Thursday, November 20, 2025

03. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


மீண்டும் ஓர் நூலாய்வின் ஊடாக தங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று நான் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதைகளடங்கிய நூலாகும்.

வெள்ளை மஞ்சள் சிகப்பு கலந்த பல அழகிய வண்ணத்தில் சிறு குழந்தையின் புன்னகைக்கும் முகத்துடன் 'பிஞ்சு மனம்' சிறுகதைகள் என தலைப்பிட்டு வண்ணாத்துப் பூச்சிகள் இரண்டையும் பதிவிட்டு முன்னட்டை அழகுற, பின்னட்டை ஆசிரியரின் புகைப்படத்துடன் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களின் வாழ்த்துரை சிறந்திட பூங்காவனம் இலக்கிய வட்ட முகவரி அடங்கலுடன் வெளிவந்திருக்கின்றது இந்த சிறுகதை நூல். உள்ளே நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பதிவுத் தரவுகளை அடங்கியுள்ளார். 

நூலுக்கான அணிந்துரையை கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், முன்னுரையை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவு பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் அவர்களும், வாழ்த்துரையை முன்னாள் உளவியல் (வருகைதரு) விரிவுரையாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஈற்றில் என்னுரையை முன்வைத்த நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தனது மாமாவான எழுத்தாளர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

நூலின் உள்ளடக்கம் பதினெட்டு சிறுகதைகளின் தலைப்புகளைத் தாங்கியதாக 152 பக்கங்களில் வெளிவந்துள்ளது. நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே இங்கு எனது ஆய்வுக்காக எடுத்து, வாசகர்களுக்காக முன்வைத்துள்ளேன். 

முதலாவது சிறுகதை 'பிஞ்சு மனம்' என்ற நூலின் தலைப்பிலேயே நூலை அழங்கரித்து நிற்கின்றது. இக்கதையில் ஏதோ ஒரு காரணமாக சிறார்கள் வளரும் போது தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் இறுக்கமான மனதோடும் இருக்கிறார்கள். ஒப்பீடு வகையிலும் மனம் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களால் சிறுபராயம் தொட்டே கவலைப்படும் நிலையில் நிறம் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் வளர்ந்து பெரியவளான நிலையில் தெளிவான சிந்தனையோடு தன் மனதை இலகுவாக்கிய விதத்தில் கூறியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.

'மனிதம் வாழும்' என்ற கதை ஏழ்மையை மதிக்கத் தெரிந்த அற்புதமான மனிதராக ராஸிக் மௌளவியை விவரித்துள்ள விதமும் ஒரு நல்லவரின் மரணம் எத்தனை இதயங்களை வலிக்க வலிக்க பேச வைக்கின்றன என்ற கருத்தையும் கூறி, இறுதியாக மூன்று பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தகப்பனாரான ராஸிக் மௌளவி சுவர்க்கம் புகுவார் என்பதற்கு இணங்க நஸீராவுடன் இணைந்து நாமும் இணைந்து துஆக் கேட்போம் என்று கதையை அழகாக நிறைவு செய்துள்ளார். 

அடுத்த கதையாக 'பலன்' என்ற கதை ஏழையானவர்களிடம் திறமை கலந்த நல்ல பண்பை நிதர்சனமாக உணர கடவுள் பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பணக்கார வர்க்கத்தினரின் தேவைப்பாடுகள் முழுமையுமே பணத்தைக் கொண்டே ஈடு செய்ய பணக்காரர்கள் பழகியிருப்பார்கள். அங்கே ஏழைக்கு மரியாதை என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாய் நிற்க, ஏழ்மையை இகழ சாதாரணமாக ஒழுக்கத்தையே நிந்தனை செய்து குறை சொல்ல துணிந்திடுவது யதார்த்தமே. இருந்தும் அதற்கான பலன்களை இம்மையிலேயே இறைவன் கொடுத்துவிடுகிறான் என்ற உண்மையை இக் கதை சுட்டிக்காட்டுகின்றது. 

இன்னும் ஒரு சிறந்த கதையாக 'உறவுகள்' என்ற கதை நூலை அலங்கரித்து நிற்கின்றது. காவியா - ஹாசினியுடனான நட்பில் வழிகாட்டியாகி எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் உதவும் மேன்மையான குணம் கொண்ட காவியா, ஹாசினியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுகமான வழிகளை அமைத்துக் கொடுத்து அகம் மகிழ்கின்றாள். வயது வித்தியாசமற்ற நட்பின் அழகை உயிரோட்டமாகக் கூறுகின்ற இனிய கதையாக இக்கதை அமைந்துள்ளது. 

'மௌனம' இன்னுமொரு உயர்வான சமூக ரீதியாக நிரூபிக்க பால்ய சிநேகிதர்களான சாமில் - சாஜித் இருவரையும் காண்பித்து சுயநலமாக தனது தேவைகளை நிறைவேற்றி பெற்றோரையும் சகோதரங்களையும் எண்ணிட மறந்த சாமிலுக்கு, சாஜித் கூறும் அறிவுரை மற்ற சுயநலமிகளும் படிப்பினையாக உணர்ந்து செயல்பட சிறந்த கதையாக அமைகின்றது.

'வாழ்க்கை வளைவு' என்ற கதையில் தனது மனைவி இறைவனடி சேர்ந்ததும் காதர் நானாவின் வாழ்நாள் தலைமைத்துவத்தை இழந்து வயதுக்கேற்ற சாப்பாடு, தண்ணீர் கிடைக்காது தடுமாறி பால்ய நண்பன் மக்கீனிடம் கூறி கவலைப்படும் நிலை பரிதாபமாகரமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்காக சொத்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாத தந்தை தனிமைப்பட மறைந்த மனைவியின் இடத்திலான வெற்றிடம் நிறைக்கப்படாத கொடுமை, கலங்கி நிற்க வைத்துள்ள கடினமான வாழ்க்கை ஆகியவற்றை தொட்டுக்காட்டி நகரும் இக்கதையும் சிறப்பாக அமைந்துள்ளது. 

அடுத்ததாக 'வீடு' என்ற கதை நிஸாம், பரீத், நவ்பர் ஹாஜி என சில நல்ல உள்ளம் கொண்டவர்களை நினைவில் நிறுத்தி வடித்த கதையாக நூலில் இடம்பிடித்துள்ளது. சமூக நலன்களுக்காக பலர் முயற்சிக்க சரியான முறையில் சிறப்பாக நடந்து வலுப்படுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இக்கதையும் நூலாசிரியரின் சிறந்த சமூக நல சிந்தனையை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. 

ஆக நூலில் இடம்பெற்றுள்ள அத்தனை கதைகளும் பல நல்ல விடயங்களை ஒப்புவித்து வாசிப்போரை சளைக்காத வகையில் இழுத்துச் செல்கின்றது. இப்படியாக இன்னும் பல சமூக நலக் கதைகளை நூலாசிரியர் படைக்க வேண்டுமென்ற வேண்டுதலை முன்வைத்து வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்கின்றேன்.


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை - 1,000 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


