Wednesday, October 7, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை - சோபத்மநாதன்

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் ரிம்ஸா முஹம்மத். இதழியல் மற்றும் கணக்கீட்டுத் துறைகளில் பட்டம் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர். வலைத்தளம் மற்றும் இணைய இதழ்களினூடாகப் பரந்ததொரு வாசகர் கூட்டத்தோடு தொடர்பாடல் செய்து வருபவர் ரிம்ஸா.  இந்த இளம் வயதிலேயே பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கும் இப்பெண் எழுத்தாளர் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறார்பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் அவ்வப்போது எழுதிய விமர்சனங்களின் தொகுப்பேஅறுவடைகள்என்ற பெயரில் தற்போது நூலுருப் பெற்றுள்ளது.




கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் நானாவித வெளியீடுகள் பற்றிய ரிம்ஸாவின் பார்வைகளை  ‘அறுவடைகள்பதிவு செய்கிறது.

ஆழியாளுடையகருநாவுதொகுதியில் வரும் கவிதை இது:

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்

இலங்கை அரசியலில் சில தசாப்தங்களாக இதுவே நியதியாகிவிட்டாலும், லஸந்த விக்கிரமதுங்க என்ற துணிச்சல் மிக்கநீதிக்காகப் போராடியஒரு பத்திரிகையாளனுடைய அநியாயச் சாவு பற்றிய எதிர்வினை இது என்றறியும்போது நெஞ்சு அதிரவே செய்கிறது.

இந்தத் தலைமுறைக் கவிஞர்களுடைய படைப்புக்களில் ஆங்காங்கே மின்னும் புதிய கற்பனைகள் ஆச்சரியமூட்டுபவை.
               
பகலவன் வெம்மையில்
படியிறங்கக் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புக்களால்

என பாயிஸா அலி பயன்படுத்தும் உவமை தற்புதுமையானதுகவிஞர்கள் - எல்லாக் கலைஞர்களுமே தம் சூழலைக் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பர். அப்படி அவதானிப்பவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தரமுடியும்.

எஸ். முத்துமீரான் நிந்தவூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர். சிறுகதைகள், உருவகக் கதைகள், கவிதைகள் எனப் பரந்துபட்டுக் கிடக்கின்றன அவர் படைப்புக்கள்கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், வாய்மொழிக் கதைகள் மற்றும் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டு அரும்பணி புரிந்தவர் முத்துமீரான்.

அவருடைய  ‘அண்ணல் வருவானா?’ என்ற கவிதைத் தொகுப்பு தமிழ் நாட்டின் நேர்நிரைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதுஎதையெதையோ கவிதையென்று படிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போயிருக்கும் என் மனசுக்கு முத்துமீரான் கவிதைகள் ஒத்தடமாயிருக்கின்றன.

வண்ணக்குருவியாய் என்னைப் படைத்து நீ
வானில் பறக்கவிடு - நான்
கண்ணீரில் வாடிக் கதறியழும் மக்கள்
கவலையைப் போக்கிவர.
வையம் செழித்து வளங்கள் பெருகிட
வாழ்த்தி எனையனுப்பு..
படைப்புக்கள் எல்லாமே பிரமனின் சொத்தென்று
பறையை அடிப்பதற்கு - நான்
பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட
பாதையைக் காட்டிவிடு!

என வீறுநடை போடுகிறது முத்துமீரான் கவிதை.

கல்வியுலகிலும் எழுத்துலகிலும் தம்பெயர் நிறுவியவர் கலைவாதி கலீல். அவருடைய  ‘ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்’(மன்னார் படிப்பு வட்ட வெளியீடு) என்ற நூலை அறிமுகம் செய்கிறார் ரிம்ஸா. பலஸ்தீன விரோதப் போக்கைக் கடைப்பிடிப்போரைக் கண்டித்து நஜீ அல் அலி வரைந்த கூடார்த்த சித்திரங்களுக்கு கலீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இது புதுமையானதொரு முயற்சி.

பதுளை சேனாதிராஜாவின்  ‘குதிரைகளும் பறக்கும்மற்றும் நீர்வை பொன்னையன் எழுதியநினைவுகள் அழிவதில்லைஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிப் பயனுள்ள குறிப்புக்கள் தந்துள்ளார் ரிம்ஸா.

ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம்பதித்தவர், சாகித்திய விருதுகள் பெற்ற சாதனையாளர்  திக்வல்லை கமால். ‘வீடுஎன்ற அவருடைய அற்புதமான நாவல் ரிம்ஸா தேர்ந்துள்ள அறிமுகங்களில் மிக முக்கியமானது எனலாம். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களைவீடுஎன்ற பிரச்சினை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பதை வாசகர் மனசைத் தொடுமாறு சித்திரிக்கிறார் கமால்.

இலங்கையின் தென்கோடியிலுள்ள இரண்டு முஸ்லிம் பிரதேசங்களைக் களமாகக்கொண்டு கதை நகர்கிறதுஇஸ்லாமியருடைய வாழ்வியல் - பண்பாட்டு அம்சங்கள் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

அறுவடைகள்சிறுவர் இலக்கியம், திறனாய்வு முதலிய துறைகளையும் உள்ளடக்குகிறதுதியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, கே.எஸ். சிவகுமாரன் முதலியோருடைய படைப்புக்கள் குறித்த மதிப்பீடுகள் பயனுள்ளவை.

மொத்தத்தில், இந்நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் பரந்துபட்ட வாசிப்புக்கும் ஓயாத உழைப்புக்கும் சான்றாக மிளிர்கிறது. அவரை வாழ்த்துகிறேன்!!!

ஏரகம்’,
பொற்பதி வீதி,
கொக்குவில்.

No comments:

Post a Comment