Thursday, November 20, 2025

02. 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்


நூல் விமர்சனம்:- மரீனா இல்யாஸ் ஷாபீ


இனிப்பும் கசப்புமான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. நாம் வாழும் சூழலில், பழகும் மக்கள் மத்தியில் நிகழும் அன்றாட அவலங்களும் ஆச்சரியங்களும் வெறும் செய்தித் துணுக்குகளாக எம்மைக் கடந்து செல்கின்றன. ஆனால், ஓர் எழுத்தாளன் அத்தகைய அனுபவங்களை வெறும் கண்களால் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதில்லை. அவன் அதை இதயத்துக்கு எடுத்துச் செல்கிறான். மூளைக்கும் கடத்துகிறான். சமூகப் பின்னணியுடன் சேர்த்துப் பிசைந்து, அதற்கு உணர்வுகள் ஊட்டி வேறு ஒர் உருவம் கொடுத்து மீண்டும் நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கிறான். அந்தவகையில் 'பிஞ்சு மனம்' என்னை வந்தடைந்தபோது நான் ஒரு நீண்ட பயணத்தில் இருந்தேன். நூலில் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு கருத்துரை கேட்டார்  நூலாசிரியை ரிம்ஸா முஹம்மத். ஆனால் அவர் கேட்கும் அவசரத்தில் நூலை வாசிக்கவோ, கருத்துரை எழுதவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. அதற்குப் பிரதியுபகாரமாக இன்று இந்த நூல் கண்ணோட்டத்தை எழுதுகிறேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கணக்கீட்டுக் கற்கை நூல்கள், கவிதை நூல்கள், நூல் விமர்சனங்களடங்கிய தொகுதிகள், சிறுவர் நூல்கள், ஆய்வு நூல் என்பவற்றை வெளியிட்டுள்ளதுடன் 'பூங்காவனம்' என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்து வருகிறார்.

சிறுகதைத் துறையில் 'பிஞ்சு மனம்' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி அவரது கன்னி நூலாகவே வெளிவருகிறது. இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள். அதனால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அம்சங்கள் அடுத்த சமூகத்துக்குள்ளும் இயல்பாக ஊடுருவிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மதம் கடந்து நிற்கும் மானுட வாழ்வின் அனுவபவங்களை தன் எழுத்துக்கு உரமாக்கி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

'பிஞ்சு மனம்' தொகுதியில் இடம்பெற்றுள்ள 18 கதைகளுள், 9 கதைகள் தமிழர் வாழ்வியல் பின்னணியில் தமிழ்க் காதாபாத்திரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 9 கதைகளும் முஸ்லிம் சமூகப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்தத் தொகுதியில் இருக்கும் கதைகளில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாக குழந்தை உளவியல் காணப்படுகிறது. மகுடத் தலைப்பிலமைந்த முதல் சிறுகதையான 'பிஞ்சு மனம்' (பக்கம் 17) என்ற கதையில் வரும் பவித்ரா என்ற சிறுமி தன் தங்கைகளை விடவும் நிறம் குறைந்தவளாக இருப்பதால், பாரபட்சமாக நடாத்தப்படுகிறாள். அதனால், அவளுக்குள் தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது. பொறாமை அவளை ஆட்டிப் படைக்கிறது. எங்கள் சமூகத்தில் எங்களுடன் ஒட்டி உறவாடும் பெரியவர்களின் எண்ணங்களும் சின்னச் சின்னச் செயல்களும் எப்படி குழந்தைகளைப் பாதிக்கின்றன என்ற குழந்தை உளவியலின் தெளிவான மற்றும் யதார்த்தமான சித்தரிப்பாக 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதை இந்தத் தொகுதிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுக்கிறது.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சில கதைகள், உண்மைச் சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. 'மனிதம் வாழும்' (பக்கம் 34) என்ற கதையில் ராசிக் மௌலவிக்காக துஆ கேட்போம் என்று கதையை முடித்திருக்கும் பாணி, அந்த எண்ணத்துக்கு வலுவூட்டுகின்றது.

'இறையச்சம்' (பக்கம் 48) என்ற கதையில் வரும் ஆயிஷா என்ற சிறுமி தொழுவதில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டில் ஆயிஷாவின் தந்தை தொழுவதில்லை. வீட்டுக்குள் அதற்கான சூழலையோ, முன்மாதிரியையோ உருவாக்காமல் ஒரு காரியத்தை செய்வதற்கு குழந்தைகளை வற்புறுத்தினால் அவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்த்த முற்படுகிறது 'இறையச்சம்' என்ற சிறுகதை. 

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற சிறுகதை வறுமையில் வாடும் ஒரு சிறுமியின் சப்பாத்துக் கனவுகளை மட்டும் சிதைத்து விட்டுச் செல்லவில்லை. பாடசாலைகளில் போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும்போது, ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, திறமையான ஏனைய மாணவர்கள் ஓரம்கட்டப்படும்போது, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும்  மாணவர்களின் நிலையை நாசுக்காக சுட்டிக் காட்டுகிறார் கதாசிரியர். அது மட்டுமல்ல, பாடசாலைகளில் கொண்டு வரப்படும் நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, பாடசாலையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். காய்ச்சல் என்று பொய்ச்சாக்குச் சொல்லிப் படுத்திருக்கும் பரீனாவின் உளவியல் போராட்டம் பாடசாலை நிர்வாகத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு குழந்தைகளின் உளவியல் போராட்டங்களை வைத்தே சில கதைகளை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

எழுத்தாளர்கள் சமூகத்தின் வழிகாட்டிகள், நேர்மையானவர்கள் என்ற பிரமை பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் தரம் தாழ்த்தி விடுகின்றன. இன்றைய இலக்கிய உலகில் விருது வழங்கும் நிகழ்வுகள் திறமைக்கான அங்கீகாரம் என்ற நிலை மாறி, காசுக்கு விற்கப்படும் கலாச்சாரமாக உருமாறி வருவதை 'பொறாமை' (பக்கம் 123) என்ற கதை மூலம் தோலுரித்திக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

மனிதனின் தார்மீகக் குணங்கள் மரித்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு நம்மைச் சுற்றி அருவருக்கத் தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை ரிம்ஸாவின் சில கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதே வேளை, 'உறவுகள்' (பக்கம் 77), 'வீடு' (பக்கம் 146)  போன்ற கதைகள் மூலம் மனிதம் மீது நம்பிக்கையை விதைக்கவும் கதாசிரியர் ரிம்ஸா முஹம்மத் முயற்சித்திருக்கிறார். 

சில இடங்களில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை வைத்தும் தன் கதைகளை நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா. இறையச்சம், வாழ்க்கை வளைவு போன்ற சிறுகதைகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். சில கதைகள் நேரடியாகப் பிரச்சாரம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக நான் நினைக்கிறேன். அதாவது, கதாபாத்திரங்களில் இருந்து பிரிந்து, கதாசிரியராக அவரே சில இடங்களில் பேசி இருக்கிறார். இதில் தவறு இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

'ஒரு எழுத்தாளன் தன் சமூகத்தை, அவனது உலகத்தை பிரதிபலித்து விளக்க வேண்டும்;. அவனது எழுத்துக்கள் உத்வேகம் அளிக்க வேண்டும். வழிகாட்ட வேண்டும்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் இ.பி. வைட் அவர்கள். ஆனால், வாசகரிடம் பிரசங்கிப்பது போல் அல்லாமல்,   கதையை கதாபாத்திரங்களின் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. 

தென்னிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களான மர்ஹூம் எம்.ஐ.எம். ஹம்ஸா, மர்ஹூம்  திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை ஸும்ரி  போன்றோர் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இன்னும் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை  - 1,000 ரூபாய்

தொலைபேசி - 0775009222



நூல் விமர்சனம்:-

மரீனா இல்யாஸ் ஷாபீ



No comments:

Post a Comment