா

வெலிகம ரிம்ஸா முகம்மத் அவர்களின் "அறுவடைகள்" விமர்சன நூலுக்கான இரசனைக் குறிப்பு - த. ராஜ்சுகா

அண்மையில் வெளியீட்டைக்கண்ட "அறுவடைகள்" எனும் விமர்சன நூலினை வாசகர்களுக்காக வழங்கியவர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரிம்ஸா முகம்மத் அவர்கள். திறனாய்வில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு அதிலும் பெண் விமர்சகர்கள் குறைவென்றே சொல்லலாம். ஏனைய கவிதை சிறுகதை படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது விமர்சகர்கள் எண்ணிக்கையில் குறைவே.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களிடையே மிளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் வெலிகமையைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மத் அவர்கள். கணக்கியல் துறையில் தொழில் புரியுமவர் இலக்கியத்தில் சாதித்துக்கொண்டிருப்பது மிகப்பெருமைக்குரிய விடயமே. தன் இலக்கியப்பணியின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்காக ஏலவே 10நூல்களை தந்து தற்போது அறுவடைகள் எனும் 11வது நூலுடன் நம்மை சந்திக்கின்றார். கணக்கியல் சார்ந்த மூன்று நூல்களும் கவிதை,சிறுகதை, சிறுவர்கதை,சிறுவர் பாடல், விமர்சனம் சார்ந்த‌ ஏழு நூல்களுமே அவைகளாகும். 

நூலாசிரியரான ரிம்ஸா அவர்கள், பல்துறைசார்ந்த திறமை கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம்,விமர்சனமென ஆழமான எழுத்தாற்றல் மிக்கவர். பரந்துப‌ட்ட வாசிப்புத்திறமை கொண்டவர். நேரமே இல்லையென ஓடிக்கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பத்திரிகையொன்றை முழுமையாக வாசிப்பதற்கே நேரமில்லாதபோது கிட்டத்தட்ட நாற்பத்து மூன்று நூல்களை படித்துவிட்டு அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு ஆய்ந்து ஆராய்ந்து தன் மன உணர்வுகளை விமர்சனமாக தந்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியாது. பத்திரிகைகள் வானொலிகள் வலைதளங்களென தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுவரும் இவர் 'பூங்காவனம்' எனும் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். ரிம்ஸா அவர்கள் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றவர்.

'அறுவடைகள்' இது எழுத்தாளர் ரிம்ஸா அவர்களை ஒரு சிறந்த வாசகியாக அடையாளப்படுத்தும் நூலாகும். ஆம் வாசிக்காத ஒருவனால் நல்ல எழுத்தாளனாக முடியாது 

நூலுக்கு ஆழப்பொருந்தும் பெயருடனும் அதற்கு  அழகான அட்டைப்படத்துடனும் பிரசவமான இந்நூலுக்கு அணிந்துரையினை சோ.பத்மநாதன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் பின்னட்டைக்குறிப்பினை இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர். 

ஒரு எழுத்தாளனை உருவாக்குவதிலும் அவனின் திறமையை உருக்குலைப்பதிலும் இந்த விமர்சனம் எனும் விடயம் அதிக பங்கு வகிக்கின்றது. தான் படைத்த படைப்பு சமூகத்திடம் எவ்வாறு போய்ச்சேர்ந்துள்ளது என்பதனை படம்பிடித்து காட்டுவதும் இவ்விமர்சனமே. அதனை அழகாக செய்துமுடிப்பதற்கும் ஒரு கலைவேண்டும் அதாவது தெளிவான வாசிப்பு, விடயத்தினை புரிந்துகொள்ளும் பக்குவம், சரிபிழைகளை பகுத்தறியும் தெளிவு, சரியாயின் திறந்த மனதுடன் வாழ்த்திடும் பரந்த மனது, பிழைகளாயின் நாசுக்காக பகிர்ந்தளிக்கும் சமயோசிதம் என்பவையே ஒரு நல்ல விமர்சனத்துக்குரிய பண்புகளாகும். இவ்வத்தனை பண்புகளையும்  இந்நூலினை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

இவ்வாறான பக்குவம் கொண்ட ரிம்ஸா அவர்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை மகிழ்வித்து அவர்களின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டவும், அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும் அதிகமாகவே பிரயாசப்பட்டிருக்கின்றார். (அவரது இரு விமர்சன நூல்களையும் சேர்த்து)

நான் கூறியதுபோல வாசிக்கும் பழக்கம் அருகிக்கொண்டுவரும் இக்கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் இணையத்தில் உருகிக்கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இவ்வாறான விமர்சனங்களினூடாக சிறந்த நூல்களினை தெரிவுசெய்து வாசிப்பதற்கும் ஒரே புத்தகத்தில் பல நூல்களை காண்பதற்கும் துணைசெய்வதோடு சேமித்து பாதுகாப்பதற்கு உகந்த பொக்கிஷமாகவும் காணப்படுகின்றது. உண்மையில் "அறுவடைகள்" சேமித்து பாதுகாக்கப்படவேண்டிய பெட்டகமே. 

கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள்,நாவல்,சிறுவர் இலக்கியம், ஏனையவை என பிரித்து விமர்சிக்கப்பட்டுள்ள இந்நூலில் முக்கியமான ஒன்றுதான் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள். வெறுமனே எழுத்துக்களை பற்றி மட்டுமல்லாது எழுத்தாளர்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பது இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பிரயோச‌னமாக இருக்கும்.அதற்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன்

'அமைதிப்பூக்கள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் அவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். பலருக்கு தெரியாத விடயமும் கூடத்தான்."சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப்புத்திரர்.அவரின் இலக்கியப்பார்வையும் சொற்களை லாவகமாக கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல ஏனென்றால் இலக்கிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்படவேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப்பற்றும் தந்தைவழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக்கவிதைத் தொகுதியில் தரிசிக்கமுடிகின்றது" என தொடரும் அவ்விமர்சனத்தினைப்போல இன்னும் பல படைப்பாளர்களைப்பற்றிய தகவல்கள் இந்நூலினில்.

 வாசித்தலில் பெற்றுக்கொண்ட சிறந்த அறுவடைகளை தொகுப்பக்கியுள்ள ரிம்ஸா அவர்களின் பிரதிபலிப்பு இவ்வாறும் அமைகின்றது தான் பெற்றுக்கொண்ட இன்ப உணர்வினை வாசகர்களாகிய எம்மிடமும் புகுத்திவிட எத்தனிக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையிடம் அருகிக்கொண்டுவரும் வாசிப்புத்திறமை மோலோங்கச்செய்திட, 1970 களுக்கு பின்னர் எழுத்துல‌கிற்கு வந்த கவிஞர் ஷெல்லிதாசன் 2010ம் ஆண்டில்தான் அவரது முதலாவது நூல் பிரசவமாகியுள்ளது அவர்களின் நூலுக்கு எழுதிய விமர்சனத்தின் மூலமே அழைப்பு இந்நூலாசிரியரிடமிருந்து. 'இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் வரிசையிலுள்ள கவிஞர் ஷெல்லிதாசனின் கவிதைகள் மனித‌நேயம் சார்ந்த சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ளது இக்கவிஞரின் நூலினை வாசிப்பதின் மூலம் இளைய எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப்பாதையில் வெற்றிபெறாலாம்' என ஓர் ஆலோசனையையும் சொல்லிவைக்கின்றார் எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள்.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுதிவரும் நூலாசிரியர், தனதுரையில் இவ்வாறு கூறுகின்றார்,'நாம் வாசிக்கின்றவற்றில் இரசனைக்குரிய அம்சங்கள் பல காணப்படுகின்றன அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி குறித்த எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தினையும் நூல் பற்றிய அறிமுகத்தினையும் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்' என்று தன்னுடைய விமர்சனப்பார்வைக்கு பதிலினை படைக்கின்றார். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளியீடான இந்நூலினை எழுத்தாளர் அவர்கள்,'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு' சமர்ப்பணம் செய்திருப்பதும் நெஞ்சைத்தொடும் நெகிழ்வே. 

இவ்வாறு பல்வேறுபட்ட பரந்த வாசிப்பனுபவத்தினையுடைய இவர், திறனாய்வின் முன்னோடியும் விமர்சனத்துக்கு புகழ்பெற்றவருமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு கே.சிவக்குமாரன் அவர்களுடைய இரு ஆய்வு நூல்களுக்கு விமர்சனம் வரைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அயராது இலக்கிய பணிகளுக்காக தன்னுடைய தொழில் தவிர்ந்த நேரங்களை செலவிடும் ரிம்ஸா முகம்மத் அவர்களின் 'அறுவடைகள்' விமர்சனத்தொகுப்பானது, நூல்கள் பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊசாத்துணையாக பயன்படுத்திக்கொள்ளவும் படைப்பாளிகள், மாணவர்களுக்கு பயனுடையாதான ஓர் சிறந்த நூலாகும். இந்நூலினை பெற்று பாதுகாப்பது தமிழ் பற்றாளர்களின் கடமையே என்பேன்.

இப்பாரிய பொறுப்பு மிக்க இலக்கியப்பணிகளை, எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஆற்றிவரும் பல்துறைசார் திறமை கொண்ட எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள் இன்னும் இலக்கிய உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம். மூத்த எழுத்தாளர்களுடைய ஆலோசனைகளுடனும் அவருடைய தனித்தன்மைவாய்ந்த ஆற்றல்களுடனும் பல படைப்புக்களுடன் இலக்கிய சாம்ராஜ்யத்தில் வீறுநடைபோட வாசகர்களாகிய எமது நல்வாழ்த்துக்கள்.

நூல்:- அறுவடைகள்
நூலின் வகை:- விமர்சனம்
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா மும்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 600/=

நன்றி.
த.ராஜ்சுகா.
http://suga-elizabeth.blogspot.com/2015/09/blog-post.html?spref=fb

Tuesday, November 24, 2015

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் அறுவடைகள் நூல் பற்றிய கண்ணோட்டம் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் அறுவடைகள் நூல் பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

ஈழத்தில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்று வந்த யுத்த செயற்பாடுகள் அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்து எழுத்தாளர்களும், இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற தேசங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும், எழுத்தாளர்களும் தாம் வாழும் நாடுகளில் இருந்த வண்ணம் இலக்கியப் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர்.

அங்கெல்லாம் நாளாந்தம் நூல் வெளியீடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் இலங்கையிலும் நூல் வெளியீடுகள் நடைபெற்ற வண்ணம் இருப்பதை நாம் அறிகிறோம். இதுதவிர நூல் வெளியீட்டு விழாக்கள் ஏதுமின்றி நூலாசிரியர் தனிப்பட்ட ரீதியாக நூல்களை விநியோகித்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது முன் எப்போதும் இல்லாத வகையில் நூல்கள் அதிகமாக வெளிவந்துமிருக்கின்றன. இவற்றை எல்லாம் எவரும் ஒன்று விடாமல் படித்திருப்பார்கள் என்றோ, விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள் என்றோ சொல்ல முடியாது. அதே போன்று வெளிவருகின்ற நூல்கள் யாவும் விமர்சனத்துக்கு அல்லது திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் என்றும் எவருக்கும் சொல்ல முடியாது.

எது எப்படியாயினும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அநேகமான நூல்களை வாசித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். குறிப்பிட்ட சில விமர்சகர்களுக்குள்ளே இவர் இன்று பேசப்படக்கூடிய ஒருவராகக் காணப்படுகிறார். இவர் பல்துறை இலக்கியத்துடன் வானொலி, தொலைக்காட்சியினூடாக தனது ஆளுமைகளை வெளிக்காட்டி வரும் காத்திரமான எழுத்தாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது திறமையை வெளிக்காட்டிக் கொள்வதில் ''பூங்காவனம்'' என்ற அவரது காலாண்டுச் சஞ்சிகை சாட்சி பகர்கின்றது. பெண்களால் வெளிவரும் சஞ்சிகைக்குள்ளே பூங்காவனம் எனும் அவரது சஞ்சிகை மூலமாக மூத்த பெண் படைப்பாளிகளை நேர்கண்டு அவரது அனுபவங்களை வெளிக்கொணர்வதோடு இளம் படைப்பாளிகளை கைதூக்கி விடுவதில் திறமைசாலியாகவும் இவர் காணப்படுகிறார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்துக்குள் 10 நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது தொழில் சார்ந்த துறையுடன் கூடியதான கணக்கீடு சம்பந்தமான மூன்று நூல்கள் உட்பட கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் ஆகிய துறைகளில் தனது நூல்களை வெளியிட்டுள்ளார். தனது 02 ஆவது விமர்சன நூலான அறுவடைகள் என்ற 11 ஆவது நூலை இவர் அண்மையில் வெளியிட்டு வைத்தார்.

உண்மையில் அறுவடையைப் பெறுவதற்கு விதைப்புச் செய்திருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் ஏற்கனவே பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் தனது விமர்சனம் என்ற விதையைத் தூவி அதிலிருந்து பெற்றுக் கொண்ட 24 கவிதை நூல்களையும், 10 சிறுகதை நூல்களையும், 02 நாவல்களையும், 02 சிறுவர் இலக்கிய நூல்களையும், ஏனைய பல்துறை சார்ந்த 05 நூல்களையும என்று மொத்தம் 43 நூல்களைப் பற்றிய விமர்சனங்களைத் தனது அறுவடையாகப் பெற்று வாசகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்தப் பெரு முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த நூலை இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. இது நூலாசிரியரது எழுத்துப் பணிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். 250 பக்கங்களைக் கொண்ட கனதியான இந்தப் புத்தகத்துக்கு, அணிந்துரையை சோ. பத்மநாதனும், வாழ்த்துரையை வவுனியூர் இரா. உதயணனும் (இலண்டன்), நூலுக்கான பின்னட்டைக் குறிப்பினை கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்து இருக்கின்றார்கள். திரு. இரா உதயணன் அவர்கள் இலண்டனில் இருந்து வருகை தந்து, நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டுக் கொடுத்துள்ளார்.

கே.எஸ். சிவகுமாரன், மா. பாலசிங்கம், கே. விஜயன், தம்பு சிவசுப்பிரமணியம் போன்ற மூத்த தலை சிறந்த விமர்சகர்கள் வரிசையில் தற்போது வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இணைந்திருக்கிறார் என்று இரா உதயணன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டியிருக்கிறார்.

கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் ரிம்ஸாவின் எழுத்துப் பணிகளையும், திறமைகளையும் மெச்சியிருப்பதோடு விமர்சன நூலில் இடம்பெற்றுள்ள ஆழியாளுடைய கருநாவு தொகுதியில் இருந்து கவிதை ஒன்றினையும் எடுத்துக் காட்டித் தந்திருக்கிறார்.

இலங்கை அரசியலில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய சூழ்நிலையில் சிறந்த பத்திரிகையாளர்கள், நீதிக்காக போராடியவர்கள் பலர் அநியாயமாக கொல்லப்பட்டனர். அத்தகையவர்களில் ஷஷசண்டே லீடர்|| பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. லசந்த விக்கிரமதுங்க அநியாயமாக சாவை எதிர்கொண்டவர். அதன் எதிர்வினையாக எழுதப்பட்ட ஒரு கவிதையை இவ்வாறு பதிவு செய்கிறார்.

'வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்'

இதனால்;தான் போலும் இந்த நூலை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நூலாசிரியர் சமர்ப்பணம்; செய்து திருப்தியடைகிறார். அதேபோன்று அறுவடைகள் நூலில் பழைய புதிய எழுத்தாளர்கள் உட்பட ஆண், பெண் எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி சகலரது நூல்களையும் பற்றிய விமர்சனத்தைத் தந்திருக்கிறார்.

மூத்த எழுத்தாளர் என்ற வகையில் சகல துறைகளிலும் ஆளுமை மிக்க முன்னாள் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்களது ''ஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்'' என்ற கவிதை நூலைப் பற்றிய விமர்சனத்தை அறுவடைகள் நூலில் பதிவு செய்திருக்கிறார். பலஸ்தீனம் ஓர் அரபு ராஜ்ஜியம். அதனைக் கைப்பற்றிக்கொள்ள இஸ்ரேல் பல காலந்தொட்டு பிரயத்தனம் செய்து வருகிறது. அங்கு யுத்தம் ஓய்ந்தபாடில்லை. மக்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரையில் ஆண் பெண் என்றில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாடற்ற இஸ்ரேலியர்கள் பலஸ்தீனப் பிரஜைகளை நாடற்றவர்களாக மாற்றி வருகிறார்கள். இதனால் பலஸ்தீன முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் பரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. சமாதான முயற்சிகளும் முடிவுற்றதாகத் தெரியவில்லை.

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா மேற்குக் கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கொலை செய்யப்பட்ட யதார்த்தபூர்வமாக சித்திரங்களை தத்ரூபமாக வரையும் திறமை கொண்ட நஜீ அல் அலியின் சித்திரங்களுக்கு இவ்வாறு உயிர் கொடுத்திருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

உயிர் நீங்கி ஓயாத போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்
ஒரு கரம் ஓயும் போது
மறு கரம் கையை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்
பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்

இக்கவிதையின் மூலம் பலஸ்தீனர்கள் இறுதி வரையில் போராடும் விதம் குறித்தும், அது எத்தகைய ஆக்ரோஷமான போராட்டம் என்பதையும் விளக்கும் அவர், இளம் சிறார்கள் கூட பிஞ்சுக் கரங்களிலே கல்லேந்திப் போராடுகிறார்கள். நிச்சயமாக அது பலஸ்தீனத்தை நிறுவிவிடும் என்பதை எடுத்துக் காட்டுகிறார். பலஸ்தீனப் போராளிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை நிலவுகிறது என்பதனால் அவர்கள் கல்லெடுத்து கரங்களினால்;தான் போராடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோன்று,

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடு நடுங்கும்
வெள்ளப் பிறையும் வெண்போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை செய்யும்

என்ற கவிவரிகளினூடே கற்களின் பயன்பாட்டால் காபிர் கூட்டம் அஞ்சி நடுங்குகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இந்நூலிலே எஸ். முத்துமீரான் அவர்களது ஷஅண்ணல் வருவானா?| என்ற கவிதை நூலைப் பற்றிய விமர்சனம் காணப்படுகிறது. எஸ். முத்துமீரான் அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டு இலக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு தனது பங்களிப்புகளைச் செய்து வருகிறார். மூத்த படைப்பாளியும், கவிஞருமான  இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும் அசிங்கங்களையும் எடுத்துக்காட்டி ஏழைகளைச் சுரண்டும் மனித மிருகங்களை அம்பு கொண்டு அழிப்பதற்கும், சாதிவெறியை விதைத்து சுகங்காணும் இனவெறியர்களை, ஏன் மதம் என்ற பெயரால் பெருந் தவறு செய்து மக்களை ஏமாற்றி வரும் காடையர்களையும் அழித்து உலகைக் காக்க அண்ணல் ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதை தனது ஷஷஅண்ணல் வருவானா?|| கவிதைத் தொகுதி மூலமாக வேண்டி நிற்கின்றார்.

அறுவடைகளில் 10 சிறுகதை நூல்களைப் பற்றிய விமர்சனங்களை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். சகல நூல்களும் முதல் தரமாகக் காணப்படுவதோடு தரமான எழுத்தாளர்களால் அவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலே மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்களது ஷஷநினைவுகள் அழிவதில்லை|| என்ற நூலைப் பற்றிய விமர்சனமும் அதே போன்று இன்னொரு மூத்த படைப்பாளியான வெலிப்பண்ணை அத்தாஸின் ஷஷதியாகம்|| என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றிய  விமர்சனமும் இடம்பெற்றுள்ளது. இளம் படைப்பாளியான யோ. புரட்சி என்பவர் தனது ''ஆஷா நாயும் அவளும்'' என்ற நூலில் எழுதியிருக்கும்; சிறுகதைகளில் அனேகமானவை யுத்தகால சூழ்நிலையில் மக்களது பிரச்சினைகளையும், அவலங்களையும் பற்றிப் பேசுபவையாக இருப்பதை அறிய முடிகிறது.

