Tuesday, September 7, 2010

01. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - க. பரணீதரன்

01. 'தென்றலின் வேகம்'  நூல் விமர்சனம் - க. பரணீதரன்

- க. பரணீதரன்

இலக்கிய கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், நூல்விமர்சனங்கள் போன்ற கலை இலக்கிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்தி வரும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக முஸ்லிம் தமிழ் இளம் பெண் படைப்பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

ஈழத்துப் பெண் எழுத்தாளர்களின் இன்றைய எழுத்துக்கள் மிகவும் உந்நதமானவையாகவும், இலக்கியத் தரம் வாய்ந்தவையாகவும், பேசப் படத்தக்கவையாகவும் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் எழுத்தாளர்களான கெகிராவ ஸஹானா, கெகிராவ ஸூலைஹா, மஸீதா புண்ணியாமீன், அனார், பஹிமா ஜகான், வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா ஆகியோர் தொடர்ந்து இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புக்களை தந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தனியே பெண்ணியம் மட்டும் பேசாது, யதார்த்த உலகைப் புரிந்துகொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரைகள் வாயிலாக தாம் சொல்ல வந்த கருத்தை மிகச் சிறப்பாக உலகிற்கு எடுத்தியம்புகின்றனர்.

ஈழத்து இலக்கியம் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதற்கு இங்கு மாதா மாதம் வெளி வந்து கொண்டிருக்கும் நூல்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத்தொகுப்பு ஸ்ரீதர் பிச்சையப்பாவின் அழகிய ஓவியத்துடனும், கவிஞர் ஏ.இக்பாலின் முன்னுரைக் குறிப்புடன் 64 பெருங் கவிதைகளையும், 29 சிறு கவிதைகளையும் தாங்கி அழகான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

நூலாசிரியையின் என்னுரையிலிருந்து அவரது இலக்கியம் மீதான பற்று வெளிப்படுகின்றது. இத்தொகுதியில் உள்ள கவிதைகளின் பாடு பொருளாக காதல், நட்பு, பிரிவுத்துயர், மனிதாபிமானம், பெண்ணியம், வறுமை, ஆன்மீகம், தாய்ப்பாசம் என்பன பாடப்பட்டுள்ளது.

64 கவிதைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகள் காதல் பற்றியதாகவே காணப்படுகின்றன. காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. அந்த வகையில் ரிம்ஸா ஒரு இளம் படைப்பாளி, அவரின் இத்தொகுப்பில் காதல் மிகுந்து நிற்பது புதிதன்று. இவருடைய காதல் கவிதைகள், காத்திருப்பு, பிரிவுத்துயர், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஊடல் நிறைந்தவையாக வெளிப்பட்டு நிற்கின்றன.

அதிகமான கவிதைகள் காதலனிடம் காதலி காதல் வேண்டி நிற்பதாகவே காணப்படுகின்றது. 'என்னவனே', 'காதலனே' போன்ற சொற்கள் பல கவிதைகளில் இடம் பெறுவது வாசகனிடத்து சற்றே சலிப்பை உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் கவிதைக்கு பொருந்தக்கூடிய இடங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. காதலுக்காக இவ்வுலக ஜீவன்கள் எல்லாம் ஏங்குகின்றன, அதில் வெற்றி பெறுபவர் சிலரே. அவ்வாறு தோல்வி கண்ட உள்ளங்களின் துயரானது அவர்களின் எழுத்துக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறான தோல்வி கண்ட காதல் பற்றிய கவிதைகளே இங்கு எழுதப்பட்டுள்ள பெரும்பாலான கவிதைகள். இவருடைய காதல் கவிதைகள் மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டவையாகவும் வாசகர்களை இலகுவில் பற்றி இழுக்கக் கூடியவையாகவும் காணப்படுகின்றது. காதல் சார்ந்த கவிதைகளின் மொழி சிறப்பாக உள்ளது. உதாரணமாக:-

குரலுடைந்த குயில் !

'சோலை மலர்களே...
அந்த சுந்தரனின்
நினைவால்
சோர்ந்து போய்
இச்சுந்தரி
இருப்பதை அறிவீர்களா?

ஓடும் மேகங்களே...
மன்னனின் மௌனத்தால்
இம் மங்கையின் மாறாத மனம்
மங்கிக் கிடப்பதை
மொழிவீர்களா?
.......................'

நட்பு பற்றிய கவிதைகள் அதீத பாசத்தை வெளிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன. நட்பு பற்றிய கவிதைகளின் கருத்து யதார்த்தத்துக்கு பொருந்துமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. சமூகம் மீது கரிசனையுடன் சமூக மாற்றம் வேண்டி சில கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமானம் சார்ந்த கவிதைகள் இயல்பாக கூறப்பட்டுள்ளது. 'கண்ணீரில் பிறந்த காவியம்' கவிதையில் இருந்து உதாரணமாக சில வரிகள்:-

மரத்து விட்ட
மனித மனங்களில்
மருந்துக்குக் கூட
மனிதாபிமானம் இல்லாமலாகியது1

சுயநல வேட்டையிலே
சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த
சமூகச் சூழலில்
சுமூக உறவையும்
சுற்றாடல் ஓம்பும்
திறனையும்
எப்படி எதிர்பார்க்க முடியும்?

பெண்ணியம் சார்ந்த கவிதைகள் மிகக்குறைவாக உள்ளது. காதலைப்போலவே இவரது கவிதைகளில் வறுமையின் கொடூரம் அதிகமாக பேசப்படுகின்றது.

எளிய மொழிநடை, வாசகர்களை ஈர்க்கும் பாணி, சிறந்த உவமைகள், சிறந்த சொற்பதங்கள் என்பனவற்றின் மூலம் தன் கவிக் குழந்தைக்கு சிறந்த உருவம் கொடுத்து இத் தொகுப்பை வெளியிட்ட வெலிகம ரிம்ஸா பாராட்டுக்கு உரியவர். இத் தொகுப்பானது இளைஞர்களையும், யுவதிகளையும் கவரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

'இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது மட்டுமன்று வாழ்க்கையில் தீவிர பங்கெடுப்பதும், வாழ்க்கையை ஆராய்வதும், அதன் நிறைகுறைகளை எடுத்தியம்புவதும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதுமே' என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன. வளர்ந்து வரும் படைப்பாளி என்ற வகையில் இவர் பாராட்டுக்குரியவர். மொழி தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அநேக கவிதைகள் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் படைப்பாளி கவனம் கொள்ள வேண்டும். இவரிடம் இன்னும் பல நல்ல கவிதைகளை தரக்கூடிய ஆற்றல் உண்டு. ரிம்ஸாவிற்கு நல்ல எதிர் காலம் உண்டு. இன்னும் பல சிறந்த கவிதைகளை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தருவார் என்ற நம்பிக்கையை இந்நூல் தருகின்றது.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=

No comments:

Post a Comment