Tuesday, September 7, 2010

01. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - க. பரணீதரன்

01. 'தென்றலின் வேகம்'  நூல் விமர்சனம் - க. பரணீதரன்

- க. பரணீதரன்

இலக்கிய கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், நூல்விமர்சனங்கள் போன்ற கலை இலக்கிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்தி வரும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக முஸ்லிம் தமிழ் இளம் பெண் படைப்பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

ஈழத்துப் பெண் எழுத்தாளர்களின் இன்றைய எழுத்துக்கள் மிகவும் உந்நதமானவையாகவும், இலக்கியத் தரம் வாய்ந்தவையாகவும், பேசப் படத்தக்கவையாகவும் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் எழுத்தாளர்களான கெகிராவ ஸஹானா, கெகிராவ ஸூலைஹா, மஸீதா புண்ணியாமீன், அனார், பஹிமா ஜகான், வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா ஆகியோர் தொடர்ந்து இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புக்களை தந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தனியே பெண்ணியம் மட்டும் பேசாது, யதார்த்த உலகைப் புரிந்துகொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரைகள் வாயிலாக தாம் சொல்ல வந்த கருத்தை மிகச் சிறப்பாக உலகிற்கு எடுத்தியம்புகின்றனர்.

ஈழத்து இலக்கியம் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதற்கு இங்கு மாதா மாதம் வெளி வந்து கொண்டிருக்கும் நூல்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத்தொகுப்பு ஸ்ரீதர் பிச்சையப்பாவின் அழகிய ஓவியத்துடனும், கவிஞர் ஏ.இக்பாலின் முன்னுரைக் குறிப்புடன் 64 பெருங் கவிதைகளையும், 29 சிறு கவிதைகளையும் தாங்கி அழகான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

நூலாசிரியையின் என்னுரையிலிருந்து அவரது இலக்கியம் மீதான பற்று வெளிப்படுகின்றது. இத்தொகுதியில் உள்ள கவிதைகளின் பாடு பொருளாக காதல், நட்பு, பிரிவுத்துயர், மனிதாபிமானம், பெண்ணியம், வறுமை, ஆன்மீகம், தாய்ப்பாசம் என்பன பாடப்பட்டுள்ளது.

64 கவிதைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகள் காதல் பற்றியதாகவே காணப்படுகின்றன. காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. அந்த வகையில் ரிம்ஸா ஒரு இளம் படைப்பாளி, அவரின் இத்தொகுப்பில் காதல் மிகுந்து நிற்பது புதிதன்று. இவருடைய காதல் கவிதைகள், காத்திருப்பு, பிரிவுத்துயர், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஊடல் நிறைந்தவையாக வெளிப்பட்டு நிற்கின்றன.

அதிகமான கவிதைகள் காதலனிடம் காதலி காதல் வேண்டி நிற்பதாகவே காணப்படுகின்றது. 'என்னவனே', 'காதலனே' போன்ற சொற்கள் பல கவிதைகளில் இடம் பெறுவது வாசகனிடத்து சற்றே சலிப்பை உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் கவிதைக்கு பொருந்தக்கூடிய இடங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. காதலுக்காக இவ்வுலக ஜீவன்கள் எல்லாம் ஏங்குகின்றன, அதில் வெற்றி பெறுபவர் சிலரே. அவ்வாறு தோல்வி கண்ட உள்ளங்களின் துயரானது அவர்களின் எழுத்துக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறான தோல்வி கண்ட காதல் பற்றிய கவிதைகளே இங்கு எழுதப்பட்டுள்ள பெரும்பாலான கவிதைகள். இவருடைய காதல் கவிதைகள் மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டவையாகவும் வாசகர்களை இலகுவில் பற்றி இழுக்கக் கூடியவையாகவும் காணப்படுகின்றது. காதல் சார்ந்த கவிதைகளின் மொழி சிறப்பாக உள்ளது. உதாரணமாக:-

குரலுடைந்த குயில் !

'சோலை மலர்களே...
அந்த சுந்தரனின்
நினைவால்
சோர்ந்து போய்
இச்சுந்தரி
இருப்பதை அறிவீர்களா?

