Monday, January 13, 2014

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல.

இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு இயங்கிவரும் பன்முகப் படைப்பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற நூல், ஆய்வாரள்களுக்கு இளம்  கவிஞர்கள், படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஓர் ஆவண நூலாக வெளிவந்துள்ளது.ரிம்ஸா முஹம்மதைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவுக்கு அவர் வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் பெற்ற ஒருவராகக் காணப்படுகின்றார். பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என்பவற்றில் நன்கு தடம் பதித்தும், முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் தனது திறமைகளைக் காட்டி வரும் ஓர் இளம் படைப்பாளியாகவும் காணப்படுகிறார்.

சுமார் 42 படைப்பாளிகளின் நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை என்ற இந்நூலில் இடம்பிடித்துள்ளன. இவர்களில் அநேகம் பேர் இளம் படைப்பாளிகளாக இருப்பதோடு, மூத்த படைப்பாளிகள் சிலரதும் நூல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. அநேகமானவை கவிதை நூல்களாகவும், சில சிறுகதை, காவிய நூல்களாகவும் உள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, படைப்பாளிகள் பற்றிய விபரங்கள் என்பன தெளிவான முறையில் தரப்பட்டு சிறந்த விமர்சனங்களாக இடம்பிடித்துள்ளன. எதிர்காலத்தில்; எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு அரிய நூலாகவும் இது காணப்படுகிறது.

இந்நூலைப்பற்றி இலக்கியத் திறனாய்வாரளரும், பிரபல விமர்சகருமாகிய திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்கையில் ''திறனாய்வு என்ற அம்சத்தில் இரசனை முக்கிய பண்பு வகிக்கிறது. ஒரு படைப்பைத் திறனாய்வு செய்யும் ஒருவருக்கு முதலில் இரசனை உணர்வு இருக்க வேண்டும். ஆக்க இலக்கியங்களில், அதன் வடிவங்களில் உட்கூறுகளில் பரிச்சயம் வேண்டும். அத்தகைய பண்புகளின்றி வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் தமது அரசியல் கோட்பாடுகளைப் புகுத்தி கண்டதுண்டமாக அப்படைப்பை சின்னா பின்னப்படுத்தி ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தைப் புலப்படுத்தாமல் இந்நூலாசிரியை நல்ல மனதுடனும், திறந்த மனப்பான்மையுடனும், சொற்சிக்கனத்துடன் தமது இரசனை வெளிப்பாட்டைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.'' என்று இந்நூலாசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களினால் வெளியிடப்பட்டுள்ள கவிதை, சிறுகதை, காவியம், கட்டுரை, சஞ்சிகை என படைப்பு நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு நூலாகவும், எதிர்காலத்தில் ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவும் இதனைக் கருதலாம்.

ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க மாத்திரமல்லாமல், வைத்துப் பாதுகாப்பதற்கும் ஏற்ற வகையில் இருநூற்றி ஏழு பக்கங்களை உள்ளடக்கியதாக, அழகிய முகப்புப் படத்துடன், தரமான கடதாசியில் மிகவும்  கணதியான புத்தகமாக இந்நூல் அச்சிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கான அட்டைப் படத்தை வடிவமைத்தவர் படைப்பாளி எச்.எப். ரிஸ்னா ஆவார். அதே போல் கவிஞர் நஜ்முல் ஹுசைனின் பின்னட்டைக் குறிப்புக்கள் இந்நூலாசிரியரைப் பற்றி அறியாதவர்களுக்கு அறிமுகத்தைக் கொடுக்கிறது. கொடகே பதிப்பகம் இந்நூலை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நூல் - கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு - 0775009222
வெளியீடு - எஸ். கொடகே நிறுவனம்
விலை - 500/=

No comments:

Post a Comment