02. 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்


நூல் விமர்சனம்:- மரீனா இல்யாஸ் ஷாபீ


இனிப்பும் கசப்புமான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. நாம் வாழும் சூழலில், பழகும் மக்கள் மத்தியில் நிகழும் அன்றாட அவலங்களும் ஆச்சரியங்களும் வெறும் செய்தித் துணுக்குகளாக எம்மைக் கடந்து செல்கின்றன. ஆனால், ஓர் எழுத்தாளன் அத்தகைய அனுபவங்களை வெறும் கண்களால் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதில்லை. அவன் அதை இதயத்துக்கு எடுத்துச் செல்கிறான். மூளைக்கும் கடத்துகிறான். சமூகப் பின்னணியுடன் சேர்த்துப் பிசைந்து, அதற்கு உணர்வுகள் ஊட்டி வேறு ஒர் உருவம் கொடுத்து மீண்டும் நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கிறான். அந்தவகையில் 'பிஞ்சு மனம்' என்னை வந்தடைந்தபோது நான் ஒரு நீண்ட பயணத்தில் இருந்தேன். நூலில் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு கருத்துரை கேட்டார்  நூலாசிரியை ரிம்ஸா முஹம்மத். ஆனால் அவர் கேட்கும் அவசரத்தில் நூலை வாசிக்கவோ, கருத்துரை எழுதவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. அதற்குப் பிரதியுபகாரமாக இன்று இந்த நூல் கண்ணோட்டத்தை எழுதுகிறேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கணக்கீட்டுக் கற்கை நூல்கள், கவிதை நூல்கள், நூல் விமர்சனங்களடங்கிய தொகுதிகள், சிறுவர் நூல்கள், ஆய்வு நூல் என்பவற்றை வெளியிட்டுள்ளதுடன் 'பூங்காவனம்' என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்து வருகிறார்.

சிறுகதைத் துறையில் 'பிஞ்சு மனம்' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி அவரது கன்னி நூலாகவே வெளிவருகிறது. இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள். அதனால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அம்சங்கள் அடுத்த சமூகத்துக்குள்ளும் இயல்பாக ஊடுருவிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மதம் கடந்து நிற்கும் மானுட வாழ்வின் அனுவபவங்களை தன் எழுத்துக்கு உரமாக்கி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

'பிஞ்சு மனம்' தொகுதியில் இடம்பெற்றுள்ள 18 கதைகளுள், 9 கதைகள் தமிழர் வாழ்வியல் பின்னணியில் தமிழ்க் காதாபாத்திரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 9 கதைகளும் முஸ்லிம் சமூகப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்தத் தொகுதியில் இருக்கும் கதைகளில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாக குழந்தை உளவியல் காணப்படுகிறது. மகுடத் தலைப்பிலமைந்த முதல் சிறுகதையான 'பிஞ்சு மனம்' (பக்கம் 17) என்ற கதையில் வரும் பவித்ரா என்ற சிறுமி தன் தங்கைகளை விடவும் நிறம் குறைந்தவளாக இருப்பதால், பாரபட்சமாக நடாத்தப்படுகிறாள். அதனால், அவளுக்குள் தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது. பொறாமை அவளை ஆட்டிப் படைக்கிறது. எங்கள் சமூகத்தில் எங்களுடன் ஒட்டி உறவாடும் பெரியவர்களின் எண்ணங்களும் சின்னச் சின்னச் செயல்களும் எப்படி குழந்தைகளைப் பாதிக்கின்றன என்ற குழந்தை உளவியலின் தெளிவான மற்றும் யதார்த்தமான சித்தரிப்பாக 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதை இந்தத் தொகுதிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுக்கிறது.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சில கதைகள், உண்மைச் சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. 'மனிதம் வாழும்' (பக்கம் 34) என்ற கதையில் ராசிக் மௌலவிக்காக துஆ கேட்போம் என்று கதையை முடித்திருக்கும் பாணி, அந்த எண்ணத்துக்கு வலுவூட்டுகின்றது.

'இறையச்சம்' (பக்கம் 48) என்ற கதையில் வரும் ஆயிஷா என்ற சிறுமி தொழுவதில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டில் ஆயிஷாவின் தந்தை தொழுவதில்லை. வீட்டுக்குள் அதற்கான சூழலையோ, முன்மாதிரியையோ உருவாக்காமல் ஒரு காரியத்தை செய்வதற்கு குழந்தைகளை வற்புறுத்தினால் அவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்த்த முற்படுகிறது 'இறையச்சம்' என்ற சிறுகதை. 