ஓடும் மேகங்களே...
மன்னனின் மௌனத்தால்
இம் மங்கையின் மாறாத மனம்
மங்கிக் கிடப்பதை
மொழிவீர்களா?
.......................'

நட்பு பற்றிய கவிதைகள் அதீத பாசத்தை வெளிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன. நட்பு பற்றிய கவிதைகளின் கருத்து யதார்த்தத்துக்கு பொருந்துமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. சமூகம் மீது கரிசனையுடன் சமூக மாற்றம் வேண்டி சில கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமானம் சார்ந்த கவிதைகள் இயல்பாக கூறப்பட்டுள்ளது. 'கண்ணீரில் பிறந்த காவியம்' கவிதையில் இருந்து உதாரணமாக சில வரிகள்:-

மரத்து விட்ட
மனித மனங்களில்
மருந்துக்குக் கூட
மனிதாபிமானம் இல்லாமலாகியது1

சுயநல வேட்டையிலே
சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த
சமூகச் சூழலில்
சுமூக உறவையும்
சுற்றாடல் ஓம்பும்
திறனையும்
எப்படி எதிர்பார்க்க முடியும்?

பெண்ணியம் சார்ந்த கவிதைகள் மிகக்குறைவாக உள்ளது. காதலைப்போலவே இவரது கவிதைகளில் வறுமையின் கொடூரம் அதிகமாக பேசப்படுகின்றது.

எளிய மொழிநடை, வாசகர்களை ஈர்க்கும் பாணி, சிறந்த உவமைகள், சிறந்த சொற்பதங்கள் என்பனவற்றின் மூலம் தன் கவிக் குழந்தைக்கு சிறந்த உருவம் கொடுத்து இத் தொகுப்பை வெளியிட்ட வெலிகம ரிம்ஸா பாராட்டுக்கு உரியவர். இத் தொகுப்பானது இளைஞர்களையும், யுவதிகளையும் கவரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

'இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது மட்டுமன்று வாழ்க்கையில் தீவிர பங்கெடுப்பதும், வாழ்க்கையை ஆராய்வதும், அதன் நிறைகுறைகளை எடுத்தியம்புவதும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதுமே' என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன. வளர்ந்து வரும் படைப்பாளி என்ற வகையில் இவர் பாராட்டுக்குரியவர். மொழி தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அநேக கவிதைகள் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் படைப்பாளி கவனம் கொள்ள வேண்டும். இவரிடம் இன்னும் பல நல்ல கவிதைகளை தரக்கூடிய ஆற்றல் உண்டு. ரிம்ஸாவிற்கு நல்ல எதிர் காலம் உண்டு. இன்னும் பல சிறந்த கவிதைகளை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தருவார் என்ற நம்பிக்கையை இந்நூல் தருகின்றது.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=

Thursday, September 2, 2010

02. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - எச்.எப். ரிஸ்னா

தென்றலின் வேகம் கவிதை தொகுப்பு மீதான ஒரு விமர்சனப் பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா,


வெலிகம மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவரான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கவிதை தொகுப்பு. இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக, தென்றலின் வேகம் என்ற பெயரைத்தாங்கி வந்திருக்கும் இத்தொகுதியில் 64 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத்தீவிலும் தரித்திரமாய் வந்து பல லட்சம் மக்களைக் காவு கொண்ட சுனாமி தொடக்கம் பெண்களை போகப்பொருளாக பார்க்கிற வக்கிர ஆண்கள், அந்த போராட்டங்களுடன் பெண்களின் கண்களில் ஊற்றெடுக்கம் நீரோட்டம், இன்றைய சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்கள் மற்றும் வளிரிளம் கவிஞர்களை உருவாக்கும் காதல் என்ற கரு வரை அனைத்தும் இதில் அச்சேறியிருக்கிறது.

1.ஆராதனை 2.நிலவுறங்கும் நள்ளிரவு 3.ஒலிக்கும் மதுரகானம் 4.கண்ணீரில் பிறந்;த காவியம் 5.வெற்றியின் இலக்கு 6.விடியலைத் தேடும் வினாக்குறிகள் 7.சந்திப் பூ 8.விடிவுக்கான வெளிச்சம் 9.ஆத்மாவின் உறுதி 10. வெற்றிக்கு வழி 11.எனக்குள் உறங்கும் நான் 12.நித்திரையில் சித்திரவதை 13.நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் 14.மௌனம் பேசியது 15.தென்றலே தூது செல் 16.கனவுகளும் அதில் தொலைந்த நானும் 17.புத்தகக் கருவூலம் 18.சுனாமி தடங்கள் 19.நிலவின் மீதான வேட்கை 20.இன்றும் என் நினைவில் அவன் 21.பொல்லாத காதல் 22.காதல் வளர்பிறை 23.ஈரமான பாலை 24.எனை தீண்டும் மௌன முட்கள் 25.காதல் சுவாலை 26.நிலைக்காத நிதர்சனங்கள் 27.பாவங்களின் பாதணி 28.உயிர் செய் 29.காதற் சரணாலயம் 30.வாசி என்னை நேசி 31.ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் 32.ஓர் ஆத்மா அழுகிறது 33.ஜீவ நதி 34.நியாயமா சொல் 35.காதல் பத்தினி 36.சிறைப்பட்ட நினைவுகள் 37. புயலாடும் பெண்மை 38. மௌனித்துப் போன மனம் 39.காத்திருக்கும் காற்று 40.கண்ணீர்க் காவியம் 41.சதி செய்த ஜாலம் 42.ஆழ்மனசும் அதில் பாயும் அன்பலையும் 43.உயிராக ஒரு கீதம் 44.ஊசலாடும் உள்ளுணர்வுகள் 45.மௌனத் துயரம் 46.மயக்கும் மாங்குயிலே 47.காதலுக்கோர் அர்ப்பணம் 48.உருகும் இதயம் 49.மௌனக் காளான்கள் 50.சொல் ஒரு சொல் 51.ரணமாகிப் போன காதல் கணங்கள் 52.நினைவலைகள் 53.பொய் முகங்கள் 54.குரலுடைந்த குயில் 55.வானும் உனக்கு வசமாகும் 56.அழகான அடையாளம் 57.நட்பு வாழ்வின் நறும் பூ 58.உடைந்த இதயம் 59.வாழ்வு மிளிரட்டும் 60.என்னைத் தொலைத்து விட்டு... 61.உயிர் பிணத்தின் மனம் 62.என் இதயத் திருடிக்கு... 63.நித்தியவான் 64.கவிதைத் துளிகள்

என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

தன்னுடைய அனுபவங்களே தன் எழுத்துக்கு ஏணியாக இருந்தததை `என்னுள் உற்பத்தியாகி தினமும் வதைத்துக்கொண்டிருந்த சோகத்தீ, நானறியாமலேயே ஓர் சூரியனாய் மாறி என் எழுத்துக்கு வெளிச்சம் பரப்பிய போது தான் நான் என்னை உணர்ந்தேன்.' என்கிறார் நூலாசிரியர்.

காலம் தந்து விட்டுப்போன சில ரணங்களும், உலகை வெல்ல வேண்டும் என்று நான் பொறுத்துக்கொண்ட வடுக்களும் இன்று உங்கள் கரங்களில் தவழும் வரம் பெற்றிருப்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் என்று ஆசிரியர் தன்னுரையில் கூறியிருப்பதிலிருந்து, எத்தகைய தாக்கம் இருந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

ரிம்ஸா அவர்களின் கவிதை நூல் பற்றி கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தம் உரையில் கீழ் உள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

கவிதை, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்கு கவிதை உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகிறது.

முதல் கவிதையான ஆராதனை என்பது கருவில் உரு கொடுத்த தாய் பற்றியதாகும். தாய் பிரிந்த வேதனையை மிகவும் உருக்கமான முறையில் கவியாக வடித்திருக்கிறார்.

அடுத்து கண்ணீரில் பிறந்த காவியம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிற மனித உள்ளங்களின் கறைகளை பிரதிபலிக்கிறது.

சுயநல வேட்டையிலே சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த சமூகச்சூழலில்
சுமூக உறவையும் - சுற்றாடல் ஓம்பும் திறனையும்
எப்படி எதிர்பார்பார்க்க முடியும்?
என்ற கவிஞரின் கேள்வி நியாயமானது.

விடியலைத்தேடும் வினாக்குறிகள் என்ற கவிதை வர்க்க பேதத்தை அம்பலமாக்குகிற வரிகளால் புனையப்பட்டிருக்கிறது.

இவர்கள் எல்லாம் வறுமைக்கோட்டுக்குள்
உங்களால் வரையறுக்கப்பட்டிருந்தாலும்
சிறுமைப்பட்டு வாழ்ந்தவர்களல்லர்!

எனும் வரிகள் பணக்காரவர்க்கத்தின் கீழ்த்தர எண்ணங்களை புடம்போட்டுக்காட்டுவது மட்டுமல்லாமல் ஏழைகள் மீது இரங்கக்கூடிய அனைத்து மக்களின் உள்ளங்களிலும் ஊடுறுவி நீளமான வலி தரக்கூடியதாக அமைந்துள்ளது.

கவிதைகள் அனைத்திலும் கற்கண்டு சொற்கொண்டு இவர் யாத்துள்ள வசனங்கள் இதயத்தை தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும் இருக்கிறது.

ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை கையாள வேண்டும். அது இந்தத்தொகுப்பில் இயல்பாகவே அமைந்திருப்பது ஆறுதலான விடயம்.

மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களை சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் மனவோட்டத்தை புயலாடும் பெண்மை என்ற கவிதையில் தரிசிக்க முடிகிறது. அகம் சார்ந்த கவிதைகள் மனதில் ஊஞ்சல் கட்டி உலா வருகிறது. வார்த்தையாடல்கள் எளிய நடையில் அமைந்திருப்பதால் சிரமமில்லாது கவிதைகளை (சு)வாசிக்க முடிகிறது.

பல கவிஞர்களும் பலதடவைகள் எழுதி சலித்த விடயம் என்றாலும் ரிம்ஸாவின் வரிகள் புதியதொரு பரிணாமத்தில் பயணிப்பதைக் காணலாம். காதற்சரணாலயம் என்ற கவிதை ஓர் உதாரணமாகும்.

நெஞ்சமெல்லாம் நீயே
நிழலாடும் போது
நிம்மதி என்பது
இனி எனக்கேது?
எங்கும் எதிலும் உன் நாமம்
அதை அணுதினம் உச்சரிக்குதே
என் சேமம்!

இத்தொகுதியில் மனித வாழ்வின் விழுமியங்களை சீர்படுத்தக்கூடிய ஆத்மீகம் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய கவிதைகளும் உண்டு. பாவங்களின் பாதணி, உயிர் செய் என்பன இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். அது தவிர நட்பின் வலிமையை உணர்த்தும் நட்பு வாழ்வின்; நறும்பூ போன்ற கவிதைகளும் இதில் இடம்பிடிக்கத் தவறவில்லை.

'இவரது கவிதைகள் வாசிப்பதற்கு இலகுவானவை. இதமானவை. இன்பமானவை. வாசகர்களது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் தூண்டக்கூடியவையாகவும் உள்ளன. இயல்பான சொல்வளம் கொண்ட கவித்தன்மை உடையவை' என்ற பதிப்பகத்தாரின் உரையாலும் புத்தகம் புதுப்பொலிவு பெறுகிறது.

தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி உட்பட இணைய சஞ்சிகைகளிலும், தன்வலைப்பூக்களிலும் எழுதியும், குரல் கொடுத்தும் வரும் ரிம்ஸா முஹம்மத், எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத் தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும். பிரதிகளைப் பெற கீழுள்ள முகவரியோடு தொடர்பு கொண்டு அவர் வெற்றிக்கு ஊக்கமாய் இருப்போம்.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=

இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை தமிழ் ஆதர்ஸ் வலைத்தளத்தில் பார்வையிட
http://www.tamilauthors.com/04/128.html

* தென்றலின் வேகம் புத்தகத்துக்கான விமர்சனம். எழுதியவர் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா




தென்றலின் வேகம் புத்தகத்துக்கான விமர்சனம்.
எழுதியவர் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா