Tuesday, November 1, 2022

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பதுளை ஹுமைரா அல் அமீன் 

இன்றைய நாட்களில் இலக்கிய உலகினால் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே வெலிகம ரிம்ஸா முஹம்மத் காணப்படுகிறார். பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் வாசகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர். மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட  இவர், ஓர் எழுத்தாளராகவும் கவிஞராகவும் மிளிர்கிறார். வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் இவரது பரவலான ஆக்கங்களை ஊடகங்களில் களப்படுத்தி வந்தாலும் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில், ஆர்.எம். ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார்.  1998 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் எழுதிவரும் இவருடனான நேர்காணல்கள் தேசிய ஊடகங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன அத்துடன் ஒலி,ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14 நூல்களை வெளியிட்டு இவர் இலக்கியத் துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அத்துடன் ஊடகத் துறையில் இவருக்குள்ள ஆர்வம் காரணமாக 2013 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும் பூரணப்படுத்தியுள்ளார்.

இளவயதிலேயே தன் தாயாரை இழந்து குடும்பம் எனும் சுமையை தன் முதுகில் ஏந்திக்கொண்டு கத்தி மேலே நத்தையாக நடந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவங்கள், மனத்துயரங்கள் எப்படியிருக்கும் என்பதை வார்த்தைகளால் வரையறை செய்துவிட முடியாது. அந்த அனுபவங்களை மொழியாக்கி, உயிர் கொடுத்து கவிதைகளின் மூலம் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி சற்று ஆறுதலடைகிறார் சகோதரி ரிம்ஸா முஹம்மத்.  

தென்றலின் வேகம் என்ற கவிதை நூலை 2010 இல் வெளியிட்டு இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இவர், எரிந்த சிறகுகள் என்ற கவிதைத் தொகுதியையும் வெளியீடு செய்துள்ளார். 152 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பல்வேறு தலைப்புக்களில் அமைந்துள்ள 54 கவிதைகளும் 07 மெல்லிசைப் பாடல்களும் இடம்பிடித்துள்ளன.

"எரிந்த சிறகுகள்" கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைச் சிறகுகளை நான் மெதுமெதுவாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்த எரிந்துபோன இறகுகளின் பல இடங்களில் காயங்கள், கொஞ்சம் கண்ணீர், வலிகள், வேதனைகள் என்று அத்தனைக்கும் தனக்குத் தானே மருந்திட்டுக் கொண்டு பறந்துவிட்ட ஒரு குருவியின் குதூகலம் அந்தக் கவிதைகளில் தெரிகிறது. இவருடைய அர்த்தமுள்ள அந்த வரிகளுக்குள் ஆயிரம் பாடங்களைக் கண்டுகொள்ள முடிகிறது.   

அன்பு, காதல், நட்பு, போராட்டம், ஏமாற்றம், முரண்பாடுகள் இன்னும் எத்தனையோ என்று வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் இவர் கவிதைகளின் சிறகுகள் சுமந்து செல்கின்றன. சில வரிகள் அப்படியே உள்ளத்தில் புதைந்து கொண்டன. மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டன. வலிகளின் வரிகளுக்குள் தலை தடவும் ஆறுதலும் அவருக்கு அவராகவே ஒத்தடம் கொடுத்துக் கொள்கின்றது.

வாழ்க்கைப் பூங்காற்று (பக்கம் 28) என்ற தலைப்பில் அமைந்த கவிதையிலுள்ள பின்வரும் வரிகள் எத்தனை அருமையாக அமைந்துள்ளன. தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை பாறைகளாகப் பார்க்கிறது கவிஞரின் மென்மையான மனது. துன்பங்களோடு போராடினாலும் உள் மனதில் எங்கோ ஒரு மகிழ்ச்சி, தைரியம், நம்பிக்கை இருப்பதை உணர்த்துவதாய் அழகாகச் சொல்கிறது அந்தக் கவிதையின் வரிகள். கூடவே வாசிக்கும் போது ஓர் எதிர்ப்பார்ப்பும் தன்னம்பிக்கையும் எம்மைத் தழுவிக்கொள்கிறது.


பாறைகளுடன் நான்

சண்டையிட்டிருக்கிறேன் - என்

இதயக் குமுறல்கள்

இந்த உலகில்

எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்

பூங்காற்று மட்டும் வந்து

என் காதுகளில்

ரகசியம் சொன்னது

வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!


இன்னும் மகனைப் பிரிந்த ஓர் தாயின் ஆதங்கமாய் தவிப்பு (பக்கம் 32) என்ற கவிதை அமைந்துள்ளது. பிள்ளைகளுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து, தன் முழு நேரத்தையும் அவர்களுக்காகவே செலவு செய்து வாழும் ஒரு தாயின் முதுமைப் பருவத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட தன் மகனின் வருகைக்காய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு தாயின் ஆதங்கம், அவளின் கண்ணீர் இந்தக் கவிதை வரிகளில் தெரிகிறது. அந்தத் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தும் முகமாக தனக்குள் அந்த வலியை உணர்ந்து கொண்டு சிறப்பாய் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ:-


எனைப் பார்க்க

இன்று வருவாய்..

இல்லையில்லை

நாளை வருவாய்

என்றெண்ணியே

என் வாழ்நாள் கழிகிறது!


நாட்கள் சக்கரம் பூட்டி

ஓடும் என்று பார்த்தால்

அவையோ

ஆமை வேகத்தில் நகர்ந்து

என் உயிரை வதைக்கிறது!


ஒப்பனைகள் (பக்கம் 38) என்ற கவிதை வேஷமிடும் போலி மனிதர்களுக்கு சாட்டையடியாய் வந்து விழுகிறது. கொஞ்சம் அரசியலும் பேசுகிறது. 


வாக்குறுதியின்

மகிமை தெரியாதவர்களெல்லாம்

மேடைகளில்

வாக்குறுதிகளை

அள்ளி வீசுகிறார்கள்!


மனிதநேயம்

துளியுமற்றவர்களெல்லாம்

அதைப்பற்றி

கதைகதையாய்ப்

பேசுகிறார்கள்!


ஏழைகளைப் பார்த்து

நக்கலாக சிரிக்குமவர்கள்

தம் முன்னைய

வாழ்க்கையைப்பற்றி

சிந்திக்கவேயில்லை!


அகம்பாவத்தை

அகம் முழுவதும் சுமந்துகொண்டு

ஆன்மீகம் பேசுவது

வேடிக்கையாக இருக்கிறது!


மனிதத் தன்மையற்று

நடக்குமவர்கள்

மகான் என்று

தன்னை சொல்லிக்கொள்வதும்

வாடிக்கையாக இருக்கிறது!


அவர்களின்

முகத்திற்கும் அகத்திற்கும்

சம்பந்தமேயில்லாத பின்

ஒப்பனைகள் மட்டும் எதற்கு

அகற்றிவிடட்டும்!!!


எத்தனை உண்மை முகமே ஒப்பனை என்றாகிவிட்ட போது அதன் மீது இன்னும் ஒப்பனைகள் எதற்கு என்று தனது கவிதை மூலம் கொஞ்சம் காரசாரமாகவே கேட்கின்றார் ரிம்ஸா முஹம்மத். உண்மைகள் மரித்துப் போன உலகில் போலிகள் எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகின்றன. ஆனாலும் ஒரு நாள் வேஷம் கலைந்து விடத்தானே போகிறது. கேட்க வேண்டிய நியாயமான கேள்விதான். கவிஞர் கொஞ்சம் சூடாகவே கேட்டுவிட்டார்.            

தீராத மன நதி ஓட்டம் (பக்கம் 40) என்ற கவிதையில் தன் வலிகளை கண்ணீருக்குள் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்லி எம் மனதையும் உருக வைக்கிறார். அந்தக் கவிதை வரிகளை வாசிக்கும் போது எம் கண்களும் கசிகிறது.          


வெந்துபோன என்

உள்ளத்தில்

வந்துபோனவை

துன்பம் மட்டுமே..

நாதியற்ற என் நிலை

தேதி தெரியாத

முடிவை நோக்கியே!


தீர்ந்துவிட முடியாத

துன்ப ஓடைகளை

வலுக்கட்டாயமாக

கட்டுப்படுத்தினேன்..

என் கண்ணீருக்குள்!


மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போக, துன்பங்கள் மட்டுமே தொடர்ந்து வர.. என்றுதான் முடியும் இந்தச் சோக வாழ்க்கை என்று ஏங்கும் ஒரு ஏழை நெஞ்சத்தின் அங்கலாய்ப்பை அந்தக் கவிதை வரிகள் அடுக்காய்ச் சொல்லி அழ வைக்கின்றன.  

முகஸ்துதிப் புன்னகையின் பின்னால் மறைந்திருப்பவர்களைப் பார்த்து சில வரிகளும் அங்கே புன்னகைப் பூச்சு (பக்கம் 48) என்ற கவிதையில் முன்வைக்கப்படுகின்றன. வார்த்தைகளில் மட்டுமே வேதம் சொல்லித் திரியும் வேஷதாரிகளை தனது பின்வரும் இந்தக் கவிதை வரிகள் மூலம் தட்டிக் கேட்கிறார் கவிஞர். 


வெறும் பேச்சில் மாத்திரம்

நீ உச்சரிக்கிறாய் வேதம்..

நிஜத்தில் புனிதனாயிருக்காத

நீ சுட்டெரிக்கும் பூதம்!


சந்திரனைக் காட்டிக்காட்டி

பொய் கூறியது போதும்..

நீ அரிச்சந்திரனாயிரு

மெய்யாய் இனிமேலும்! 


அன்பும் கனிவும் மட்டுமல்ல சகோதரி ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளில் தைரியமும் வெளிப்படுகிறது. போராடி ஜெயிப்பதுவே வாழ்க்கை எனும் தத்துவத்தை வரிகளாய் வடித்து அந்த வரிகளுக்குள் வாழ்ந்தும் காட்டுகிறார். பாராட்டை மட்டுமே எதிர்ப்பார்த்து ஓர் எழுத்தாளன் பயணிக்க முடியாது. சில இடங்களில் பாறைகளின் மீதும் முட்டி மோதி, அந்தப் பாறைகளையும் உடைத்துத்தான் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இவரின் பல கவிதை வரிகள். கானகத்தின் நடுவில் தனியாக தனக்கென்றொரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டு செல்லும் தைரியம் அவர் கவிதைகள் பலவற்றில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு கவிதைகளுக்குள்ளும் ஆயிரம் உணர்வுகள் பொதிந்துள்ளன. ஒவ்வொரு உணர்வுக்காகவும் ஒவ்வொரு கவிதையென்று அத்தனை கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் அருமையான நகர்வாக இந்தக் கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. 

கவிதைத் துறையில் மட்டுமல்லாமல் மெல்லிசைப் பாடல்கள், சிறுகதை, சிறுவர் படைப்புகள் போன்ற துறைகளில் தனது கவனத்தைச் செலுத்திவரும் இவர் நூல் விமர்சனத் துறையிலும் தனக்கென்றொரு தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார். இதுவரை 160 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு தனது நேரகாலங்களைச் செலவழித்து நூல் விமர்சனங்களை எழுதியுள்ளார். மேலும் ஏனைய இலக்கியவாதிகளுடனான 100 க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும் செய்து அதன் மூலமாகவும் நன்கு பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்து இலக்கிய வானில் ஒரு மின்னும் தாரகையாக மிளிரும் சகோதரி ரிம்ஸாவின் எழுத்துப் பணியோடு சமூகப் பணிகளும் இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்!!!


நூல் - எரிந்த சிறகுகள்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - கொடகே பதிப்பகம்

விலை - 400 ரூபாய்



பதுளை ஹுமைரா அல் அமீன் 


Saturday, October 29, 2022

தென்றலின் வேகம் மற்றும் எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் மற்றும்

எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் 

பற்றிய கண்ணோட்டம்


ஈழத்து இலக்கியத் துறையில் வடக்கு மற்றும் கிழக்கிலங்கைப் படைப்பாளிகளது பங்களிப்பைத் தொடர்ந்தே தென்னிலங்கை படைப்பாளிகளது பிரவேசம் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. தென்னிலங்கைக் கவிதைத் துறை வளர்ச்சிக்கு பல கவிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். தென்னிலங்கையின் ஆரம்பகட்ட இலக்கிய முயற்சிகளாக மதம் சார்ந்த செய்யுள் இலக்கியங்களே காணப்பட்டன. மார்க்க அறிஞர்களே இதன்போது இலக்கியவாதிகளாகவும், இலக்கியத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் பத்திரிகைகளின் தோற்றம் மற்றும் சமூக, அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன தென்னிலங்கை இளைஞர்கள் பலரது இலக்கியத் துறைப் பிரவேசத்திற்கு வித்திட்ட காரணிகள் எனலாம். 


1960களின் பின்னர் ஏராளமான தென்னிலங்கைக் கவிஞர்கள் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் தமிழக சஞ்சிகைகளில் தமது கவிதைகளை எழுதி வந்துள்ளனர். ஆயினும் இவர்களில் பெரும்பாலானோரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்படவில்லை. திக்குவல்லை கமாலின் 'எலிக்கூடு' (1973) கவிதைத் தொகுதியே தென்னிலங்கையின் முதலாவது புதுக்கவிதைத் தொகுதியாகும். 1973 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தென்னிலங்கையிலிருந்து 20 க்கும் கிட்டிய கவிதைத் தொகுதிகளே வெளிவந்துள்ளன. தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகளில் சமயம், உள்நாட்டுப் போர், சமாதான வேட்கை, வறுமை, பெண்ணியம், சீதனம், காதல் முதலானவை பிரதான பாடுபொருள்களாகக் காணப்படுகின்றன. 

வெலிகம ரிம்ஸா முஹம்மதும் தென்றலின் வேகம், எரிந்த சிறகுகள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். அத்துடன் இவர் இதுவரை எழுதியுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளில் பலவற்றை தேசிய பத்திரிகைளிலும் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிம்ஸா முஹம்மத், மாத்தறை மாவட்ட வெலிகம தேர்தல் தொகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பல்துறை இலக்கியங்களிலும் ஆர்வமுள்ள ஒரு கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, பாடலாசிரியர் என பன்முகப்பட்ட ஆளுமையுடையவர். 

ரிம்ஸாவின் முதலாவது இலக்கியப் படைப்பாக அவரது 'தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதி 2010 இல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' என்ற கவிதைத் தொகுதியை 2015 இல் வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். மேலும் 'ஆடம்பரக் கூடு' (2012), 'என்ன கொடுப்போம்' (2012), 'பாடல் கேட்ட குமார்' (2013) 'இதுதான் சரியான வழி' (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களும், 'வண்ணத்துப் பூச்சி' (2014) எனும் சிறுவர் பாடல் நூலும், 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' (2013), 'அறுவடைகள்' (2015) ஆகிய விமர்சன நூல்களும், 'விடியல்' எனும் ஆய்வு நூலும், 'எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம்' (2021) எனும் ஆவண நூலும் கணக்கீட்டுத் துறையில் 'வங்கிக் கணக்கிணக்கக் கூற்று', 'கணக்கீட்டுச் சுருக்கம்', 'கணக்கீட்டின் தெளிவு' ஆகிய 03 நூல்களுமாக இவரால் இதுவரை மொத்தம் 14 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவர் பூங்காவனம் இலக்கிய அமைப்பின் தலைவராகவும் "பூங்காவனம்" காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் தனது இலக்கியச் சேவையைத் தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் சஞ்சிகையின் துணையாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவோடு இணைந்து இதுவரை 38 பூங்காவனம் காலாண்டு இதழ்களைத் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெளியீடு செய்து வந்துள்ளார். 

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் முதலாவது இலக்கியப் பிரசவமான 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டு இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. கால வெள்ளம் அடித்துக் கொண்டு போக முடியாதபடி ஒரு சில கவிதைகளையாவது தமிழுக்குத் தர வேண்டும் என்ற இவரது கனவின் வெளிப்பாடாகவும் காலம் இவருக்கு அளித்த ரணங்களும் உலகை வெல்ல வேண்டும் என்று இவர் பொறுத்துக் கொண்;ட வடுக்கள் முதலிய வாழ்வின் அனுபவச் சுமைகளையும் எழுத்துக்களில் வடிப்பதற்காகவே 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி படைக்கப்பட்டதாக இக்கவிதைத் தொகுதியின் என்னுரையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் குறிப்பிடுகிறார். இக்கவிதைத் தொகுதியில் ஆராதனை, நிலவுறங்கும் நல்லிறவு, ஒலிக்கும் மதுர கானம், கண்ணீரில் பிறந்த காவியம், வெற்றியின் இலக்கு, விடியலைத் தேடும் வினாக்குறிகள் முதலான 64 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 

'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து வெலிகம ரிம்ஸாவினது 'எரிந்த சிறகுகள்' என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி 2015 ஆம் வெளியிடப்பட்டது. 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி பெரும்பாலும் அகவுணர்வு சார் விடயங்கள் மற்றும் சமூக யதார்த்த விடயங்களைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இத்தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்களை இக்கவிதைகள் தொட்டு நிற்கின்றன.

 வெற்றிகள் உன்னை ஆளட்டும், வாழ்க்கைப் பூங்காற்று, தொலைத்த கவிதை, தவிப்பு, எல்லாம் மாறிப் போச்சு, என்ன வாழ்க்கை, காலங்களின் பிடிக்குள், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், சத்தமில்லாத யுத்தம் முதலான 54 கவிதைகளும் வெயில் நிறத்து தோல் கொண்டு, வல்லோனின் ஆணை, கண்கள் உன்னைத் தேடுதடி, ஆயிரம் சொந்தங்கள், ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய், பூக்கள் யாவையும், இந்த உலகம் நிலையில்லை முதலிய 7 மெல்லிசைப் பாடல்களும் 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இனி 'தென்றலின் வேகம்' கவிதை நூலில் இருந்து இரசனைக்காக சில கவிதைகளை எடுத்து நோக்குவோம். 

குர்ஆன், நபிவழி என்பவற்றினைப் பின்பற்றி இம்மை வாழ்வைப் பண்படுத்திக் கொள்வதன் மூலம் அழிவே இல்லா நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் வெற்றி பெற்ற அடியானாக மிளிரலாம் என்பதை 'தென்றலின் வேகம்' நூலில் உள்ள வெலிகம ரிம்ஸாவினது 'உயிர் செய்' (பக்கம் 48) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


அல்லாஹ்வின் அடியானே! 

அவனி வாழ்விலே 

அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து 

ஆத்மாவை புதுப்பித்துக்கொள்! 

ஆஹிரத்தின் அமைவிடத்தை 

அதிர்ஷ்டவசமாய் 

பதிப்பித்துக்கொள்! 


சங்கை நபியாரின் 

ஷரீஅத்களை துறந்து 

சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு 

சுவனம் என்பது இமயம்! 

போகும் பாதை சீராய் அமைந்தால் 

மறுமை இன்பமாய் அமையும்!


ரிம்ஸா முஹம்மதின் 'பொய் முகங்கள்' (பக்கம் 77) எனும் கவிதை, உள்நாட்டில் அண்மைக் காலங்களில் இனவாதம் தலைதூக்கவும் சிறுபான்மையினருக்கு எதிராக நாசகாரச் செயல்களை மேற்கொள்ளவும் துணையாய் நின்ற சில இனவாத மதப் போதகர்களின் செயல்களை விமர்சிப்பதாக அமைகிறது. இத்தகைய இனவாத சிந்தனை படைத்தவர்களின் போலி முகங்கள் குறித்து உணர்த்திட தொன்ம உத்தியினைக் கையாண்டுள்ளார். 


நீங்கள் 

நல்லவர்கள் தாம்! 

மிக மிக நல்லவர்கள் தாம்! 


அழுக்குண்ணி சிந்தையையும் 

அடுத்து கெடுக்கும் 

அடாவடித் தனத்தையும் 

அங்கிக்குள் மறைத்து..


அந்த அரிச்சந்திரனுக்கே 

அவ்வப்போது வாய்மை 

அரிச்சுவடியை 

கற்றுத் தந்தீர்களே 

அப்போதும் நல்லவர்கள் தாம்!


தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' கவிதை நூலில் இருந்து சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம். 

ரிம்ஸா முஹம்மத், தனது 'காலங்களின் பிடிக்குள்' (பக்கம் 36) எனும் கவிதையில், சீதனத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை புதியதொரு கோணத்தில் அணுகுகிறார். திருமணச் சந்தையில் இன்றும் ஆண்களுக்கான 'கேள்வி' உயர்ந்திருப்பதாலேயே ஆண்கள் விரைவில் சீதனத்திற்கு விலைபோகிறார்கள். 


பணத்துக்கு ஆசைப்பட்ட நீ 

கொழுத்த சீதனம் தின்று 

பங்களா வீட்டின் எஜமான் 

என்ற பெயரில் 

வேலைக்காரனானாய்!


காதலிக்கும் போது பொருளாதார வேற்றுமைகளை கருத்திற் கொள்ளாது உருக உருகக் காதல் செய்த காதலன் திருமணம் என்று வரும் போது மாத்திரம் சீதனத்திற்கு ஆசைப்பட்டு காதலை உதறிச் செல்கின்றான். சீதனத்தின் காரணமாக இத்தகையதோர் துரோகம் இழைக்கப்பட்டதை எண்ணி துயருறும் காதலியின் உள்ளக் குமுறலாக இக்கவிதை அமைகிறது. ஆணாதிக்க மரபின் ஓர் அம்சமான சீதனம் எனும் சாபக்கேட்டினால் பெண்களின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஏற்படக்கூடிய சீர்குலைவுகளையும் பெண்கள் பற்றிய பாரம்பரியமான கருத்துக்களையும் அழுத்தமாகப் தமது கவிதைகளில் பேசியுள்ளனர்.

வெலிகம ரிம்ஸாவின் 'நிகரற்ற நாயனே' (பக்கம் 46) எனும் கவிதையின் ஆரம்ப வரிகள், வல்ல இரட்சகனாகிய அல்லாஹ்வின் வல்லமையைப் போற்றியும் அவனது அருட்கொடைகளை நினைவு கூர்வதாகவும் அமைந்துள்ளது. 


யா அல்லாஹ் 

அலைகளின் நாதத்திலும் 

உன் வல்லமையை 

இனிதே காணுகிறேன்! 


குயிலின் ராகத்திலும் - உன்

குத்ரத்தின் வலிமைதான் 

துல்லியமாய் ஒலிக்கிறது.. 

உன் அருள் மழையால் 

இவ்வுலகம் செழிக்கிறது!

 

இத்தகைய அருட்கொடைகளின் நாயகனான அல்லாஹ்விடம் தனது வாழ்வு வளமாக கருணை புரியுமாறு மன்றாடி நிற்பதாக கவிதையின் இறுதி வரிகள் உள்ளன. 


நான் பயணிக்க வேண்டியுள்ளேன் 

இன்னும் தொலை தூரமும் 

தீயவற்றிலிருந்து 

என்னைக் காத்;திடு 

எல்லா நேரமும்!

 

மேலும் ரிம்ஸா முஹம்மது தனது 'இருகரம் ஏந்திடுங்கள்' (பக்கம் 61) எனும் கவிதையில், நவீன உலகினில் நல்வழி தவறாது, தொழுகை முதலிய இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் நல்லிணக்கம், அயலாருடன் நட்புறவு பேணல் முதலிய இஸ்லாம் காட்டித் தந்த ஒழுக்க விழுமியங்களின் மூலமும் இம்மை, மறுமை வாழ்வை செம்மையாக்க முயல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

ரிம்ஸா முஹம்மதின் 'வசந்த வாசல்' (பக்கம் 101) எனும் கவிதையில் தொன்ம உத்தி கையாளப்பட்டுள்ளது. இக்கவிதையில் இராமன் மற்றும் இராவணன் ஆகியோரின் குணங்களைக் கூறுவதனூடாக மனித உள்ளத்தின் தன்மை குறித்து இலகுவாக வாசகர்களுக்கு உணர்த்த முனைந்துள்ளார் கவிஞர் ரிம்ஸா முஹம்மத். 


எல்லோரும் 

இராமர்கள் தானே.. 

தத்தமது இராவணக் குணங்கள் 

அம்பலமாகும் வரை!


தியாகத்திற்கு இலக்கணமாய் அமையும் ஹஜ்ஜுப் பெருநாளின் வரலாற்றையும் அதன் மகிமையையும் வெலிகம ரிம்ஸா அவர்களது 'தியாகத் திருநாள்' (பக்கம் 103) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


இப்ராஹீம் நபியவர்தான் 

இஸ்லாமிய இலட்சியத்தால் 

இனிதான புதல்வரையும்

இழந்திடத் துணிந்தாரே! 


ஹாஜரா அம்மையாரும் 

அராபியப் பாலையிலே 

வல்லவன் கட்டளையை 

வாஞ்சையுடன் செய்தாரே!

 

ரிம்ஸா முஹம்மதின் 'ஓலைக் குடிசையும் பாதி நிலவும்' (பக்கம் 105) எனும் கவிதை வாழ்க்கையில் சொல்லொனாத் துயரங்கள் சூழ்ந்து வந்தாலும் படைத்த இறைவன் மீதான நம்பிக்கையை இழக்காது, இஸ்லாத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும் என வலியுறுக்துவதோடு நாளை வரும் மறுமைக்கான விளைநிலமே உலகம் எனும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து சீறிய வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறது. 

 

உடைந்து தொங்குது 

என் குடிசைக் கூரை - வார்த்தோமே 

வீடு பணம் சுனாமிக்குத் தாரை! 

பொல்லாத கஷ்டங்கள் 

பல வந்தபோதும் 

அல்லாஹ்வைத் தவிர 

நம்பினோம் யாரை?


மனிதனை மதி இழக்கச் செய்யக் கூடிய இஸ்லாத்திற்கு முரணான மூடக் கொள்கைகளிலிருந்தும் களவு, பொய் முதலான பாவ காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுமாறு மனித சமுதாயத்திற்கு கவிஞர் அறைகூவல் விடுப்பதாக வெலிகம ரிம்ஸாவின் 'பாராமுகம் ஏனோ?' (பக்கம் 109) எனும் கவிதையின் பின்வரும் வரிகள் அமைகிறது. 


மதியை இழக்கச் செய்து 

விதியை மாற்றுகின்ற 

வித்தைகளை - மனிதா 

நீ விட்டுவிடு! 


துணையாய் 

அல்லாஹ்வை ஏற்று 

இணையில்லா அவன் அருளை 

குறைகளின்றி பெற்றுவிடு!


இவ்வாறாக, இஸ்லாத்தின் சிறப்புக்களையும் இஸ்லாம் கூறும் வாழ்க்கையையும், விழுமியக் கருத்துக்களையும் கொண்ட மிகச் சிறந்த சமயசார் கவிதைகள் இந்த 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. 

தனது சிந்தனைக் கனதியையும் அவர் தம் புரட்சிகரமான சிந்தனைகளையும் வெளிப்படுப்படுத்த உருவ ரீதியில் புதுக் கவிதையை அதிகம் கையாண்டு இவர் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகக் கவி புனைந்துள்ளார். தனது நேரகாலங்களை இலக்கியத்துக்காக அர்ப்பணித்து சிறப்பான திட்டமிடல் முறையில் காத்திரமாக இலக்கியப் பணியாற்றிவரும் படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!


தர்காநகர் சுமையா ஷரிப்தீன் 

(தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை உதவி விரிவுரையாளர்)


திறனாய்வு : தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் - கே.எஸ். சிவகுமாரன்

தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் 

- கே.எஸ். சிவகுமாரன்

ஈழத்தில் பிறந்த எழுத்தாளர்களும், இலங்கையில் பிறந்து பிற நாடுகளில் குடிபுகுந்த பல கவிஞர்களும், நம்நாட்டு ஊடகங்களிலும், மின்னியக்க முகநூல்களிலும் நிறையவே  எழுதி வருகிறார்கள். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையுடையவர்கள் முஸ்லிம் பெண்களாவர். இது வரவேற்கத் தக்க ஒரு போக்கு. அவர்களுள் ஒருவர், வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், "பூங்காவனம்" என்ற சஞ்சிகையை நடத்தி வருபவருமான ரிம்ஸா முஹம்மத் என்பவராவார். இவர் கவிதை, கட்டுரை, கதைகளோடு, நேர்காணல்களையும், திறனாய்வுகளையும் எழுதி வருகிறார். 

இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ஒன்று 'விடியல்' (2017) என்பதாகும். வைத்திய கலாநிதி எம்.கே. முகுகானந்தன் இந்த நூல் என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது? ஏன் அப்படிக் கூறுகின்றது? என்பதை அழகாக விபரித்துள்ளார். வாசகர்கள் இவரது முன்னுரையை அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டும். 

இந்த நூல், மூதூர் முகைதீன் என்ற கவிஞரின் கவிதைகளை கச்சிதமாக பகுப்பாய்வு செய்கிறது. கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளை ரிம்ஸா ஆராய்கிறார். 

ரிம்ஸாவின் தகைமைகள், முகைதீனின் ஆளுமை போன்ற பொருள்கள் பற்றி, ஆசிரியை கிண்ணியா எஸ். பாயிஸா அலி சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். 

நூலாசிரியர் ரிம்ஸா கூறுகிறார்: "கொழும்பு பல்கலைக் கழகத்தின் இதழியல் டிப்ளோமா பாட தெறிக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை "விடியல்" என்ற தலைப்பில் சில விடயங்களை சேர்த்தும், சில விடயங்களைத் தவிர்த்தும் இந்நூலை வெளியிடு செய்கிறேன்."

நூலாசிரியர் மொத்தமாக ஐந்து அத்தியாயங்களில் தனது பார்வையைச் செலுத்தியுள்ளார். எவற்றை விரிவுபடுத்தி விளக்கமாக அமைகிறது என்பதையறிய, வாசகர்கள், குறிப்பாக பல்கலைக்கழக, மாணவர்கள் 'விடியல்' என்ற நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும். 

உள்ளடக்கச் சிறப்புகளை நான் வேறு எடுத்துக் கூறுவது அவசியமில்லை. முடிவுரையும், உசாத்துணை நூல்கள், பின்னினைப்புகள் ஆகியனவும் பயன் தருவன. 

மறைந்த திறனாய்வாளரும் (விமர்சகரும் கூட) நாவலாசிரியரும், சஞ்சிகை ஆசிரியருமான க.நா.சு. அவர்களின் கூற்றுக்களை, நூலாசிரியர் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

நூலாசிரியர் தமிழிலக்கியத்தில் புலமை பெற்று உள்ளார் என்பதை விளக்க அவரது கூற்று ஒன்று போதுமானது. அதாவது: 

"தொண்ணூறுகளுக்குப் பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: திராவிட இயக்கத் தாக்கம், இனக் குழு அடையாளம், தொன்மம், மண் சார்ந்த படைப்பு என வெளிப்படும் பின் நவீனத்துவக் கவிதைகள், மண்சார்ந்த கவிதைகள் போன்றனவாகும்."

சில குறிப்பிட்ட தமிழகக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, "சிற்றூர், கிராமம் சார்ந்த வாழ்க்கைச் சித்திரங்கள் நகரமயமாதலின் விளைவு, வாய்மொழி வழக்கில் எழுதும் தன்மை, உள்ளூர் அனுபவங்களை உலகளாவிய போக்குகளுடன் இணைத்தல் எனப் புதிய மாற்றங்களை இக்கவிஞர்களால் தமிழ் கவிதை பெற்றது" என்கிறார் ரிம்ஸா. 

கவிதையின் வெளிப்பாடுகள் என்ற தலைப்பில் தமிழகக் கவிஞர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவை எனக்குப் பல தகவல்களைத் தருகின்றன. 

அத்தியாயம் 03 இல், கவிஞர் மூதூர் முகைதீன் பற்றிய முழுவிபரங்களும் தரப்படுகின்றன. அதுவே கட்டுரையாசிரியரின் நோக்கமாகும். அக்கவிஞர் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள இந்த ரிம்ஸாவின் நூல் பெரிதும் உதவுகிறது. 

சிறந்த சிங்கள இலக்கிய மொழி பெயர்ப்பாளராகவும், திறனாய்வாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் விளங்கும் திக்குவல்லை கமால் பின் அட்டையில் குறிப்பிடும் சில வரிகள் அழகாய் அமைந்துள்ளன. அவர் கூறுகிறார்: 

ரிம்ஸா "வேதனைகளையும் சோதனைகளையும் வென்றபடி, சாதனைகளை அடுக்கிச் செல்லும் அபார திறமைசாலி என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்கிறார். தென்னிலங்கை என்று நாம் கொண்டாட எமக்கிருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கிறார்."

படித்துப் பயன்பெற 'விடியல்' நூலை வாசித்துப் பாருங்கள். 

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 

Friday, May 13, 2022

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" நூல் பற்றிய திறன் நோக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" நூல் பற்றிய திறன் நோக்கு

நூல் விமர்சனம்:- இக்பால் அலி



வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" என்ற கவிதை நூலை நுகர்ந்து சுவைத்துப் பார்க்கக் கிடைத்தது. பெண்ணினம் அனுபவித்து வரும் சொல்லொண்ணாத் துயரங்களை வெளிப்படுத்தக் கூடிய மிக அருமையான கவிதைத் தொகுதியாக இந்த நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆணைக் கருவாகச் சுமந்து பெற்றெடுக்கும் பெண்கள், அந்த ஆண்களின் மூலம் பெண்கள் ஈவு இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் ஈனச் செயலையும் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் கவிஞை ரிம்ஸா முஹம்மத் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

உளவியல் ரீதியான கருத்துக்களையும் பெண்கள் அனுபவிக்கின்ற கொடூரமான சீதனப் பிரச்சினைகளையும் ஆண்களினால் ஏமாற்றப்படுதலையும், ஆண்களின் அடக்குமுறைகளையும் பெண்களது ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும், காதல் உணர்வுகளையும் தமது கவிதைகளின் மூலம் தன்னைப் படைத்து நேசிக்கும் இறைவனிடம் முறைப்பாடு செய்யும் ஒரு முறையீடாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

மனித வாழ்விலிருந்து பெண்களது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தாலும் சிலவேளை நல்லவர் போல் நடித்து ஏமாற்றும் ஆண்களிடம் சூழ்ச்சி நிறைந்த சதிவலையில் சிக்குண்டு பெண்கள் சிதைந்து, சீரழிந்து சின்னா பின்னமாகிப் போய் விடுகிறார்கள். இன்னும் பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவும் விளம்பரக் காட்சிப் பொருளாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய நிலையில் இருந்து பெண்கள் விடுதலையும் சுகமும் பெற வேண்டும் என்பதைப் பாடுபொருளாகக் கொண்ட இக்கவிதைத் தொகுதியிலுள்ள பல சிறப்பான கவிதைகள் கவிஞை ரிம்ஸாவின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைத் தரிசிக்கச் செய்கின்றது. அதேவேளையில் கவிஞையுடைய சில கவிதைகள் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளன.

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே
சூழ்ந்தது துன்பம் எமைச் சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே?

'என்ன வாழ்க்கை' (பக்கம் 35) என்னும் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகளே மேலே தரப்பட்டவையாகும்.

மனித நேயம் என்பது தாம் வாழும் சூழலில் வெறும் கண் துடைப்பாகவே காட்டப்படுகிறது. மனிதர்களுக்கிடையே காருண்யம், அன்பு, பிரியம், சிநேகம் இருத்தல் அவசியமாகும் எனவும் மிருகங்களைப் பலியிடுவது கூடாது எனவும் மேடை போட்டுப் பேசுபவர்கள்தான் மறுபுறத்தில் மனித நேயத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மறைமுகமான முறையில் மனிதக் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மனித நேயம் என்பது முக்கியத்துவமானது. ஆனால் அது தற்காலத்தில் மனிதர்களிடையே வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

கொடூரமான சிந்தனைப் போக்குடையவர்களால் திட்டமிட்ட விதத்தில் மனித நேயம் மனிதச் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன. 'மனித நேயம்' என்கின்ற சொல் மிக உயர்வானதும் புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். மனித நேயம் ஒவ்வொருவருடைய மனதை விட்டும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அப்படி நடக்காமல் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையே. எனவே நாம் இந்த அவல நிலையில் இருந்து மீண்டெழுதல் மிக அவசியம் என்று கவிஞை ரிம்ஸா முஹம்மத் மனம் பதறிக்கொண்டு அவலக் குரல் எழுப்புகின்றார்.

மனித நேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதை கதையாய்ப்
பேசுகிறார்கள்..

இது 'ஒப்பனைகள்' (பக்கம் 38) என்னும் தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளாகும். கவிஞை ரிம்ஸா தனது கவிதையின் மூலம் தம் ஆளுமையை எந்தளவுக்கு ஆழமாகப் பதிவு செய்ய முடியுமோ அந்தளவு ஆழத்திற்கு சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் உயர் நிலையை அடையலாம் என்று சொல்லுமளவுக்கு இவரது கவிதை வரிகளில் யதார்த்த வாதமும் கவித்துவமும் கற்பனை அழகும் உணர்ச்சிச் செறிவும் தனித்துவ முத்திரையும் காணப்படுகின்றன.

இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப் போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்?

கவிதை ரிம்ஸா 'காலத்தின் ஓலம்' (பக்கம் 76) என்ற தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளையே மேலே தரப்பட்டுள்ளது. மிகக் கொடிய போர்க்கால யுகத்தை மீளவும் திரும்பிப் பார்க்கக் கூடியதாக மேலுள்ள கவிதை வரிகள் காணப்படுகின்றன.

போர்க் காலத் தடங்கள் இந்தக் கவிதையில் ஊடாடி நிற்பதைப் பார்க்கின்ற போது நெஞ்சோடு அணைத்துக்கொள்ள முடிகின்றது. வாசித்த உடனே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆரம்பத்திற்கு முடிவொன்று இருப்பது போல, இருட்டுக்கு வெளிச்சம் இருப்பது போல போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நெஞ்சோடு உள்ள வடுக்களை இல்லாமல் செய்வதற்கு என்னதான் வரப்பிரசாதங்களை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொட்டினாலும் அவை ஒருபோதும் மறக்க முடியாத வடுக்களே என்கிறார் கவிஞை. கையில் சூரியனைவிடப் பெறுமதியான செல்வத்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும் போரினால் காயப்பட்ட மக்கள் எந்தவொரு வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏனென்றால் இந்த கண் துடைப்பெல்லாம் அவர்களின் துயரங்களைத் துடைத்தெறியாது என்பதனாலாகும்.

தனக்கே உரிய பாணியில் திரும்பத் திரும்ப வாசித்து நினைவில் மறக்காமல் வைத்திருக்கின்ற கவிதைகளை எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பரவித்; தந்துள்ளார் கவிஞை ரிம்ஸா.

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும் பேச்சால் துளைத்தெடுப்பான்..

'முகவரி தேடும் மலையகம்' (பக்கம் 120) என்னும் தலைப்பில் எழுதிய மிக அருமையான கவிதையின் வரிகளே இவையாகும்.

மலையகப் பெண்கள் தம் உடலின் வியர்வைத் துளிகளை உதிரமாக நீர் பாய்ச்சி தேயிலைக் கொழுந்துகளைப் பறிப்பவர்கள். சிலவேளைகளில் துரைமார்களுடைய பார்வையில் போகப் பொருளாகவும் பார்க்கப்படுவாள். அவள் உடல் அட்டை கடிக்கும் கடுமையான வேலைப் பணிக்கும் கடுமையான வெயிலுக்கும் கடுமையான குளிருக்கும் உள்ளாகித் தம் உடல் அமைப்பிலும் வேறுபடுத்திக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். கங்காணிமார் அல்லது துரைமார்களுடைய சினச் சொற்கள் தினசரி காதுகளில் உள்வாங்கப்பட்டு அவ் விசக் கருத்துகள் எவ்வளவுதான் மனதில் தைத்துக் கொண்டிருந்தாலும் சரி, தம் உடலில் எவ்வளவுதான் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் சரி அதற்கு மாறாக அவர்கள் அந்த வலிகளை உதிர்த்துவிட்டு மனம் நொந்து, வெந்து பழக்கப்பட்ட இந்த மலையகப் பெண்கள்தான் இந்நாட்டுக்கு தேயிலையின் மூலம் அந்நியச் செலாவணியை அதிகம் பெற்றுத் தருபவர்கள். இப் பெண்கள்தான் இந்நாட்டின் விலையும் மதிப்பும் அழகும் மிக்கவர்கள் என்பதன் காட்சிகளைத் தம் கவிதைகளில் கவிஞை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

ஆக, பெண்களது சமூக முன்னேற்றத்துக்கும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமனாகப் பயணம் செய்ய வேண்டும் என்று துடிக்கும் இளம் சந்ததியினர்களுக்கும் "எரிந்த சிறகுகள்" என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் நல்ல பாடுபொருள்கள் உள்ளன.

கலாநிதி துரை மனோகரன் எழுதிய முன்னுரையில் 'இக்     கவிதைத் தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மிகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலைமை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்கள் ரிம்ஸாவின் கவிதைகள் தொட்டு நிற்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான அணிந்துரையை வைத்திய கலாநிதி கவிஞர் தாஸிம் அகமது முன்வைத்துள்ளார். அடுத்து இந்நூல் பற்றி கவிமணி என். நஜ்முல் ஹுஸைன் குறிப்பிடுகையில் 'வாசிப்போர் இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் கவிதை படைப்போர் தமது முயற்சிகளிலே வெற்றி பெறுகின்றனர். தமக்கும் புரியாது வாசிப்போரையும் குழப்பம் கவிதை நூல்கள் வாசகர்களால் புறந்தள்ளப்படுகின்றன. அந்த வகையில் மிகவும் இலகுவான சொற்களினால் தனது கவிதைகளை ஆக்கியுள்ளார் கவிதாயினி ரிம்ஸா முஹம்மத்' என்று தமது கருத்துரையில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துரையினைத் தேசிய கல்வி நிறுவகத்தின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியரும் கண்டி கல்வி வலய ஆசிரியர் ஆலோசகருமான திருமதி. ரதி. தேவ சுந்தரம் வழங்கியுள்ளார். அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்த நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் முன்வைத்துள்ளார். கவிஞை ரிம்ஸாவின் பணி தொடர வாழ்த்துகிறேன்!!!


நூல் - எரிந்த சிறகுகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 400 ரூபாய்


நூல் விமர்சனம்:- இக்பால் அலி