மேலும் நாவல்கள் என்ற வகையில் இரண்டு நாவல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒன்று ஆர்.எம். நௌஸாத்தின் ''கொல்வதெழுதுதல் 90''. இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பள்ளிமுனைக் கிராமத்தவராவார். இவர் ஏற்கனவே இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும், ஒரு நாவலையும் வெளியிட்டிருக்கிறார். ''கொல்வதெழுதுதல் 90'' என்ற நாவல் 1990 காலப்பகுதியில் நடைபெற்ற அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மற்றது முன்னாள் கல்விப் பணிப்பாளரும், பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திக்வல்லை கமால் எழுதிய ''வீடு'' என்ற நாவல் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் கலாபூஷணம் பி.ரி. அஸீஸின் 08 ஆவது நூலான ''தென்றலே வீசி வா'' என்ற சிறுவர் பாடல் தொகுதியைப் பற்றிய குறிப்புகளையும் வெலிப்பண்ணை அத்தாஸின் ''பூவும் கனியும்'' என்ற நூலைப் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார்.

இதுதவிர ஏனையவை என்ற பகுதிக்குள் நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பி.எம். புன்னியாமீன் எழுதிய ''ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா'' என்ற நூலைப் பற்றியும், கலை இலக்கியப் பார்வைகள், திறனாய்வு என்ற கே.எஸ். சிவகுமாரனின் இரண்டு நூல்கள் பற்றியும், திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூலைப் பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் வெகு சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

எப்படியோ ஒரு சிறந்ததொரு விமர்சனத் தொகுப்பு நூலினை ரிம்ஸா தந்திருப்பது தற்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி ஒரே பார்வையில் படைப்பாளிகளையும், கவிஞர்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை எல்லோருக்கும் பயன்படும் வகையில் தந்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷமாகும். 43 நூல்கள் பற்றிய குறிப்புக்களை ஒரே பார்வையில் ஒரு தொகுதியில் ஒன்றுசேரக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. இலக்கியவாதிகள், இலக்கிய அபிமானிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை வைத்திருப்பது பயனளிக்கும். நூலாசிரியரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!

நூல் - அறுவடைகள்
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poetrimza@gmail.com
வெளியீடு - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்
விலை - 600 ரூபாய்

Wednesday, October 7, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை - வவுனியூர் இரா. உதயணன் (இலண்டன்)

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை

ஈழத்து இலக்கிய வரலாற்றில் படைப்புக்களை எழுதுபவர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்த படைப்புக்கள் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும் பணியைச் செய்பவர்கள் மிகவும் குறைவு. கே.எஸ். சிவகுமாரன், மா. பாலசிங்கம், கே. விஜயன், தம்பு சிவசுப்பிரமணியம் போன்ற மூத்த தலைசிறந்த விமர்சகர்களின் வரிசையில் தற்போது வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இணைந்திருக்கிறார்.

அறுவடைகளின்போது சிறந்த விளைச்சல்களே பெற்றுக்கொள்ளப்படும். அதேபோல ஒரு படைப்பு குறித்த சிறந்த பதிவுகளே  ‘அறுவடைகள்என்ற இந்தத் தொகுதியிலும் வியாபித்திருக்கின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த நூல்களின் விமர்சனங்களே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எழுத்தாளர்கள் விடுகின்ற சிறியசிறிய தவறுகளை பூதாகரமாக்கி அவர்களை இலக்கிய உலகத்தைவிட்டே ஓட வைக்கின்ற விமர்சனங்கள்கூட இன்று ஒருசிலரால் எழுதப்பட்டு வருகின்றன. அவை சுயவிமர்சனம் செய்யபட்டு வெளியிடப்படுகின்றனவா என்ற ஐயம் எழுகின்றது.

ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது இலகுவான காரியமல்ல. மனதில் தோன்றுகின்ற உணர்வுகளுக்கு உயிரளித்து எழுதப்படுவதே இலக்கியமாகும். அவ்வாறு எழுதும் படைப்பு பற்றி தரக்குறைவாக பேசுவதை விடுத்து பக்கச்சார்பின்றி நடுநிலமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைச் செய்வதற்கு பரந்துபட்ட மனது இருக்க வேண்டும். அத்தகையோர்களால்தான் சமநிலையில் நின்றுகொண்டு, தான் வாசித்த படைப்பு குறித்த ஆழமான தகவல்களை பக்கச்சார்பின்றி தர முடிகின்றது. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தான் வாசித்த நூல்கள் குறித்த தனது பார்வையை வாசகர்களுக்கு விருந்தாக்கியிருக்கும் பாங்கு சிறப்பானது. அவரது பணி மகத்தானது. கண்டன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயக் கருத்துக்களடங்கிய விடயங்களே இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

பல்துறைகளிலும் விற்பன்னர்களாயிருக்கின்றவர்கள் இலக்கியவாதிகளாகவும் செயற்படுகின்றனர். அதனால் பற்பல அனுபவங்களை ஏந்திய படைப்புக்கள் அவற்றுக்கூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். சமாந்தரமான தளங்களிலிருந்து எழுதுவதற்கு அப்பாற்பட்ட மிக முக்கியமான முயற்சிகள் இப்படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் தற்போது ரிம்ஸா முஹம்மத் வெளியிட்டுள்ள அறுவடைகள் தொகுதியில் ஒருசேர தரிசிக்கின்ற வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கின்றது.
இவ்வாறான முயற்சிகளில் மனம் தளராமல் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் இப்பெண் எழுத்தாளர் பாராட்டுக்குரியவர். அவரது முயற்சிகள் மேலும் விண்ணை எட்ட வேண்டும். அவருக்காக நாங்கள் கைதட்ட வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் சிறப்பாக தொடர்வதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!!!

வவுனியூர் இராஉதயணன் - இலண்டன்

தலைவர் - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை - சோபத்மநாதன்

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் ரிம்ஸா முஹம்மத். இதழியல் மற்றும் கணக்கீட்டுத் துறைகளில் பட்டம் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர். வலைத்தளம் மற்றும் இணைய இதழ்களினூடாகப் பரந்ததொரு வாசகர் கூட்டத்தோடு தொடர்பாடல் செய்து வருபவர் ரிம்ஸா.  இந்த இளம் வயதிலேயே பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கும் இப்பெண் எழுத்தாளர் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறார்பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் அவ்வப்போது எழுதிய விமர்சனங்களின் தொகுப்பேஅறுவடைகள்என்ற பெயரில் தற்போது நூலுருப் பெற்றுள்ளது.
கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் நானாவித வெளியீடுகள் பற்றிய ரிம்ஸாவின் பார்வைகளை  ‘அறுவடைகள்பதிவு செய்கிறது.

ஆழியாளுடையகருநாவுதொகுதியில் வரும் கவிதை இது:

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்

இலங்கை அரசியலில் சில தசாப்தங்களாக இதுவே நியதியாகிவிட்டாலும், லஸந்த விக்கிரமதுங்க என்ற துணிச்சல் மிக்கநீதிக்காகப் போராடியஒரு பத்திரிகையாளனுடைய அநியாயச் சாவு பற்றிய எதிர்வினை இது என்றறியும்போது நெஞ்சு அதிரவே செய்கிறது.

இந்தத் தலைமுறைக் கவிஞர்களுடைய படைப்புக்களில் ஆங்காங்கே மின்னும் புதிய கற்பனைகள் ஆச்சரியமூட்டுபவை.
               
பகலவன் வெம்மையில்
படியிறங்கக் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புக்களால்

என பாயிஸா அலி பயன்படுத்தும் உவமை தற்புதுமையானதுகவிஞர்கள் - எல்லாக் கலைஞர்களுமே தம் சூழலைக் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பர். அப்படி அவதானிப்பவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தரமுடியும்.

எஸ். முத்துமீரான் நிந்தவூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர். சிறுகதைகள், உருவகக் கதைகள், கவிதைகள் எனப் பரந்துபட்டுக் கிடக்கின்றன அவர் படைப்புக்கள்கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், வாய்மொழிக் கதைகள் மற்றும் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டு அரும்பணி புரிந்தவர் முத்துமீரான்.

அவருடைய  ‘அண்ணல் வருவானா?’ என்ற கவிதைத் தொகுப்பு தமிழ் நாட்டின் நேர்நிரைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதுஎதையெதையோ கவிதையென்று படிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போயிருக்கும் என் மனசுக்கு முத்துமீரான் கவிதைகள் ஒத்தடமாயிருக்கின்றன.

வண்ணக்குருவியாய் என்னைப் படைத்து நீ
வானில் பறக்கவிடு - நான்
கண்ணீரில் வாடிக் கதறியழும் மக்கள்
கவலையைப் போக்கிவர.
வையம் செழித்து வளங்கள் பெருகிட
வாழ்த்தி எனையனுப்பு..
படைப்புக்கள் எல்லாமே பிரமனின் சொத்தென்று
பறையை அடிப்பதற்கு - நான்
பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட
பாதையைக் காட்டிவிடு!

என வீறுநடை போடுகிறது முத்துமீரான் கவிதை.

கல்வியுலகிலும் எழுத்துலகிலும் தம்பெயர் நிறுவியவர் கலைவாதி கலீல். அவருடைய  ‘ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்’(மன்னார் படிப்பு வட்ட வெளியீடு) என்ற நூலை அறிமுகம் செய்கிறார் ரிம்ஸா. பலஸ்தீன விரோதப் போக்கைக் கடைப்பிடிப்போரைக் கண்டித்து நஜீ அல் அலி வரைந்த கூடார்த்த சித்திரங்களுக்கு கலீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இது புதுமையானதொரு முயற்சி.

பதுளை சேனாதிராஜாவின்  ‘குதிரைகளும் பறக்கும்மற்றும் நீர்வை பொன்னையன் எழுதியநினைவுகள் அழிவதில்லைஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிப் பயனுள்ள குறிப்புக்கள் தந்துள்ளார் ரிம்ஸா.

ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம்பதித்தவர், சாகித்திய விருதுகள் பெற்ற சாதனையாளர்  திக்வல்லை கமால். ‘வீடுஎன்ற அவருடைய அற்புதமான நாவல் ரிம்ஸா தேர்ந்துள்ள அறிமுகங்களில் மிக முக்கியமானது எனலாம். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களைவீடுஎன்ற பிரச்சினை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பதை வாசகர் மனசைத் தொடுமாறு சித்திரிக்கிறார் கமால்.

இலங்கையின் தென்கோடியிலுள்ள இரண்டு முஸ்லிம் பிரதேசங்களைக் களமாகக்கொண்டு கதை நகர்கிறதுஇஸ்லாமியருடைய வாழ்வியல் - பண்பாட்டு அம்சங்கள் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

அறுவடைகள்சிறுவர் இலக்கியம், திறனாய்வு முதலிய துறைகளையும் உள்ளடக்குகிறதுதியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, கே.எஸ். சிவகுமாரன் முதலியோருடைய படைப்புக்கள் குறித்த மதிப்பீடுகள் பயனுள்ளவை.

மொத்தத்தில், இந்நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் பரந்துபட்ட வாசிப்புக்கும் ஓயாத உழைப்புக்கும் சான்றாக மிளிர்கிறது. அவரை வாழ்த்துகிறேன்!!!

ஏரகம்’,
பொற்பதி வீதி,
கொக்குவில்.

Friday, September 18, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான ரசனைக்குறிப்பு - த. ராஜ்சுகா (எலிசபெத்), தலவாக்கலை

வெலிகம ரிம்ஸா மும்மத் அவர்களின் "அறுவடைகள்"
விமர்சன நூலுக்கான ரசனைக் குறிப்பு

த.  ராஜ்சுகா (எலிசபெத்), தலவாக்கலை

அண்மையில் வெளியீட்டைக் கண்ட "அறுவடைகள்" எனும் விமர்சன நூலினை வாசகர்களுக்காக வழங்கியவர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரிம்ஸா மும்மத் அவர்கள். திறனாய்வில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு அதிலும் பெண் விமர்சகர்கள் குறைவென்றே சொல்லலாம். ஏனைய கவிதை, சிறுகதை படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது விமர்சகர்கள் எண்ணிக்கையில் குறைவே.அப்படிப்பட்ட எழுத்தாளர்களிடையே மிளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் வெலிகமையைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மத் அவர்கள். கணக்கியல் துறையில் தொழில் புரியுமவர் இலக்கியத்தில் சாதித்துக்கொண்டிருப்பது மிகப்பெருமைக்குரிய விடயமே. தன் இலக்கியப் பணியின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்காக ஏலவே 10 நூல்களை தந்து தற்போது அறுவடைகள் எனும் 11 வது நூலுடன் நம்மை சந்திக்கின்றார். கணக்கியல் சார்ந்த மூன்று நூல்களும், கவிதை, சிறுகதை,  சிறுவர் கதை, சிறுவர் பாடல், விமர்சனம் சார்ந்த‌ ஏழு நூல்களுமே ஏனைய நூல்களாகும்.

நூலாசிரியரான ரிம்ஸா அவர்கள், பல்துறை சார்ந்த திறமை கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், விமர்சனமென ஆழமான எழுத்தாற்றல் மிக்கவர். பரந்துப‌ட்ட வாசிப்புத்திறமை கொண்டவர். நேரமே இல்லையென ஓடிக்கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பத்திரிகையொன்றை முழுமையாக வாசிப்பதற்கே நேரமில்லாதபோது கிட்டத்தட்ட 43 நூல்களை படித்துவிட்டு அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு ஆ(ரா)ய்ந்து தன் மன உணர்வுகளை விமர்சனமாக தந்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியாது. பத்திரிகைகள் வானொலிகள் வலைத்தளங்களென தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுவரும் இவர் 'பூங்காவனம்' எனும் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். ரிம்ஸா அவர்கள் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றவர்.

'அறுவடைகள்' இது எழுத்தாளர் ரிம்ஸா அவர்களை ஒரு சிறந்த வாசகியாக அடையாளப்படுத்தும் நூலாகும். ஆம் வாசிக்காத ஒருவனால் நல்ல எழுத்தாளனாக முடியாது.

நூலுக்கு ஆழப்பொருந்தும் பெயருடனும் அதற்கு  அழகான அட்டைப் படத்துடனும் பிரசவமான இந்நூலுக்கு அணிந்துரையினை சோ. பத்மநாதன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியூர் இரா. உதயணன் அவர்களும் பின்னட்டைக் குறிப்பினை இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

ஒரு எழுத்தாளனை உருவாக்குவதிலும் அவனின் திறமையை உருக்குலைப்பதிலும் இந்த விமர்சனம் எனும் விடயம் அதிக பங்கு வகிக்கின்றது. தான் படைத்த படைப்பு சமூகத்திடம் எவ்வாறு போய்ச் சேர்ந்துள்ளது என்பதனை படம்பிடித்து காட்டுவதும் இவ்விமர்சனமே. அதனை அழகாக செய்து முடிப்பதற்கும் ஒரு கலை வேண்டும் அதாவது தெளிவான வாசிப்பு, விடயத்தினை புரிந்துகொள்ளும் பக்குவம், சரிபிழைகளை பகுத்தறியும் தெளிவு, சரியாயின் திறந்த மனதுடன் வாழ்த்திடும் பரந்த மனது, பிழைகளாயின் நாசுக்காக பகிர்ந்தளிக்கும் சமயோசிதம் என்பவையே ஒரு நல்ல விமர்சனத்துக்குரிய பண்புகளாகும். இவ்வத்தனை பண்புகளையும்  இந்நூலினை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறான பக்குவம் கொண்ட ரிம்ஸா அவர்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை மகிழ்வித்து அவர்களின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டவும், அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும் அதிகமாகவே பிரயாசப்பட்டிருக்கின்றார். (அவரது இரு விமர்சன நூல்களையும் சேர்த்து).

நான் கூறியதுபோல வாசிக்கும் பழக்கம் அருகிக்கொண்டுவரும் இக்கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் இணையத்தில் உருகிக்கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இவ்வாறான விமர்சனங்களினூடாக சிறந்த நூல்களினை தெரிவுசெய்து வாசிப்பதற்கும் ஒரே புத்தகத்தில் பல நூல்களை காண்பதற்கும் துணைசெய்வதோடு சேமித்து பாதுகாப்பதற்கு உகந்த பொக்கிஷமாகவும் காணப்படுகின்றது. உண்மையில் "அறுவடைகள்" சேமித்து பாதுகாக்கப்படவேண்டிய பெட்டகமே.

கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், நாவல், சிறுவர் இலக்கியம், ஏனையவை என பிரித்து விமர்சிக்கப்பட்டுள்ள இந்நூலில் முக்கியமான ஒன்றுதான் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள். வெறுமனே எழுத்துக்களை பற்றி மட்டுமல்லாது எழுத்தாளர்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பது இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பிரயோச‌னமாக இருக்கும். அதற்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன்.

'அமைதிப்பூக்கள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் அவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். பலருக்கு தெரியாத விடயமும் கூடத்தான். "சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப்புத்திரர். அவரின் இலக்கியப் பார்வையும் சொற்களை லாவகமாக கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல ஏனென்றால் இலக்கிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்படவேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப்பற்றும் தந்தைவழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக் கவிதைத் தொகுதியில் தரிசிக்க முடிகின்றது" என தொடரும் அவ்விமர்சனத்தினைப்போல இன்னும் பல படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் இந்நூலினில்.

வாசித்தலில் பெற்றுக்கொண்ட சிறந்த அறுவடைகளை தொகுப்பக்கியுள்ள ரிம்ஸா அவர்களின் பிரதிபலிப்பு இவ்வாறும் அமைகின்றது தான் பெற்றுக்கொண்ட இன்ப உணர்வினை வாசகர்களாகிய எம்மிடமும் புகுத்திவிட எத்தனிக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையிடம் அருகிக்கொண்டுவரும் வாசிப்புத்திறமை மோலோங்கச் செய்திட, 1970 களுக்கு பின்னர் எழுத்துல‌கிற்கு வந்த கவிஞர் ஷெல்லிதாசன் 2010 ம் ஆண்டில்தான் அவரது முதலாவது நூல் பிரசவமாகியுள்ளது. அவர்களின் நூலுக்கு எழுதிய விமர்சனத்தின் மூலமே அழைப்பு இந்நூலாசிரியரிடமிருந்து. 'இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் வரிசையிலுள்ள கவிஞர் ஷெல்லிதாசனின் கவிதைகள் மனித‌நேயம் சார்ந்த சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ளது. இக்கவிஞரின் நூலினை வாசிப்பதின் மூலம் இளைய எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப் பாதையில் வெற்றி பெறாலாம்' என ஓர் ஆலோசனையையும் சொல்லி வைக்கின்றார் எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள்.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுதிவரும் நூலாசிரியர், தனதுரையில் இவ்வாறு கூறுகின்றார், 'நாம் வாசிக்கின்றவற்றில் இரசனைக்குரிய அம்சங்கள் பல காணப்படுகின்றன. அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி குறித்த எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தினையும் நூல் பற்றிய அறிமுகத்தினையும் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்' என்று தன்னுடைய விமர்சனப் பார்வைக்கு பதிலினை படைக்கின்றார். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளியீடான இந்நூலினை எழுத்தாளர் அவர்கள், 'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு' சமர்ப்பணம் செய்திருப்பதும் நெஞ்சைத்தொடும் நெகிழ்வே.

இவ்வாறு பல்வேறுபட்ட பரந்த வாசிப்பனுபவத்தினையுடைய இவர், திறனாய்வின் முன்னோடியும் விமர்சனத்துக்கு புகழ்பெற்றவருமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்களுடைய இரு ஆய்வு நூல்களுக்கு விமர்சனம் வரைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அயராது இலக்கிய பணிகளுக்காக தன்னுடைய தொழில் தவிர்ந்த நேரங்களை செலவிடும் ரிம்ஸா மும்மத் அவர்களின் 'அறுவடைகள்' விமர்சனத் தொகுப்பானது, நூல்கள் பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊசாத்துணையாக பயன்படுத்திக் கொள்ளவும் படைப்பாளிகள், மாணவர்களுக்கு பயனுடையாதான ஓர் சிறந்த நூலாகும். இந்நூலினைப் பெற்று பாதுகாப்பது தமிழ் பற்றாளர்களின் கடமையே என்பேன்.

இப்பாரிய பொறுப்பு மிக்க இலக்கியப்பணிகளை, எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஆற்றிவரும் பல்துறைசார் திறமை கொண்ட எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள் இன்னும் இலக்கிய உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம். மூத்த எழுத்தாளர்களுடைய ஆலோசனைகளுடனும் அவருடைய தனித்தன்மைவாய்ந்த ஆற்றல்களுடனும் பல படைப்புக்களுடன் இலக்கிய சாம்ராஜ்யத்தில் வீறுநடைபோட வாசகர்களாகிய எமது நல்வாழ்த்துக்கள்.

நூல்: அறுவடைகள்
நூலின் வகை: விமர்சனம்
நூலாசிரியர்: வெலிகம ரிம்ஸா மும்மத்
தொடர்புகளுக்கு: 0775009222
விலை: 600/=