Sunday, January 1, 2017

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பதுளை பாஹிரா (ஓய்வு பெற்ற ஆசிரியை)

இலக்கிய ரசனைக்குள், ஆன்மீக வரையறைக்குள், யதார்த்தத்தின் வீச்சோடு நகர்கிறது ரிம்ஸா முஹம்மதின் எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி. சமூக அவலங்களை நுண்ணிய திறனாய்வோடு பேசும் வல்லமையில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். எம்மத்தியில் எரிக்கப்பட்டாமல் படர்ந்திருக்கும் வாழ்வியல் வன்முறைகள், தாழ்நிலை சம்பிரதாயங்கள், சால்பற்ற சடங்குகள், பாழ்படுத்தும் முகமூடிகள் என்பவற்றை நேரிய நோக்கோடு வரிகளாகக் கோர்த்து இலக்கிய நெஞ்சங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் அண்மையில் தனது 821 ஆவது முதல் பிரதியாக இந்த நூலைப் பெற்றுக்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொசுக்கப்பட்ட மனித உணர்வுகளின் ஓசைகள், ஓலங்கள், பெண்ணியத்திற்கெதிரான அத்துமீறல்கள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள், தேச ஐக்கியத்தை சீர்குலைக்கும் குரோதங்கள் என்ற விடயப் பரப்பில்  கவிதைகள் விரிகின்றன. 54 கவிதைகள், 7 மெல்லிசைப் பாடல்கள் புதுமையின் வாண்மையோடும், புரட்சியின் பெருமையோடும் படைப்பிலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் இலக்கிய கர்த்தா. பன்முக ஆளுமை கொண்ட இவரின் இலக்கியப் பயணம் பாரதி கனவுக்கு வெற்றியே. 12 ஆவது நூலான எரிந்த சிறகுகள் கவிதைத் துறையில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை மேன்மைப்படுத்தியுள்ளது.

செம்மொழி ஆற்றலும், இலக்கிய இலக்கண ஆழமும் கவி யாத்தலுக்கு அடிப்படை. இவற்றின் வழியே நவீனத்துவ சிந்தனையோடு எழுதப்பட்ட எரிந்த சிறகுகள் இலக்கிய உலகிற்கு பெரும் சிறப்பு. மனுக்குலத்தை மதிக்கும், மனிதாபிமானப் போக்குகள், நவீன இலக்கியப் படைப்புகளில் காணலாம். அவ்வரிசையில் ரிம்ஸா முஹம்மத்தின் அர்ப்பணிப்பும் முக்கியமானதே.

தொலைந்த கவிதை, ஒப்பனைகள், சாதல் நன்றே, சொல்ல மறந்த சேதிகள், கறைகள், தொடரும் தொல்லை, வஞ்சகம், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், மனிதமில்லா மனிதன், காலத்தின் ஓலம், இறையோன் தந்த மாதம் போன்ற கவிதைகளில் சமூகத்திற்குகந்த அறிவுரைகளும் ஆன்மீக செய்திகளும் போர்க் கலாசாரமும் கூறப்பட்டுள்ளன. ஆயுள் கைதி, எதிரொலி, விளையும் நினைவுகள் போன்ற காதலைப் பேசும் கவிதைகள் இதயத்திற்கு இதமளிக்கின்றன.

புதிய தலைமுறையினர் எதிர்பார்க்கும் நவீனத்துவ போக்கு, சொல்லாட்சி, சிந்தனைச் செறிவு என்பனவற்றால் எரிந்த சிறகுகள் இலக்கிய உலகில் வரவேற்று பெறும் என்பது உறுதி. பல இலக்கிய வடிவங்களில் ஆற்றலை வெளிப்படுத்திய படைப்பாளி, இன்னும் பல தடங்களில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூல்:- எரிந்த சிறகுகள்
நூலின் வகை:- கவிதைகள்
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=

No comments:

Post a Comment