Wednesday, January 8, 2014

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை --- அணிந்துரை

கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வைஅணிந்துரை

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ''கவிதைகளுடனான கைகுலுக்கள் - ஒரு பார்வை'' என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

இதற்குக் காரணங்கள் பல:

01. நூலாசிரியையின் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாகப் புதிய எழுத்தாளர்கள் தொடர்பான தமது தெரிவுகளையும், திறனாய்வு சார்ந்த தமது இரசனையையும் வெளிப்படுத்தியிருப்பது.

02. இந்நூலில் தாம் எடுத்துக்கொண்ட நூல்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்திருப்பதனால், எதிர்கால ஆய்வாளர்களுக்குக் கூட்டு மொத்தமான பார்வையைச் செலுத்த வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

03. தவிரவும், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பாக ஏனையவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் ஆய்வாளர்கள் சிரமமின்றி தமது கணிப்பைச் செய்ய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

04. அண்மைக் காலப் புதிய ஈழத்துக் கவிஞர்கள் தொடர்பான ஆக்கங்களையும், ஓரிரு முதிய எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய கணிப்பையும் இந்நூல் உள்ளடக்குகிறது.

05. இதுவரை காலமும் பிரதான நீரோடையில் அதிகம் சந்திக்கப்படாத பிராந்திய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் நாம் அறிந்துகொள்ள வகை செய்யப்படுகிறது.

இவ்வாறான பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நூலின் ஆசிரியர் மிக நுட்பமான இலக்கிய ரசனையுடையவர் என்பதும், இதுவரை உரிய கவனிப்பைப் பெற்றிராத போதிலும், அவர்தம் ஆற்றலை நாம் இன்னமும் புறக்கணிக்க முடியாததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

அடுத்ததாக, திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது என்பதனை இந்நூல் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலிலே இரசனை உணர்வு வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும்.

அத்தகைய பண்புகளின்றி, வெறுமனே ''விமர்சனம்'' என்ற பெயரில், தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னாபின்னப்படுத்தி, ''ஆசிரியன் இறந்துவிட்டான்'' என்ற செல்லாக் காசை வலியுறத்த தமது விகாரமான கருத்துக்களைத் திணிப்பதற்குப் புறம்பாக இந்நூலாசிரியை, நல்ல மனதுடனும், ''திறந்த மனப்பான்மை''யுடனும், சொற் சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்கக்கது.

என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு வரப்பிரசாதம். ஏனெனில் பல புதிய எழுத்தாளர்கள், புலவர்களை இந்நூல் மூலமாகவே நான் அறிகின்றேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஒரு பரம ரசிகரும், பிறரை வாழ்த்துபவருமான ஓர் இளம் எழுத்தாளர். அவர் வருகை நமக்கெல்லாம் களிப்பூட்டுகிறது!!!


கே.எஸ். சிவகுமாரன்


உள்ளடக்கம்

01 இன்னும் உன் குரல் கேட்கிறது - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
02 அக்குரோணி - மன்னார் அமுதன்
03 கண்ணீர் வரைந்த கோடுகள் - கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார்
04 ஒரு யுகத்தின் சோகம் - மன்னூரான் ஷிஹார்
05 விழி தீண்டும் விரல்கள் - பேசாலை அமல்ராஜ்
06 சுனாமியின் சுவடுகள் - நானாட்டான் எஸ். ஜெகன்
07 கிறுக்கல்கள் சித்திரமாகின்றன – கவிஞர் பி. அமல்ராஜ்
08 இடி விழுந்த வம்மி – கவிஞர் அபார்
09 இதயத்தின் ஓசைகள் - ஸக்கியா சித்தீக் பரீத்
10 நிழல் தேடும் கால்கள் - நிந்தவூர் ஷிப்லி
11 அறுவடைக் காலமும் கனவும் - கவிஞர் ஏ.எப்.எம். அஷ்ரப்
12 மகுட வைரங்கள் - கவிஞர் நித்தியஜோதி
13 நினைவுப் பொழுதின் நினைவலைகள் - வவுனியா சுகந்தினி
14 குருதி தோய்ந்த காலம் - கவிஞர் யூ.எல். ஆதம்பாவா
15 வைகறை வாசம் - கவிஞர் காத்தான்குடி பௌஸ்
16 உணர்வூட்டும் முத்துக்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
17 உயிரோவியம் - கவிஞர் மதன்
18 கரை தேடும் அலை - பெரிய நீலாவணை ம. புவிலக்ஷி
19 புதிய இலைகளால் ஆதல் - கவிதாயினி மலரா
20 இந்த நிலம் எனது - கெக்கிறாவ ஸுலைஹா
21 உனக்கான பாடல் - கவிஞர் எஸ். ரபீக்
22 நாட்டார்/கிராமிய பாடல்கள் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
23 கண்திறவாய் - டாக்டர் தாஸிம் அஹமது
24 குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக்
25 இருக்கும்வரை காற்று - கவிஞர் ஏ.எம். தாஜ்
26 வியர்த்தொழுகும் மழைப்பொழுது - கிண்ணியா சபருள்ளா
27 தற்கொலைக் குறிப்பு - நிந்தவூர் ஷிப்லி
28 மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - வெ. துஷ்யந்தன்
29 வேர் அறுதலின் வலி - (தொகுப்பாளர்) ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர
30 மாண்புறும் மாநபி - கவிஞர் பி.ரி. அஸீஸ்
31 நல்வழி – கவிஞர் க. சபாரெத்தினம்
32 கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் - கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ்
33 நீலாவணன் காவியங்கள் - (தொகுப்பாளர்) எஸ். எழில்வேந்தன்
34 இப்படிக்கு அன்புள்ள அம்மா – (மொழிபெயர்ப்பாளர்) வி. ஜீவகுமாரன்
35 தோட்டுப்பாய் மூத்தம்மா - கவிஞர் பாலமுனை பாறூக்
36 வான் அலைகளில் தேன் துளிகள் - இசைக்கோ என்.எம். நூர்தீன்
37 உயிர்கசிவு - சுதாராஜ்
38 வைகறை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
39 கண்ணீரினூடே தெரியும் வீதி - தேவமுகுந்தன்
40 நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - (தொகுப்பாளர்) எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
41 படிகள் ஜனவரி மார்ச் 2012 – சஞ்சிகை ஆசிரியர் எல். வஸீம் அக்ரம்
42 சுவையான இலக்கியத் திறனாய்வுகள் - திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்குறிப்பு:- 42 நூல்கள் பற்றி பத்திரிகையில் எழுதி வெளிவந்த விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்த நூல் அண்மையில் கொடகே பதிப்பத்தினால் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கும், நூலுக்கான பிற்குறிப்பை எழுதித்தந்த ஜனாப் நஜ்முல் ஹுஸைன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment