Tuesday, November 28, 2017

எரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை

எரிந்த சிறகுகள் நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் ஆற்றிய உரை

கவிஞர் ரிம்ஸா முஹம்மத் என்ற பெயர் சிலகாலமாக நாளாந்தம் நாவில் உலாவரும் ஒரு பெயராக மாறியிருப்பதை தமிழிலக்கிய நெஞ்சங்கள் மறுக்க மாட்டார்கள். தன் பன்முக ஆளுமைகளால் தமிழிலக்கிய நெஞ்சங்களையும் சமூக ஆர்வலர்களையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் சகோதரி ரிம்ஸா அவர்கள்.

கவிதை, கட்டுரை, சிறுகதை. குழந்தை இலக்கியம், இதழியல், விமர்சனம் என பல தளங்களிலிருந்து பல பரிமாணங்களில் தன் ஆற்றலையும் சமூகம் சார்ந்த அவரது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் ரிம்ஸா அவர்கள். இலங்கையில் பல கலை இலக்கிய சமூக சஞ்சிகைகள் வெளி வந்து பல இக்கட்டுக்களால் நின்று போயிருக்கும் இந்நிலையிலும் துணிவோடு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாத இதழொன்றை ஆரம்பித்து சோர்வில்லாது தளராது நடத்தி வருகிறார் என்றால் அவரது மனத்திட்பத்துக்கும் வினைத்திட்பத்துக்கும் அதுவே கட்டளைக்கல்லாக அமைந்துள்ளது.

பூங்காவனம் இதழின் பெயரென்றாலும் அவ்வனத்தினுள் புகுந்தால் பூக்களை மட்டுமல்ல பூகம்பங்களை, பூக்கம்பங்களை, தீ கங்குகளை காணமுடியும். இத்தகு இயல்புகள் கொண்ட சகோதரி கவிதைகள் வடிப்பதில் சிறப்பான ஆற்றல் கொண்டிருக்கிறார். கலைகளின் இராணி கவிதை என்பது ஒரு பெருங்கவிஞனின் கூற்று. தக்க சொல்லை தக்க முறையில் தக்க வடிவில் அடுக்கி அமைவது தான் கவிதை என்றான் ஆங்கிலக் கவிஞன் the best words in the best order


கவிதைக்கலை ஏன் தோற்றம் பெறுகிறதென்பதை அறிஞர் மு.வரதராசனார் பின்வருமாறு தனது இலக்கியத்திறன் என்ற நூலில் கூறுகிறார்.

1.தன்னுணர்ச்சியை வெளியிடும் விருப்பம்

2.பிறருடைய வாழ்விலும் செயலிலும் நமக்குள்ள அக்கறை

3. உண்மையுலகில் உள்ள ஆர்வமும் அதையொட்டி கற்பனையுலகினைப் படைப்பதில் உள்ள ஆர்வமும்

4.ஒலி கோடு வண்ணம் சொல் முதலியவற்றுக்கு அழகிய வடிவம் தந்து அமைப்பதில் உள்ள ஆசை

இவற்றுள் முதலிரண்டுமே உணர்ச்சி கருத்து என்னும் உறுப்புகளாக இலக்கியத்தில் அமைவன. மூன்றாவது கற்பனை என்னும் உறுப்பாக அமைவது. நான்காவது இலக்கியத்துக்கு வடிவம் என்னும் உறுப்பாக அமைவது.

கவிஞர் ரிம்ஸாவின் கவிதைகள் அறிஞர் மு.வ. சொன்ன இலக்கணத்துக்கு சாலும் சான்றாக அமைந்திருக்கிறதென்று சொன்னால் அது எவ்வகையிலும் தவறானதாக இருக்காது. கவிஞர் றிம்சாவின் இக்கவிதை நூலில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப்பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கவிதை நூலுக்கு எரிந்த சிறகுகள் என்று பெயர் தந்திருக்கிறார் கவிஞர். சிறகுகள் எரிந்தால் பறவைகளுக்கு இருவகை இடருக்கு வாய்ப்புண்டு. பறக்க இயலாமை அல்லது உயிர்க்க இயலாமை மரணம். ஏன் இந்தப் பெயரிட்டார் என எண்ணிப்பார்க்கிறேன். நூலின் முதற்கவிதையைப் படித்ததும் அதற்கு விடை கிடைக்கிறது. முதலாவது கவிதையின் தலைப்பு வெற்றிகள் உன்னை ஆளட்டும் என்பது. எரிந்து போவது தோல்வியென்று கருதாதே அதனை நீ வெற்றியாக்க முடியும் என்பதை கவிஞர் தனது கவிதையின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறார். இன்றைய இளைஞன் எதற்கெடுத்தாலும் அச்சப்படுகிறான் அயர்ச்சியடைந்து விடுகிறான் தளர்ச்சி போக்கி விசையுறு பந்தினைப் போல் எவ்விதம் எழுந்திட முடியும் என்பதை கவிதையின் ஒவ்வொரு வரியும் நமக்குணர்த்துகிறது.

துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா
துயரங்கள் உன் கதவை தட்டுகின்றதா
இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே
எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே

என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்ட றிம்சா இவ்விதம் பதில் தருகிறார்

சமயம் வந்தால்
இமயமும் உன் காலடியில்
இறைவனை நாடினால் நிச்சயம்
நீ புரளலாம் கோடிகளில்

மேலும் கவிஞர் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

தோல்விகள் வெறும் சம்பவம் தான்
துணிந்திடு தோழா வெற்றி சரித்திரம் தான்

இவ்வரிகளைப் படிக்கும் போது வள்ளுவரின் தன்னம்பிக்கைக் குறள் ஞாபகத்துக்கு வருகிறது.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக எனத் துன்பத்தைப் பட்டியலிடுவார் இராமச்சந்திரக் கவிராயர். எத்தனை துன்பம் வந்தாலும் துணிந்து செயற்பட்டால் இன்ப முகவரி உனக்குத் தெரியும் கவிஞர் தொடர்கிறார்.

தைரியம் கொண்டு நீயிருந்தால்
இன்பக் கனவுகள் ஓடிவரும்
கோழையாக வாழ்ந்திட்டால்
காணாத கவலைகள் தேடி வரும்

என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார் நமக்கு.

முதற் கவிதைக்கே இத்தனை சிறப்பென்றால் தொகுதியிலிருக்கும் கவிதைகள் எல்லாமே முத்து பவளம் முக்கனி சர்க்கரை என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது. அன்றைய கவிதைகள் அவ்வக்காலச் செல்நெறிகளோடு அமைந்திருந்தனவா என்பது ஐயத்துக்குரியதே. பாரதி காலம் வரையில் கவிதை இலக்கியம் உயர்தட்டு மக்களின் உப்பரிகையில் உலாவரும் உல்லாசிகள் ஒய்யாரிகள் போன்றிருந்தன என்று சொன்னால் என்னில் பிழை காண யாரும் விழையார். ஆடிப்பாடி வேலை செய்வோரையும் அன்றாடங் காய்ச்சவொண்ணாது அல்லல் படும் ஏழையரையும் மனிதராக எண்ணி அவர் அவலம் சொல்லி அதை அகற்ற வழியும் சொல்ல ஆரம்பித்த போது தான் அருமையான கவிதைகள் உதயமாயின. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று உணர்ச்சி கொண்டு பாரதி விதி சமைத்த பிறகு வந்த கவிஞர் பட்டாளம் சமூக அவலங்களை கவிதையில் சுமக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் இன்று றிம்சா முகம்மட் எழுந்து நிற்கிறார் என்று தான் நான் கூறுவேன்.

இதோ இன்னொரு நம்பிக்கை தரும் கவிதை இன்றைய மனிதன் மனிதமின்றி வாழ்கிறான் புனிதமற்று வாழ்கிறான் நரியும் புலியும் இன்னோரன்ன விலங்குகளின் குணத்தின் மொத்த உருவமாக வாழ்கிறான். இதோ மனிதம் இல்லாத மனிதனை கவிஞர் படம் பிடிக்கிறார்.மனிதர்கள் பலவிதம் என்ற கவிதையில்

பொறாமை தனை நெஞ்சில் ஏற்றி
பொருமி பொருமி அலைகிறான்
எருமை போல நடந்து கொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்

பேனை பிடித்து பேருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
போனில் பேசி பெண்களை
எல்லாம் ஏமாற்றுபவன் இருக்கிறான்

மாடி வீடு காரு காசு
தேடி திரியிறவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரை மிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்

இவ்விதம் பட்டிகளாக வாழும் விலங்குகளின் பட்டியல் நீள்கிறது.இவர்களை வென்று வாழ வேண்டும் வென்றால்தான் வையம் உன்னை மதிக்கும் துதிக்கும் இதோ இதைத் தெரிந்தால் வெற்றி உனது என்கிறார் கவிஞர்.

போராட்டம் தான்
இன்ப நீருற்றின்
அத்திவாரம்

இதைத்தான்  கவிஞர் வைரமுத்து சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன் நீ மனிதன் என்று சொன்னார்.

ஒட்டு மொத்தத்தில் இக்கவிதை நூல் நமக்கெல்லாம் வேகமும் விவேகமும் தரும் விதைகள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் நூல். கவிஞர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் தமிழன்னைக்கு புதிய ஆரமொன்றைப் படைத்தளித்திருக்கிறார். அவர் பணி தொடர வாழ்த்தி விடை பெறுகிறேன்.   

1 comment:

  1. https://sekolahbestari-premalatha.blogspot.com/2009/11/sekolah-bestari.html?showComment=1557820953968#c2366489214156223456

    ReplyDelete