Saturday, May 21, 2011

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

கவிஞன் ஒரு படைப்பாளி. படைப்பாளியின் இதயத்திலிருந்து பிறப்பது கவிதை. கவிதை அவனது முகம். வெலிகம ரிம்ஸாவின் இந்த நூல் எமது கவிதை உலகுக்கு ஒரு புதுமுகம். ஆனால் அவரது கவிதைகள் பல எமக்கு பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானது.

கவிஞனின் அகத்தில் எழும் உணர்வுகள் கவிதை வடிவம் பெறுகின்றன. ஆழ்மனத்தின் ஓலங்கள், இன்பகரமான எண்ணங்கள் இவற்றுக்கு கவிதை ஒரு வடிகாலாகின்றது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான மொழிக்கு அங்கே ஒரு முக்கியமான இடமுண்டு.

இந்த நூலின் தலையாய சிறப்பாக நான் குறிப்பிட விரும்புவது இதன் மொழிநடை. எளிமையான கவிதை மொழி. இரண்டு மூன்று தடவைகள் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியதில்லை. வாசகர்களை மருட்டுகிற சிக்கலான மொழிநடை இங்கு இல்லை. பழகு தமிழில் இலகு கவிதை. தனது தேவைக்கேற்ப உருவத்தை அமைத்துக்கொண்டுள்ளார். ஒருவரை விழித்து பல கவிதைகளில் அவருடன் உரையாடுகிறார். புதிய தேவைகள் எப்போதும் புதிய வடிவங்களைப் பிரசவிப்பதில் ஆச்சரியமில்லை. கவிதை சொல்லும் முறைமை சிறப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கின்றன
தெரியாமல் நீ
வீசிச்செல்லும் பார்வைகள்

ரிம்ஸாவின் பாணியிலும் ஒரு தனித்தன்மையுண்டு. கவிதைகளில் எதுகை மோனைகள் வந்து விழுந்திருக்கின்றன. அவ்வாறே சந்த ஒழுங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

பாலைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் - என்னை
பிணைத்துக்கெண்டவளே
அன்பால்
அணைத்துக்கொண்டவளே

படிமம், குறியீடு என்கிற புதுக்கவிதை உத்திகளைவிட இவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதனால் கவிதைகளின் ஒலி நயம் சிறந்திருக்கின்றது. ஆனால் அதுவே சொற்களின் கனதியைக் குறைப்பதற்கும், கட்டுக்கோப்பைக் குலைப்பதற்கும் சில இடங்களில் காரணமாகி விடுகின்றன. துக்கம் கனத்துத் துயில்கிறதா... என்ற வரியை இங்கே சுட்டிக்காட்டலாம். அதே சமயம் சில கவிதை வரிகள் அருமையாக அமைந்துவிட்டிருக்கின்றன.

காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டுவைத்தேன்...
உனை என் மனசில் நிரப்பி
இறுக தைத்தேன்!

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்த ஒரு புதுப்பாணி. மரபுக்குள் இருந்து கவிதை எழுதும் புதுக் கவிதையாளர் வழியில் ரிம்ஸாவும் முகிழ்ந்து நிற்கும் ஒரு புதிய கவிஞர்.

ரிம்ஸா பல கருப்பொருள்களைக் கையாண்டுள்ளார். தாய்ப்பாசம், நம்பிக்கை, காதல் ஏக்கம் இப்படிப் பல... ஆனாலும் காதல் பெருமளவு இடத்தைப் பிடித்துவிட்டது. காதல் உணர்வின் பல்வேறு நிலைகள், காதலில் வீழ்தல், தவித்தல், பிரிந்து தவித்தல், புறக்கணிப்புக்கு ஆளாதல், ஏமாற்றம் என்று அவை பல. உதாரணமாக மௌனத் துயரம் என்ற கவிதையைக் குறிப்பிடலாம். கவிஞரிடம் கற்பனை இருக்கிறது. உணர்ச்சி வேகம் இருக்கிறது. கவிபுனையும் ஆற்றலும் இருக்கின்றது. அதனால்தான் காதலின் நுண்ணிய வேறுபாடுகளோடு வெவ்வேறு படிநிலைகளை அவரால் காட்ட முடிகி;றது. எனினும் சமூக நோக்குடனான கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளன. இது கவனிக்கப்பட வேண்டியதொன்று. தனிமனித உணர்வு நிலைக்கு ஈடாக சமூகம் பற்றிய அக்கறையும் புலப்படவில்லை. அக உணர்வுகளுடன் சமூகம் மோதும்போது சில கவிதைகள் பீறிட்டுக் கிளம்பியுள்ளன. அதே போல தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை அவலங்கள் சமூகத்தின் சிந்தனை பற்றி இன்னும் சில கவிதைகள் தந்திருக்கலாம். அது கவிஞரை இன்னுமொரு மேலான தளத்திலே ஏற்றி வைக்கும். விடியலைத் தேடும் வினாக்குறிகள் போன்ற கவிதைகள் தேவை.

ஒரு பெண் தனித்து இயங்கும் போது அச் சமூகத்தால் விடுப்பு பார்க்கப்படுகிறாள். அந்தப் பார்வை வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மௌனித்துப்போன மனம் என்ற கவிதை இதை உரக்கவே பேசுகிறது. முடிவில் மௌனித்துவிடும் பெண்ணைக் கோடிட்டுக் காட்டுகிறார். பெண்ணின் இருப்பு மறுதலிக்கப்டுகையில் அவள் நிழலாக இயங்குகின்றாள். துவண்டுவிட்ட அவள் மனதை, உள்ளக் குமுறலை ஒரு கவிதையில் வடிக்கிறார். கொள்ளைப்போன தனது கனவுகளை உரக்கக் கூறி அவள் தனது இருப்பை நிலைநாட்டுகிறாள். உதாரணமாக ரணமாகிப்போன காதல் கணங்கள் என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.

இப்படிப் புலம்புகின்ற பெண் புயலாக எழுகிறாள். புயலாடும் பெண்மை - இங்கே தான் இந்த நூலின் தலைப்புடன் ஏதோ ஒரு பொருத்தப்பாட்டை நான் காண்கிறேன். தென்றலின் வேகம் கூடினால், அது புயலாகவும் உருவெடுக்கக்கூடும். மொத்தத்தில் தனது மன ஆழத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை, உறவுச் சிக்கல்களாலும், உணர்வுச் சிக்கல்களாலும் அலைக்கழிக்கப்படும் பெண்ணை எமக்குக் காட்டுகிறார் கவிஞர். புறக்கணிக்கப்படும் பெண்ணின் அழுகையாக, வலியாக, வேதனையாக, ஏமாற்றமாக, கனவாக... இப்படி பல பதிவுகள் இந்நூலில் உள்ளன. கவிஞருக்கு இந்த எழுத்து ஒரு வடிகாலாகும். அதே சமயம் பெண் எழுத்திற்கு இது ஒரு வெற்றியாகவும் அமைந்து விடுகின்றது.

வாழ்வில் நம்பிக்கை வேண்டும் என்று அடித்துக்கூறுகிற சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. வெற்றியின் இலக்கு, வானும் உனக்கு வசமாகும் முதலிய கவிதைகள் மனிதனின் ஆற்றலை உணர்த்தி நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன.

ரிம்ஸாவின் கவிதைகள் இலகுவான நடையில் நீரோட்டம்போல தவழ்ந்து, தென்றலைப்போல எம்மைத்தடவி சுகம் சேர்க்கின்றன. ஆத்மார்த்தமான அனுபவங்கள் முகங்காட்டுகின்றன. சொற்கள் கவிஞரின் கைவண்ணத்தில் கைகட்டி நிற்கின்றன. ஆனால் தலைப்புக்களில் சிலவற்றை கவிதையின் கருத்துக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கலாம்.

பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணே பேசுவதில் உள்ள சிறப்பை பல கவிதைகளில் காண்கிறோம். இன்னும் அவரது பார்வையை விசாலமாக்கியிருக்கலாம். குடும்ப அமைப்பிலே பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் கவிதைகளில் பரிணமித்திருக்கலாம். இனிவரும் கவிதைகளில் சமூகத்தின் பல பரிமாணங்களையும் உற்று நோக்கல் சிறப்பு தரும். ஒரே அச்சாணியில் பல கவிதைகள் சுழல்வதையும் தவிர்க்கலாம்.

கவிதை என்பது மனிதர்களின் மனங்களும், முகங்களும் சம்மந்தப்பட்டது. கவிஞரின் முகம் அங்கே தெரிகிறது. சமூகத்தின் முகமும் அங்கே தெரிகிறது. அதனால்தானோ என்னவோ ஓவியர் ஸ்ரீதர், முகங்களிலே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதுபோல இன்னும் சிறப்புகளுடன் கூடிய பல கவிதைகளை கவிஞரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment