Friday, January 4, 2019

விடியல் நூலுக்காக வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய முன்னுரை

விடியல் நூலுக்காக வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய முன்னுரை

திசை எல்லாம் தமிழ்க் கவிதை. விழி படும் தாள் எல்லாம் கவிதைகளும் கவிஞர்களும். பத்திரிகை, சஞ்சிகை,   நூல்கள், இணையம் எங்கணும் நிறைந்து வழிகின்றன.  நீக்கமற வியாபித்தும் கிடக்கின்றன. சற்றே மலிந்தும் என்றும் சொல்லலாம்.

இத்தகைய சூழலில் தேர்ந்தெடுத்த ஒரு கவிஞனின் படைப்பாளுமைiயும் சமூக நோக்கையும் நோக்குவதோடு  இன ஐக்கியம் நோக்கிய அவனது உன்னத பயணத்தையும் ஆய்வு செய்கின்ற நூல் ஒன்று உங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

கவிதைக் கடலில் ஆழக் கால் பதித்ததுடன் உருவகக் கதை, விமர்சனம், இலக்கியக் கட்டுரை என பல துறையில் தன் ஆற்றலைப் பதிவு செய்த மூத்த எழுத்தாளர் ஒருவரது படைப்புகள் பற்றி, இளம் வளர்ந்து வரும் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகுக்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இந்தப் புதிய நூலுக்கு அணிந்துரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.

இது ஒரு ஆய்வு நூல். மூதூர் முகைதீன் அவர்களது கவிதை உலகை ஆய்வு செய்ய முற்படுகிறது. ஏனோதானோ என்ற ஆய்வாக இல்லாமல் விமர்சனத் துறையில் புலமையும் வித்தகமும் கொண்ட ஒருவரால் வரன் முறையாகச் செய்யப்படும் ஆய்வாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்கின்றேன். ஆனால் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அவரது இலக்கிய ஈடுபாடு பற்றியும், அர்ப்பணிப்பு பற்றியும் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கிறேன். நீர்வை பொன்னையனின் வழிகாட்டலில் இயங்கிய இலக்கிய குழுவில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து செய்பட்ட இவருக்கு அதற்கான ஆற்றல் நிச்சயம் இருக்கவே செய்கிறது.

முதல் அத்தியாயமானது மூதூர் முகைதீன் அவர்களின் படைப்புகளை எந்த வகையில் இந்த நூல் ஆய்வுக்கு உட்படுத்துகிறது என்பதைக் விளக்குகிறது. அடுத்த அத்தியாயமானது கவிதை என்றால் என்ன, அதன் வகைகள் எவை, கால மாற்றத்துடன் கவிதை உலகில் ஏற்பட்ட மாற்றங்களையும் வளரச்சியையும் பேசுகிறது. மூன்றாவது அத்தியாயம் கவிஞர் மூதூர் முகைதீன் பற்றியும் அவரது படைப்புலகம் பற்றியுமான அறிமுகத்தைத் தருகிறது.

நூலின் முக்கிய பகுதி நாலாவது அத்தியாயம்தான். கவிஞரின் மூன்று கவிதை நூல்களை அடிப்படையாக வைத்து அவரது படைப்புலகையும் ஆற்றலையும் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் பார்க்கும் பகுதி. மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த உதாரணங்களின் துணையோடு தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.

ஆய்வுக்காக கடமை நிமிர்த்தம் படித்து எழுதியது போலன்றி அந்த நூலின் ஒவ்வாரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அந்தக் கவிஞனின் உலகிற்குள் நுழைந்து ரசனையுடன் மூழ்க வைக்கும் பகுதியாக உள்ளது.

இன ஒற்றுமை பின்பு தவறான முடிகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை தனது கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.

காலத்தின் தேவையான முக்கிய கருத்தை கவிஞரும் ஆய்வாளரும் முன்னிலைப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உதாரணத்திற்கு, இனங்கள் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் புரிந்துணர்வுடன் வாழ்ந்த காலம் இருந்தது. ஒருவரது இன்பங்களிலும் துன்பங்களிலும் ஓருயிர் போல பங்கெடுத்த காலம்.

சின்னராசாவின் பக்கத்தில்
அன்வர் இருந்து
மோதகம் உண்பான்
ஐயர் வந்து சிரித்தபடியே..
அவித்த கடலையையும்
அள்ளிக் கொடுப்பார்..

எத்துணை நிஜமான வரிகள்.

ஷஷமுஸ்லிம்களின் நோன்புப் பெருநாளைக்கு தமிழர்கள் வந்து சாப்பிடுவதும், தமிழரின் பண்டிகைகளின் போது முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி விரும்பிச் சாப்பிடுவதும் அந்தக் காலம் தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றது. பாரபட்சம் பார்க்காமல், இன மதம் பார்க்காமல் ஒற்றுமையை எந்தளவுக்கு கடைப்பிடித்திருக்கின்றார்கள் என்பதை மேலுள்ள கவிதை வரிகளில் நன்கு உணர முடிகின்றது.' என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

ஓவ்வொருவரது வாழ்விலும் இத்தகைய நிகழ்வுகள் அந்நாளில் சகஜமாயிருந்தன. போர் வந்தது. சந்தேகங்கள் உதயமாயின. வலுக்கட்டாய இடப் பெயர்வு எல்லாவற்றையும் அடியோடு குலைத்தது.

இந்நிலை மாற வேண்டும். மக்கள் பகைமைகளை மறந்து மீண்டும் ஒன்று கூடிவாழ வேண்டும் என்பதைக் கவிஞனின் பின் வரும் வரிகளை எடுத்துக் காட்டி வலியுறத்துகிறார்        நூலாசிரியர்.

இனத்தின் பெயரால் நாம் பிரிந்து
இணங்கி வாழும் வழி மறந்து
மனதில் பகைமை தான் வளர்த்து
மனித நேய மாண்பிழந்து
பிணக்கில் வாழும் பிழைதீர
பிறப்பின் நோக்கைப் புரிந்திங்கே
குணத்தை மாற்றிக் குறை நீக்கி
கூடி ஒன்றாய் வாழ்வோம் நாம்

கவிஞர்கள் என்போர் தத்தமது காலத்தில் நிகழும் விடயங்கள் பற்றி எழுதி வைப்பவர்கள். அப்போதுதான் எதிர்காலத்தவர்களுக்கு முன்னைய காலம் பற்றி அறிந்து
கொள்ளக் கூடியதாய் இருக்கும். பிரச்சனை பற்றித் தமது எழுத்துக்களினூடாக சமூகத்தாருக்கு பெற்றுக்கொடுப்பதே ஒரு எழுத்தாளனின் பணியாகும். அத்தகையவர்களுக்கு கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகள் என்று தனது அவதானத்தை செலுத்துகிறார் நூலாசிரியர்.

சிறுவர்களிடமும் இன ரீதியான ஒற்றுமை வளர்ந்தோங்க வேண்டும். அவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழக் கற்றுக் கொள்வார்கள். வீடுகள் பாடசாலைகள் அறநெறிப் பாடசாலைகள் சிறுவர்களிடத்தில் மாணவர்களிடத்தில் இத்தகைய நல்ல பண்பை வளர்க்க உதவி புரிய வேண்டும். போன்ற உயரிய கருத்துக்களை கவிஞரின் படைப்புகளிலிருந்து உதாரணங்களோடு எடுத்துக் காட்டியிருப்பது முக்கியமானது.

வெறும் ஆய்வாக இல்லாமல் இந் நாட்டின் சமூகங்கள் பயணிக்க வேண்டிய வழியை சொல்லும் நூலாகவும் இது அமைகிறது.

ஷஷதிரும்பிப் பார்க்க முடியாத
தூரத்தில் இருக்கும்
சமாதான மலர்களின் மணத்தை
மறுபடியும் நுகரும் ஆவலில்'

எனக் கவிஞர் முகைதீன் ஒருகாலம் பாடியிருந்தார். இல்லை.
காலம் கனிந்து விட்டது. ஐக்கியம் புரிந்துணர்வு இனங்களின் சௌஜன்யம் யாவும் புலர்வற்கான ஒளிக் கீற்றுகள் பரவத் தொடங்கிவிட்டன என்பதற்கு கவிஞர் முகைதீனின் சில கவிதைகளும் வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் ஆய்வு வரிகளும் சாட்சியமாக இருக்கினறன என்பதை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.

ஆய்வு நூல் என்பதற்கு அப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஸ்மாக வாசிக்கக் கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது எதிர்கால இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!!!

நூல்:- விடியல் 
நூலின் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=

No comments:

Post a Comment