Wednesday, October 7, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை - வவுனியூர் இரா. உதயணன் (இலண்டன்)

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை

ஈழத்து இலக்கிய வரலாற்றில் படைப்புக்களை எழுதுபவர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்த படைப்புக்கள் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும் பணியைச் செய்பவர்கள் மிகவும் குறைவு. கே.எஸ். சிவகுமாரன், மா. பாலசிங்கம், கே. விஜயன், தம்பு சிவசுப்பிரமணியம் போன்ற மூத்த தலைசிறந்த விமர்சகர்களின் வரிசையில் தற்போது வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இணைந்திருக்கிறார்.

அறுவடைகளின்போது சிறந்த விளைச்சல்களே பெற்றுக்கொள்ளப்படும். அதேபோல ஒரு படைப்பு குறித்த சிறந்த பதிவுகளே  ‘அறுவடைகள்என்ற இந்தத் தொகுதியிலும் வியாபித்திருக்கின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த நூல்களின் விமர்சனங்களே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எழுத்தாளர்கள் விடுகின்ற சிறியசிறிய தவறுகளை பூதாகரமாக்கி அவர்களை இலக்கிய உலகத்தைவிட்டே ஓட வைக்கின்ற விமர்சனங்கள்கூட இன்று ஒருசிலரால் எழுதப்பட்டு வருகின்றன. அவை சுயவிமர்சனம் செய்யபட்டு வெளியிடப்படுகின்றனவா என்ற ஐயம் எழுகின்றது.

ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது இலகுவான காரியமல்ல. மனதில் தோன்றுகின்ற உணர்வுகளுக்கு உயிரளித்து எழுதப்படுவதே இலக்கியமாகும். அவ்வாறு எழுதும் படைப்பு பற்றி தரக்குறைவாக பேசுவதை விடுத்து பக்கச்சார்பின்றி நடுநிலமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைச் செய்வதற்கு பரந்துபட்ட மனது இருக்க வேண்டும். அத்தகையோர்களால்தான் சமநிலையில் நின்றுகொண்டு, தான் வாசித்த படைப்பு குறித்த ஆழமான தகவல்களை பக்கச்சார்பின்றி தர முடிகின்றது. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தான் வாசித்த நூல்கள் குறித்த தனது பார்வையை வாசகர்களுக்கு விருந்தாக்கியிருக்கும் பாங்கு சிறப்பானது. அவரது பணி மகத்தானது. கண்டன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயக் கருத்துக்களடங்கிய விடயங்களே இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

பல்துறைகளிலும் விற்பன்னர்களாயிருக்கின்றவர்கள் இலக்கியவாதிகளாகவும் செயற்படுகின்றனர். அதனால் பற்பல அனுபவங்களை ஏந்திய படைப்புக்கள் அவற்றுக்கூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். சமாந்தரமான தளங்களிலிருந்து எழுதுவதற்கு அப்பாற்பட்ட மிக முக்கியமான முயற்சிகள் இப்படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் தற்போது ரிம்ஸா முஹம்மத் வெளியிட்டுள்ள அறுவடைகள் தொகுதியில் ஒருசேர தரிசிக்கின்ற வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கின்றது.
இவ்வாறான முயற்சிகளில் மனம் தளராமல் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் இப்பெண் எழுத்தாளர் பாராட்டுக்குரியவர். அவரது முயற்சிகள் மேலும் விண்ணை எட்ட வேண்டும். அவருக்காக நாங்கள் கைதட்ட வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் சிறப்பாக தொடர்வதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!!!

வவுனியூர் இராஉதயணன் - இலண்டன்

தலைவர் - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்

No comments:

Post a Comment