Tuesday, July 13, 2010

03. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - ஏறாவூர் தாஹிர்

கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் - ஒரு பார்வை

கதைகளும், கவிதைகளும் நூலுரு பெற்று புற்றீசல்களாட்டம் படையெடுத்திருக்கும் இக்காலகட்டத்தில் மனங்களுள் ஊடுறுவி நிலைத்து நிற்பன இவற்றுள் மிகச்சிலவே. கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் வாசகர்களை மெய் சிலிர்க்கச் செய்கிறது. ஒரு பெண்ணின் இதயத் தாகங்களையும், தாபங்களையும் சில இடங்களில் துணிந்து வெளிப்படையாகவும் சில இடங்களில் பெண்களுக்கேயுரிய நான்கு வகைப் பண்புகளின் மேலீடு காரணமாக மறைமுகமாகவும் சிலேடையாகவும் வெளிப்படுத்தி எம்மையும் சிந்திக்கவும் சிந்தைக் கசியவும் வைத்திருக்கிறார்.

அன்னையின் பிரிவில் அகமுருகி அவனின் நினைவுகள், நிலவுறங்கும் நள்ளிரவு, ஒலிக்கும் மதுரகானம், கண்ணீரில் பிறந்த காவியம், சந்திப்பூ, எனக்குள் உறங்கும் நான், நித்திரையில் சித்திரவதை போன்ற கவிதகளில் மெய்யுருகி எம்மையும் பிரமிக்க வைக்கிறார்.

நிம்மதி தொலைந்த நினைவுகள், மௌனம் பேசியது போன்றவற்றில் இவரின் மௌனமான அழுகை துல்லியமாக தெரிகிறது. தென்றலே தூது செல் கவிதையில் காதலின் ஆதங்கத்தை வெட்கத்தை விட்டெரிந்து வெளிப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு `கனவுகளும் அதில் தொலைந்த நானும், இன்னும் என் நினைவில் அவன், பொல்லாத காதல்; ஆகிய கவிதைகளில் கவித்துவத்தை கண்ணீரில் கரைத்து பருகத் தருகிறார்.

மேலும் காதல் வளர்பிறையில் முத ற்சந்திப்புக்கான முகவரியை எழுதியும், ஈரமான பாலையில் இதய வேட்கையை ஈரக்கசிவு விழிகளுடன் வரிகளாய் வடித்திருக்கிறார். என்னைத் தீண்டும் மௌன முட்கள் அவரை மட்டுமல்ல அவரின் நிலைக்குள்ளான பலரையும் குத்திக்கிழிப்பதை உணர முடிகிறது. கவிஞரின் காதல் சுவாலை விண்வெளியோடம் புறப்படுகையில் கக்கும் தீச்சுவாலையாய் சுட்டெரிக்கிறது.

மேலும் நிலைக்காத நிதர்சனங்கள், காதல் சரணாலயம், வாசி என்னை நேசி என்ற கவிதையும் ஜீவ நதியிலும் பால் மாற்றிக் கவி புனைந்து காதலின் வேகத்தைச் சித்தரிக்கிறார்.

இடையில் குறுக்கிட்ட தாயின் பிரிவு, நினைவு கவிஞரின் ஓர் ஆத்மா அழுகிறது என்ற தலைப்பில் அமைந்த கவிதை கண்ணீராய் வழிந்தோடி வேதனையைக் காட்டி நிற்கிறது.

`நியாயமா சொல்'லில் நீதி கேட்டும் காதல் பத்தினியிலும் பால் மாற்றி பதறியும் சிறைப்பட்ட நினைவுகளில் சிந்தை கலங்கியும் அதனை அசை போட்டும் மௌனித்துப் போன மனம் மௌனமாய் அழுதும் காத்திருக்கும் காற்றில் தாயன்பில் தோய்ந்தும் கண்ணீர்க் காவியத்தில் கண்ணீரால் எழுதியும் சதி செய்த ஜாலம் வரிகளில் புண்பட்ட நெஞ்சத்தின் வலியையும் உயிராக ஒரு கீதம் உள்ளுணர்வின் வேட்கையையும் மௌனத்துயரம், மயக்கும் மாங்குயிலே, காதலுக்கோர் அர்ப்பணம், உருகும் இதயம், மௌனக் காளான்கள், சொல் ஒரு சொல், ரணமாகிப் போன காதல் கணங்கள், நினைவலைகள், குரலுடைந்த குயில், உடைந்த இதயம், என்னைத் தொலைத்து விட்டு, உயிர் பிணத்தின் மனம், என் இதயத்திருடிக்கு (திருடனா? திருடியா?), உன் நினைவு, அவன் விழிகள் போன்ற கவித்துவ வரிகளைக் காணும் பொது கவிஞரின் ஆற்றலையும், ஆதங்கத்தையும் காண முடிகிறது.

இடையிடையே முகம் காட்டும் ஏனைய கவிதைகளில் கவிஞரின் இறைபக்தி, சமூக உணர்வு, பெண் விடுதலை போன்றவை பீறி எழுவதைக் காண முடிகிறது. எனினும் உணவைச் சுவையாக்க ஏலம், கராம்பு, கறிவேப்பிலை இடுவது போன்றே இவை அமைந்திருக்கின்றன. நூலில் கருவாய் மேலோங்கி நிற்பது காதல் வயப்பாட்டின் தாக்கமே என்பதை வரிவரியாய் ஆழ்ந்து வாசிக்கும் போது புரிகிறது.

என்னவனே
உன் நினைவால்
நான் உருகி வடிகிறேன்...
உன் ஞாபகங்களே தினமும்
என்னில் ஊறும் தேன்...

எனும் வரிகளை வாசிக்கையில் அந்த என்னவனே என்ற மன்னவனுக்கு மனம் என்ன கருங்கற்பாறையா? எனக் கேட்கத் தோன்றுகிறது. உன்னை என்னால் ஒரு போதும் மறக்க முடியவில்லை என்பதைக் கவிஞர் தன் ஆழ்மனத்துயரின் வெளிப்பாடாய் காட்டியுள்ளார். நித்திரையின்றிக் கழிகின்றன பல இரவுகள் உன் நினைவாய் எனும் வரிகள் இதயத்தை பிசைகின்றன. என் அகமெனும் வான்வெளியில் ஒளியாகத் தெரிவது உன் முகமே எனும் கவிதையில் கவிஞரின் பேரன்பை இன்னும் உணராத அந்த மன்மதன் மேல் சினம் பொங்கியெழுகிறது.

இவ்வாறு கண்ணீரால் கவிபுனைந்த இந்தக்குமாரியின் ஏக்கம் நீங்கவும், இவரின் கவிதைகள் நூலுருவில் பல மலரவும் தென்றலின் வேகம் தன் வேகத்தைத் தணித்து தென்றல் தழுவும் மலர் என்றும், தென்றலின் சுகம் என்றும், தென்றலின் வருடல் என்றும் அகவல்களாய் பூத்துக்கமழ பிரார்த்திப்போமாக!!!

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=
நன்றிகள்

ஏறாவூர் தாஹிர்
Khajara Manzil,
14, Puliyady Road,
Eravur – 06.

Phone – 065 2240396
065 4901136

புத்தகம் கிடைக்குமிடங்கள்

Poobalasingam Book Depot,
202, Sea Street, Colombo - 11.
Phone - 011 2422321, 2435713.

Jeya Book Centre,
91 - 99, Upper Ground Floor,
People’s Park Complex,
Colombo - 11.
Phone - 011 2438227.

Poobalasingam Book Depot,
309 A - 2/3, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2504266, 4515775.

Islamic Book House,
77, Sri Vajiragnana Mawatha,
Colombo - 09.
Phone - 011 2669197, 2684851.

Cordova Book Shop,
226, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2362102, 2361555.

No comments:

Post a Comment