Sunday, July 11, 2010

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றிலின் வேகம் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம்

வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பின் நூல் ஆய்வு அரங்கம் சென்ற ஞாயிறு 14.02.2010 நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்ட இந் நூல் அவர்களது ஆதரவில் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வழமையான கூட்டங்கள் போலன்றி மண்டம் நிறைந்து வழிந்து வெளியேயும் சிலர் நிற்க வேண்டியளவிற்கு பார்வையாளர்கள் முழு அளவில் பங்கு பற்றிய மிகச் சிறப்பான கூட்டமாக இருந்தது.

எம்.கே.முருகானந்தன் தலைமையுரை ஆற்றினார். தலைமையுரை மற்றொரு பதிவாக இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வுரைகள் இடம் பெற்றன. எழுத்தாளரும் தகவம் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான வசந்தி தயாபரன் முதலாவது உரையை வழங்கினார்.

வசந்தி தயாபரன் தனது உரையில்:-

'ஆன்மாவின் கருவிலிருந்து வருவது கவிதை. நல்ல கவிதை எழுதுவதற்கு மொழி வசப்பட வேண்டும்.

அந்த வகையில் சிறப்பான மொழிநடை ரிம்ஸா மொஹம்மத் அவர்களுக்க இயல்பாகக் கிடைத்திருகிறது.

அவரது படைப்புகளை திரும்பத் திரும்ப வாசிக்கத் தேவையில்லை.
ஒரு முறை வாசித்தால் போதுமானது.

வாசகனைப் பயமுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது.

கவிதை உருவாக்கத்தில் அவருக்கு தனித்துவமான பாணி உள்ளது.
புதுக்கவிதை என்றால் படிமங்களையும் குறியீடுகளையும் அள்ளி வீசப்படுகிறது.

புதுக்கவிதைக்கு அதுதான் அடையாளம் என்று சிலர் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவர் அவற்றை கிள்ளித் தெளித்திருக்கிறாரே ஒழிய அள்ளித் திணிக்கவில்லை.

எதுகை மோனை தானே வந்து சேர்ந்திருக்கிறது அவருக்கு.
இதற்கு துணை செய்வது நீரோட்டம் போன்ற நடையாகும்.

உணர்வுகளைப் பேசுகிறார். தாய்பாசம் பற்றி எழுதியுள்ளார்.

ஆனால் காதல்தான் இவரது படைப்புகளில் பல்வேறு வடிவங்களில் பரிமாணங்களில் புதைந்து கிடக்கின்றன.வயது காரணமாக இருக்கலாம்.படிப்படியாக மலரும் பூப்போல காதலின் பரிமாணங்கள் இவரது கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

குறை எனில் ஒன்று சொல்வேன்.

சமூகம் பற்றிய பார்வை சொற்பமாகவே வந்திருக்கிறது. அகன்ற பார்வை வேண்டும்.

இவரது கவிதைகளில் பெண் என்ற நிலைப்பாடு இருக்கிறது.
அதை இஸ்லாமியப் பார்வை என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.
ஒட்டு மொத்தப் பெண் பார்வை என்பேன்.

தனிய இருக்கும் பெண்ணை விடுப்புப் பார்க்கும் தன்மை எமது சமூகத்தில் உள்ளது.

அவள் வாழ்வுக்காகப் போராடும்போது சமூகம் வேடிக்கை பார்த்திருக்கும் வாயிருந்தால் சமூகம் எதையும் பேசும். அதற்கு எதிரான குரல் ரிம்ஸாவிடமிருந்து எழுகிறது'

அடுத்து பிரபல கவிஞரும் விமர்சகருமான கவிஞர் இக்பால் ஆய்வுரை வழங்கினார்.

இவரே வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிஞர் இக்பால் தனது உரையில்:-

இயல் இசை நாடகம் என முத்தமிழ் என்பார்கள்.
ஆனால் கவிதை இவை எல்லாவற்றிகள்ளும் அடங்கும்.
இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இவை யாவற்றையும் உள்ளடக்குகிறது. நடை நன்றாக இருக்கிது. சுய அனுபவத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது.

கருத்து செம்மையாக இல்லாவிடில் படைப்பு காலத்தைக் கடந்து நிற்கமுடியாது.

கவிதையானது காதையும் கண்ணையும் நம்பி வெளிவரும் இலக்கிய வடிவமாகும்.

ஆனால் புதுக்கவிதைகள் கண்ணை மட்டும் நம்பி வெளிவருகின்றன.

இவருக்கு வாசகனின் கண் காது இரண்டையும் கவரும் புலமை இருக்கிறது.

இந்நூலில் 63 தனிக் கவிதைகள் உள்ளன.
64வது கவித் துளிகள் என்ற தலைப்பில் சில படைப்புகள் உள்ளன.
இவை விடுகதை அல்லது நொடி போல உள்ளன.

பெரும்பாலான படைப்புகள் தன் உணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. கவிதைகளின் உள்ளடக்கங்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது காவியம் போல இருக்கிறது.

இவரது படைப்புகள் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நின்று விடாமல் கற்பனைத் திறனும் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.

மனித மனக் கிளர்வுகளே பெரும்பாலும் பாடுபொருளாக இருக்கின்றன. சமூகம் பற்றிய கவிதைகள் குறைவு. வயது காரணமாக இருக்கலாம்.

எதிர்காலப் படைப்புகளில் சமூக உணர்வு கூடுதலாக விழம் என எதிர்பார்க்கலாம்.

ஆய்வுரைகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களாக வந்திருந்த சிலர் தமது கருத்துக்களை முன் வைத்தனர். மேமன்கவி.

டொமினிக் ஜீவா,அல் அசுமத் போன்றோர் தமது கருத்துக்களைச் சருக்கமாகச் செல்லி நூலாசிரியருக்கு வாழ்த்தும் கூறினர்.

நூலசிரியரன் ஏற்புரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

தேநீர் விருந்தின் போது மூத்த மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகி கருத்துப் பரிமாறல்களிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

நல்ல ஒரு நிகழ்வில் பங்குகொண்ட உணர்வுடன் வீடு திரும்ப முடிந்தது.


நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=


நூல் விநியோக உரிமை:-

பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.

No comments:

Post a Comment