Friday, January 4, 2019

விடியல் நூலுக்காக கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை

விடியல் நூலுக்காக கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை

சகோதரி ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகளில், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப் பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பவர்.

மேலும், கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB பட்டங்களைப் பெற்றிருப்பதோடு க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தரம் கற்கும் மாணவருக்குப் பயனளிக்கும் வகையில் கணக்கீடு தொடர்பான பல்வேறு நூல்களை வெளியிட்டிருப்பதை இவரது துறைசார் புலமைக்கும் சான்றெனக் கொள்ளலாம்.

அத்தோடு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவைப் பயின்ற காலப் பகுதியில் இவர் மேற்கொண்ட ஊடகத்தின் வாயிலாக இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகள் தொடர்பான ஆய்வை ''விடியல்'' என்ற தலைப்பில் நூலாக்கியிருப்பது இலக்கிய அபிமானிகளுக்கு மாத்திரமன்றி உயர் தர, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமது ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான தேடல்களை இலகுபடுத்தக் கூடியதும் பயனளிக்கக் கூடியதுமான ஒரு அரிய முயற்சியாகும் என்பதில் ஐயமில்லை.

இத்திறனாய்வு நூலானது கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இலக்கிய அனுபவங்களையும் அவரது கவித்துவ புலமையையும், அரசியல், சமூக, கலாசார சிந்தனைத் திறனையும் நமக்குத் தெளிவாகப் புலப்பட வைக்கின்றது. அவரது சாதனைகளுக்குக் கிடைத்த கௌரவங்களுக்கும், சமூகத்தோடு அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவுகளுக்குமான அடையாளச் சின்னமாக இந்த ஆய்வு நூல் திகழ்கின்றது. ஒருமுறை மூதூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற போது அவருக்குக் கிடைத்த கௌரவங்களைக் கண்டு அசந்து போன சொந்த அநுபவமொன்றையும் இங்கு பதிவிட்டே ஆக வேண்டும்.

இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் அவரது கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர்  மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென் மேலும் அழகையும் பொலிவையும் புதுப் புது அர்த்தங்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகிறது.

மிகுந்த மரியாதைக்குரிய எமது மூத்த இலக்கிய செயற்பாட்டாளரான முகைதீன் ஆசியருக்கும் எழுத்தாளர் ரிம்ஸாவுக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!!

நூல்:- விடியல் 
நூலின் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=

No comments:

Post a Comment