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற சிறுகதை வறுமையில் வாடும் ஒரு சிறுமியின் சப்பாத்துக் கனவுகளை மட்டும் சிதைத்து விட்டுச் செல்லவில்லை. பாடசாலைகளில் போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும்போது, ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, திறமையான ஏனைய மாணவர்கள் ஓரம்கட்டப்படும்போது, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும்  மாணவர்களின் நிலையை நாசுக்காக சுட்டிக் காட்டுகிறார் கதாசிரியர். அது மட்டுமல்ல, பாடசாலைகளில் கொண்டு வரப்படும் நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, பாடசாலையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். காய்ச்சல் என்று பொய்ச்சாக்குச் சொல்லிப் படுத்திருக்கும் பரீனாவின் உளவியல் போராட்டம் பாடசாலை நிர்வாகத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு குழந்தைகளின் உளவியல் போராட்டங்களை வைத்தே சில கதைகளை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

எழுத்தாளர்கள் சமூகத்தின் வழிகாட்டிகள், நேர்மையானவர்கள் என்ற பிரமை பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் தரம் தாழ்த்தி விடுகின்றன. இன்றைய இலக்கிய உலகில் விருது வழங்கும் நிகழ்வுகள் திறமைக்கான அங்கீகாரம் என்ற நிலை மாறி, காசுக்கு விற்கப்படும் கலாச்சாரமாக உருமாறி வருவதை 'பொறாமை' (பக்கம் 123) என்ற கதை மூலம் தோலுரித்திக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

மனிதனின் தார்மீகக் குணங்கள் மரித்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு நம்மைச் சுற்றி அருவருக்கத் தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை ரிம்ஸாவின் சில கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதே வேளை, 'உறவுகள்' (பக்கம் 77), 'வீடு' (பக்கம் 146)  போன்ற கதைகள் மூலம் மனிதம் மீது நம்பிக்கையை விதைக்கவும் கதாசிரியர் ரிம்ஸா முஹம்மத் முயற்சித்திருக்கிறார். 

சில இடங்களில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை வைத்தும் தன் கதைகளை நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா. இறையச்சம், வாழ்க்கை வளைவு போன்ற சிறுகதைகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். சில கதைகள் நேரடியாகப் பிரச்சாரம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக நான் நினைக்கிறேன். அதாவது, கதாபாத்திரங்களில் இருந்து பிரிந்து, கதாசிரியராக அவரே சில இடங்களில் பேசி இருக்கிறார். இதில் தவறு இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

'ஒரு எழுத்தாளன் தன் சமூகத்தை, அவனது உலகத்தை பிரதிபலித்து விளக்க வேண்டும்;. அவனது எழுத்துக்கள் உத்வேகம் அளிக்க வேண்டும். வழிகாட்ட வேண்டும்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் இ.பி. வைட் அவர்கள். ஆனால், வாசகரிடம் பிரசங்கிப்பது போல் அல்லாமல்,   கதையை கதாபாத்திரங்களின் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. 

தென்னிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களான மர்ஹூம் எம்.ஐ.எம். ஹம்ஸா, மர்ஹூம்  திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை ஸும்ரி  போன்றோர் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இன்னும் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை  - 1,000 ரூபாய்

தொலைபேசி - 0775009222



நூல் விமர்சனம்:-

மரீனா இல்யாஸ் ஷாபீ



Wednesday, November 19, 2025

01. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்


சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 15 ஆவது நூலாக அண்மையில் வெளியிட்ட 'பிஞ்சு மனம்' (சிறுகதைகள்) நூலை வாசிக்கும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. 'பிஞ்சு மனம்' தொடங்கி 'வீடு' வரை 152 பக்கங்களில் பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த நூல் அழகான அட்டைப் படத்துடன் கருத்தைக் கவர்ந்துவிடுகிறது. இந்தக் கதைகளை வாசித்து நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் வாழும் சூழலிலுள்ள சமகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நம்மோடு உலவும் சக மாந்தர்களையே காத்திரமான கதாபாத்திரத்திரங்களாக்கி, உயிரோட்டமும் உணர்வும் மிக்க சிறந்த கதைகளைப் படைத்துள்ளார் சகோதரி ரிம்ஸா முஹம்மத். இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளுமே நிறைய செய்திகளைச் சொல்லுகின்றன. மனதில் பதிந்து நிற்கின்றன. சமூகத்துள் இலைமறை காயாக இருக்கும் பல பிரச்சினைகளைத் சகோதரி ரிம்ஸா முஹம்மத் துணிவுடன் முன்வைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

நூலில் முதல் சிறுகதையாக பக்கம் 17 இல் இடம் பெற்றுள்ள 'பிஞ்சு மனம்' என்ற அருமையான சிறுகதை மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. உரிய அன்பு கிடைக்காது அநியாயமாக நிராகரிக்கப்பட்ட பிஞ்சு மனம் படும் அவஸ்தையை  யதார்த்தமாக வெளிப்படுத்தும் கதாசிரியை எம்மையும் அழ வைக்கிறார். அதேவேளை கதையின் நிறைவு எம் மனதையும் சற்று ஆறுதல் படுத்துகிறது. இக்கதையில் பிரச்சினையையும் எடுத்துக் காட்டி அதற்கான தீர்வையும் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.

பக்கம் 24 இல் அமைந்துள்ள 'பணம் பந்தியிலே', 'நன்றிக்கடன்' (பக்கம் 138) ஆகிய இரு கதைகளின் மூலம்; 'கடன்' படுத்தும் பாட்டையும் உறவுகளின் முறிவுக்கு எப்படியெல்லாம் கடன் காரணமாகின்றது என்பதையும் அச்சொட்டாக கதாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

'மனிதம் வாழும்' (பக்கம் 34), 'வீடு' (பக்கம் 146) ஆகிய சிறுகதைகள் மூலம் மனித நேயம் மிக்க மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை, மனதை ஆகர்ஷிக்கும் வகையில் கதாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற தலைப்பிலான சிறுகதையும் பிஞ்சு மனமொன்றின் 'வலிகளை' மிக ஆழமாகப் பதித்துள்ளது. புறக்கணிப்பும் அடுத்தவர் நிலையைப் புரிந்துகொள்ளாமையும் திறமைக்கு வாய்ப்பளிக்காமையும் எமது சமூகத்தில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களாகி வருவதைக் கண்கூடாகவே காண்கிறோம். இந்த சிறுகதை மூலம் அவ்வாறான ஒரு சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டு நிற்கின்றது.

'வாழ்க்கை வளைவு' (பக்கம் 100) அருமையான 'பேசுபொருளை' உள்ளடக்கிய சிறுகதையாகும். வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவரின் (கணவனின்) மனத் துயரங்களை, சகோதரி ரிம்ஸா மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறான கருப்பொருளை தேர்ந்தெடுத்த சகோதரியை பாராட்டியேயாக வேண்டும்.

இந்நூலிலிருந்த 18 சிறுகதைகளில் சில கதைகளையே எனது பார்வையில் நானிங்கு பதிவேற்றியுள்ளேன். எளிமையான மொழிநடையில், எதுவித அலட்டலுமில்லாமல், மிக யதார்த்தமான முறையில், ஆனால், கனதியான 'கருப்பொருளாக்கி', சமூகத்துள் தன் சிறுகதைகளைப் பேசுபொருளாக்கி தன் திறமையைப் புடம்போட்டிருக்கும் இலக்கிய ஆளுமை, பன்னூலாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தோடு, இனிவரும் காலங்களில் மேலும் பல சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்பதென் அன்பான வேண்டுகோள். 


நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்


நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்