'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை
நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்
சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 15 ஆவது நூலாக அண்மையில் வெளியிட்ட 'பிஞ்சு மனம்' (சிறுகதைகள்) நூலை வாசிக்கும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. 'பிஞ்சு மனம்' தொடங்கி 'வீடு' வரை 152 பக்கங்களில் பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த நூல் அழகான அட்டைப் படத்துடன் கருத்தைக் கவர்ந்துவிடுகிறது. இந்தக் கதைகளை வாசித்து நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் வாழும் சூழலிலுள்ள சமகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நம்மோடு உலவும் சக மாந்தர்களையே காத்திரமான கதாபாத்திரத்திரங்களாக்கி, உயிரோட்டமும் உணர்வும் மிக்க சிறந்த கதைகளைப் படைத்துள்ளார் சகோதரி ரிம்ஸா முஹம்மத். இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளுமே நிறைய செய்திகளைச் சொல்லுகின்றன. மனதில் பதிந்து நிற்கின்றன. சமூகத்துள் இலைமறை காயாக இருக்கும் பல பிரச்சினைகளைத் சகோதரி ரிம்ஸா முஹம்மத் துணிவுடன் முன்வைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
நூலில் முதல் சிறுகதையாக பக்கம் 17 இல் இடம் பெற்றுள்ள 'பிஞ்சு மனம்' என்ற அருமையான சிறுகதை மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. உரிய அன்பு கிடைக்காது அநியாயமாக நிராகரிக்கப்பட்ட பிஞ்சு மனம் படும் அவஸ்தையை யதார்த்தமாக வெளிப்படுத்தும் கதாசிரியை எம்மையும் அழ வைக்கிறார். அதேவேளை கதையின் நிறைவு எம் மனதையும் சற்று ஆறுதல் படுத்துகிறது. இக்கதையில் பிரச்சினையையும் எடுத்துக் காட்டி அதற்கான தீர்வையும் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.
பக்கம் 24 இல் அமைந்துள்ள 'பணம் பந்தியிலே', 'நன்றிக்கடன்' (பக்கம் 138) ஆகிய இரு கதைகளின் மூலம்; 'கடன்' படுத்தும் பாட்டையும் உறவுகளின் முறிவுக்கு எப்படியெல்லாம் கடன் காரணமாகின்றது என்பதையும் அச்சொட்டாக கதாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
'மனிதம் வாழும்' (பக்கம் 34), 'வீடு' (பக்கம் 146) ஆகிய சிறுகதைகள் மூலம் மனித நேயம் மிக்க மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை, மனதை ஆகர்ஷிக்கும் வகையில் கதாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
'சப்பாத்து' (பக்கம் 70) என்ற தலைப்பிலான சிறுகதையும் பிஞ்சு மனமொன்றின் 'வலிகளை' மிக ஆழமாகப் பதித்துள்ளது. புறக்கணிப்பும் அடுத்தவர் நிலையைப் புரிந்துகொள்ளாமையும் திறமைக்கு வாய்ப்பளிக்காமையும் எமது சமூகத்தில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களாகி வருவதைக் கண்கூடாகவே காண்கிறோம். இந்த சிறுகதை மூலம் அவ்வாறான ஒரு சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டு நிற்கின்றது.
'வாழ்க்கை வளைவு' (பக்கம் 100) அருமையான 'பேசுபொருளை' உள்ளடக்கிய சிறுகதையாகும். வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவரின் (கணவனின்) மனத் துயரங்களை, சகோதரி ரிம்ஸா மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறான கருப்பொருளை தேர்ந்தெடுத்த சகோதரியை பாராட்டியேயாக வேண்டும்.
இந்நூலிலிருந்த 18 சிறுகதைகளில் சில கதைகளையே எனது பார்வையில் நானிங்கு பதிவேற்றியுள்ளேன். எளிமையான மொழிநடையில், எதுவித அலட்டலுமில்லாமல், மிக யதார்த்தமான முறையில், ஆனால், கனதியான 'கருப்பொருளாக்கி', சமூகத்துள் தன் சிறுகதைகளைப் பேசுபொருளாக்கி தன் திறமையைப் புடம்போட்டிருக்கும் இலக்கிய ஆளுமை, பன்னூலாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தோடு, இனிவரும் காலங்களில் மேலும் பல சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்பதென் அன்பான வேண்டுகோள்.
நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்

No comments:
Post a Comment